Thursday, December 31, 2015

கடந்து செல்லல்!

பனி படந்த அழகான குளிர்காலைப் பொழுது. யாழ்நகரம். பரபரப்பாக மக்கள். அலுவலகம் செல்லும் வழியில் வீதியில் நடந்துகொண்டிருந்தேன். ஒருகணம் துணுக்குற்றேன். எதிரே தூரத்தில் எழுத்தாளர் ஙேநா வந்துகொண்டிருந்தார்.

ஙேநாவின் படைப்புகளை அவ்வளவு இலகுவில் நாம் கடந்துசெல்ல முடியாது. ஙேநாவையும் அவ்வளவு இலகுவாக நாம் புறம்தள்ளிக் கடந்துவிட முடியாது. உண்மையைச் சொன்னால், யாழ்ப்பாணத்தில் யாரையும் அவ்வளவு இலகுவில் கடந்துவிட முடியாது. வீதிப்போக்குவரத்து முறை அப்படி.

இரு வருடங்களுக்குமுன்னர் வந்தபோது, 'வீதியில் இடையிடையே என்ன மஞ்சள் வர்ணத்தில் கோடு? யாரும் கண்டுகொள்ளாமல் எதுக்கு டிசைன்? என ஆச்சரியமடைந்தேன். 'அது பாதசாரிகள் கடவை. ஆனால் கவனம். பயன்படுத்தினால் உயிருக்கு உத்தரவாதமில்லை' என்றார்கள். இப்போதும் கடக்கும்போது எந்திரசாரிகள் விரோதமாக முறைக்கிறார்கள்.

சமீபத்தில் புத்தகம் வெளியிட்ட எழுத்தாளரை எதிரே காணும்போது உடனே அருகிலிருக்கும் சந்துக்குள் புகுந்து தெறித்து ஓடிவிடவேண்டும் என்கிற தமிழ்கூறும் நல்லுலகின் நம்பிக்கையை நான் பின்பற்றுவதில்லை. ஆனாலும் பேய் நம்பிக்கை இல்லாமலே நாம் பேய்க்குப் பயப்படுவதில்லையா?

நம்முன் இரண்டு மோசமான தெரிவுகள் மட்டுமே உள்ளபோது அதில் வலுக்குறைந்ததைத் தேர்வதுதானே முறை? ஙேநாவின் சமீபத்திய படைப்பு தமிழ் எழுத்துலகில் ஒரு மைல்கல். நேராக நம் தலையிலேயே 'ணங்'கென்று போட்டது போலிருக்குமாம்.

ஆபத்துக்குப் புண்ணியமில்லை. உயிராவது கூந்தலாவது என்று வீதியைக் கடந்துவிட்டேன். ஆக, ஙேநாவை கடந்துவிட்டேன் என்பதே ஆசுவாசமாக இருந்தது. மனிதர் லேசுப்பட்டவர் இல்லை. பேசப்பிடித்துக் கொண்டால் விடமாட்டார்.

Wednesday, December 30, 2015

விவாதம்!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களின் தேவை கணபதி அங்கிள்களா? பவானி ஆன்டிகளா? - அருமையான விவாதத்தலைப்பு. சங்க காலத்திலேயே நின்றுகொண்டிருந்தால் எப்படி? சமகாலத்தையும் கவனிக்க வேண்டாமா?

நம் சமூகத்தில் கணபதி அங்கிள்கள் இல்லை என்றே படுகிறது. கணபதிபோல அங்கிள்கள் பரந்தளவில் நிறைந்திருந்தாலும் அவர்கள் கணபதி அங்கிள்களாக இல்லை. முன்னொரு காலத்தில் அங்கிள்கள் தாமுண்டு தம் நியூஸ் பேப்பர் உண்டு. கிரிகெட் உண்டு என்று வாழ்ந்தார்களாம். இப்போது உண்டு இல்லை என்று கேள்வி கேட்கிறார்களாம் - டீவி சீரியல்கள் அனுசரணையில்.

அப்படியே அரிதாக ஒரு கணபதி அங்கிள் சிக்கினாலும் அவருக்கு ஒரு அல்சைமர் பவானி ஆன்டி வாய்த்திருப்பது... வாய்ப்பே இல்லை. இதற்கு நேர்மாறாக நம் ஆண்டிகள் மிகக் கொடூரமான ஞாபகசக்தியுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆனால் கொடுமையைப் பாருங்கள். இளைஞர்களுக்கு - நம் நண்பர்களுக்கு, எனக்கு, உங்களுக்கு - எல்லோருக்குமே திடீரென்று தாக்கும் குறுகியகால அல்சைமர் ஒன்று அவ்வப்போது வந்து தொலைத்துவிடுகிறது. அதில் எந்தப் பாதகமுமில்லை. அசந்தர்ப்பத்தில் மீண்டும் நினைவு திரும்புவதுதான் பாதிப்பு - கூடவே இருக்கும் நண்பருக்கு.

நண்பருடன் வீதியில் நின்றுகொண்டிருக்கிரீகள். நண்பன் ஓர் பெண்ணைப் பார்த்து அல்சைமர் தாக்கி, விழித்தொடர்கிறான்.

இப்போது உங்களிருவர்முன் ஓர் கொடூர ஞாபகசக்தி ஆன்டி தோன்றுகிறார்.

"தம்பி என்னைத் தெரியுதே... ஆரெண்டு சொல்லும் பாப்பம்... சின்னனில பாத்தது வளந்துட்டீர் இப்ப நல்லா...!"
'அஞ்சாப்பு படிக்கேக்க பாத்திருப்பீங்க... வேற வழியில்லாம வளர்ந்துட்டேன்' 

ஆன்டியின் விடாத சொற்பொழிவுக்கு, அவ்வப்போது பு'ண்'னகையுடன் தலையசைத்து 'அருமை' கமெண்ட்!

இப்போது ஆன்டி முக்கியமான கேள்வியொன்றை முன்வைக்கிறார்.
"என்ன இங்க ரோட்டில நிக்கிறீர்... அலுவலோ?"

சரியாக இந்தநேரம் பார்த்து சுயநினைவுக்கு மீண்ட நண்பன், சுற்றுச் சூழலைக் கவனிக்காமல்,

"டேய்!!!! செம்ம ஃபிகர் மச்சி... கவனிச்சியா?"

சுபம்!

தீவிரவாதம்!

புடைப்பாளி நண்பர் சொன்ன தகவல் ஆச்சரியமளித்தது. நண்பர் தீவிர புடைப்பாளி. இந்த 'தீவிர' என்பது சமயத்தில் மிகுந்த பீதியைக் கொடுத்துவிடுகிறது. 

தீவிர பத்திரிகை மரண அறிவித்தல் வாசகர், தீவிர டீவி சீரியல் பார்க்குநர், தீவிர குத்துப்பாட்டு பொழிப்புரை அறிஞர், தீவிர பஜனை பாடுநர் என இப்போதெல்லாம் எங்கும் தீவிரவாதம் தலைதூக்கியுள்ளது கவலைக்குரியது.

ஒருவருக்குள் தீவிர தேடல், தீர்க்கமான கொள்கை, அறிவு இருக்கும்பட்சத்தில் அது முகத்தில், இயல்பில் தெரியும் என்பர். ஆனால் வலுக்கட்டாயமாக பொருத்தமில்லாத தீவிர முகமூடி அணிந்துகொண்டு, விறைப்பாக முறைப்பாக இருத்தல், வடிவேலு நகைச்சுவைக்காட்சியைக்கூடச் சிரிக்காமல், நுண்மையாக அவதானிக்கும்பொருட்டு(?) பூதக் கண்ணாடியூடு முறைத்துக்கொண்டே பார்ப்பதெல்லாம்.... பள்ளிக்கூட நாடகம் போல அதாவது பாகுபலி படத்தில் தமன்னா புரட்சிப்பெண்ணாக முறைத்துக் குபீர்ச்சிரிப்பை வரவழைத்தது போலாகிவிடும்.

உண்மையில் தீவிரம் முகத்தில் தெரிய வேண்டியதில்லை. தீவிர புடைப்பாளி நண்பரின் முகம் காட்டிக் கொடுக்காது. உடல் சமரசம் செய்து கொள்வதில்லை. ஃப்ரீ சைஸ் ஷர்ட்டும், 40 சைஸ் பாண்டும் அணிந்துகொண்டு அப்படி என்னதான் சமரசம் செய்வது?

நண்பர் சொன்ன அதிர்ச்சியான தகவல் - எடை குறைக்க நடைப்பயிற்சி செய்யப்போகிறாராம்.

'நம்மூர் நாய்களுக்கு நடைப்பயிற்சி பரிச்சயமானதா?' என்கிற காத்திரமான கேள்வியை முன்வைத்தேன்.

நடைப்பயிற்சியின்போது கைகளை வேகமாக வீசிக் கொண்டு, எட்டு அல்லது பத்துக் கிலோமீட்டர் வேகத்தில் சீராக நடக்கவேண்டும். ஒரு ஊக்கத்திற்கு நாய் சீரான வேகத்தில் துரத்துவதாக நினைத்துக் கொள்ளலாம். 

கவனிக்க; நடக்கவேண்டுமே தவிர ஓடக்கூடாது. ஓடினால் உண்மையான நாய்கள் துரத்த ஆரம்பித்துவிடலாம். நாய்கள் ஓடினால்தான் துரத்துமாம் என்கிறார்கள். (நாய்கள் அப்படி உறுதிமொழி கொடுத்ததாகத் தகவல்களில்லை. எனினும் அது இப்போது இங்கே முக்கியமல்ல)

என் கவலை எல்லாம் நடைப்பயிற்சி பற்றித் தெரியாத நாய்கள், நண்பர் ஏதோ வினோதமான முறையில் ஓடுகிறார் என்று நினைத்துக்கொண்டு துரத்த ஆரம்பித்தால் நிலைமை தீவிரமாகிவிடுமல்லவா?

Friday, December 25, 2015

உரையாடல்!

'நாய் வாலை நிமிர்த்த முடியாது' என்றார் தூரத்து நண்பர். 

தூரத்து நண்பர்களுடன் பேசும்போது மிகுந்த குழப்பமாகி விடுகிறது. நாம் விளையாட்டாகப் பேசுவதை அவர்கள் சீரியசாக எடுத்துக் கொள்ளலாம். நாம் சீரியசாகப் பேசுவதை விளையாட்டாக எடுத்துவிடலாம். அதைவிடக் கொடுமை, அவர்கள் மிகுந்த சீரியசாகப் பேசும்போது நாம் இசகுபிசகாகக் குபீரென்று சிரித்துத் தொலைத்துவிடலாம். 

இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க நான் கையாளும் உத்தி எதிரிலிருக்கும் நபர் பேசும் அதே பாணியிலேயே பதிலுரைப்பது.
நண்பரின் முகத்தைப் பார்த்தேன் சீரியசாகத் தோன்றினார்.
'எனக்கு அதில் எந்த ஆர்வம்மில்லை' என்றேன் சீரியசாக. 
கொஞ்சம் குழப்பமானர். தெளிவுபடுத்தினேன்.
'என் பரட்டைத்தலையையே படிய வைக்க முடியாத நிலையில் நாய் வாலை நிமிர்த்துவது பற்றியெல்லாம் நான் யோசித்ததில்லை'.

அதுசரி நாய்வாலை நாம் ஏன் நிமிர்த்த வேண்டும்? அதுகுறித்து நாய்களுக்கு ஏதேனும் புகார்கள் இருக்கின்றனவா? ஆனாலும் நம் முன்னோர் அந்தக்காலத்தில் எதையும் தம் அனுபவத்திலேயே உணர்ந்து, தெளிந்துதான் பழமொழிகளை உருவாக்கினார்கள் எனச் சொல்லப்படுகிறது. அந்தவகையில் நாய்வாலை தனித்தனியாகவோ குழுமுயற்சியாகவோ நிமிர்த்துவதற்கு கடும் முயற்சி செய்திருக்கக்கூடும் என்பதில் ஐயமில்லை.

'நீங்கள் சொல்வதில் ஒரு நியாயமிருக்கிறது. அதுதான் உண்மை என்று நானும் நம்புகிறேன்' என்றேன். 
'நேரமாகிவிட்டது' என்றார்.

தூரத்து நண்பர்களுடனான என்னுடைய இந்த உரையாடல் உத்தி இப்போதெல்லாம் நல்ல பலனைக் கொடுகிறது. அநேகமாக அவர்கள் இன்னொருமுறை நம்மிடம் எந்த முடிவுகளையும் தெரிவிப்பதோ சந்தேகம் கேட்பதோ இல்லை.

Thursday, December 24, 2015

ஓர் பயணக்கட்டுரை!

நன்கு திட்டமிட்டு நிகழ்த்திய தொலைதூரப் பயணமொன்றின் மறுநாள் காலையில் டூத் பேஸ்ட் உள்ளிட்ட வஸ்துகளை எடுத்துவைத்துக்கொண்டு சரியாக பிரஷ்ஷை மட்டும் மறந்து தொலைத்ததை உணரும் 'ஙே' ரகமா நீங்கள்? 
அப்படியானால் நீங்களும் நானும் ஒரே பேரூந்தில் ஏறிவிடுகிறோம்!

பாரிய திட்டமிடல் சிக்கல்களை உருவாக்காத பயணங்களே உண்மையான பயண இன்பத்தை நல்குபவை என்பது என் கருத்து. தவிர, தொலைதூரப்பயணம் என்பது உண்மையில் பயணத்தூரம் சார்ந்ததல்ல.. மனவோட்டமும், காலமும் சேர்ந்தது என்கிற கிரேக்க அறிஞர் ஜியோக்கிரீட்டசுவின் (கி.மு.792 - 756) கூற்றையும் நாம் நினைவு கொள்ளவேண்டும்.

இந்தப் பேரூந்தில் பயணிக்கும் மனிதர்களின் முகங்களைப் பார்க்கும்போது... (மனிதர்களின் முகங்கள் எப்போதும், எங்கும் மனிதர்களின் முகங்களைப் போலவேதான் இருக்கின்றன. ஆனால் ஒரு பயணக்கட்டுரையை எழுதும்போது வேற்றுக் கிரகவாசிகளைப் பார்த்ததுபோல அல்லது நாம் செவ்வாய்க் கிரகத்திலிருந்து வந்தவர்களைப் போலவே பாவனை செய்யவேண்டும் என்பது மரபாம். ஆகவே..) டிப்பொசிட் இழந்த வேட்பாளர்களைப் போல சிலர், சொந்தமாக எதுவும் இல்லாமல் குத்துமதிப்பாக அடுத்தவர்களைக் குறை சொல்லும் அரசியல்வாதிகள் போல சிலர், எங்கட சனத்துக்குப் புத்தியே வராது என இரண்டு நாட்களில் திட்டப் போகிறவர்கள் போலச் சிலர், மற்றும் ஏராளமான என்னத்த வோட்டுப் போட்டு...

இந்தவகைப் பேரூந்துப் பயணத்தில் எந்தவிதமான சிக்கல்களுமில்லை. இரண்டு சீட்களுக்கு இடையிலுள்ள கைப்பிடியில் யார் கை வைப்பது என்பதில் சிவாஜி, கமலுக்கிணையான சிறந்த தூக்கக்கலக்க நடிகருக்கான போட்டியில்லை. சமயங்களில் பயணங்களில் 'எங்கே செல்லும் இந்தப்பாதை' என்கிற ஞான நிலையை அதாவது இந்த மனித வாழ்வின் சாரத்தைப் புரிந்துகொள்கிறார்கள். வாழ்வின் சாரத்தைப் புரிந்தவர்களுக்கு என்ன கவலை? ஏது குழப்பம்? எது தடை? எந்த நெருக்கடியிலும் தூங்கிவிடுகிறார்கள்.

இங்கே சீட் தேவையேயில்லை. பயப்படாதீர்கள் நீங்கள் தேவையென்றாலும் கூட யாரும் தரமாட்டார்கள். உணவுக்கட்டுப்பாடு அவசியமில்லை. விரும்பிய இடத்தில் இடையில் இறங்கி டீ குடிக்கலாம். யாரும் கேட்க மாட்டார்கள். நீங்கள் வந்த பஸ் போய்விடுமா என்கிற கவலை வேண்டாம். இன்னொரு பஸ்ஸில் தொடரலாம். கொஞ்சம் வேகமாக முயற்சித்தால் நீங்கள் வந்த பஸ்ஸையே பிடித்துவிடலாம். 

அவ்வளவு ஏன் உங்களுக்கு அவசரமில்லையெனில் திரும்ப வீட்டுக்குப் போய் தூங்கிவிட்டு நாளைக்குக் கூடச் செல்லலாம். மொத்தத்தில் அருமையான பயண அனுபவம்.

வெள்ளவத்தை டு தெஹிவளை - பயணத்தூரம் 2.5 km 
நடந்து செல்ல 1/3 மணிநேரம்..பேரூந்தில் 40 நிமிடங்கள் மட்டுமே!