Friday, June 27, 2014

எர்வா மார்டின், கேர்ண், இன்டுலேகா ; பல்பு!

"அண்ணே உங்களுக்கு முடி ஓவராக்கொட்டுது. இப்பிடியா விட்டா நல்லதில்ல. மிஷின் போட்டு ஒட்ட அடிப்பமா?"
அடிக்கிற வெயிலுக்கு நன்றாயிருக்கும் என்பதால் சம்மதித்தேன்.

முடிந்ததும் 'அவ்வளவு மோசமாக இல்லை' என நம்பிக் கொண்டு வீடு திரும்பினேன். வழியில் ஓரிருவர் விநோதமாகப் பார்த்ததைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் வழமையாக வீதியில் என்னைக் கடந்துசெல்லும் பெண்மணி ஒருவர் பார்த்ததும் சிரிப்பை மிகுந்த பிரயத்தனத்துடன் அடக்கிக் கொண்டு சென்றார். அதுதான் உறுத்தியது.

வீட்டில், அக்காவின் ஒருவயது மகள் வைத்த கண் வாங்காமல் அதிர்ச்சியா, பயமா, ஆச்சரியமா? இன்னதென்று தெரியாத ஒரு பார்வை பார்த்தது. 'இப்பிடியும் மனுஷர் இருக்கிறாங்களா?'

பாத்ரூம் கண்ணாடியில் பார்த்தபோது, வழக்கம்போல சலூன் கண்ணாடி ஏமாற்றிவிட்டது தெரிந்தது. லயன் காமிக்ஸ் ஸ்பைடர் மாதிரி இருந்தேன். மறுநாளிலிருந்து குட்டீஸின் பார்வை ஆச்சரியத்திலிருந்து விடுபட்டுவிட்டது. என்னைப் பார்க்கும்போதெல்லாம் அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தது.

இரண்டுவாரம் கழித்து, கொஞ்சம் பரவாயில்லாமல் அல்லது பழகிப் போய் இருந்தது. சலூனுக்கு ஷேவிங்குக்கு சென்றேன்.
கடை உரிமையாள நண்பர் கேட்டார் "என்ன பாஸ் இது? யார் உங்களுக்கு இப்பிடி வெட்டினது?"
"அது ரெண்டு கிழமையாச்சு பாஸ்.... இப்பப்போய் அதிர்ச்சி அடையுறீங்க?"
"இப்பவே இப்பிடி இருக்குன்னா... அப்ப எப்பிடி இருந்திருக்கும்?"
"விடுங்க பாஸ்"
"ஹி ஹி சொல்றனேன்னு தப்பா எடுக்காதீங்க... ஹி ஹி இப்பிடி சொல்லக்கூடாது..."
"என்னய்யா? ஹொஸ்பிட்டல்ல இருந்து தப்பி ஓடிவந்த மாதிரி இருக்கா?"
"ஹி ஹி ஆமா"
நான் சாதாரணமாகத்தான் சொன்னேன். அவர் எதை நினைத்தாரோ. 'எங்கே செல்லும் இந்தப்பாதை' பாடல்வேறு அந்த அநேரத்தில் டீவியில் போய்க்கொண்டிருந்தது.


மூன்று வருஷத்துக்கு முன் வெளிநாட்டிலிருந்து வந்த நண்பன் ஏராளமான கோத்ரேஜ் ஹெயார் டை பெட்டிகளை வாங்கி அடுக்கிக் கொண்டிருந்தான்.

"ஏண்டா இது? உனக்கு நரை இல்லையே"

"எனக்கில்லடா... இது நரைக்கில்ல..  இது பாவிச்சா முடி வளருதாம் அதான் நிறையப் பேர் வாங்கிட்டு வரச்சொன்னங்க"
"உண்மையாவா?"

"அப்பிடித்தாண்டா சொல்றாங்க யாரோ கண்டுபிடிச்சிட்டாங்க இப்ப எங்கட சனம் நம்பி வாங்குது ...மச்சி மண்ணெண்ணைல பைக் ஓடலாம்னு கண்டு பிடிச்சதிலருந்து நம்மாளுங்க கண்டுபிடிப்பு அலப்பரை தாங்க முடியலடா!"


மேசன் காட்டில் கண்டெடுத்த அரிய மூலிகையில் செய்த தலைமுடித் தைலத்தை ஐயாயிரம் ரூபாய்க்கு வாங்கிப் பயன்படுத்திய அண்ணன் ஒருவர் சொன்னார்,

"நல்லா இருக்கு ஜீ இம்ப்ரூவ்மெண்ட் தெரியுது"
எனக்கும் தெரிந்தது பார்க்கும்போதே முடி கிசுகிசுவென வளர்ந்தது, டீ.வி.விளம்பரத்தில்.

சிரித்து வைத்தேன். நம்பிக்கைதானே வாழ்க்கை?
"வைங்கண்ணே உங்களுக்குத்தான் வயசே தெரியலயே..இன்னும் ரெண்டு செட்டாகும் பாருங்க!"அண்ணி காதில் விழும்படியாக நம்பிக்கை வார்த்தை  சொல்லிவைத்தேன். ஏதோ நம்மால் முடிந்தது.


"இது யார் பாவிக்கிறது?"

வாங்கி பலமாதமாகிவிட்ட, வெற்றிகரமாக இரண்டுமுறை மட்டும் என் தலைக்கு வைக்கப்பட்ட எண்ணெய்ப் போத்தல் பெட்டி முழுவதும் தூசி படர்ந்திருந்தது. தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் என்கிற உத்தரவாதத்தில், அல்லது புதிதாகவும் முளைக்கக்கூடும் என்கிற மிகுகற்பனையின் பேரில் பலராலும் பாவிக்கப்பட்ட/படும் Kern  என்கிற ஜெர்மன் தயாரிப்பு எண்ணெய்.

என்வழக்கப்படி இரண்டு நாட்கள் உபயோகித்து பலன் தெரியவில்லையாதலால் 'இது ஆவுறதில்லை' எனக் கைவிட்டிருந்தேன்.

"நான்தான் அப்போ பாவிச்சது" அசடு வழிந்தேன்.
"நானும் பாவிச்சனான்"

அவர் தலையைப் பார்த்தேன். நன்கு துடைக்கப்பட தோசைக்கல் போல பளபளவென்று ஒரு மாசு மயி.. மன்னிக்கவும் மறு இல்லாமல். முடி உதிர்வது எப்போதோ சுத்தமாக நின்று போயிருந்தது!

"நான் ஏலெவல் படிக்கேக்க இருந்து யூனிவெர்சிட்டி முடிக்கும் வரைக்கும் பாவிச்சேன்"
"அப்பவே வந்திட்டுதா?" - அடப்பாவீங்களா? புதுசுன்னு சொன்னீங்களேடா! சும்மா இருந்த என்னை உசுப்பேத்தி வாங்க வைத்த என் வழமையான சிகையலங்கார நிபுணர் மனசுக்குள் வந்துபோனார்.

"எவ்வளவு காலம் எண்டு பாரும். எவ்வளவு காசு. இதெல்லாம் பொய்" என்றார்.
"உண்மைதான் இப்ப நம்புறேன்" உறுதியாகச் சொன்னேன்.

"இதுபற்றி ஒரு தியரம்  இருக்கு தெரியுமா?"

அய்யய்யே ஆரம்பிச்சுட்டாங்கப்பா! இந்தக் கன்சல்டண்டுகளுக்கே ஒரு கெட்ட பழக்கம். எப்போதும் துறை சார்ந்தே சிந்திப்பார்களாம். சிலர் சோறு, கறி, குழம்பைக்கூட வேளையைப் பொறுத்து 6:3:1, 4:2:1 என வேறுவேறு கலவைகளில் குழைத்துத்தான் சாப்பிடுவர் என்றால் பாருங்கள். இந்த என்ஜினியரிங் வெறி காரணமாக சமயங்களில் நிம்மதியாகச் சாப்பிடக் கூட முடியாது. இந்த உரையாடல்கூட டைனிங் டேபிளில்தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. துயரம் இப்போது தியரம் வடிவில் வந்தது.

"உடம்பில இருக்கிற மொத்த முடிகளின் எண்ணிக்கை மாறாது. ஓரிடத்தில கொட்டினா இன்னோரிடத்தில முளைக்கும்" சொன்னார்.
"அப்பிடியா நான் கேள்விப்பட்டதே இல்லை"

அவரைப் பார்த்தால் நம்பலாம் எனத் தோன்றியது. தலையை மட்டும் ஷேவ் செய்த பெரிய சைஸ் கரடிக்குட்டி போல இருந்தார். ஆனால், அவர் நேரத்தைப் பாருங்கள். சரியாக இன்னொரு கன்சல்டண்ட் அங்கிள் குளித்துவிட்டு இடுப்பில் டவலைக் கட்டிக் கொண்டு எங்களைக் கடந்து போனார். அவரைக் கண்ணைக் காட்டினேன். அவர் தலையில் சுத்தமாக ஒன்றுமில்லை. கைகளில், நெஞ்சில் கண்ணுக்கெட்டிய எல்லாப்பகுதியும் ஒரு முடியும் இல்லை.

"இப்ப சொல்லுங்க உங்க தியரம் பொய்ன்னு ஒத்துக் கொள்றீங்களா? இல்ல வேறமாதிரி ப்ரூஃப் பண்ணுற ஐடியா..."

அதற்குப் பிறகு அவர் என்னுடன் பேசவில்லை.
'அடப்பாவீங்களா முடியலன்ன முடியலன்னு ஒத்துக்கணும்.. அதென்ன சின்னப்புள்ளத்தனமா பேசாம இருக்கிறது?'


"பா
ஸ் இன்டுலேகா வச்சுப் பாருங்க.. நிறையப் பேருக்கு முளைச்சிருக்கு" - நேற்று நம் சலூன் நண்பர்.
"ஆள விடுங்க பாஸ்"
"சரி விடுங்க...உங்களுக்கு எப்ப பாஸ் கல்யாணம்?"
"ஏன்யா.. எதுக்கு.. திடீர்னு?"
"இல்ல பக்கத்தில லேடீஸ் சலூன் ஒப்பன் பண்ணியிருக்கோம்..பாத்தீங்களா?"
"யோவ்...அதுக்கு....? நல்லா வருவீங்கய்யா"

Tuesday, June 17, 2014

யாழ்ப்பாணமும் மாற்றமும்!


"எப்பிடி? யாழ்ப்பாணம் டெவலப் ஆகிட்டுது பாத்தீங்களா?"
ஒவ்வொரு முறை யாழ் செல்லும்போதும் யாராவது ஒருவரேனும் இப்படிக் கேட்பது வழமை.

ஒரு நகரத்தின் அபிவிருத்தி முதலில் வீதிகளில் தெரியவேண்டும் என்கிற நம்பிக்கையின்படி அகலப்படுத்தப்பட்ட சீரான வீதிகள், தற்போது ஓரிடத்தில் மட்டுமே உள்ள ரோட் சிக்னல், வீதிக் குறியீடுகள், பாதசாரிகள் கடவை என இம்முறை உண்மையான வளர்ச்சி சற்றே தெரிந்தது.

அவசரமான ஒரு யாழ் பிரயாணம். நான்குநாட்கள் தங்கிநின்ற முழுநேரமும் வேலையாக இருந்ததால் பார்க்க வேண்டுமென்று நினைத்த நண்பர்களைச் சந்திக்க முடியவில்லை. இடையிடையே அயலவர்களுடன் மட்டும் பேச முடிந்தது. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் பார்த்ததை விட நகரப்பகுதி மாறியிருந்தது. சில இடங்கள் அடையாளமே தெரியாமல் மாறியிருந்தது. எங்கள் ஏரியா நிறையவே மாறியிருந்தது.

* * * * * * * * * * * * 

"அண்ணே மதில் கலர் செம்மையா இருக்கு!"
பக்கத்தில் மூர்த்தி அண்ணன் வீட்டு வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது.
"நீங்க சொல்றது விளங்குது ஜீ நன்றி நன்றி"
"எப்பிடிண்ணே? ஓட்டுக்கு மச் பண்றமாதிரி செலக்ட் பண்ணீங்களா? ஓ! அந்த வீட்ல அடிச்சிருக்கிறதப் பாத்து ஆசைப்பட்டு..."
சற்றுத் தள்ளியிருந்த வீட்டு மதிலும் அப்படியே இருந்தது.
"இது ரோட் பெருப்பிக்க இடிச்சுட்டு அவங்கள் கட்டித்தந்த மதில். அவங்களே அடிச்ச பெயிண்ட்!"

வீதியின் ஏராளமான வீட்டு மதில்களும் அதே நிறத்தில். செம்மஞ்சள், ரோஸ், பிரவுன் எல்லாம் கலந்து என்னவென்றே அனுமானிக்க முடியாத கண்ணைப் பறிக்கும் நிறத்தில் அட்டகாசமாக ஒளிர்கின்றன.
"ஸாரிண்ணே உங்க டேஸ்ட்டுன்னு நினச்சு அவசரப்பட்டு பாராட்டிட்டேன்"
"அது கண்ட்ராக்டர் டேஸ்ட் போல! ஏற்கனவே மதில் எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கும்னு தெரியல... இதில பெயிண்டா முக்கியம்? யாருமே வாங்காத, கடைல விக்காம கிடந்த கலராப்பாத்து மலிவா வாங்கி அடிச்சுவிட்டுட்டாங்க போல"

"ஆனா ஸ்ட்ரீட் லைட் உண்மைல நல்லா இருக்கு. ஆனா இவ்ளோ கிட்டகிட்ட தேவையில்லையே இடைல ஒன்றைத் தூக்கிடலாம்"
"அது எரியிறதில்லைத்தானே"
"அப்பிடியா ஏன்"
"ஆர் டி ஏ தங்களைக் கேக்காமப் போட்டுட்டுது எண்டு பிரதேச சபை சொல்லுது. அவங்கதான் பில் கட்டுறதாம்"

* * * * * * * * * * * *

யாழ்ப்பாணத்தில் இருந்தபோது மிக அரிதாகவே பேரூந்தில் பயணித்திருக்கிறேன். இந்தமுறை தொடர்ச்சியாக நான்கு நாட்கள் பயணம் செய்ததில் யாழில் 'Rosa' பஸ்களைத் தடை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. அவ்வளவு கொடுமையான பயண அனுபவங்கள்.

வலிகாமம் வடக்கில், மீளக் குடியேற தடைவிலக்கப்பட்ட பகுதிகளிலுள்ள திருத்தப்படாத வீடுகள், பராமரிக்கப்படாத காணிகள் பற்றி, உரிமையாளர்கள் பற்றிஅடிக்கடி இராணுவம் வந்து விசாரித்துச் செல்கிறார்கள். பார்த்தீனியம் போன்ற களைகளை அகற்றுவது தொடர்பாகப் பேசியபோது போலீஸ் தெரிவித்த ஒரு 'யோசனை' முக்கியமானது. 'இதுவரை ஆட்கள் வராத, புலம்பெயர்ந்தவர்களின் காணிகளைத் நாம் பொறுப்பேற்றுத் திருத்தி வைத்திருக்கிறோம். உரிமையாளர்கள் வந்ததும், மீளப் பெறலாம்' என்பதே அது. அரச படைகள் இன்றுவரை 'பொறுப்பேற்று' வைத்திருக்கும் காணிகள் பற்றிய அனுபவமே நமக்குப் போதுமானது. ஆக, இருபது வருடங்களுக்கும் மேலாக பிடித்து வைத்திருந்த காணிகளை மீண்டும் அரசபடை எடுத்துக் கொள்ளப்பார்க்கிறது, அல்லது அரசு தாம் வீடற்றவர்களாக்கிய வேறு பிரதேச மக்களுக்கு இந்த வீடுகளை, காணிகளைக் கொடுக்கப் போகிறது - என்கிறவாறாகப் பேசிக் கொள்கிறார்கள்.

இன்னும் தம் சொந்த மண்ணை ஒருமுறை பார்க்கக்கூட அனுமதிக்கப்படாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் அரசபடைகள் வசம் இருக்கின்றன. அங்கு செல்ல வேண்டுமென்று இருபத்துநான்கு ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள் அப்பகுதி மக்கள். எல்லாம் பயிர்ச்செய்கை நிலங்கள். பலாலி விமான நிலைய விரிவாக்கம், படையினருக்கான குடியிருப்புகள் என ஒருபகுதி மீளக் கிடைக்கப்போவதில்லை என்பது தெரிந்ததுதான். மீதமிருக்கும் பகுதியையும் வழங்கும் உத்தேசம் இருப்பதாகப் தெரியவில்லை. படையினர் வேறு, 'நாங்கள் அனுமதித்த இடங்களிலேயே மக்கள் குடியிருக்கவோ, பராமரிக்கவோ செய்யவில்லையே?' என்று நியாயமாக(?!) கேள்வி கேட்கிறார்களாம்.

கீரிமலை வீதியில் ஒரு அலுமினியம் தொழிற்சாலை இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்றிருந்தபோது 'யாரோ' இரும்பு கழற்றிக் கொண்டிருந்தார்கள். உரிமையாளர் வந்து இரும்பு கழற்ற படையினர் அனுமதிக்கவில்லையாம். இம்முறை சென்றபோது அது இருந்ததா? இல்லையா என்று இப்போது என்னால் ஞாபகப்படுத்த முடியவில்லை. நான் கவனிக்கவில்லையா? என் கண்ணில் படவில்லையா? குழப்பமாக இருக்கிறது. காங்கேசன்துறைச் சீமெந்துத் தொழிற்சாலை 2000 ஆம் ஆண்டில் பார்த்ததிலிருந்து ஒவ்வொருமுறையும் அளவில் சிறியதாகிக் கொண்டே வருகிறது. இரும்பு விற்கப்படுகிறதாம். இந்நிலையில் சிலர் சீமெந்துத் தொழிற்சாலை விரைவில் இயங்கப் போவதாகத் தீவிரமாக நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். மேலும் குழப்பமாக இருக்கிறது.

திருத்தப்படாத வீடுகள், காணிகள் பற்றி அடிக்கடி அக்கறையாக விசாரித்துச் செல்லும் இராணுவத்தினர் சொல்வது என்னவெனில், வெளிநாட்டுக் காரர்கள், சுற்றுலாப் பிரயாணிகள் வீதியால் செல்லும்போது இந்தமாதிரி இருப்பது நன்றாக இல்லையாம். தவிர, ஓரிரு மாதத்திற்கு முன்னர் வீதியிலிருந்த சிதிலமான கட்டடங்களில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த அடையாளங்களைச் செப்பனிட்டிருக்கிறார்கள். கூரையில்லாத சிதிலமான கட்டங்களின் துப்பாக்கிச் சன்னத்துளைகளுக்கு மட்டும் செப்பனிட்டுவிட்டால், இங்கே போரினால் எந்தப் பாதிப்பும் இடம்பெறவில்லை என நம்பும் யாரோ இருக்கிறார்கள் எனத் தெரிகிறது.

ஒருவகையில் உண்மையும் அதுதான். இங்கே எந்தச் சண்டைகளும் நடைபெறவில்லை. தொண்ணூறாம் ஆண்டில் பலாலியிலிருந்து முன்னேறிய இராணுவம், பாரிய எதிர்ப்பின்றி புலிகள் பின்வாங்க, ஓரிரு நாட்களில் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. வீட்டுக் கூரைகளை மரங்கள் ஒன்றுவிடாமல் அகற்றியது, கதவுகள், யன்னல்கள், நிலைகளோடு உடைத்தெடுத்தது, தேவையேயில்லாமல் இருந்த கிணறுகளை எல்லாம் புல்டாசர் கொண்டு மூடியது, பல வீடுகளை மதிற்சுவர்களை எல்லைகளை அடையாளமே காணமுடியாதவாறு இல்லாமல் இடித்துத் தள்ளியது எல்லாமே பின்னர் இராணுவம் பொழுது போகாமல் செய்த 'மக்கள் சேவை'. எங்கள் வீட்டில் ஓரிடத்தில் யன்னலைக் கழற்றுவதற்காக, சுவரை இடித்துப் புதிய கதவு வழியே வைத்திருந்தார்கள். ஒரு எலக்ரிக்கல் ஸ்விட்ச்சையோ, சிறு வயர்த்துண்டையோ கூட விட்டுவைக்காமல் மிகக் கவனமாகப் பெயர்த்தெடுத்ததில், ஓர் 'இராணுவ ஒழுங்கு' தெரிகிறது. கூடவே சும்மாவே இருப்பதன் கொடுமையும்!

இப்போது எல்லாப்பகுதிகளும் மீளக்கட்டமைக்கப்பட்டமை(!?)சுற்றுலாப் பிரயாணிகள் செல்லும் பகுதிகளிலாவது தெரியவேண்டும். வீதிகள் சரியாக இருகின்றன. வீடுகள்தான் இப்போது பிரச்சினை. எங்கள் வீட்டிலிருந்து பார்க்கையில், சற்றே தூரத்தில் ஒருவர் தனியாளாக காட்டு மரங்கள் கொண்டு ஒரு தற்காலிக வீடமைக்கும் முயற்சியில் இருந்தார். ஏறகனவே அவர் அமைத்த குடிசை, மழைக்கு தாக்குப் பிடிக்கவில்லையாம். மழை நாளொன்றில் இராணுவம் பார்த்துவிட்டு மரங்களையும், கூரைத் தகரங்களையும் கொடுத்திருக்கிறார்கள். தனிமனிதனாகத் துரித கதியில் மரங்களை நட்டு, குறுக்கு மரம், கூரை என பார்த்துக் கொண்டிருக்கையில் வீடொன்று உருவாகிக் கொண்டிருந்தது. சைக்கிள்களில் ரோந்து வந்த ஏழெட்டு இராணுவத்தினர் பார்த்துவிட்டு, இறங்கிவந்து கைலாகு கொடுத்து மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர் தோளில் தட்டினார்கள். பாராட்டுகிறார்கள் போலும். யாரேனும் ஃபேஸ்புக் போராளிகள் அந்த இடத்தில் நின்றிருந்தால் ஒரு தமிழனத் துரோகியை இந்த இணைய உலகிற்கு அடையாளம் காட்டியிருக்கக்கூடும்.

மாலை. மாவிட்டபுரத்தில், யாழ்நகர் செல்லும் பஸ் ஏறுகையில் இராணுவத்தினர் அல்லது போலீசார் சிலரும் வந்து ஏறி அமர்ந்து கொண்டார்கள். காங்கேசன்துறையில் பணியோ பயிற்சியோ தெரியவில்லை. இறுகிப்போன முகங்களோடு யாரையும் கண்டுகொள்ளவில்லை. கைக்குழந்தையோடு ஏறும் தாய்மார்களைப் பார்த்ததும் கண்டக்டர் வழக்கம்போல "குழந்தையோட நிக்கிற அக்காக்கு இடங்குடுங்கோ" என்றபோதெல்லாம் அவர்கள் மட்டும் சலனமில்லாமல் இருந்தார்கள். விநோதமாக இருந்தது. நான் பார்த்தவரையில் - போர்க்களமல்லாத பகுதிகளில் இராணுவம்/போலீஸ் மக்களோடு இவ்வளவு முறைப்பாக, விறைப்பாக இருந்ததில்லை. பேரூந்தில் வயது முதிர்ந்தவர்கள் நிற்கும்போத்து இப்படிப் பாராமுகமாக இருந்து பார்த்ததில்லை. ஒருவேளை புதிதாகப் பயிற்சி பெறுவதால் அப்படியோ என நினைத்துக் கொண்டேன். சற்று நேரத்தில் விடை தெரிந்தது. அவர்களில் ஓரிருவருக்கு தொலைபேசி அழைப்புவர எடுத்து, "மச்சான் நான் இப்பதாண்டா வந்திட்டிருக்கேன்.. ஆறுமணிக்கு வந்திடுவேன்" - ஆக, தேச சேவையில் இணைந்துகொண்ட தமிழர்கள் அவர்கள். பெருமையாக இருந்தது.

* * * * * * * * * * * *

பிள்ளையார் கோவிலுக்கு முன்னால் வீதியின் குறுக்காக வரிவரியாக வீதியில் மஞ்சள் நிறத்தில் கோடாக கோடாக பெயிண்ட் பூசப்பட்டிருந்தது. வந்த நாளிலிருந்து அவ்வப்போது சில நிமிடங்கள் தொடர்ச்சியாக அவதானித்துப் பார்த்திருந்தேன். ஆனாலும், அதன் காரணத்தையோ, பயன்பாட்டையோ சற்றும் அனுமானிக்க முடியவில்லை.

"என்னன்னே இது? ஏதும் டிசைனா? - மீண்டும் மூர்த்தி அண்ணனுடன் பேசும்போது.
"உங்களுக்குப் பார்த்தா எப்பிடி தெரியுது?"
"பார்த்த உடனே படஸ்ட்ரியன் க்ரொசிங் மாதிரியே.. இருக்கு ஆனா அப்பிடித் தெரியேல்ல"
"அப்பிடின்னு சொல்லித்தான் போட்டவங்கள்... நானும் வாசல்லயே க்ராஸ் பண்ணி பிள்ளையாரிட்ட போகலாம்னுதான் நினச்சேன்"
"யாரும் கண்டுக்கிறதாவே தெரியலயே"

அப்போது இரண்டு பெண்மணிகள் அந்தப் பாதசாரிகள் கடவையை மிகுந்த பிரயத்தனத்துடன், கடும் அவதானத்துடன் மிக மிக மெதுவாக தயங்கித் தயங்கிக் கடக்க முனைந்தார்கள்.
"படஸ்ட்ரியன் க்ரொசிங்க இவ்வளவு பயபக்தியா யாரும் கடந்து நான் பார்த்ததே இல்லண்ணே"
"அதில வச்சு அடிச்சு அக்சிடென்ட் ஆகியிருக்கு... அதான் சனம் பயப்பிடுது"

நடுவீதில் அந்தப் பெண்கள் மெதுவாக கடக்கையில், அவர்களுக்கு இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் மோட்டார் சைக்கிள்கள் தம் பாட்டுக்கு கடந்து சென்றன. தொடர்ந்து அதில் வைத்து மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றையொன்று ஓவர் டேக் செய்தார்கள்.

பகலிலோ, இரவிலோ குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே போக்குவரத்து போலீசார் கடமையில் இருப்பார்கள் எனவும், முன்பு போல திடீர் திடீரென கண்ட இடங்களில் நின்று மறிப்பது, மது அருந்தியோரை பிடிப்பது போன்ற தொல்லைகள் இல்லையாம். குறிப்பாக 'டிமிக்கி' கொடுத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் செல்பவர்களைத் துரத்திப் பிடிப்பது போன்ற தொந்தரவுகள் இல்லை என்கிறார்கள்.

* * * * * * * * * * * *

எட்டு வருடங்களுக்குப் பின் நண்பன் கௌதமனுடன் எங்கள் பழைய நண்பரான Book lab புத்தகக்கடைக்கு சென்றோம். நண்பர் கௌதமனைப் பார்த்து "என்ன பாத்து நாளாச்சு?" என்றார். என்னைப் பார்த்தும் "இவரப் பாத்து நிறைய நாளாச்சே" என்றார். புத்தகங்களுக்காகத் தேடியலைந்து 2005 நல்லூர்த்திருவிழாவில் கண்டடைந்த அட்டகாசமான புத்தகக்கடை அது. இம்முறை தேடும்போது நண்பன் கேட்டான்

"என்ன முந்தி மாதிரி ஒண்டையும் காணேல்ல..."
"கௌதமன், நீங்க ஒரு லட்சியத்தோட இருக்கீங்க..உங்களுக்கு காசு தேவையில்ல, சொந்தமா ஒரு பில்டிங் இருக்கு, பொதுச்சேவை செய்ய மேலதிகமா பணம் இருக்குன்னு வைங்க... நீங்க முந்தி இருந்த புக்லாப் மாதிரி ஒண்ணைத் திறக்கலாம். எங்கள மாதிரி ஆக்களுக்கு சேவை செய்யலாம்"

ஒரு லட்சியத்தோடு தொடங்கப்பட்ட புக்லாப் யாழ்ப்பாணத்தின் புத்தகக் கடைகளுக்கான 'ஸ்டாண்டர்ட்'டுக்கு மாறியிருந்தது. கடையின் பெரும்பகுதியை பாடசாலை மாணவர்களுக்கான பாடப் பயிற்சிப் புத்தகங்கள் நிறைத்திருந்தன.

* * * * * * * * * * * *

"ஜீ எப்பிடி மாறிட்டுது யாழ்ப்பாணம்...? நீங்க இங்க வரமாட்டீங்களா? கொழும்பில்தான் வேலை செய்வீங்களா?" சிறீ அண்ணன் கேட்டார்.
புன்னகையில் ஒரு 'அருமை' கமெண்ட் போட்டேன்.
"இங்க வந்தா ஒரு நல்ல பொம்பிளை பாக்கலாம்ன்னு.... ஓ நீங்க கொழும்பில வீட்டோட பாத்துச் செய்வீங்க இல்ல? பிறகு கதைக்கிறன் உங்களோட"
யாழ்ப்பாணம் மாறியிருக்கா? குழப்பமாக இருந்தது.

இரண்டாண்டுகளுக்கு முன் பார்த்ததை விட நகரப்பகுதி மாறியிருந்தது. உண்மையில் கொஞ்சம் டெவலப் ஆகியிருந்தது. எப்படி தெரியும்? உதாரணமாக யாழ் நகரத்தினையே எடுத்துக் கொண்டால் மேலோட்டமாக இரண்டு விதமாக வகைப்படுத்தலாம்.

நெரிசலான கடைத்தொகுதிகளைத் தவிர்த்து, சற்றுத் தள்ளியுள்ள பயன்படுத்தப்படாத பகுதிகளில் புதிய கட்டடங்களை நிர்மாணித்து விரிவு படுத்துதல். கழிவுநீர் வடிகாலமைப்பு. விசாலமான வீதிகள், போக்குவரத்து ஒழுங்குமுறை. இது நான் நம்பும் முதலாவது முறை.

இரண்டாவது - நெரிசலான இடத்தில் மேலும் பல கட்டடங்களைக் கட்டி, மேலும் சிக்கலாக்குவது. அங்கே நிறையப் புதிய கடைகளைத் திறந்து, கலர் கலராக மின்விளக்குகளை எரியவிடுதல். இருக்கும் மூத்திரச் சந்துகளிலேல்லாம் நாலைந்து வங்கிகளைத் திறந்துவிடுதல்.

இரண்டாவது முறைதான் யாழ்ப்பாணத்தில் பெரும்பாலானோரின் நம்பிக்கை என்பதைக் கடந்த காலங்களில் உணர்ந்திருக்கிறேன். யாரும் இதை மறுக்க முடியாது. வேண்டுமெனில் நேரில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.

மூன்றாவதாக இன்னொரு முறை இருப்பதாகத் தெரிகிறது.
"ஜீ..யாழ்ப்பாணம் எப்பிடி டெவலப்ப்பாகி இருக்கு பாத்தீங்களா?"
"ம்ம் இப்ப உண்மைல நல்லா இருக்கு ரோட் எல்லாம்..."
"ரோட்ட விடுங்க ஜீ அது எப்பவும்தானே இருக்கு? கே.எஃப். சி வந்துட்டுது நீங்க போகலையா?"

* * * * * * * * * * * *

நாட்டில் அமைதி திரும்பிவிட்டது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சுமூகமாக வாழ்கிறார்கள் என வெளிநாடுகளுக்கு காட்ட அரசாங்கம் பெரும்பிரயத்தனம் எடுத்துக் கொண்டாலும், ஒருமுறை அவர்களில் யாரேனும் ரயிலில் பயணிக்கும் பட்சத்தில் உணர்ந்துகொள்ள முடியும், இங்கே எதுவும் மாறவில்லை. வன்முறை ஓயவில்லை. அதன் வடிவம் மட்டுமே மாறி இருக்கிறது என்பதை.

ரயிலில் சிங்களப் பாடல்களைப் போட்டுத் தொலைக்கிறார்கள்!