Friday, August 15, 2014

மாலைநேர மயக்கம்!



அலுவலகத்திலிருந்து நடந்து வந்துகொண்டிருந்தேன். பிரதான வீதியிலிருந்து ஒரு கிலோமீட்டருக்குள்ளேயே இப்படியொரு கிராமப்புறத்தை யாராலும் கற்பனை செய்ய முடியாது. நானும் செய்யவில்லை. நேரில் பார்த்தபிறகு எதற்குக் கற்பனை? ஆனாலும் இங்கும் பென்ஸ், ஜாக்குவார் கார்கள்தான் திரிகின்றன.

வாழ்க்கையின் விசித்திரங்களை எண்ணி வியந்தபடியே நடந்தேன். சிக்கன் பிரியாணியை ஃபுல் கட்டு கட்டியபின், இரவு சாப்பிட முடியாது என்கிற மந்தமான வயிற்றுநிலையில் வாழ்வின் அபத்தங்கள், ஏற்றத் தாழ்வுகள் குறித்த திடீர் சமூகப் பிரக்ஞையை அடைபவரா நீங்கள்? அப்படியானால் நீங்களும் என் தோழனே! வாருங்கள் இணைந்து நடப்போம்!

'டொக்.. டொக்'  - சீரான குளம்புச்சத்தம்..அல்ல, குதியுர்ந்த காலணிச் சத்தம் என் சிந்தனையைக் கலைத்தது. சேலை கட்டிய ஒரு பெண்மணி எனக்கு இருபதடி முன்னால் சென்று கொண்டிருந்தார். பெரும்பாலும் சிங்களப் பெண்மணிகள்தான் பொருத்தமாக, மிகத்திருத்தமாக, அழகாக, கச்சிதமாகச் சேலை உடுத்துகிறார்கள் என்கிற உண்மையைச் சொன்னால் தமிழினத் துரோகியாகச் சித்தரித்துவிடக் கூடும் என்கிற அச்சத்திலேயே பலரும் சொல்வதில்லை எனத் தெரிகிறது. நானும் அதுபற்றி ஒன்றும் சொல்வதாக இல்லை.

என்போலவே வேகமாக நடந்துகொண்டிருந்தார். ஆக, அவரை ஓவர் டேக் செய்வது சாத்தியமில்லை என்பதால் முயற்சிக்கவில்லை. ஒரு பெண்மணி நம் முன்னால் சென்றால் அவரை ஓவர்டேக் செய்து விடவேண்டும், அல்லாவிடில் அவரைப் பின்தொடர்வது போலாகிவிடும் என்கிற ஒழுக்கவியல் சார்ந்த உயரிய கொள்கை உங்களுக்கும் இருக்கிறதா? அப்படியானால் நீங்களும், நான் வளர்ந்த யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் செல்லும் பெண்மணியை ஓவர்டேக் செய்து பழகியதால் ஏற்பட்ட சிந்தனை என்பேன். ஆனால் பாருங்கள், சரியாக நாம் கடந்து செல்ல முற்படும் நேரம்தான் அவர்களும் நமக்கு இணையான வேகத்தில் செல்வர்கள். 'அடியே எடுபட்ட சிறுக்கி..' என பாரதிராஜா பட அப்பத்தா போல உங்கள் மனமும் அப்போதெல்லாம் அலறியிருக்கலாம்.

அந்தப் பெண்மணி அழகானவராக இருக்கக்கூடும். சிங்களவர்களின் பாரம்பரிய கண்டிய நடனம் பயின்றிருப்பார் என்று தோன்றியது. சிலரைப் பார்க்கும்போதே உங்களுக்கும் அப்படி உறுதியாகத் தோன்றுகிறதா? கலைக்கண்கள் உங்களுக்கு. எந்த நேரத்திலும் அந்தப்பெண்மணி பின்னோக்கி, பின்புறமாகவே, கால்களை நாலைந்து அடிகள் எட்டி வைத்து, இடையை ஒடித்து, ஒரு அரை வட்ட U Turn அடித்து, ஒரு கண்டிய நடன ஸ்டெப் போடுவார். கண்டிப்பாக அந்தக் காட்சியை நான் தவற விட்டுவிடக் கூடாது என எண்ணிக் கொண்டேன்.

தூரத்தே குதிரையின் கனைப்பொலி கேட்டது! ச்சே! என்ன இது பிரமை! இந்தத் தமிழ்சினிமாதான் நம் மனதை எந்த அளவுக்குக் கெடுத்து வைத்திருக்கிறது பாருங்கள். கலாச்சாரக் காவலர்கள் சினிமா சமுதாயத்தைச் சீரழிக்கிறது எனப்பொங்குவதில் நியாயம் இருக்கிறதுதான் போலும். சடுதியாக என் சமூக சிந்தனை விழித்துக் கொண்டது.

மீண்டும் சிதறவிட்ட என் சிந்தனையைக்கூட்டிப் பொறுக்கிப் பிரக்ஞை பெற்று நிகழுலகைக் கவனித்தேன். அப்பெண்மணி எனக்கு ஏழடி தூரத்தில் செல்வதைக்கண்டு திடுக்குற்றேன். 'உண்மையிலேயே அந்த கண்டிய நடன ஸ்டெப் போட்டிருப்பாரோ? ச்சே மிஸ் பண்ணிவிட்டோமே!' என் சமூக சிந்தனை செய்த சதியை நொந்து கொண்டே எதிரில் பார்த்தால் இரண்டு குதிரைகள் வந்துகொண்டிருந்தன. இருங்கள் குதிரைகள் என்றால் உண்மையான குதிரைகள். கடற்கரையில் பரிதாபமாக, நன்கு வளர்ந்த மனிதத் தடிமாடுகளை வயிற்றுப் பிழைப்புக்காகச் சுமந்து ஓடுகின்றனவே அதே குதிரைகள்.

பெண்மணி பயந்து போய் பின்னடைந்திருக்கிறார். நான் இன்னும் பயந்துபோய் வீதியின் அடுத்த கரைக்கு கடந்து போய்விடலாமா எனத்தீவிரமாக யோசித்தேன். வாய்ப்பிருக்கவில்லை. குதிரைகளை இப்படியா வளர்ப்பார்கள்? மாடுகள் வீதியில் திரிவது போல தனியாக வரும் குதிரையை எங்கேயும் பார்த்ததில்லையே! மனதிற்குள் பீதி பீடித்துக் கொண்டது. நான் தனியாக என்றால் பரவாயில்லை. அந்தப்பெண்மணி குறித்து இன்னும் பீதியடைந்தேன். அவரும் நான் பயந்தமாதிரியே பயந்தாரா? இல்லை, வேறுமாதிரிப் பயந்தாரா எதுவும் புரியவில்லை. அந்தக் குதிரைகள் என்ன நினைக்கின்றனவோ? மனிதர்கள் நினைப்பதையே புரிந்து கொள்ள முடியாதபோது குதிரை நினைப்பதை எங்ஙனம் புரிந்துகொள்வது?

மீண்டும் என் சிந்தனை கலைந்து பார்க்க, குதிரைகள் நெருங்கியிருந்தன. அந்தப் பெண்மணியைக் காணவில்லை. 'எங்கடா?' ஆச்சரியப்பட்டு தேடினால் என்பின்னால் நின்றுகொண்டிருந்தார். 'அய்யய்யோ இது எப்படா நடந்திச்சு?' மனம் அலறியது. இப்போது கலவரம் அதிகமாகியிருந்தது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு மெதுவாக நடந்தேன்.

அப்படி எந்த விபரீதமும் இடம்பெறவில்லை. என்னை மெதுவாகக் கடந்த குதிரை, "நான் பயந்துபோய்விட்டேன்" பதற்றமான சிரிப்புடன் கூடிய குரலில். ஆச்சரியமாக இருந்தது. 'அந்தப் பெண்மணியைப் பார்த்து குதிரை எதற்குப் பயந்து போயிற்று?' 'அதைவிட குதிரை சிங்களம் பேசுமா?' 'பெண்குதிரையா அது?' துணுக்குற்றுத் திரும்பிப் பார்த்தேன்.

அந்தப் பெண்மணி சிரித்தார். குதிரைகள் கண்டுகொள்ளவில்லை. தம்பாட்டில் வீதியோரமாக் இருந்த புற்களை மேய்ந்துகொண்டு சென்றன. குதிரைகள் பாவம். அவை, குதிரைகளையே குதிரைகளாகப் பார்க்கின்றன. தவறாக நினைத்ததற்காகக் குதிரைகளிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டே நடந்தேன்.

4 comments:

  1. ரசித்துப் படித்தேன்!

    ReplyDelete
  2. வணக்கம்,ஜீ!நலமா?'டொக்.. டொக்' - சீரான குளம்புச்சத்தம்..அல்ல, குதியுர்ந்த காலணிச் சத்தம்.///குதிரைகள் பாவம். அவை, குதிரைகளையே குதிரைகளாகப் பார்க்கின்றன.///செம!(சிரித்து ஓயவில்லை./மாளவில்லை.)

    ReplyDelete
  3. அழகான எழுத்து நடை....
    அருமை.

    ReplyDelete
  4. ஹிஹி.. ஜாலியான பதிவு... இன்னும் சிரிச்சுட்டுதான் இருக்கன்..

    ReplyDelete