Monday, May 26, 2014

மரணத்தின் நொடிகள்!


மரணம் நிச்சயமானபின், அதற்காகக் காத்திருக்கும் அந்த ஒரு சில வினாடிகள் மிகக் கொடுமையானது. அதுதான் அதியுச்சபட்சத் தண்டனை என்றுகூடத் தோன்றுகிறது. கொலையாளி மரணத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்பாராத தடங்கல் ஏற்படும்போது, அந்தச் சிறு தாமதம் கொடுக்கும் உணர்வு பற்றிப் பேச வேண்டியதில்லை. அதுவே உண்மையான மரண அவஸ்தை. அது, ஏதாவது அதிசயம் நிகழ்ந்துவிடாதா என ஒரு சிறு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி விடலாம். சிறு நம்பிக்கையின் கீற்றையும் கொடுத்துவிடலாம்.

'ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்' படத்தில் ஷிண்ட்லரின் தொழிற்சாலைக்கும் வரும் ஜேர்மனிய ராணுவ அதிகாரி அமான்கோத் அங்கு பணிபுரியும் சுகவீனமுற்றிருக்கும் வயதான யூதன் ஒருவனை 'அவன் இனித் தேவையில்லை' எனக் கொல்ல முடிவு செய்கிறான். மண்டியிட்டு அமர்ந்திருக்கும் அவன் தலையில் தன் கைத்துப்பாக்கியை வைத்து ட்ரிக்கரை அழுத்துகிறான். துப்பாக்கி வேலை செய்யவில்லை. ஒரு முறை சோதித்துவிட்டு திரும்பவும் சுட முயல்கிறான். பயனில்லை. பக்கத்தில் நிற்கும் தனது படை வீரனின் துப்பாக்கியைப் பிடுங்கி சுட முயல, அதுவும் வேலை செய்யாது. மிகுந்த எரிச்சலுடன் துப்பாக்கியின் பின்புறத்தால் ஓங்கி தாக்கிவிட்டு அங்கிருந்து செல்வான். இதற்கென்றே காத்திருக்கும் ஷிண்ட்லர் ஓடிவந்து அந்த யூதனை அழைத்துச் செல்வார். அந்தச் சில நிமிடங்களில் அந்தக் கைதியின் வியர்த்து வழியும் மரணபயம் நிறைந்த முகமும், ஷிண்ட்லரின் தவிப்பும் அவ்வளவு பாதித்து, முடிவில் அவன் பிழைத்துக் கொண்டதும் பார்வையாளனை நிம்மதிப் பெருமூச்சு விடவைக்கும்.

'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் ஒரு காட்சி. கொலையாளி ஒருவன் மோட்டார் சைக்கிளில் வந்து இரு போலீஸ் அதிகாரிகளைச் சுட்டுக் கொல்கிறான். அவர்களுடன் கூடவே இருந்த வயதான போலீஸ்காரன் 'அய்யா' என்றழைத்து கொலையாளிக்கு சல்யூட் அடித்தபடியே முகத்தில் கலவரம் படிய காத்திருக்கிறான். எப்படியும் இவனைக் கொன்றுவிடுவான் எனத் தெரிகிறது. மற்றைய கொலையாளியின் மோட்டார் சைக்கிள் கிளம்பத் தாமதமாகிறது. இதற்குள் யாரும் வந்துவிடமாட்டார்களா? வயதான போலீஸ்காரன் பிழைத்துக் கொள்ளமாட்டானா? எனச் சற்று பார்வையாளனை எதிர்பார்க்க வைக்கிறது. ஆனால் அதுவே மேலும் தாமதமாகி நம் பொறுமையைச் சோதிக்கும்போது, ' யோவ் சீக்கிரமா சுட்டுட்டுப் போய்யா' என்கிற மனநிலை வந்துவிடுகிறது. எந்தத் தவிப்பும் ஏற்படவில்லை. இது இயக்குனர் திட்டமிட்டு செய்ததாக இருக்கலாம். இறுதியில் சுட்டுக் கொல்லப்படுகிறான்.

சமயங்களில் சாவை எதிர்நோக்கியிருப்பவனைவிட அந்தச் சூழ்நிலையில் அருகில் இருப்பவனுக்கே தாமதிக்கும் வினாடிகள் அதீத நம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றன. 2006ல் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போய்ச் சிக்கிக் கொண்ட நாட்கள் மறக்கமுடியாதவை. ஒவ்வொருநாளும் ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் புலிகளுக்கு ஆதரவானவர்களும், எதிரானவர்களும் மாறி மாறி 'போடுவது' என்பது சர்வசாதாரணமான நிகழ்வு. 

ஒரு மதிய நேரம் வீட்டிற்கு அருகாமையில் ஒரு துப்பாக்கி வேட்டு. சிறிய இடைவேளில்யில் இரண்டாவது வேட்டும் தீர்க்கப்பட்டதில், ஒரு நம்பிக்கை 'தப்பி விட்டாரா?' சற்று நேரத்தில் இன்னொரு வேட்டுச்சத்தம், முதலில் கேட்டதைவிட தொலைவாக வேறு பகுதியில். இப்போது சிறு உற்சாகம். கேற்றடியில் ஓடி வந்து பார்த்தேன். இன்னும் இரண்டு மூன்று வேட்டுக்களின் சத்தம் கேட்க, 'சிங்கன் எஸ்சாகிட்டாண்டா!' மனம் கூவியது.

சற்று நேரம் அமைதி. எதிரில் வந்த ஏரியா நண்பன் "ஆரெண்டு தெரியும்தானே?"
"தெரியும், ஆள் தப்பீட்டுதா?"
வருத்தமாக உதடு பிதுக்கிச் சென்றான்.

சொல்லமுடியாத மனவுளைச்சல் அன்று என்போலவே பலருக்கும். சங்கக் கடையில் லைனில் நின்றுகொண்டிருந்த அனைவருமே அவர் ஓடியதும், தப்பிவிட வேண்டுமென மனதார அந்த நொடியில் நினைத்திருப்பர்கள். கடவுளை வேண்டியிருப்பார்கள். மறுநாள் அந்த ஒழுங்கைக்குள் அவர் சுடப்பட்டு வீழ்ந்த இடத்தைக் கடந்து செல்லும்போது நண்பன் சொன்னான்,

"ச்சா இவ்வளவு தூரம் தப்பியோடி வந்து... பேசாம பக்கத்தில ஆமியிற்ற ஓடியிருக்கலாம்" - அந்த யோசனை அபத்தமாக இருந்தாலும் அந்த நேரத்தில் உயிர்பிழைத்திருப்பார் என்பதுதான் உண்மை.

கடைசி நொடிவரை உயிர் பிழைத்துவிடுவேன் என்ற அவருக்கு நம்பிக்கை இருந்திருக்கும். அவர் முதல் வேட்டில் அதே இடந்தில் இறந்திருந்தால் அவ்வளவு வருத்தமாயிருந்திருக்காது. முதல் இரு வெடிகளுக்குத் தப்பியது எல்லோருக்குமே அந்தக் கணத்தில் அளப்பரிய நம்பிக்கையைக் கொடுத்திருந்தது. பலநாட்கள் பாதித்தது அந்நிகழ்வு - இப்போது நினைத்தாலும் கூட!

கடைசி நொடிகளில், கண்கள் கட்டப்பட்ட நிலையில், மிக அருகே சிலருக்கான் இறுதி வேட்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருக்க, நடத்திச் செல்லப்படும் ஒருவனுக்கு நம்பிக்கையின் கீற்று சிறிதேனும் தென்பட்டிருக்குமா?