Monday, February 24, 2014

என்னப் பாத்து அந்தக் கேள்விய..?


முதல் நாளிரவு Christmas பார்ட்டி முடிந்து 'திடீர் சுகயீனம்' காரணமாக அலுவலகத்திற்கு லீவ் போட்டு ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருந்தேன்.

திடீரென்று அஃபீஸ் மானேஜர் அங்கிள் தொலைபேசினார். "உன் சம்பளம் கொண்டுவந்திருக்கிறேன். கீழே இறங்கி வர முடியுமா?"

'ச்சே நாட்டில இந்த மாதிரி நாலு நல்ல மனுஷங்கள் இருக்கிறதாலதான் காலைல அந்தக் குளிர் குளிருது போல' நினைத்துக் கொண்டே போய் வாங்கிக் கொண்டேன். அங்கிள் கேட்டார். "ரெண்டுநாள் லீவ் என்ன பண்ணினே? கேர்ள் ஃபிரண்டை மீட் பண்ணினியா?"

ஏன்? எதுக்கு? இப்பதானய்யா நல்ல மனுஷன்னு நினைச்சேன் அப்பிடின்னு ஒரு நொந்துபோன பார்வை பார்க்க, அங்கிள் ஹி ஹின்னு சிரிச்சுட்டு போயிட்டார். அங்கிளுக்கு நம்ம வரலாறு தெரியும். முதன்முதல் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து தாத்தாக்கள், மாமாக்களுடன் மட்டுமே பேரதிருஷ்டம் வாய்க்கப்பெற்ற என்னைப் பார்த்து அந்தக் கேள்விய?... வெறுப்பேத்துறாராம்!

* * * * * * * * * *

"டேய்! ஆறுமணியாகுது. அஞ்சுமணிக்கே போகாம இன்னும் இங்கயிருந்து என்ன செய்யிற? உனக்கு கேர்ள் ஃபிரண்ட் இல்லையா?" - பாலா. வெளிநாட்டிலிருந்து வந்த கன்சல்டண்ட்.

அப்பதான் ஒரு விஷயம் புரிஞ்சுது. ஆறுமணிக்கெல்லாம் உலகம் எங்கயோ போயிட்டிருக்கு. நாமதான் நாவலர் ரோட்லயே நிக்கிறம். அலுவலகம் நாவலர் ரோட்டில இருந்தது. என் முதல் வேலை. நான்தான் அங்கே சின்னப்பையன்.

இந்த 'கேர்ள் ஃபிரண்ட்' கேள்வியை முதன்முறை என்னைப் பார்த்துக் கேட்டவர் பாலாதான். அவர் ஆரம்பிச்சது...என்மேல இவ்வளவு நம்பிக்கை வச்சு, இவனுக்கும் ஒரு கேர்ள் ஃபிரண்ட் இருக்கும்னு நம்புறாங்க பாருங்க. அந்த நம்பிக்கை பெரிய விஷயம். லைட்டா பெருமையா வேற இருக்கும். ஆனா அந்த நம்பிக்கைய நாமளே பொசுக்கிறோம்னு நினைக்கும்போதுதான் வருத்தமா இருக்கும்.

உடன் வேலை பார்க்கும் சிங்கள அங்கிள்கள் அறிமுகமானவுடன் கேட்கும் மிக முக்கியமான கேள்வி "உனக்கு கேர்ள் ஃபிரண்ட் இருக்கா?" எங்கு சென்றாலும் இந்தக் கேள்வியில் மட்டும் மாற்றமில்லை. கவனித்துப் பார்த்ததில் அவர்கள் அதனை வாழ்வின் அத்தியாவசியப் பொருளாக நினைப்பவர்கள். நம்மவர்கள் பலர் அதை ஆடம்பரப் பொருளாக நினைத்துக் கொண்டிருந்தார்கள் - அதாவது எது கிடைக்கவில்லையோ அது ஆடம்பரம் என்ற நம்பிக்கையில்!

கேர்ள் ஃபிரண்ட் இல்லாததெல்லாம் ஒரு பிரச்சினையா? என நொந்துபோகும் அளவுக்கு அவுட்சோர்சிங் வேலை பார்க்கையில் இந்த விஷயம் ஆப்பு வைத்தது. சிங்கள நண்பர்கள் ஐந்து மணிக்கே காதலியைச் சந்திக்க 'டாண்' என்று கிளம்பிவிட நம்மாளுங்க 'நீ போய் என்ன பண்ணபோறே சும்மாதானே சுத்திட்டிருக்கே?' என்றொரு பார்வை பார்ப்பார்கள். என்போன்ற வேலைக்கு வாழ்க்கைப்பட்ட விளங்காத பயல்கள் எல்லாம் சமயத்தில், ஒன்பது, பத்து மணிவரை இருந்து எவனுக்கோ உழைத்துக் கொடுத்தோம்.

* * * * * * * * * *

ஞ்சு வருஷத்துக்கு முதல், அலுவகலகத்தில் வேலை செய்த பெண் தன் மாஸ்டர்ஸ் கம்ப்ளீட் பண்ணி விட்டதாகக் கூறி, தன்னுடன் அவளது இன்ஸ்டிடியூட் வருமாறு அழைத்தாள். அது அலுவலகத்திற்கு சற்று அருகிலேயே இருந்தது. முதலில் மறுத்தாலும் ரொம்பவே கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் (மக் டோனால்ட்ஸ்ஸில் ட்ரீட்!) அந்த அன்புக்குக் கட்டுப்பட்டு போனாப் போகுதுன்னு சம்மதித்தேன்.

பக்கத்தில் நடந்து கொண்டிருந்தவள் திடீரென்று கேட்டாள், "உடம்பு சரியில்லையா?"
"அப்பிடியில்லயே!"
"நல்லாத்தானே இருந்ததே? ஏன் முகம் ஒரு மாதிரியா இருக்கு?"
"அப்பிடியா?"
"என்னமோ பேயறைஞ்ச மாதிரி!"
"ஓ!  அ..அ.. ஆக்சுவலி மை ஃபேஸ்.... ஓல்வேய்ஸ் லைக் எ பேயறைஞ்ச ஃபேஸ்யா யூ நோ...."
"ஹேய் ஃபர்ஸ்ட் டைம் ஒரு பொண்ணுகூட நடந்து போறே.. அதானே?"

ச்சே! என்ன ஒரு அவமானம்! எனக்கு வந்திச்சு பாருங்க கோபம். அப்பிடியே பாதிவழில திரும்பியிருப்பேன். ஆனா மக் டோனால்ட்ஸ் என்ற ஒரே வார்த்தைக்காக அந்த அவமானத்தைத் தாங்கிக் கொண்டேன். அப்பல்லாம் இதுமாதிரி இடங்கள்ள எல்லாம் ஓசிலதான் சாப்பிடுவதென்பது என் கொள்கை. மனுஷனுக்கு மானமா, கொள்கையான்னு வரும்போது கொள்கைதானே முக்கியம்?

கேர்ள் ஃபிரண்ட் இல்லாம இருக்கிறது அவ்வளவு பெரிய குற்றமாய்யா? ஏழு வருஷத்துக்கு முன்னாடி பாஸ்போர்ட் அஃபீஸ்ல கூட இதுமாதிரி ஒரு சம்பவம் நடந்திச்சு. ஆனா அது இந்தளவுக்கு இல்ல.. அதுக்கும் மேல! ரொம்ப மோசமா அவமானப்படுத்திட்டான்.

இத்தாலில இருந்து வந்த ஒரு சிங்கள பயபுள்ள. மிக உருக்கமா ஒரு பார்வை பார்த்து "ஏன்? உனக்கு ஏதாவது பிரச்சினையா?"
ஒரு நிமிஷம் நானே என்னை நினைச்சு பயந்து போயிட்டேன்.

* * * * * * * * * *

திருகோணமலையிலிருந்த ஓரிரவில் ரெசிடெண்டில் ஒரு பார்ட்டி. உற்சாகமாக நானும்,  என்னைவிட பத்து வயது அதிகமான என் சிங்கள தோஸ்துவும், ஒரு தமிழ் அண்ணனும் தனியாகப் பேசிக்கொண்டிருக்கையில்..

"உமா கொழும்புல போய் வீக்கெண்ட் என்ன பண்ணுவே? கேர்ள் ஃப்ரெண்டை  மீட் பண்ணுவியா?"
கொஞ்சநேரம் எதுவுமே புரியாமல் முழித்துவிட்டு, ஒரு மாதிரியாக பொத்தாம் பொதுவாகத் தலையசைத்தேன்.

"என்னது, கேர்ள் ஃப்ரெண்ட் இல்லையா? பொய் சொல்லாதே!"
"இதில பொய் சொல்ல என்ன இருக்கு? இல்ல!"
இல்லையா? நீங்க உடனே யாரையாவது லவ் பண்ணுங்க. லைஃப்ல ஒரு இண்டரெஸ்ட் வரும்" - இது தமிழ் அண்ணன்.
"என்னது உடனயா? என்ன பாஸ் பக்கத்து கடைல போய் பரோட்டா சாப்பிட்டு வர்ற மாதிரி அவ்ளோ ஈசியா சொல்லிட்டீங்க?"
"சரி இப்ப உனக்கு கேர்ள் ஃப்ரெண்ட் இல்ல! இதுவரைக்கும் எத்தனை பேர்?" - தோஸ்து.
டேய் ஜீ... புயபுள்ள உன்னை உசுப்பேத்தி அழவைக்கலாம்னு ட்ரை பண்ணுது சூதானமா இருடா.. யாருகிட்ட?
"எப்பவுமே இருந்ததில்ல!"
"எப்பிடி? ஏன்?"

சற்று நேரம் ஆழ யோசிப்பதுபோல பாவனையிலிருந்து மிக சீரியசான முகபாவனையுடன் ஆரம்பித்தேன்.
"சார் சின்ன வயசில இருந்தே ரொம்ப டீசண்டு! சாருக்கு இதெல்லாம் பிடிக்காது! சார் ரொம்ப ஸ்ரிக்டு! சார் பொண்ணுங்கள எல்லாம் சகோதரிகளா.."

எந்த நேரத்திலும் தோஸ்து குபீரென்று சிரித்துவிடலாம் எனத் தோன்றியதால் ரூட்டை மாத்தி உருக்கமாகப் பேச ஆரம்பித்தேன்.
"நாங்கெல்லாம் இந்த சமுதாயத்தைப் பற்றியே எப்பவும் சிந்தித்துக் கொண்டு வாழுறதால.."
பேரரசு கமலுக்குக் கதை சொல்லப் போன மாதிரியே ஒரு ரியாக்சன் வந்திச்சு அங்கயிருந்து. சரி விலாவாரியா சொல்லிடுவோம்.

"நாங்க எல்லாம் உங்கள மாதிரி சூழ்நிலைல வளரேல்ல. யாழ்ப்பாணத்தில சின்ன வயசிலருந்து பள்ளிக்கூடத்தில தனியாவே வளர்க்கப்படவங்க. பாஸ் லவ் உங்களுக்கு பரோட்டா சாப்பிடுற மாதிரி இருக்கலாம். நானெல்லாம் ஒண்ணாப்பு படிக்கேக்க கூடப்படிச்ச பொண்ணுங்க கிட்டப் பேசினதுக்குப் பிறகு, இன்னொரு பொண்ணுகிட்ட ஹாய், ஹலோ சொல்லும்போது 24 வயசாயிட்டுது. முடியுமாய்யா? நான் மட்டுமில்ல எங்க ஃபிரண்ட்ஸ் எல்லாப் பயலுகளும் இப்பிடித்தான். அதிலயும் நாங்க மாத்ஸ்(Maths) படிச்சவங்க. மாத்ஸ் படிச்சவங்க எப்பிடியிருப்பாங்க தெரியுமா?

அது ஒரு தனி கூட்டம். சேவல் பண்ணை. காய்ஞ்சு... காய்ஞ்சு போய் இருப்பாங்க. பொண்ணுங்க கூட எல்லாம் யாருமே பேச மாட்டாங்க. மற்றவனைப் பேசவும் விடமாட்டோம். அப்பிடியே போய்ப் பேசினாலும் மாத்ஸ் பொண்ணுங்க பதில் பேசுவாங்களான்னு எவனுக்கும் தெரியாது. அவளவள் தன்னை ஔவையார், காரைக்கால் அம்மையார் ரேஞ்சில நினச்சுட்டு இருப்பாளுங்க. அற்ப மானிடர்களேன்னுதான் எங்களைப் பாப்பாளுங்க. எப்பவாவது ஒரு ஆர்ட்ஸ், கொமர்ஸ் பொண்ணு வந்து அபூர்வமா யாராவது ஒருத்தன மனுசனா மதிச்சு ஒரு வார்த்தை பேசினா போதும். அட் எ டைம்ல ஒம்பது பேர் பாய்ஞ்சு விழுந்து பதில்சொல்லப் போய், கடைசில ஒருத்தனும் பேசமுடியாது. மொத்தமாக் காரியத்தையே கெடுத்துடுவானுங்க.

ஒரு பொண்ணை லைட்டா சைட் அடிச்சாலே, கடைக் கண்ணாலயே கவனிச்சு, கண்ணகி கசின் மாதிரியே ஒரு லுக் விடுவாளுங்க. யாருமே கேக்குறதுக்கு இல்லைன்னு வேற வழியே இல்லாம ஒரு அட்ரஸ்... வெறும் அட்ரஸ் கேக்க போயிருப்போம் என்னமோ அட்டெம்ப்ட் டு ரேப்புக்கு அப்ளிகேஷன் போட வந்த மாதிரியே அப்பிடி ஒரு டெரர் ஃபேஸ் காட்டுவாளுங்க. ஆணியப் புடுங்கவே வேணாம் ஆளவிடுன்னு ஓடிவந்திருவோம்.

எப்பவாவது, ஏதாவது ஒரு பொண்ணைப் பார்த்தா, பிடிச்சிருந்தா, நல்லாருக்கே லவ் பண்ணினா எப்பிடியிருக்கும்? அப்பிடீன்னு லைட்டா, ரொம்ப மைல்டா ஒரு யோசனை வரும். அப்பிடியே மைண்ட் வொய்ஸ்ஸ கரெக்டா காட்ச் பண்ணி, காறித் துப்பிட்டுப் போயிடுவாளுங்க!

நீங்க வேற! நாங்க வேற! நீங்க எல்லாம் ஹிந்திப் படம் பார்த்து அதையே ஃபெலோ பண்றவங்க. லைஃப வாழுறவங்க. பதினஞ்சு வயசுலயே கேர்ள் ஃபிரண்ட்! லவ்சு! நாங்கெல்லாம் தமிழ்ப்படம் பார்த்து வளர்ந்தவங்க. எங்களுக்கு சமுதாயம்தான் முக்கியம். நாப்பது வயசில சமுதாயத்துக்காக போராடுற ஹீரோவ இருபது வயசு பொண்ணு துரத்தி துரத்தி லவ் பண்ணுவாங்க. அத நம்பியே முப்பத்தஞ்சு வயசு வரைக்கும் சும்மாவே சுத்திட்டு திரியுற எத்தின பேரு இருக்காங்க தெரியுமா?

நாங்களும் ஒரு காலத்தில, எப்பிடியும் அடுத்த முறையாவது வலண்டைன்ஸ் டேயக் கொண்டாடுறம்னு சைலண்டா சபதம் போட்டுட்டுத் திரிஞ்சவங்கதான். ஒண்ணும் நடக்கல! எவளும் சிக்கல! ஊரில எல்லாப் பொண்ணுங்களும் விவரமா இருந்தா பாவம் பசங்க என்னதான்யா பண்ணுறது? என்னமோ பொண்ணுங்க எல்லாம் லைன்ல வந்து நிக்கிறமாதிரியும், நாங்க என்னமோ வேணாம்னு சொல்லிட்டுத் திரியிறமாதிரியும் பேசுறீங்க? சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு?"

- தொடர்ந்து ஆக்ரோசமாக உரையாற்றினேன். ஊடக அனுசரணை - டீச்சர்ஸ்!

* * * * * * * * *

தையெலாம் மறந்திருந்தேன். நேற்று அதிகாலை எட்டுமணிக்கே தூங்கிக் கொடிருந்த என்னை ஃபோன் செய்து எழுப்பிய சிங்கள கன்சல்ட்டண்ட் மாமா ஒருவர் கேட்டார், "எப்பிடியிருக்கே? வைரல் ஃபீவர்ன்னு கேள்விப்பட்டேன். இப்ப எப்பிடி?"
"பரவால்ல"
"அப்புறம் வலண்டைன்ஸ் டே எப்பிடிப் போச்சு? கேர்ள் ஃபிரண்டை மீட் பண்ணினியா?"

யோவ் நீங்கெல்லாம் லீவ் நாள்ல ஃபோன் பண்ணி சம்பந்தமில்லாம ரொம்ப அக்கறையா விசாரிச்சாலே தெரியும்யா அஃபீசுக்கு வரச்சொல்லப் போறீங்கன்னு.. அதையெல்லாம்  பொறுத்துக் கொள்ளலாம்.

அதுக்கேன்யா என்னைப் பாத்து அந்தக் கேள்விய..?

Thursday, February 20, 2014

தனித்த ஆட்டுக்குட்டி!


நீண்டநாட்களாக கணனியில் சேமித்து வைத்திருந்து, ஒருவழியாகப் பார்த்து, மனதில் தோன்றியதை எழுத வேண்டுமென்று நீண்ட நாட்களாக நினைத்து, நீண்ட நாட்களாக எழுத முயற்சித்து, வேலைப்பளு, என் சோம்பேறித்தனம் தாண்டி, ஒருவழியாக! 'ஓநாயும் ஆட்டுக் குட்டியும்' - வழமை போலவே தமிழின் நல்லபடங்களைப் பார்ப்பதற்கான தயக்கம் இன்னும் போகவில்லை. மிக எளிமையான த்ரில்லர் என்டர்டெயினர்! எல்லோரையும் கவரக் கூடிய இந்தப்படம் குறித்த குறியீடுகள் பற்றிய பேச்சு கொஞ்சம் மிரட்டியிருந்தது. கூடவே எதிர்கருத்துக்கள்.

மிஷ்கின் படத்தின் ஆரம்பக் காட்சியைப் பார்ப்பதே மிகுந்த எதிர்ப்பார்ப்பைக் கொடுப்பது. Top angle இல் கமெரா நிலையாக இருக்க, யாருமில்லாத வீதி, ஒற்றை மின் கம்பம், சில நொடிகளில் வலது பக்கமிருந்து மையப் பகுதிக்கு வரும் மனிதன் என் அழகான ஆரம்பக் காட்சி! படம் தனக்குள் உள்ளீர்த்துக் கொள்வதாகவோ, கதாபாத்திரங்களுடன் நெருக்கமாக ஒன்றவோ வைக்கவில்லை. சற்றுத் தள்ளி நின்றே வேடிக்கை பார்க்க வைக்கிறது. அவ்வப்போது மிக நெருங்க வைக்கிறது. போலவே இணைந்து கொள்ளவும். இது இயக்குனர் திட்டமிட்டே செய்ததுபோலத் தோன்றுகிறது. பலருக்கு இது ஒரு குறையாகவும் தோன்றலாம். ஆனால் ஒரு நீதிக்கதை போலவே சொல்லப்பட்டிருப்பதால் சரியாகவே தோன்றுகிறது. ஈசாப் நீதிக்கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள் படித்தபோது நாங்கள் கதாபாத்திரங்களுககாக யாருக்காகவும் வருந்தியதில்லை என்பது ஞாபகம் வருகிறது.

ஆரம்பத்தில் உதவி செய்யப்போய் ஸ்ரீ சிக்கலில் மாட்டிக் கொள்ளும்போது எந்த வித அனுதாபமும் வரவில்லை. யாரோ ஒருவனுக்கு என்னமோ பிரச்சினை என்கிற ரீதியில் வேடிக்கை பார்க்கும் மனநிலையே இருந்தது. அந்தக் கதாபாத்திரத்துடன் இணைந்து பயணிக்கவோ, காட்சிகளுடன் ஒன்றவோ முடியவில்லை. அதுபோலவே, இறுதியில் வூல்ஃப் இறந்துபோகும்போது எந்த சோகமும் வருவதில்லை. ஏனெனில் அவன் இருக்கவேண்டும் என்பதற்கான எந்த அவசியமும் இல்லை. அந்தச் சிறுமிக்கு பாதுகாப்புத் தேவை. ஸ்ரீ கிடைத்துவிட்டான் இனி வூல்ஃப் தேவையில்லை என்பதுபோலவே இருக்கிறது. 

ஒருவகையில் போலீஸ் கையில் சிக்குவதை விட வூல்ஃப் சுதந்திரமாக இறந்து போவதைத்தான் நாம் விரும்புகிறோம். அதுபோல அந்த வில்லனைக் கொல்லாமல் விடுவதும் பிடித்திருந்தது. அந்தக் கதா பாத்திரத்துக்கு மரணத்தை விட அதன் லட்சியம் ஈடேறாமல் உயிருடன் விட்டுவைப்பதே பெரிய தண்டனை! சமயங்களில் உயிருடன் இருத்தலே மரணத்தை விடக் கொடுமையான தண்டனை!

"அந்த அக்காவை நான்தான் கொன்னுட்டேன்" - என்று சொல்லி ஸ்ரீ அழும்போது மிஷ்கினின் மாறும் முகபாவங்கள். சில நொடிப்பொழுதுகள் வரும் அந்தக்காட்சியொன்று போதும். மிஷ்கினைத் தவிர யாரையும் அந்த இடத்தில் பொருத்திப் பார்க்க முடியவில்லை. மிஷ்கின் கல்லறையில் அமர்ந்து 'ஓநாயும் ஆட்டுக் குட்டியும்' கதை சொல்லும் காட்சியை விடவும் அதிகம் என்னைக் கவர்ந்தது இந்தக் காட்சிதான். இறுதிக் காட்சியில் கண்தெரியாத அந்தச் சிறுமி உயிர் பிழைக்கும் பிரயத்தனத்துடன் தட்டுத் தடுமாறி சுவரோரமாக வேகமாக நகர்ந்து கொண்டே வந்து சுவர்த்தடுப்பில், ஏதோ ஒரு பாதுகாப்புக் கிடைத்துவிட்ட நம்பிக்கையில் ஒடுங்கி நிற்கும் காட்சி அதிர வைத்தது. பார்த்துக் கொண்டிருக்கும் நாங்களே ஒரு கணம் எதைப் பற்றியும் யோசிக்காமல் உயிரைப் பணயம் வைத்து அந்தச் சிறுமியைக் காப்பாற்ற முனையும் உத்வேகத்தைக் கொடுத்தது.

ஸ்ரீ துப்பாக்கியைக் காட்டி மிரட்டி 'ஒன்று' சொல்லும்போது மிஷ்கின் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தான் பிடித்து வைத்திருக்கும் பெண்ணின் கழுத்தில் துப்பாக்கியை அழுத்தி 'ரெண்டு' சொல்லும் காட்சி, மிக அசால்ட்டாக வில்லன்களை சுட்டு விட்டு கொடுக்கும் சின்ன சின்ன ரியாக்சன்கள் உள்ளிட்ட சில காட்சிகள் ஒரு பெரிய ஹீரோவின் வணிக சினிமாவின் மாஸ் காட்சிகள். வேகமாக அலட்டிக் கொள்ளாமல் இருப்பதால் கண்டுகொள்ளப்படாமல் கடந்து விட்டிருக்கக் கூடும். துரதிருஷ்டவசமாக மாஸ் ஹீரோக்களின் மாஸ் சீன்கள் ஸ்லோமோஷனில், பில்டப் இசை (அல்லது இரைச்சலுடன்) காட்டப்பட வேண்டியது என்கிற நம்பிக்கை தமிழ்சினிமாவில் வளர்க்கப்பட்டு விட்டது.சேசிங் காட்சிகளுக்கு இரைச்சலாகத்தான் இசை வழங்கவேண்டும் என்கிற விதி மாறவில்லை எனத்தெரிகிறது. பின்னணி இசை எனும்போது எனக்கு இன்னமும் நிசப்தத்தில் மெதுவாக கமெரா நகர, மிக மெல்லியதாக ஆரம்பித்து மனதை அதிர வைக்கும் அந்த ஒற்றை வயலினைத் தாண்டி வேறெதுவும் தோன்றவில்லை (யுத்தம் செய்!). அந்தளவுக்கு கவரவில்லை.

படத்தில் தர்க்கப் பிழைகள் சொல்லலாம். ஆனாலும் 'தங்க மீன்கள்' பார்த்தபோது எழுதியது, 'இதுவே ஓர் இரானியப் படமாகவோ, இத்தாலியப் படமாகவோ இருந்தால் எந்த உறுத்தலுமில்லாமல் கொண்டாடியிருப்பேனோ என்று எனது நேர்மையையும் கேள்வி கேட்கத் தோன்றுகிறது'. இது இயக்குனர் சிருஷ்டித்த தனி உலகம். குழந்தைகளுக்கு கதை சொல்வதுபோல புனையப்பட்ட ஒரு காடு. நம் தர்க்கங்களை, கெடுபிடிகளைத் தவிர்த்துவிட்டுக் குழந்தைகளாகவே நுழைந்து பார்த்தால் நல்லதோர் அனுபவம். அதை அப்படியே உணர்கிறேன்.

உருவகங்கள், குறியீடுகள் மூலம் உணர்த்தப்படும்,கவிதை போன்று எடுக்கப்படும், இயக்குனர் சிருஷ்டித்த தனித்த உலகத்தில் நிகழும் கதைகளைக் கொண்ட உலக சினிமாக்களில் தர்க்கப் பிழைகள் கண்டுபிடிப்பதில் நாம் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனாலும் தமிழில் வரும்போது மட்டும் விடுவதில்லை. அகிரா குரசாவாவின் 'ட்ரீம்ஸ்' படத்தை எட்டு வருடங்களுக்கு முன்னர் பார்த்தேன். எதுவும் புரியவில்லை. சரியாகக் கவனிக்கவுமில்லை. இப்போது பார்த்தாலும் எனக்குப் புரியும் என்று நம்பவில்லை. ஒரு கவிதை போல, உருவகங்களால் புனையப்படும் படங்களில் காட்டப்படுவது இயக்குனர் சிருஷ்டிக்கும் தனி உலகம். அதில் நம் தர்க்கங்களோடு உள் நுழைந்து கேள்வி கேட்பது சரியாகுமா என்பது புரியவில்லை.

இன்றும் மிஷ்கினின் மாஸ்டர் பீஸ் என்று நான் நம்புவது அஞ்சாதே படம்தான். போலீஸ் ட்ரெஸ்ஸை மாட்டியதுமே கடமையுணர்ச்சி, வீரம் வந்து டாய் என்று கத்திக் கொண்டே வில்லன்களை துவம்சம் செய்யப்புறப்படும் ஆறுச்சாமிகள், துரைசிங்கங்களை மட்டுமே பார்த்துப் பழகிய எங்களுக்கு முதன்முறையாக போலீஸ் வாழ்க்கையின் நங்கள் பார்க்காத இன்னொரு பகுதியைச் சொன்னதும்கூட ஒரு காரணம். தமிழில் கொஞ்சமேனும் வித்தியாசமான முயற்சிக்கப்படும் படங்கள் ஒநாய்க்கூட்டத்தில் சிக்கிய தனித்த ஆட்டுக் குட்டியின் நிலையிலேயே வெளிவருகின்றன. இயக்குனர்களும் அப்படியே. அவர்களில் முக்கியமானவர் மிஷ்கின்.

மிஷ்கின் அதிகம் பேசுகிறார் என்கிற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. சிலவேளைகளில் உண்மைதான். அதனாலென்ன? பேசட்டுமே! வெறும் அபத்தக் குப்பையாக ஒரு படத்தை எடுத்துவிட்டு, ஒவ்வொரு நாளும் விடாமல் தொலைக்காட்சிகளில் வந்து கதறக் கதற கதைவிடும் இயக்குநர்களைப் பார்க்கும்போது தோன்றுவது, 'மிஷ்கின் பேசுகிறாரா என்ன?'