Thursday, October 31, 2013

ஜேகே எனும் நண்பனின் திருமணம்!

"ஹாய் தல! என்ன பண்றீங்க? செப்.15 எனக்குக் கல்யாணம். நான் உங்கமேல மானவாரியா மரியாதை வச்சிருக்கேன். வந்து தொலைங்க!"
- காலையில் நண்பர் 'படலை' ஜேகேயின்  ஃபேஸ்புக்கில் மெசேஜ்.

சமகாலத்திலே.... ஏன் என்னுடைய மூன்று ஆண்டுகால பொதுவாழ்க்கையிலே....ஏன் வாழ்க்கையிலேயே என்மேல ஒருத்தர் மரியாதை வச்சிருக்காரே அதால,
"கண்டிப்பா தல! எனக்கு கூட்டம் அலர்ஜி..இருந்தாலும் உங்களுக்காக!"
"ஏன் பாஸ் உங்கள என்ன அரசியல் கூட்டத்துக்கா அழைக்கிறம்...  வாங்க பாஸ் சந்திப்போம்"

எக்கச்சக்கமான வேலைப்பளு! சரியா திருமணத்திற்கு முதல்நாள் இரவு பத்துமணிக்கு ஞாபகம் வந்து  மைந்தனிடம் கேட்டேன் "என்ன டைம் பாஸ்?" "இருங்க விசாரிச்சுப் பாக்கிறேன்"

அடுத்த கேள்வியும் எழுந்தது. திருமணத்திற்கு பரிசுப்பொருள் தெரிவு செய்வது குறித்தான குழப்பங்கள் எல்லாருக்கும் இருக்கும்போல. இன்னும் சுவர்க்கடிகாரம் கொடுக்கும் வழக்கம் நம் மக்களிடையே இருக்கிறதா? வழக்கொழிந்துவிட்டதா? புத்தகங்கள் நல்ல தேர்வு - அருமை தெரிந்தவர்களுக்கு மட்டும்! ஆனால் அது வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு பொருத்தமானதா? உக்கிரமாக யோசித்து இறுதியில், 'விலை மதிக்க முடியாத அன்பை மட்டும்' பரிசாகக் கொடுத்துவிட்டு வரலாம் என வேறுவழியில்லாமல் முடிவு செய்தேன்.

காலையில் எனக்காக காத்திருந்த நண்பர் மைந்தனும் என்போலவே வேலைப்பளு, குழப்பத்துக்குப் பிறகு, அன்பையே எடுத்து வந்திருந்தார்.
"எங்க பாஸ் வெடிங்?" - மைந்தன்
"பம்பலப்பிட்டி சரஸ்வதி ஹோல்ல"

ம்ம ராசின்னு ஒன்றிருக்கு. அது சமயத்தில் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் தொற்றி விடுவதுண்டு. அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.
திடீரென "பாஸ் வெடிங் தெஹிவலல போல இருக்கு" - மைந்தன்
"இல்லையே அப்படி சொல்லலையே"
"எனக்கும் அப்பிடிச் சொல்லல! ஆனா அஃபீஸ்ல இன்னொருத்தன் சொன்னான் கார்ட்ல அப்பிடித்தான் இருக்காம். லோஷனும் வர்றதா சொன்னான். அவன் கார்ட் பாத்தானாம்"
"அப்பிடியா? நீங்க பார்த்தீங்களா?"
"ஃபேஸ்புக்கில பார்த்தேன். ஆனா முன்பக்கம்தான் போட்டிருந்தார் அதில ஒண்ணுமில்ல"
த்ரீவீலர் திருமண மண்டபத்திற்கு அருகே வந்துவிட்டது.
மைந்தன் அந்த இன்னொரு நண்பருக்கு ஃபோன் செய்து, "தெஹிவலதான்!"
"???"

ஒருமுக்கியமான விஷயம் நான் எப்பவுமே புத்திசாலித்தனமாக யோசிப்பேன்.
இரண்டாவது முக்கியமான விஷயம் - நான் அப்பிடி யோசிக்கும்போது காலம் கடந்திருக்கும்.
"அது வேற வெடிங்கா இருக்கப்போகுது. அங்க ஒருக்கா இறங்கிப் பாத்திருக்கலாம்" பாதிதூரம் கடந்திருந்தோம்!
"ஆமால்ல!"

திருமண மண்டப வாசலில் மைந்தன், "பாஸ் நீங்க வெயிட் பண்ணுங்க நான் பார்த்துட்டு வர்றேன்!" போனவேகத்தில் திரும்பி வந்து, "அங்கதான் பாஸ்!"

த்ரீவீலர்கார சிங்கள அண்ணன் சிரித்தார். "பாஸ், பயபுள்ள எங்க ஏரியா...எல்லாப் பயலுக கிட்டயும் சொல்லிவிட்டுறப்போகுது, இவன் ரொம்ப நல்லவன்டா. ஆட்டோல ஏறினா ஊரச்சுத்திப் பாக்கிறாண்டான்னு!"
மீண்டும் சரஸ்வதி மண்டபம் வந்ததும் த்ரவீலர் அண்ணன் சிரித்தபடியே விடைபெற்றார். நான் திரும்ப வீட்டுக்குப் போகும்போதும் சிரித்தபடியே நின்றார். கொடுமை!


ண்டபம் உள்ளே நுழைந்ததும் மறுபடியும் குழப்பம். மணமக்கள் பெயர் எழுதியிருக்கவில்லை. 'ஒருமாதிரியா யார் முதலில் செல்வது' என முடிவெடுத்து தயங்கி, மீண்டும் ரகசியமாக "என்ன பாஸ் இங்கதானா?","கேட்டுப் பாக்கலாமா?", வழக்கமான "மச்சி நீ கேளேன்" சம்பிரதாயம் முடித்து, அங்கே வரவேற்றுப் பொட்டுவைத்த வட்ட நிலாவிடம் கேட்டேன்,

"இது ஜேகேயோட வெடிங்தானே?"
சற்றுக் குழப்பமாகப் பார்த்தார் (அய்யய்யோ தப்பா வந்துட்டமா?)
ஒரு வகையான 'இருக்கு ஆனா இல்லை' பாவனையுடன் "ஜீவிகாவோடதுதான்" (???)
"ஜெயக்குமரன்..ன்..."
"அவர் இன்னும் வரல!" (ஓ! அப்போ அவர்தானா? அப்பாடா!)
"இல்ல முதல்ல தெர்யாம வேற ஒரு ஹோலுக்க நொழஞ்சி தொர்த்தி வுட்டானுங்க அதான்"
இப்போது தலையசைத்து சிரித்தார்
'நைஸ் சுமைல்' - மனதிற்குள் ஒரு 'அருமை' கமெண்ட் போட்டு உள்ளே சென்றோம்!


அங்கே ஒரு பெண்மணி, 'நானும் ஒரு ரசிகை தானுங்கோ' என்றார். அறிமுகப்படுத்திக் கொண்டபோது, ஃபேஸ்புக்கில் பார்ப்பதைவிட நேரில் பயங்கரமாக இருப்பதால் அடையாளம் தெரியவில்லையென வெகுவாகப் பாராட்டினார்.

தலைவர் ஜேகே மணமேடையில் வந்து அமர்ந்துகொண்டார். முகத்தில் ஒரு கலவரம் இருந்ததாகத் தோன்றியது. புதுக் கூண்டுக்குள் புகுந்த முயல்குட்டிபோல கண்ணில் தெரிந்த மிரட்சி என் பிரமையாக இருக்கலாம். அவ்வப்போது அண்ணன் புன்னகைத்துக் கொண்டார். புன்னகையில் கலந்திருந்தது பீதி போலவுமிருந்தது. பிரமிப்பு போலவுமிருந்தது. 'டெக்னிக்கலாக' பதற்றத்தைக் குறைக்கவோ என்னவோ அண்ணியிடம் அவ்வப்போது பேசிக்கொண்டிருந்தார். 'ஒருவேளை படலையிலிருந்து கேள்விகள் கேட்பாரோ?' நினைக்கவே திகிலாயிருந்தது!

வழக்கமாக நம்மவர் திருமணங்களில் மணமேடை சற்றுத்தூரத்தில், மணமக்கள் தனியாக இருக்க, மற்றவங்க தூர இருந்து வேடிக்கை பார்ப்பார்கள். இங்கே மணமேடை அருகில், தவிர மணமக்களைச் சுற்றி நிறையப்பேர் நின்றிருந்தார்கள் - இந்தியப் பிரபலங்கள் திருமணம்போல. இது ஒரு நல்ல விஷயம். கலவரமாக முழித்துக் கொண்டிருக்கும் மாப்பிள்ளைகளின் டென்ஷன் குறைக்க, அனைவரும் இதனைப் பின்பற்றுவது நம் சமுதாயத்தின் அவசியத் தேவை என உரக்க... ஆணித்தரமாக...உறுதியாக... பணிவாக...கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.


மிகக்கவர்ந்த  விஷயம், திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு புத்தகங்கள் வழங்கியது. முன்னைய காலங்களில் தாம்பூலப்பை என்பது, தாம்பூலமாக மட்டும் இருந்து, பின்னர் பலகாரங்களாகப் பரிணமித்து, அப்படியே குங்குமச் சிமிழ், பிள்ளையார் சிலையாகி, நம் மக்களால் குபேரன் சிலை எனத் தவறாக அழைக்கப்படும் சிரிக்கும் புத்தர்சிலை (மைத்ரேய புத்தர்?) என வளர்ந்திருப்பது வரலாறு. ஜேகே புத்தகங்கள் வழங்கியது. அட்டகாசமான முயற்சி!

லோஷன்  தனக்கு 'மீண்டும் ஜீனோ' கிடைத்ததைப் பற்றி ஃபேஸ்புக்கில் கூறியபோதுதான் தெரிந்தது. நாங்கள் மிஸ் பண்ணிவிட்டதால், அதுபற்றி ஒன்றும் கூறவில்லை. இது பற்றி ஜேகே சற்றுக் கடுப்பாகியிருந்ததாகத் தெரிகிறது. சிரமப்பட்டு எடுத்த புதிய நல்ல முயற்சியைக் கண்டுகொள்ளாமல் விட்டால் யாருக்குத்தான் கோபம் வராது? நம் புத்தகக் கடைகளில் 'புத்தகம்' வாங்கியவர்களுக்குத் தெரியும் அந்தக் கஷ்டம்! Hats off ஜேகே!

இதையே நம்மவர்கள் பின்பற்றினால், என்போன்ற தாம்பூலப்பை வாங்காமல் எஸ்கேப் ஆகும் ஆத்துமாக்கள் இனி வாங்கிச் செல்ல முற்படுவார்கள். ஆனால், அதிலும் ஒரு சிக்கல். எந்த நல்ல விஷயத்தையும் நம்மவர்கள் கோக்குமாக்காக மாற்றிவிடுவதில் வல்லவர்கள். புத்தகம் கொடுக்கிறோம் பேர்வழி என 'முப்பது வகை பச்சடிகள்', 'கோலம் போடுவது எப்படி?', 'முப்பது நாளில் அழகியாகிவிடுவது எப்படி?'என்று அலற வைத்துவிடும் அபாயமிருக்கிறது. நல்ல புத்தகங்கள் கொடுப்பது நம்மவரிடையே ஒரு நல்ல ஆரம்பமாக அமையட்டும்!

வாழ்த்துக்கள் ஜேஜே!

Saturday, October 19, 2013

சுஜாதா, திரைக்கதை எழுதுவது இப்படி!


கடந்த மாதம் யாழிலிருந்து வந்திருந்த நண்பன் ஒருவனைச் சந்தித்தேன். பேச்சு தலைவர் சுஜாதாவுக்குச் சென்றது. அவன் தீவிர சுஜாதா ரசிகன்.

"திரைக்கதை எழுதுவது எப்படி? இங்க வந்ததா?எங்கயுமே கிடைக்கேல்ல" - நண்பன் கேட்டான்.

"மச்சி நானும் ஒரு ஆர்வத்தில 2005ல யாழ்ப்பாணத்தில தேடி, கொழும்பு வந்து தேடிப்பார்த்து எங்கயுமே கிடைக்கல. வந்தது, முடிஞ்சுதுன்னு சொன்னாங்க"

"யாழ்ப்பாணத்தில 'புக்லாப்'ல மட்டும் 'திரைக்கதைப் பயிற்சிப் புத்தகம்'னு ஒண்ணு வச்சிருந்தாங்க. அது கதை ரெடியானப்புறம் என்னென்ன பண்ணனும்னு ஒரு கைடன்ஸ் மாதிரி நாமளே ஃபில் அப் பண்ணி யூஸ் பண்றது. நமக்குத் தேவையில்லாதது. அப்புறம் எனக்கும் இண்டரஸ்ட் இருக்கல. ஆனா இப்ப திரும்பவும் ஆர்வமா இருக்கேன். ஏன்னா வர்ற வருஷம் இன்னொரு புத்தகம் வந்திடும். 'திரைக்கதை எழுதுவது இப்படி'ன்னு அது இன்னும் நல்லாருக்கும்"

" எப்பிடி? யார் எழுதினது?"
"ராஜேஷ்ன்னு ஒருத்தர் கருந்தேள் கண்ணாயிரம் என்கிற பேர்ல ஒரிஜினலா எழுதின Syd Field கிட்ட கொப்பி ரைட்ஸ் வாங்கி எழுதுறார். அவர் ஒழுங்கா எழுதியிருந்தா போன வருஷமே எழுதி முடிச்சிருக்கணும். செய்யல. ஆனா அதுவும் நல்லதுதான். இப்போ வித்தியாசமான படங்கள் வர்றதால அது பற்றியெல்லாம் இருக்கும்."

"அது சுஜாதா புத்தகத்தைவிட நல்லாருக்குமா?"
"நிச்சயமா நல்லாருக்கும். நான் சுஜாதா புத்தகம் பார்க்கல. ஆனா தலைவர் சில விஷயத்தை '.......இப்படிச் சொல்கிறார் Syd Field'ன்னுதானே எழுதியிருப்பார். ராஜேஷ் டீப்பா எல்லாருக்கும் புரியிறமாதிரி அலசி ஆராய்ஞ்சு சரியான ஹாலிவுட், சரியான தமிழ்ப்படங்களோட உதாரணம் சொல்லியிருப்பார்.

"ஏன்.. சுஜாதா அப்பிடிச் செய்திருக்கமட்டாரா?"

"செய்திருப்பார் மச்சி.. ஆனா தலைவர்கிட்ட சிலநேரங்கள்ல பிடிக்காத விஷயம் அதுதான். ஸ்க்ரீன் பிளே டெக்னிக், What If? இதுக்கெல்லாம் ஷங்கர், மணிரத்னம், ராஜீவ்மேனன் படத்தில இருந்துதான் அப்பப்ப எக்சாம்பிள் காட்டுவார். இதுல ஷங்கர் படம் படம் தவிர, மற்றதெல்லாம் படுமொக்கையான உதாரணமாத்தான் இருக்கும். தலைவர் தான் வேலைசெய்த படத்த மட்டும் சொல்லியிருக்கலாம். வேற சின்னப் படங்களை கண்டுக்காம இருந்தாரா இல்ல வேற நல்ல படம் அவருக்கு சொல்றதுக்கு கிடைக்கலையான்னு தெரியல. கணையாழியின் கடைசிப்பக்கங்கள்ல தமிழ்சினிமா பற்றி எழுதின வாத்தியாருக்கும் ரெண்டாயிரம்கள்ல இருந்தவருக்கும் எவ்வளவு வித்தியாசம். எக்கச்சக்கமா காம்ப்ரமைஸ் ஆகிட்டார். ஒருவேளை சலிப்படைஞ்சு போயிருக்கலாம்"

'திரைக்கதை எழுதுவது இப்படி' நிச்சயமா தலைவரோட புத்தகத்தைவிட ரீச் ஆகும். ஆகவேணும். நிறையப்பேர் அடிச்சுப்பிடிச்சு வாங்குவாங்கன்னு நம்புறேன். இப்பவே ராஜேசைக் கவனிக்கத் தொடங்கியாச்சு. சூது கவ்வும் படத்தில கொஞ்சமா அவரோட பங்கிருக்கு..இனி தலைவரோட புத்தகம் யாருக்கும் தேவைப்படாதுன்னு நான் நம்புறேன்"

"அப்பிடியா?" - இதைக் கேட்கும்போது அவன் முகத்தில் அப்பட்டமாக ஒரு ஏமாற்றம், கவலை தெரிந்தது உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது.

"ஏன் மச்சி அதுக்கு இவ்ளோ ஃபீல் பண்றே? தலைவர விட ஒருத்தர் டீப்பா சொன்னா நல்ல விஷயம்தானே! ராஜேஷ்க்கும்கூட அவர் வாத்தியார்தான்.... வாத்யாரே இப்ப இருந்தா சந்தோஷப்படுவார்"

சுஜாதா இப்போது இருந்தால்....? ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம் எல்லோருக்குமே தோன்றுவதுதான்... இந்த ஃபேஸ்புக் யுகத்தில் சுஜாதா இல்லாமல்போனது நிச்சயமாக பெரிய இழப்புத்தான். பிரபலங்களுக்கும், சாமானியர்களுக்குமான இடைவெளியை சமூக வலைத்தளங்கள் இல்லாமல் செய்து விட்டது பிரபலங்கள் பலருக்கும் ஃபேஸ்புக் மீது ஒவ்வாமையைக் கொடுத்திருப்பது உண்மைதான். இங்கே தலைவர் இருந்திருந்தால் அடித்து அடியிருப்பார். என்ன தலைவரைக் கேள்வி கேட்டு திணறடிப்பார்கள் என்பது ஒருபுறமிருக்க, இன்னும் நிறையக் கற்றுக் கொடுத்திருப்பார். அச்சு ஊடகத்தில் அவர் அறிமுகப்படுத்தியதை தேடுவதைவிட நேரடி சுட்டிகளாகப் பகிரப்பட்டிருக்கும். நிறைய வாசிக்கப்படும். ஓவராகச் சலம்புபவர்கள் அடங்கியிருப்பார்கள்.ஏராளமான திறமையான புதியவர்கள் அறிமுகப் படுத்தப்பட்டிருப்பார்கள்.

புதியவர்களை இனங்காண்பது, அறிமுகப்படுத்தி பரவலாகக் கொண்டுசேர்ப்பது குறித்து சுஜாதா அளவுக்கு யாருக்கும் பொறுப்புணர்வு இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியான தளங்களில் இயங்குவதுமில்லை.

அப்படியே சமூகத்தளங்களில் முழுநேரமும் இயங்கும் 'எப்போதோ இலக்கியம் படைத்த' ஓரிரு இலக்கியப் பெருசுகளும் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதோடும், அடுத்தவனில் குறை கண்டுபிடிப்பதிலும், கிண்டல் பண்ணுவதிலுமே காலங்கடத்துகிறார்கள். தொலையட்டும் என்று யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் எவனும் சிக்கவில்லை எனில், சுஜாதாவையும், அவரை ரசிப்பவர்களையும் கிண்டலடிப்பதுதான் கொடுமை. அடுத்தவனைக் கழுவியூற்றுவதிலேயே காலம்தள்ளும் இவர்களுக்கு தம்மீதான சிறு விமர்சனத்தைக்கூடத் தாங்க முடிவதில்லை. சமயங்களில் தாம் எழுதியது நல்ல கதை என்று நிரூபிப்பதற்கும் சுஜாதாதான் தேவைப்படுகிறார். நான் சொன்னதைவிட அவர் எதை அப்படி சொல்லிவிட்டார்? என சுஜாதாவையே துணைக்கழைப்பதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.

சுஜாதா இப்போது இருந்தால்....?
மிக முக்கியமாக இணையத்தில் இயங்குபவர்களை மொண்ணைகள் என்று கூறியிருக்கமாட்டார். ஏனெனில் வாசகன் புத்திசாலி என எப்போதும் நம்பியவர் சுஜாதா!

Friday, October 11, 2013

நய்யாண்டி



'களவாணி', 'வாகை சூடவா' போன்ற படங்களை எடுத்த இயக்குனர் சற்குணத்தால் 'படிக்காதவன்', 'மாப்பிள்ளை' போன்ற படத்தை எடுக்க முடியுமா? என்று யாராவது கேட்டிருக்கலாம். 'ஏன் முடியாது?' என்று, அதை ஓர் சவாலாக ஏற்று சாதித்துக் காட்டியிருக்கிறார் சற்குணம்! வாழ்த்துக்கள்!

தனுஷ் அவ்வப்போது இயக்குனர் சுராஜின் படங்களில் நடிப்பது வழக்கம்! இப்போது சுராஜ் பிஸி போல. அதனால் அவர் படத்தை சற்குணம் இயக்கியிருக்கிறார். ஆக, சுராஜின் படங்களைவிட நன்றாகவே இருக்கிறது.

சற்குணம் நல்ல இயக்குனர் என்று ரெண்டு நாளைக்கு முன்னர்தான் ஃபேஸ்புக்கில அறிக்கை விட்டேன். அவர் வல்லவர், திறமையானவர்தான் - அதில் மாற்றமில்லை! எல்லாம் என் நேரக் கெரகம்! 

வழக்கம்போல ஊருக்கு வரும் ஹீரோயின், அப்பா பார்க்கும் மாப்பிள்ளையையே கட்டிக்கொள்வதாக வாக்குக் கொடுக்கிறார் - அடுத்த சீனில் ஹீரோவைச் சந்திக்கப் போவது தெரியாமல்! வழக்கம்போல பாட்டி ஊருக்குப் போன பொண்ணு எப்பிடியும் லவ் பண்ணிடுவா என்கிற அடிப்படை அறிவே இலலாத அப்பாவும், வழக்கம்போல லூசுத்தனமா ஊரிலேயே மோசமான ஒருத்தனைப் பெண்ணுக்கு நிச்சயிக்க, வழக்கம்போல ஹீரோ வந்து கூட்டிட்டு ஓட, வில்லன் துரத்த... இறுதியில் சுபம்.

முதற்பாதியில் சூரி, சிங்கம்புலி, இமாம் அண்ணாச்சி, சதீஷ், தனுஷ் என ஒரு நகைச்சுவைப் பட்டாளமே மொக்கை போட்டு சிரிக்க வைக்க முயல்கிறார்கள்! முடியவில்லை. அண்ணாச்சி மட்டும் ரசிக்க வைக்கிறார். இடைவேளைக்கு சற்றுமுன்னர் ஸ்ரீமன், சத்யன் ரகளையை ஆரம்பிக்கிறார்கள். 

"ஏண்டி பாதகத்தி" என்றோர் பாடல் களவாணி படத்தில் வரும் ஒரு பாடலின் சாயலில் கேட்க நன்றாகவே   இருந்தது. ஆனால் படத்தில் பாடல் வரும் இடம்தான் காமெடியாக  இருந்தது. 'என்னது தனுஷ் லவ் பண்ணினாரா?' - என அப்போதுதான் அதிர்ச்சியாகக் கேட்கத் தோன்றியது.

ஓங்கி வளர்ந்த கொடூரமான ஒருத்தனைக் காட்டும்போதே அவன் வயதை உத்தேசித்து, அவன்தான் ஹீரோயினுக்கு அப்பன் பார்க்கப்போற மாப்பிள்ளைன்னு நாங்க நிச்சயம் பண்ணிட்டோம். அதனால் நிச்சயதார்த்தத்தில அவனைப் பார்த்து நஸ்ரியா மட்டும்தான் அதிர்ச்சியாகிறார். (அவர் தமிழ்சினிமாவுக்குப் புதுசு என்று ப்ரெஸ்மீட்டில் சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது)

படம் தொடங்கி, அரைமணி நேரத்துக்குள்ளேயே அந்தத் தொப்புள் விவகாரம் தொடர்பான சந்தேகம் வந்தது, 'இவங்க எல்லாம் கூட்டுக் களவாணிங்களோ?' யூ டூ சற்குணம்?

உடல்நிலை சரியில்லைன்னு ரெஸ்ட் எடுக்கச்சொல்லி அஃபீஸ்ல லீவ் குடுத்தாங்க. சரி தியேட்டருக்குப்  போய் ரெஸ்ட் எடுக்கலாம்னு போனேன். இரண்டாவது பாதி வேகம், சிரிக்கலாம். ஸ்ரீமன், சத்யனுக்காக படம் பார்க்கலாம்! 

அப்புறம் டிவிடியில் 'களவாணி' படம் பார்க்கிறதா இருக்கிறேன். என்னா படம்யா!

Wednesday, October 9, 2013

ரணேஸ் வாத்தி!

“Sorry! வவுனியால இருந்து மச்சான் வந்திருந்தார்.. அதான் லேட்டாயிட்டுது” 
ஒரு மாலை சந்திப்பின் போது நண்பன் சத்யன். 

"வவுனியாலருந்தா எங்க ஏரியால்ல! எங்க வயசா?"
"இல்ல வயசு கூட... டீச்சரா இருக்கார்"

ஏனோ கேட்கவேண்டும்போலத் தோன்றியது. உள்ளுணர்வாகவும் இருக்கலாம்.

"உங்க சொந்த இடம்?"
“அல்வாய், தெரியுமா?”
“இல்ல. எங்களுக்கு கூட ஒருத்தர் சயன்ஸ் படிப்பிச்சார் வவுனியால. அவரும் அல்வாய்தான்”
“என்ன பேர்?”
“ரணேஸ்”
“அவர்தான் ஆள்”

அளவு கடந்த மகிழ்ச்சியுடன் விசாரித்தேன். சொந்தமாக அச்சகம் வைத்திருப்பதாகவும், மணமுடித்து  இரண்டு பிள்ளைகள் இருப்பதையும் சொன்னான். 

"அந்த டைம்ல ஒரு லவ்வும் இருந்திச்சு"
"அவதான் வைஃப்" சிரித்துக்கொண்டே சொன்னவன், அவரிடம் வந்து பேசும்படி அழைத்தான்.

"இல்ல வேணாம். ஞாபகமிருக்குமா தெரியல" தயக்கத்துடன் மறுத்தேன். அவனும் என்னைப்போலவே ஒருவன் என்பதால் வற்புறுத்தவில்லை. சற்றுத் தூரத்தில் சத்யன் வீட்டு வாசலில் விடைபெறுவதற்காக நின்று பேசிக்கொண்டிருந்தவரைப் பார்த்தேன். திரும்பி நின்றுகொண்டிருந்ததால் முகம் தெரியவில்லை. பதின்மூன்று வருஷமாகிவிட்டது. முன்பிருந்ததை விட இன்னும் பருத்திருந்தார்.

அவர் புறப்பட்டுச் சென்றவுடன் யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரு முறை போய்ப் பேசியிருக்கலாமோ? இயல்பாகவே ஏதோ ஒரு கூச்சம், தயக்கம் தடுத்துவிடுகிறது. பின்னர் அதற்காக வருந்துவது. பல சந்தர்ப்பங்களில் இப்படி நடந்தாலும் இன்றுவரை என்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை, அல்லது முயலவில்லை.

யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து சென்று மூன்று வருடங்களுக்குப் பின் மீண்டும் பள்ளியில் எனது கணித ஆசிரியரை  பார்த்தபோதும் அப்படித்தான் ஒதுங்கிச் சென்றுவிட்டேன்.நான் அவருடைய மிக விருப்பத்துக்குரிய மாணவர்களில் ஒருவனாக இருந்தேன். எத்தனை பேர் படித்திருப்பார்கள்? என்னை ஞாபகமிருக்குமா? நானே கேள்வி கேட்டு என் செயலை நியாயப்படுத்திக் கொண்டேன். எதிர்பாராமல் அன்று மதியமே, "டேய் உமா!" குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினேன். "எப்பிடிடா இருக்கே? எங்கடா இவ்வளவு நாளா இருந்தே?" என் தலைமுடி கோதி, அவர் அன்பாகப் பேசியபோது, குற்றவுணர்ச்சியுடன் தடுமாறி நின்றிருந்தேன்.


ணேஸ் வாத்தி! - இங்கு வாத்தி என்பது மரியாதைக் குறைவான வார்த்தை அல்ல. வாத்தி என அழைக்கப்படுபவர் எங்களில் ஒருவர். மனதிற்குப் பிடித்த, எப்போதும் எங்கள் அன்பிற்குப் பாத்திரமான, நெருக்கமான ஆசிரியரை வாத்தி என்றே அழைப்பது வழக்கம்.

ரணேஸ் வாத்தியைப் பார்த்ததுமே எங்கள் எல்லோருக்கும் பிடித்துக் கொண்டது. சிலபேருக்கு மட்டுமே பார்த்தவுடன் ஈர்த்துக் கொள்ளும் முகம் அமைந்துவிடுகிறது. நடிகர் ரஜினியையும், விஜயையும் எந்தக் குழந்தைக்கும் பார்த்தவுடன் பிடித்துவிடுகிறதே அதுபோல! ரணேஸ் வாத்தியிடமும் கொஞ்சம் அன்றையகால நடிகர் விஜயின் சாயல் இருந்தது. பேசும்போது முகத்தில் சிநேகபாவமும், சிறுபுன்னகையும் கலந்திருக்கும். அப்போதுதான் ஆசிரியர் கல்லூரியில் படிப்பை முடித்து, எங்கள் பள்ளியில் இணைந்திருந்தார். 

அந்தக் காலப்பகுதியே எனது பாடசாலை நாட்களின் மிக மகிழ்ச்சியானதாக இருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து வந்த ஏராளமான மாணவர்களையும், ஆசிரியர்களையும் அரவணைத்துக் கொண்டது, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் . மாணவர்களின் தொகை எதிர்பாராத அளவு திடீரென அதிகரிக்க, மாலைநேர வகுப்புகள் நடாத்தி, ஓரிரு மாதங்களிலேயே மூன்றுமாடிக் கட்டடங்கள கட்டி முடிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது.

நாங்கள் எல்லோரும் அங்கு படிக்கக் கிடைத்ததை பெரும் வரப் பிரசாதமாகவே கருதினோம். அதற்குக் காரணம் இருந்தது. யாழ்ப்பாணத்தில் எவ்வளவோ எறிகணை வீச்சு, விமானத்தாக்குதல்களுக்கு மத்தியில் வளர்ந்தபோதும் அதையெல்லாம் விட மோசமானதாக இருந்தது ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு சில ஆசிரியர்களிடமிருந்து நாங்கள் எதிர்கொண்ட வன்முறைதான். ஆனால் இங்கே அராஜகம் செய்யும் ஆசிரியர்களை மாணவர்களும்கூட 'தட்டிக் கேட்கும்' சுதந்திரம் இருப்பதாகப் பலரும் நம்பியதால் பள்ளிக்கு தனிப்பெருமை இருந்தது. யாழிலிருந்து வந்த சில 'மதிப்புக்குரிய' ஆசிரியர்கள் பல்லுப் பிடுங்கப்பட்ட பாம்புகள் போலப் பாவமாக சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

என்ன ஒரேயொரு சோகம், அது ஒரு இருபாலார் படிக்கும் பள்ளி என்பதை அவ்வப்போது யாராவது ஞாபகப்படுத்தித் தொலைத்தார்கள். இதுகுறித்து நண்பனொருவன் தீவிர கவலையை வெளிப்படுத்தினான்.

"எங்கட வகுப்புக்கு மட்டும் எட்டு டிவிஷன்கள் இருக்கு. ஒவ்வொண்டிலயும் குறைஞ்சது நாப்பது பேர். மொத்தமா முந்நூற்றிருபது பேர் இருக்கிறம். இதுல கேர்ள்ஸ் எத்தினைபேர் மச்சான்?"

"இருபது பேர் வருமா?"

"ரெண்டே ரெண்டு டிவிஷன்ல மொத்தமா பதினைஞ்சு பேர் இருக்கலாம்.. ஏண்டா இப்பிடியொரு மிக்ஸ்ட் ஸ்கூல் வச்சிருக்கிறாங்கள்? தனியப் பசங்கள மட்டும் படிக்க விடலாமே?"
- பெண்களுக்கென்று பிரத்தியேகமாக இரு பெரிய கல்லூரிகள் இருந்தன.


"டேய் தவமணி கொன்வெண்டுக்கு வந்திருக்கானாம்" - பரபரப்பாக செய்தியைப் பகிர்ந்துகொண்டான் ஒருவன். 

யாழில் பிரபல கல்லூரியில் அட்டகாசம் செய்தவர் அவர். நாங்கள் கேள்விப்பட்ட செய்தியை உறுதிப்படுத்தினார் லிங்கநாதன் ஆசிரியர். பழக்க தோஷத்தில் கைகள் யாரையாவது அடிக்கப் பரபரக்க, கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு மிகவும் நொந்து போயிருப்பதாகவும் மேலதிக தகவல் சொன்னார். செய்தி கேட்டு அகமகிழ்ந்து போனோம். ஒருவேளை பாதுகாப்புக் கருதித் திட்டமிட்டுத்தான் அங்கே இணைந்துகொண்டாரோ என்ற சந்தேகமும் வந்தது.

மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒருவன் ஆவேசமாகக் கூறினான் “தவமணி மட்டும் இங்க வந்திருக்கோணும்டா! நல்ல பாடம் படிப்பிச்சிருக்கலாம்!”

அராஜகமான மனிதர்களுடன் பழகிய எங்களுக்கு, தோழமையுடன் பேசுகின்ற, எங்கள் பேச்சையும் காதுகொடுத்துக் கேட்கின்ற, பரஸ்பரம் மரியாதை கொடுக்கின்ற ஆசிரியர்கள் என்றும் மனதில் நிறைந்திருப்பதில் ஆச்சரியமென்ன இருக்கமுடியும்? அவர்களுடன் அளவளாவிய ஒவ்வொரு பொழுதும் எப்போதும் மறக்க முடியாதவை.

பள்ளியில் ரணேஸ் எங்களுக்கு அவர் வகுப்பெடுக்கவில்லை. எங்களுக்கு பிரத்தியேக குழு வகுப்பு ஒன்றை எடுத்துக் கொண்டிருந்த லிங்கநாதன் ஆசிரியர் வெளிநாடு சென்றுவிட, ரணேஸ் எங்களோடு இணைந்துகொண்டார்.


கிரி வீட்டில்தான் வகுப்பு. தனியறை ஒன்றில் பெரிய டைனிங் டேபிளை சுற்றி எங்கள் Gang அமர்ந்திருக்கும். அப்போது Gang என்ற சொல்லையே புதிதாகப் புழக்கத்தில் கொண்டுவந்தவன் கிரிதான். கிரி, பவன், சாந்தன், சதீஷ், மரூ, விம்மி, 'பிரபுதேவா' கிரி, ரஜீவ், திலீ இவர்களுடன் நான்.

உண்மையில் என்னையும், திலீயையும் ஆரம்பத்திலேயே, 'இவங்கள் சரிப்பட்டு வரமாட்டாங்கள்' என்று Gang இல் சேர்க்கவில்லை. சாந்தன் வேறு பின்னாட்களில்தான் எங்கள் நண்பர்கள் வட்டத்தில் இணைந்திருந்தான். ஆக, நாங்கள் மூன்றுபேரும் வெளியிலிருந்து அவ்வப்போது 'நக்கல் நல்லாதரவு'வழங்கிக் கொண்டிருந்தோம். தீபாவளி, வருஷத்துக்கு ஒரே நிறத்தில் புத்தாடைகள், சிலிப்பர் என யூனிஃபோர்மில் வந்து, ஏரியா நாய்களுக்கெல்லாம் அனாவசிய டென்ஷன் கொடுப்பது Gang இன் முக்கிய பணி!

ஒரு வகுப்பிற்குரிய வரைவிலக்கணங்கள் எதற்குள்ளும் அடங்காதது அந்த பாடவேளைகள். எங்களுக்கு ஒரு நல்ல நண்பனாகவும், சமயங்களில் அண்ணனாகவும் இருந்தார். எந்தத் தயக்கங்களுமின்றி எதைப்பற்றியும் பேசும், விவாதிக்கும் சுதந்திரம் இருந்தது. அந்தவயதில் ஒரு விஞ்ஞான ஆசிரியரிடம் கேட்பதற்கு எங்களிடம் ஏராளமான சந்தேகங்கள் இருந்தன. அதையெல்லாம் கேட்பதற்கு நல்ல ஒரு ஆசிரியர் கிடைக்கவில்லை.

ரணேஸ் வாத்தியிடம் எதையும் மனம் விட்டுப் பேச, கேட்க முடிந்தது. ஆனால், நாங்கள் கேட்ட பல சந்தேகங்கள் அவருக்குமே இருந்ததுதான் கொடுமை!


ரண்டு மணிநேர வகுப்பில் முக்கால் மணி நேரம், சில சமயங்களில் அரைமணி நேரமே தீவிரமான படிப்பு, ஏனைய நேரம் அரட்டையுடன் படிப்பு. நாட்டுப்பிரச்சினை, சினிமா, புத்தகங்கள் மற்றும் அப்போது எங்களுக்குப் புதிதாக இருந்த காதலும் எப்போதும் புதிதாகவே தோன்றும் பெண்களும்! எங்களில் சிலர் காதல் வயப்பட்டதாக நம்பிக் கொண்டிருந்த காலம் அது. எங்கள் ஏரியாவான குருமன்காட்டுப் பிள்ளையார் கோவில் ஒழுங்கையில் ஓர் இரவு எட்டுமணிக்கு "தம்பீ!" குரல்கேட்டு திரும்பினால் சாந்தன்! 'இவன் இங்க என்ன பண்றான்? நேரம்தவறாமல் ஆறுமணிக்கு வீட்ட போறவன்?'

காதல், அவனவன் வாங்கிய 'பல்பு'கள் பற்றியெல்லாம் விவாதம், ஆலோசனைகள் இடம்பெறும். ரணேஸ் சிரித்துக் கொண்டே அமைதியாக இருப்பார் அவ்வப்போது ஏதாவது கேட்டால், சொல்வார். ஒருமுறை வகுப்புக்குத் தாமதமாக அரக்கப்பரக்க வந்து சேர்ந்தார் ரணேஸ். கொழும்புக்கு யாரையோ ரயிலேற்றிவிட்டு வந்ததாகச் சொன்னார். சற்றுநேரம் கழித்து, விரிவாகக் கூறினார், தன் வருங்கால மாமானாரிடம், மகளின் ஃபிரண்டாக அறிமுகமாகி, வழியனுப்பி விட்டு வந்ததாக! அவர் காதல் கதையைக்கேட்க, சிறு வெட்கத்துடன் கூறினார். 

முழுக்க முழுக்க கொண்டாட்டமாக படிப்பதே தெரியாமல் ஆனால் சரியாக கவனமாகவே படித்தோம். ஆனால் என்ன, வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு புரியாது. என்றாவது ஒருநாள் கிரியின் அம்மா நாங்கள் படிக்கும் 'ஸ்டைலை'ப் பார்த்திருக்கும் பட்சத்தில் சங்கத்தையே கலைத்துவிட்டிருக்கக் கூடிய அபாயம் இருந்தது. வகுப்பு முடிந்து நேராக, 'பிரின்ஸ்' ஹோட்டலுக்கு செல்வோம். வவுனியா பஸ் நிலையத்துக்கு எதிரே, 'கொப்பேகடுவ' சிலைக்குப் பின்னால் இருந்தது. இடியப்பம், பச்சைச் சம்பல், சொதியுடன் உளுந்துவடை என்ற தமிழனின் அட்டகாசமான கூட்டணி அங்கேதான் அறிமுகமானது. கண்டுபிடித்தவன் ரசனைக்காரன்தான்!


மாணவர்களைச் சக மனிதனாக மதிக்கும், சக தோழனாகக்கருதி, தோளில் கைபோட்டு அழைத்துச் செல்வது போலக் கற்பிக்கும் ஆசிரியர்களை என்றும் மறக்கவியலாது. இது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. திரும்ப மாணவர்கள் தோளில் கைபோடுவதை அனுமதிக்கவும் கூடாது, நண்பனாக இருக்கும் அதேவேளையில் அதிகம் நெருங்கவிடாமல் தங்கள் மரியாதையையும் பேணிக்கொள்ள வேண்டும். சிலர் இதற்கு குறுக்குவழியாக வகுப்பறையில் ஏஜோக் சொல்வதுமுண்டு. ஆனால் அவர்கள் தோற்றுவிடுகிறார்கள்.அந்தப்பொழுதுக்கான சுவாரஸ்யத்துக்கு மட்டுமே அவர்கள். மாணவர்களைச் சரியாகக் கையாளும் ஆசிரியர்கள் மீதான மரியாதை என்றும் குறைவதில்லை. அவ்வப்போது தங்களை நினைவுபடுத்தியபடியே இருப்பார்கள்.

கதிர் ஆசிரியரும் அப்படித்தான். நியாயமான கண்டிப்புக்கும், கோபத்துக்கும் பெயர்போன இளைஞர். தமிழ் கற்பித்தவர். எங்களுக்கு நல்ல நண்பராக இருந்த ஓலெவல் பரீட்சை முடிந்தபின் ஒருநாள் அவருடன் கிரியும், நானும் வவுனியாவின் பெரிய திரையரங்கான றோயல் தியேட்டரில் ரஜினியின் 'வீரா' படம் பார்த்தோம். அப்போது பழைய படங்கள்தான் ஓடிக்கொண்டிருந்தது. அவரது வழக்கம்போல ஐஸ்கிறீம் எல்லாம் வாங்கிக் கொடுத்தார். படம் முடிந்தபின் வவுனியாக் குளம் வான்பாய்வதாக சொன்னான் கிரி. அங்கே சென்றோம். குளக்கட்டின் மேற்சுவரை மேவி நீர் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. திறந்து விடப்பட்டிருந்த சிறிய கால்வாயினூடு நீர் வேகமாகப் பாய்ந்தது. அந்த இடத்தில் குடையை விரித்துக் கவிழ்த்துப் பிடித்தபோது, மீன்குஞ்சுகள் துள்ளிக் கொண்டிருந்தன. முழங்கால் வரை ஜீன்சை ஏற்றி விட்டுக்கொண்டு, அந்தக் குளிர்ந்த மாலைப் பொழுதில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சிடையே, "அழகான நடிகை என்றால் அது ஹீராதான்" என்றார். 'இதயம்' அவருக்கு மிகப்பிடித்த படமாக இருந்திருக்கலாம்.


ருமுறை மேசையில் விரித்து வைக்கப்பட்டிருந்த விஞ்ஞானப் புத்தகத்தில் ஒரு படத்தைப் பார்த்து தீவிர யோசனையுடன் இருந்தவன்,

"சேர் இப்பிடியேயா இருக்கும்?" கேட்டேன். 

புத்தகத்தை நிலைக்குத்தாக பிடித்த விம்மி சொன்னான், "இல்ல இப்பிடி..என்ன சேர்?"

"இல்லடா நாப்பத்தஞ்சு பாகை சாய்வில இருக்குமாம். எங்கட சயன்ஸ் சேர் அப்பிடித்தான் சொல்லித்தந்தவர்" - ரணேஸ்.

அப்போது 'ஜெயசிக்குறு' ராணுவ நடவடிக்கை வேறு ஆரம்பித்து, வேப்பங்குளம் பகுதிலிருந்து ஆட்டிலறி தாக்குதல் நடத்தியதில் நகரமே கிடுகிடுத்துக் கொண்டிருந்தது. எப்போதும் எம்நாட்டு வழக்கம்போல யுத்தகள ஆய்வுகளும் வகுப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இருப்பினும் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளுக்கே முன்னுரிமை. ரஜினி, கமல் காலத்து முன்னாள் பிரபல நடிகையொருவர் 'கலைச்சேவை' முடிந்ததும் உடனடியாக துள்ளிக் குதித்து உடற்பயற்சி செய்வாராம் என்ற அதிமுக்கிய செய்தியினடிப்படையில் (உபயம் - தினமுரசு) அதுகுறித்தான விஞ்ஞான ரீதியிலான சாதகங்கள், சாத்தியங்கள் குறித்து அலசி ஆராய்ந்தது ஞாபகமிருக்கிறது.

ரணேஸ் பிளாக் பெல்ட் என்ற தகவல் தெரிந்ததும், ஓ.எல். பரீட்சை முடிந்ததும் எல்லோரும் அவரிடம் கராத்தே கற்றுக் கொள்வது என்றோர் அவசரத் தீர்மானத்தை நிறைவேற்றி, அதைவிட அவசரமாக மறந்துபோயிருந்தோம். எப்போதோ ரணேஸ் தனது ஊர் அல்வாய் என்று கூறியிருந்தது நினைவிலிருந்தது. வேறெதுவும் அந்த ஊர் பற்றி எனக்குத் தெரியாது. சென்றதோ, அதன்பிறகு யாரும் சொல்லக் கேட்டதோ இல்லை. அதுவே ரணேஸ் வாத்தியை திரும்ப சந்திக்க வைத்தது. அடுத்தமுறை பார்க்கும்போது, கண்டிப்பாகப் பேசிவிடவேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டேன். சொல்லப்போனால், அந்த நாளை எதிர்பார்த்திருந்தேன்.


லுவலகத்திலிருந்த காலைநேரத்தில் அதிசயமாக சத்யன் செல்பேசினான்.

"ஏன்யா? என்ன நடந்தது?"

"கிட்னி ஃபெயிலியர். அங்க சரியாக் கவனிக்கேல்லயாம். கடைசி நேரத்தில கொழும்புக்குக் கொண்டுவந்திருக்கினம். வழிலயே முடிஞ்சுதாம்"

பேச வேண்டிய நேரத்தில் மௌனமாயிருந்துவிட்டு பின்னர் வருந்துவது ஒன்றும் புதிதல்ல எனினும், மீண்டும் தோன்றியது, இப்போதும்கூட !

'ஒருமுறை பேசியிருக்கலாம்'

Thursday, October 3, 2013

ராஜாராணி - சமகால யதார்த்த சினிமா!



ன்றைய இளைஞர்களின் வாழ்வியலை இவ்வளவு துல்லியமாகப் பதிவு செய்த படைப்பொன்று சமீபகாலத்தில் வெளிவந்ததாகத் தெரியவில்லை. காதல் என்பதை வெறும் கச்சாப் பொருளாக மட்டும் உபயோகித்து எடுக்கப்படும் அபத்தக் குப்பைகளுக்கு மத்தியில், இருவருக்கிடையிலான உணர்வுச் சிக்கலை மைய இழையாகக் கொண்டு யதார்த்த நிலையிலிருந்து சற்றும் விலகாமல் வெளிவந்திருக்கும் 'ராஜாராணி' தமிழின் புதிய அலை சினிமாவின் ஆரோக்கியமான நல்வரவு!

ஒரு பார்வையாளனாக மனதுக்கு நெருக்கமாகவும் உன்னதமான அனுபவத்தை எனக்களித்த ஓரிரு காட்சிப் படிமங்களை விபரிப்பதேயன்றி, படத்தின் கதையைக் கூறுவதோ, விமர்சனம் செய்வதோ அல்ல என்பது என் துணிபு.

ந்தவகையில் முதற்காட்சி...
தேவாலயத்தில் ஒரு திருமணம் நிகழவிருக்கிறது. திருத்தந்தை அந்தப்பெண்ணை மணமுடிக்க சம்மதமா? என அறைகூவுகிறார். நாயகன் மெதுவாக திரும்பி தயக்கத்துடன் நண்பனைப் பார்க்கிறான். நண்பன் 'பயப்படாமல் சம்மதி பார்த்துக் கொள்ளலாம்' எனப் பார்வையாலேயே தைரியம் (குணச்சித்திரம்) சொல்கிறான். நாயகன் தெளிந்து சம்மதிக்கிறான். இன்றைய இளைஞர்கள் நட்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சிறு காட்சியிலேயே உணர்த்திவிடும் நுட்பமான 'இயக்குனர் தொடுகை' அது என்பேன்.

முன்னைய காலங்களில் மணமக்களின் விருப்பத்தை, சம்மதத்தைப் பெற்ற பின்புதான் திருமணத்தையே நிச்சயிப்பர் பெற்றோர். தேவாலயத்தில் கேட்கப்படும் சம்மதம் என்பது ஒரு சம்பிரதாயம் அல்லது சடங்கு மட்டுமே. ஆனால் இன்றைய நவீன தொழில்நுட்ப அவசரகால யுகத்தில் அதெல்லாம் சாத்தியமாவதில்லை என்கிற உண்மை போகிறபோக்கில் அழுத்தமாகச் சொல்லப்படுகிறது. அதற்கு முன்னர் பார்த்தோ, பேசியோ இராத இருவரை நேரடியாக மணநிகழ்வில் வைத்து  சம்மதம் கேட்டு முடிவெடுக்கக் கோரும் இந்தநிலை ஆரோக்கியமானதா என ஆராயப்படவேண்டியது ஒருபுறமிருக்க, சமகாலச் சினிமாவில் முதன்முறையாக இது சரியாகவே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

இப்போது சம்மதத்தைப் பெண்ணிடம் கேட்கிறார். நாயகி மிக மிக மெதுவாகத் தந்தையை நோக்கி முழுவதுமாகத் திரும்பி நிற்கிறாள். வசனங்கள் ஏதுமில்லை. அல்லது பார்வையாளனின் கற்பனைக்கே விடப்படுகிறது. நாயகியின் பார்வை 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?' என்பது போலிருக்கிறது. திருமணத்திற்கு வந்தவர்கள் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்கிறார்கள். மகளைப் புரிந்து கொண்ட, அவள் உணர்வுகளை மதிக்கும் நவீன தந்தை புன்னகைக்கிறார். உனக்கு சம்மதம் என்றால் சரி திருமணத்தை முடித்துவிடலாம். இல்லை என்றாலும் சரி ஒரு கேக்கோ, ஐஸ்கிரீமோ வாங்கிக் கொடுத்து அந்தப் பையனை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என்பதான உணர்ச்சியை வெளிபடுத்துகிறார்.

இதுவே முன்னையகால சினிமாவாக இருக்கும்பட்சத்தில், திருத்தந்தை அவசரப்பட்டு "என்ன மிஸ்டர் டேவிட், பொண்ணு சம்மதமில்லாமல்தான் இந்தத் திருமணத்தை ஏற்பாடு செய்தீர்களா?" என அறிவுபூர்வமாக பேசுவதாக நினைத்து அதிகப்பிரசங்கித்தனமாக கேள்விகேட்டு,காரியத்தையே கெடுத்துவிடுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் 'காலத்தோடு புதுப்பித்து வாழ்ந்துவரும்' (Up to date) இந்த திருத்தந்தை அவ்வாறு நடந்துகொள்வதில்லை.

நாயகி மீண்டும் புன்னகையுடன் மிக நிதானமாகத் திரும்புகிறாள். அவள் முடிவு செய்துவிட்டாள். இந்த இடத்தில் கவனிக்க வேண்டியது, பெண்கள் தம் வாழ்க்கை பற்றி மிக நிதானமாக ஆழ்ந்து யோசித்தே முடிவு செய்வதென்பதில் எப்போதும் மிகத் தெளிவாகவே இருக்கிறார்கள்.

'இவ்வாறு தெளிவாக இருக்கும்' நாயகி, "சூர்யாவைத் திருமணம் செய்ய சம்மதம்" என்கிறாள். துரதிருஷ்டவசமாக அங்கே சூர்யா என யாரும் இருப்பதில்லை!

இந்த இடத்தில் ஒவ்வொரு பாத்திரமும் வெளிப்படுத்தும் உணர்வுகள் மிக முக்கியமானவை. உடனேயே நாயகி தன் தவறை உணர்கிறாள். வருத்தப்படுகிறாள்.

நாயகனின் நண்பனோ அதிர்ச்சியுடன் தலையில் கை வைக்கிறான். 'ஒரு வேளை அவன்தான் சூர்யாவோ' எனப் பார்வையாளன் குழம்பி, 'இருக்கமுடியாது, அவனுக்கும் ஏற்கனவே சூர்யாவைத் தெரிந்திருக்கலாம் ' எனத் தெளிகிறான்.

மணமகனான நாயகனோ ஒருகணம் மிகுந்த மகிழ்ச்சி பொங்க புன்னகைக்கிறான். அதுவரை ஏதோ ஒரு குழப்பத்தினால் பீடிக்கப்பட்டிருந்த அவனுக்கு, 'தான் தனியாக இல்லை' என்ற ஓர் நம்பிக்கையின் ஒளிக்கீற்றுத் தென்படுகிறது. இது தேவாலயத்தில் நிகழ்வதுதானே முறை? - இன்னுமோர் நுட்பமான 'இயக்குனர் தொடுகை' 

கா.பு.வா. திருத்தந்தை அதிர்ச்சியடைவதில்லை. 'இங்கே திருமணம் செய்துகொள்ளும் பெரும்பாலான பெண்கள் சமபந்தமில்லாதவன் பெயரைத்தான் சொல்கிறார்கள், இதெல்லாம் இங்கே சகஜம்' என்பதுபோல அமைதி காக்கிறார்.

ஆனால் மணப்பெண்ணின் தந்தை ஏனோ அதிர்ச்சியடைந்து நெஞ்சைப் பிடித்துகொண்டு சாய்கிறார். பார்வையாளனுக்கும் அதிர்ச்சி! நாம் அவர்மீது கட்டமைத்த பிம்பம் போல அவர் நவீன தந்தை கிடையாது. பழைய தலைமுறையை, சற்றேறக்குறைய 'மௌனராகம்' காலத்தைச் சேர்ந்த, அந்தக் காலகட்டத்திலேயே தேங்கிவிட்ட மனநிலையோடு வாழ்பவர் என்பது புரிந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி!

படத்தில் மணப்பெண், நாயகனின் நண்பன் தவிர, மணப்பெண்ணின் தந்தைக்காக யாரும் அங்கே அதிர்ச்சியடைவதில்லை. 'இதைவிட இன்னும் ஏதாவது சுவாரஸ்யமாக  நடைபெறலாம்' என்பதுபோல கூட்டம் அசையாமல், ஆர்வமாக வேடிக்கை பார்க்கிறது. 'அப்படியொன்றும் அசம்பாவிதம் நடைபெற திரைக்கதை அனுமதிக்காது'என்பதுபோல மணமகனும் அலட்டிக் கொள்வதில்லை. திருத்தந்தையும் 'ஆறுதலாகக் கலந்து பேசி ஒருமுடிவுக்கு வாங்கப்பா' என்பது போல காத்திருக்கிறார். இவ்வாறு இனிதே நடைபெறுகிறது திருமணம்.

கைச்சுவைக் காட்சி பற்றி அவசியம் கூறவேண்டும். நமக்குப் பிடிக்காதவர்களை விட்டு விலகிவிடுவது, தவிர்த்துவிடுவது என்ற பழமைவாத சிந்தனைகளை விடுத்து 'கூடவே இருந்து குடைச்சல் கொடுப்பது ' என்ற புதிய நாகரீகமான படித்த இளைஞர்களின் தாற்பரியத்தின்படி, நாயகன் படுக்கையறையில் சத்தமாக தொலைக்காட்சி பார்க்கும் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

இக்காட்சிகளை,இன்றைய நகரமயமாக்கலின் விளைவான அடுக்குமாடிக்குடியிருப்புகளின் ஒற்றைப் படுக்கையறையும்,அங்குள்ள ஒற்றைக் கட்டிலையும்,அதில் ஒரேயொரு போர்வையை மட்டுமே அனுமதிக்கும் கடும் நெருக்கடிமிகுந்த அவல வாழ்வைச் சொல்லும் 'கறுப்பு நகைச்சுவை' எனலாம்.  தமிழர்களின் நகைச்சுவையுணர்வு குறித்த கவலையினை வெளிப்படுத்திவரும் ஆர்வலர்களுக்கு, இனி அதுபோன்ற சந்தேகங்கள் வரச் சாத்தியமில்லை என்றே நம்புகிறேன்.

ருகட்டத்தில் தன் மனைவியின் பெயர் தெரியாது என்கிறான் நாயகன். பெண் மருத்துவர் அதிர்கிறார். ஆனால், யதார்த்த நிலை அறிந்த பார்வையாளன் யாரும் அதிர்ச்சியடைவதில்லை. இந்தக் காட்சி மிக முக்கியமான விடயத்தைக் கூற விழைகிறது. அதுதான் காதல்! 

காதல் தொடர்பான சமகால இளைஞர்களின் நிலை, மதிப்பீடு பற்றிச் சொல்கிறது. எவனொருவன் முதன்முறை காதல் வயப்படுகிறானோ அப்பொழுதே அவன் மனம் முழுதும் காதலி வந்து நிரம்பிக் கொள்கிறாள். அந்த இடத்தை பின்பு வேறு யாராலும் பிரதியீடு செய்ய முடிவதில்லை. மரணப் படுக்கைவரை மறக்க முடிவதில்லை. பத்து இருபது வருடத்திற்குமுன்னர் காதலித்தவர்களுக்கு இது பைத்தியக்காரத்தனமாய் தோன்றலாம். ஆனால் இதுதான் இன்றைய யதார்த்தம்.

சூழ்நிலை கருதி வேறொரு பெண்ணை போனால் போகிறதென்று திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால் மனைவி பெயரைத் தெரிந்துகொண்டோ, அலைபேசி இலக்கம் பகிர்ந்துகொண்டோ தம் தனித்துவத்தை இழக்கவோ, காதலின் புனிதத்துவத்தை களங்கப்படுத்தவோ யாரும் சம்மதமாயில்லை. சந்தேகமிருந்தால் சோதித்துக் கொள்ளுங்கள். மனைவி பெயர் தெரியாது. ஆனால் காதலி பெயரை உடனடியாகச் சொல்லிவிடுவார்கள். அதுபோலவே பெண்களும், கவனம் ஒருமுறைதான் கேட்கவேண்டும்.

க, 'முழுக்க முழுக்க திரைப்படம் கூறும் கருத்தோடு நான் ஒத்துப் போகிறேனா?' என என்னை நானே நேர்மையாகக் கேட்டுகொள்ளுமிடத்து, 'இல்லை! நான் இயக்குனரோடு ஓரிடத்தில் கடுமையாக முரண்படுகிறேன் ' என்பதைச் சொல்லியேயாக வேண்டியிருக்கிறது.

தன்மனைவிக்கு உடல்நிலை சரியில்லாதபோது மனித நேயத்துடன் நடந்துகொள்ளும் நாயகன், அதற்கு முற்றிலும் முரணாக முன்பொருமுறை அவள்மீது படுக்கையறையில் உச்சகட்ட வன்முறையைப் பிரயோகித்திருக்கிறான். ஆம், டி.ராஜேந்தர் என்பவரது திகில் காணொளியை சத்தமாக வைத்துப் பார்க்கிறான். இதுபோன்ற அதிர்ச்சியான காட்சியை இயக்குனர் பாலா படத்தில்கூட நான் பார்த்ததில்லை.

நல்ல சினிமாக்களுக்கு மக்களிடம் எப்போதுமே அமோக வரவேற்புக் கிடைத்தே வருகிறது. 'தெய்வத்திருமகள்', 'கண்ணா லட்டு திங்க ஆசையா?' சிவாவின் 'தில்லுமுல்லு', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'தேசிங்குராஜா', வரிசையில் இந்தப்படத்துக்கும் அமோக ஆதரவையளித்தமையானது மேலும் இதுபோன்ற படைப்புகள் தொடர்ந்தும் வருவதற்கான நம்பிக்கையைக் கொடுக்கிறது.

********

இந்தக் கட்டுரைக்கான ஆய்விற்காக (மனைவியின் பெயர் தொடர்பாக) நேற்று நண்பனுக்குத் தொலைபேசினேன். நேரம் இரவு 11.55.

"தங்கள் மனைவியின் பெயரை உடனடியாகக் கூற முடியுமா?"
"@#%^#$$&"
"அடைமொழியா மச்சி?"
#^$@%##  #$#$%^  #@%#$%  #$#%#^$ 
"ரைட்டு விடு!"
(தெரியாதுன்னா தெரியாதுன்னு சொல்லித் தொலைங்கடா!)

Tuesday, October 1, 2013

THE ACT OF KILLING



ப்போது வன்னியில் இறுதிப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவுட்சோர்சிங் வேலை என்பதால் அவ்வப்போது நைட் ஷிஃப்ட் செய்ய நேரிடும். தொடர்ச்சியாக அங்கே நைட் ஷிஃப்ட் செய்துகொண்டிருந்த தமிழ் பேசும் நபரொருவர் இராணுவத்தில் சிலருடன் நெருக்கத்தில் இருந்தவராம். அவ்வப்போது சிறு வெற்றியைக் கொண்டாடும் சில பார்ட்டிகளில் கலந்துகொள்ளப் போனபோதுதான் தெரியும். அவருக்கு மெயிலில் வரும் புகைப்படங்கள் பற்றி உடன் வேலைபார்த்த நண்பன் சொன்னான். நிர்வாண நிலையில் இறந்த பெண்களின் புகைப்படங்கள் வருவதாகவும், வன்னியிலிருந்து மொபைலில் எடுக்கப்பட்டவை போலத் தெரிகிறது என்றான். இதுபோன்ற ஒரு விடயமே ஊடகங்கள் எதிலும் வெளிவராத, தெரியாத காலப்பகுதி. ஓர் நள்ளிரவு நேரத்தில் கவனிக்கையில், புன்னகையுடன் அந்தப் புகைப்படங்களை ரசித்துக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் தெரிந்த ஆர்வம் மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது.

யாரென்றே தெரியாத, இறந்துகிடக்கும் ஓர் பெண்ணின் உடலைப் பார்த்து அவ்வளவு மகிழ்ச்சியடைந்தது எப்படி? அவ்வளவு கிளர்ச்சியைக் கொடுத்ததா? சொல்லமுடியாது, அவர் பிணங்களைப் புணர்வதில் ஆர்வமுள்ளவராக இருக்கலாம். இறந்த பெண்ணுடலை, ரசித்துப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளும் அவரிடம் அதைவிடத் திறம்பட, கற்பனைத் திறனுடன் கொலை செய்யக் கூடிய இன்னும் வேறு நல்ல ரசனையான திட்டங்கள், தகைமை வாய்த்திருந்திருக்கலாம். அந்தக் கலையார்வம் என்றாவது ஓர்நாள் அவர் மனைவி பிள்ளைகள்மேல் திரும்பிவிடாதிருக்க நிகரற்ற அன்பாளனான இறைவனை வேண்டிக் கொள்வதைத் தவிர செய்வதற்கு வேறொன்றுமிருக்கல்லை.


வேலைக்குச் சேர்ந்த புதிது. காலை, யாழ்ப்பாணம் அரசடி வீதி வழியாக சென்றுகொண்டிருந்தபோது கஸ்தூரியார்வீதியில் பெரும்கூட்டம் நின்றது தெரிந்தது. 'வழமைபோல ஏதாவது சம்பவம்' இடம்பெற்றிருக்கலாம் என நினைத்தேன். பின்னர் அலுவலகத்தில் பேசிக் கொண்டார்கள். இயக்கத்தால் பிடிபட்ட திருடனுக்கு யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் கட்டி வைத்து கல்லால் எறிந்து ஒரு கும்பலால் மரண தண்டனை கொடுக்கப்பட்டதாக. ஒரு செயினுக்காக திருடர்கள் கொலையே செய்வது வழக்கமென்பதால் இதுதான் சரியான தண்டனை என்றும், ஒரு பயம் வருமென்றும் பலரும் பேசிக் கொண்டார்கள். மனிதாபிமானம் பேசியவர்களை "திருடர்கள் உன் அம்மாவைக் கொன்றிருந்தால் இப்பிடிப் பேசுவாயா?" என்று வழக்கம்போல புத்திசாலித் தனமாகக் கேள்வி கேட்டு மடக்கினார்கள் சிலர். அது சமாதான காலம்.புலிகள் பெயர் சம்பந்தப்பட்டால் இதுபோன்ற விஷயங்களில் போலீஸ், இராணுவம் எதுவும் தலையிடாது. தவிர, சில சிக்கலான கேஸ்களில் போலீஸ், இதற்கு அவர்கள்தான் சரி, அவர்களிடம் சென்று தீர்த்துக் கொள்ளுமாறு கூறிய சம்பவங்களும் உண்டு.

அவன் புதிதாக இணைந்தவனாக இருக்கலாம்,அதற்குமுன் குற்றச் செயல்களில் ஈடுபடாதவனாகவும் இருக்கக்கூடும். ஆவேசமடைந்த கும்பல் மனநிலையில் பலிவாங்கப்பட்டிருக்கலாம். அங்கே நீதியான விசாரணை எப்படி சாத்தியம்? மரண தண்டனைக்கு எதிரானவர்களின் பிரதான கவலையும் இதுவே! அந்தக் கும்பலில் இருந்தவர்களின் மனநிலை பற்றிக் குழப்பமாக இருந்தது. அதில் பங்குபற்றிய யாராவது அந்தச் சம்பவத்தின்பின், ஒருமுறையாவது தங்களையும் கொலையாளிகளாக உணர்திருப்பார்களா? அப்போது உற்சாகமாக வேடிக்கை பார்த்தவர்களும் பின்னர் தனிமையில் சிந்திக்கும்போது (சிந்திப்பவர்களாக இருக்கும்பட்சத்தில்) வருந்தியிருப்பார்களா?

மறுநாள் ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது, திருடர்களின் கொட்டத்தால் ஆவேசமடைந்த மக்கள்(!?) தகுந்த தண்டனை வழங்கியதாக. மக்கள் அந்தளவிற்கு திடீரென நாகரீக வளர்ச்சியடைந்திருந்தது மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது. தொடர்ந்த ஓரிரு நாட்கள் அந்த மைதானத்தைக் கடந்து செல்லும்போது கோல் கம்பமும் அதில் கட்டப்பட்டிருந்த சிறு கயிற்றுத் துண்டும் என்போலவே பலருக்கும் மன உளைச்சலைக் கொடுத்திருக்கக்கூடும்.

க மனிதன் மீதான வன்முறை பல்வேறு வடிவங்களில் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. நாமும் வன்முறை செய்கிறோம். வன்முறை உயிர்பறிப்பது மட்டுமல்லவே. வார்த்தைகளில், சிறு செயல்களில், அணுகுமுறைகளில் தினமும்! அதை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பது பற்றியும் சிந்திக்கத் தோன்றுகிறது. இன்னொருவர் மீதான வன்முறையை முற்றிலும் கண்டுகொள்ளாமல் விடுவது, ஏதோ ஒருவகையில் குரல்கொடுப்பது, பயந்துகொண்டே ஆர்வத்தில் பார்ப்பது. ஒருகட்டத்தில் ரசித்துப் பார்க்கும் மனநிலையை அடைவதுதான் ஆபத்தானது.

ஒருவனைத் துன்புறுத்திக் கொல்பவனையும் தாண்டி, அதை ரசித்துப்பார்க்கும் ஒருவனின் மனநிலை அதிர்ச்சியடைய வைக்கிறது. குழந்தைப் பருவத்தில் எறும்புகளைக் கொல்லாதவர்கள் இருக்கமுடியாது. அது இயல்பானது நானும், நீங்களும் அப்படியே! ஆனால் பத்துவயதில் ஒருவன் சுவாரஸ்யமாக தேடிதேடி எறும்பு கொல்வதை அவ்வளவு சாதாரணமாகக் கடந்துசெல்ல முடிவதில்லை.

ஒருமுறை புகைவண்டியில் சிக்கி உடல் துண்டாகிக் குற்றுயிராகிக் கிடக்கும் ஒருவரை செல்பேசியில் படம்பிடித்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார் ஒருவர். இப்படியான சமூக ஆர்வலர்களையும் இடையிடையே காணமுடிகிறது. தம்மிடம் சரணடைந்த ஒருவரை சித்திரவதை செய்து கொல்வதை வீடியோ எடுத்து மகிழும் இராணுவ வீரனொருவனின் மனநிலைக்கும் இதற்கும் அதிக வேறுபாடு இருப்பதாக நான் நம்பவில்லை. அதைக்கூட யாராவது கும்பல் மனநிலை, தன் சக நண்பர்களின் இழப்பினாலேற்பட்ட  பழிவாங்கும் வெறி, தொடர்ந்த கடும் மோதலில் ஏற்பட்ட தற்காலிக மனப் பிறழ்வு என்று காரணங்கள் கூறலாம். ஆனால் இதற்கு? விழிப்புணர்வு எனக்கூறும் பட்சத்தில் இவர்கள் தொடர்பில் என்னவகையான விழிப்புணர்வை கொள்ளவேண்டும், பயப்படுவதா? பரிதாபப்படுவதா?

ரு காலத்தில் இந்திய ராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட குழுவொன்று யாழ்ப்பாணத்தில் ஏராளமானோரைக் கொன்றது. புலிகள் சகோதரப் படுகொலைகளைச் செய்தார்கள் என்பவர்கள் கவனிக்க வேண்டியது, எல்லா இயக்கத்தினரும் சகோதரப்படுகொலை செய்தவர்களே. என்ன புலிகள் மாற்று இயக்கத்தினரை மட்டும் கொன்றார்கள். மற்றைய இயக்கத்தினர் புலிகள் தவிர, உறுப்பினர்களின் தனிப்பட்ட பகை, சும்மா போழுதுபோக்கிற்கு தம்மால் பிடிக்கப்பட்டவர்கள் என அப்பாவிகள் பலரையும் 'புலிகள்' என்று முத்திரைகுத்தி கொன்றுகுவித்தார்கள். அதில் ஒரு குழு மண்வெட்டியால் தலையைத் துண்டாடுவது வழக்கமாம். அப்படிச் செய்த தமது சாகசத்தை பெருமையாக, தலை எப்படி விழுந்தது உடல் எப்படி துடித்து அடங்கியது எனப் பெருமையாகப் பேசிக்கொள்வது இளம் உறுப்பினர்கள் பொழுதுபோக்காக இருந்ததாம். அந்தக் குழுவிலேயே நெருக்கத்திலிருந்த எழுத்தாளர் இதுபற்றி பின்னாளில் எழுதியிருந்தார்.

படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் யாராயினும், என்றாவது ஒரு தருணத்தில் தமது செயல்களுக்காக வருத்தப்படுவார்களா? குறைந்த பட்சம் தாம் செய்தது தவறென்றாவது உணர்கிறார்களா?


ந்தோனேஷிய அரசாங்கம் 1965 இல் கம்யூனிஸ்டுகள் மற்றும் அவ்வாறு சந்தேகிக்கப்பட்டவர்கள் என ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் துணை இராணுவக் குழுக்கள், தாதாக்கள் மூலமாகக் கொன்று குவித்தது. கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லையாம் ஐந்துலட்சம் - ஒரு மில்லியன் - இரண்டு மில்லியன் வரை குழப்பமாகவே போகிறதாம்.

இயக்குனர் ஜோஸ்வா ஒபன்ஹைமர் இதனைப் பதிவு செய்துவிடவேண்டும் என முயற்சிக்கும்போதுதான் தெரிகிறது. இன்னமும் மக்கள் கம்யூனிசம் பற்றிப் பேச அச்சப்படுகிறார்கள் என்பது. படுகொலைகளில் சம்பந்தப்பட்டவர்களிடமே பேசலாம் என முயற்சிக்கும்போது, அங்கிருந்து முற்றிலும் எதிர்பார்க்காத வரவேற்புக் கிடைக்கிறது. மிக மகிழ்ச்சியாகத் தேசத்துக்காற்றிய சேவையைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்களில் ஒருவன் அன்வர். அவன் மட்டுமே ஆயிரம் பேரைக் கொன்றிருக்கிறான்.

என்னதான் தேசநலனுக்கான நடவடிக்கை என்கிற நியாயம் (?!)இருக்கின்றபோதிலும், தனிப்பட்ட ரீதியான கொள்கையும் ஒத்துப்போகும்போது இன்னும் உத்வேகத்தைக் கொடுக்குமல்லவா? தியேட்டர் ஒன்றில் டிக்கெட் கிழிப்பவனாக வேலை பார்த்த அன்வர், எல்விஸ் ப்ரெஸ்லி, அல்பசீனோவின் ரசிகன். தீவிர சினிமா ரசிகனான அன்வருக்கு கம்யூனிஸ்டுகள் ஹொலிவூட் படங்களை தடை செய்தார்கள் என்ற ஒரே காரணமே அவர்களைக் கொல்லப் போதுமானதாயிருந்திருக்கிறது.

எப்படியெல்லாம் கொன்றார்கள் என்று அன்வர் & குழுவினர் சொல்கிறார்கள். "பல்கனியில் ஒரு மேசையின் மீது நாங்கள் அமர்ந்து பாடிக்கொண்டிருப்போம் (அமர்ந்து, பாடிக் காட்டுகிறார்கள்). வீதியால் செல்பவர்கள் பைத்தியக்காரரைப் பார்ப்பதுபோல் பார்த்துச் செல்வர்கள். அவர்களுக்குத் தெரியாது, மேசையின் ஒரு கால் ஒருவனின் கழுத்தின்மீது தாங்கி நிற்பது"

கொலை செய்வதையும், அதன் பின்னரான மனநிலையையும் விபரிக்கிறான் அன்வர்.




இன்னொருபுறம் அன்வர் தற்போது எப்படியிருக்கிறான்?தன் பேரக்குழந்தைகளுக்கு அன்பைப் போதிக்கிறான்.தவறுதலாக அடிபட்ட வாத்துக்குஞ்சொன்றைத் தடவிக் கொடுத்து, கொடுத்து 'sorry, அது ஒரு ஆக்சிடெண்ட்' என்று மன்னிப்புக் கேட்கச் சொல்லிக் கொடுக்கிறான்.

கம்யூனிஸ்டுகள் பற்றிப் பேசவே அச்சப்படும் மக்கள் வாழும் தேசத்தில், படமாக்கும் பொறுப்பை முன்னாள் கொலையாளிகளான அன்வர் குழுவினர் ஏற்றுக் கொள்கின்றனர். நடிகர்கள் தேர்வு, காட்சியமைப்பு போன்ற விடயங்களை அவர்களே கச்சிதமாகப் பார்த்துக் கொள்கிறார்கள். தாம் தேசத்துக்காற்றிய மகத்தான சேவை, தம் வாழ்நாள் சாதனை எங்கே வரலாற்றில் பதிவு செய்யபடாமலே போய்விடுமோ என்ற நியாயமான கவலை அன்வரிடம் இருக்கிறது. தவிர, எது நடந்ததோ அதை அப்படியே பார்வையாளன் கண்முன்னே கொண்டுவரவேண்டும் என்பதில் ஓர் நேர்மையான படைபாளியின் உறுதியுடன் இருக்கிறான்.

கொலையாளிகளின் மனநிலை எப்படியிருகிறது? அன்வருக்கு ஆரம்பத்தில் எந்த உறுத்தலும் இல்லை. கொலைகள் பற்றி அவ்வளவு சிலாகித்துப் பேசுகிறார்கள். சிலர் தாங்கள் செய்தது தவறென்று உணர்கிறார்கள். இதெல்லாம் படத்தில் வந்தால் இமேஜ் என்னவாவது என்கிற கவலை இருக்கிறது சிலருக்கு. அன்வர் போலவே இன்னொரு கொலையாளி சொல்கிறான். சர்வதேச சட்டங்கள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. "ஜோர்ஜ் புஷ் அதிகாரத்தில் இருந்தபோது குவாண்டனோமா சரி. சதாம் ஹூசைன் கூட அப்படியே. என்னிடம் அதிகாரம் இருக்கிறது. ஆக, நான் செய்ததும் சரியே!"

"கம்யூனிஸ்டுகளின் வாரிசுகள் இதை ரசிப்பார்களா?" இயக்குனரின் கேள்விக்கு சற்று யோசித்துவிட்டு அன்வர் சொல்கிறான், "நிச்சயமாக! ஆனால், அவர்கள் பற்றியது எனபது தெரிந்தால் பார்க்க விரும்ப மாட்டார்கள். இல்லாவிடில் இதை விரும்புவார்கள்"

ஒரு கம்யூனிஸ்டாக தான் கொல்லப்படுவதாக நடித்தபின்னர் சற்றே உணர்ச்சிவசப்படும் அன்வர், அவர்களின் வலியைத் தான் உணர்ந்ததாகச் சொல்கிறான்.
"நீங்கள் செய்வது வெறும் சினிமாவுக்காக என்பது உங்களுக்குத் தெரியும். அவர்களுக்கு அது தங்கள் இறுதி"
"இல்லை நானும் அதை அப்படியே உணர்ந்தேன்"

படப்பிடிப்பு நடைபெறும்போதெல்லாம் அன்வரின் போக்கில் சிறிது மாறுதல். வாழ்நாளின் பெரும்பகுதியை எந்தக் குற்றவுணர்வுமின்றிக் கடந்துவிட்ட அன்வரை அவன் பங்குபற்றிய படம் குற்றவுணர்வுக்குள்ளாக்குகிறது எனில், அதுதான் இந்த ஆவணப்படத்தின் மிகப் பெரிய வெற்றி. ஆரம்பத்தில் தனது கொலைகளை நிகழ்த்திய இடத்துக்கு மீண்டும் போகும்போது அவனால் முன்புபோல பேச முடியவில்லை.சோர்வடைந்தவன்போல நிற்கிறான். 

திரும்பிச் செல்லும்போது ஆச்சரியகரமாக அழுகிறான். இங்கேதான் ஆவணப்படம், ஒரு திரைப்படமாக மாறுகிறதா என்ற சந்தேகமும் வந்துதொலைத்தது. காரணம் நான் வளர்ந்த, வாழும் சூழல் அப்படியொரு நம்பிக்கையைக் கொடுப்பதாக இல்லை. இதுபோன்ற ஏராளமான கதைகள் நம்மிடையே உள்ளன - ஆவணப் படுத்தப்படாமல். ஏராளமான அன்வர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தவித குற்றவுணர்ச்சியும் ஏற்பட வாய்ப்புகளே இல்லை.