Thursday, October 31, 2013

ஜேகே எனும் நண்பனின் திருமணம்!

"ஹாய் தல! என்ன பண்றீங்க? செப்.15 எனக்குக் கல்யாணம். நான் உங்கமேல மானவாரியா மரியாதை வச்சிருக்கேன். வந்து தொலைங்க!"
- காலையில் நண்பர் 'படலை' ஜேகேயின்  ஃபேஸ்புக்கில் மெசேஜ்.

சமகாலத்திலே.... ஏன் என்னுடைய மூன்று ஆண்டுகால பொதுவாழ்க்கையிலே....ஏன் வாழ்க்கையிலேயே என்மேல ஒருத்தர் மரியாதை வச்சிருக்காரே அதால,
"கண்டிப்பா தல! எனக்கு கூட்டம் அலர்ஜி..இருந்தாலும் உங்களுக்காக!"
"ஏன் பாஸ் உங்கள என்ன அரசியல் கூட்டத்துக்கா அழைக்கிறம்...  வாங்க பாஸ் சந்திப்போம்"

எக்கச்சக்கமான வேலைப்பளு! சரியா திருமணத்திற்கு முதல்நாள் இரவு பத்துமணிக்கு ஞாபகம் வந்து  மைந்தனிடம் கேட்டேன் "என்ன டைம் பாஸ்?" "இருங்க விசாரிச்சுப் பாக்கிறேன்"

அடுத்த கேள்வியும் எழுந்தது. திருமணத்திற்கு பரிசுப்பொருள் தெரிவு செய்வது குறித்தான குழப்பங்கள் எல்லாருக்கும் இருக்கும்போல. இன்னும் சுவர்க்கடிகாரம் கொடுக்கும் வழக்கம் நம் மக்களிடையே இருக்கிறதா? வழக்கொழிந்துவிட்டதா? புத்தகங்கள் நல்ல தேர்வு - அருமை தெரிந்தவர்களுக்கு மட்டும்! ஆனால் அது வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு பொருத்தமானதா? உக்கிரமாக யோசித்து இறுதியில், 'விலை மதிக்க முடியாத அன்பை மட்டும்' பரிசாகக் கொடுத்துவிட்டு வரலாம் என வேறுவழியில்லாமல் முடிவு செய்தேன்.

காலையில் எனக்காக காத்திருந்த நண்பர் மைந்தனும் என்போலவே வேலைப்பளு, குழப்பத்துக்குப் பிறகு, அன்பையே எடுத்து வந்திருந்தார்.
"எங்க பாஸ் வெடிங்?" - மைந்தன்
"பம்பலப்பிட்டி சரஸ்வதி ஹோல்ல"

ம்ம ராசின்னு ஒன்றிருக்கு. அது சமயத்தில் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் தொற்றி விடுவதுண்டு. அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.
திடீரென "பாஸ் வெடிங் தெஹிவலல போல இருக்கு" - மைந்தன்
"இல்லையே அப்படி சொல்லலையே"
"எனக்கும் அப்பிடிச் சொல்லல! ஆனா அஃபீஸ்ல இன்னொருத்தன் சொன்னான் கார்ட்ல அப்பிடித்தான் இருக்காம். லோஷனும் வர்றதா சொன்னான். அவன் கார்ட் பாத்தானாம்"
"அப்பிடியா? நீங்க பார்த்தீங்களா?"
"ஃபேஸ்புக்கில பார்த்தேன். ஆனா முன்பக்கம்தான் போட்டிருந்தார் அதில ஒண்ணுமில்ல"
த்ரீவீலர் திருமண மண்டபத்திற்கு அருகே வந்துவிட்டது.
மைந்தன் அந்த இன்னொரு நண்பருக்கு ஃபோன் செய்து, "தெஹிவலதான்!"
"???"

ஒருமுக்கியமான விஷயம் நான் எப்பவுமே புத்திசாலித்தனமாக யோசிப்பேன்.
இரண்டாவது முக்கியமான விஷயம் - நான் அப்பிடி யோசிக்கும்போது காலம் கடந்திருக்கும்.
"அது வேற வெடிங்கா இருக்கப்போகுது. அங்க ஒருக்கா இறங்கிப் பாத்திருக்கலாம்" பாதிதூரம் கடந்திருந்தோம்!
"ஆமால்ல!"

திருமண மண்டப வாசலில் மைந்தன், "பாஸ் நீங்க வெயிட் பண்ணுங்க நான் பார்த்துட்டு வர்றேன்!" போனவேகத்தில் திரும்பி வந்து, "அங்கதான் பாஸ்!"

த்ரீவீலர்கார சிங்கள அண்ணன் சிரித்தார். "பாஸ், பயபுள்ள எங்க ஏரியா...எல்லாப் பயலுக கிட்டயும் சொல்லிவிட்டுறப்போகுது, இவன் ரொம்ப நல்லவன்டா. ஆட்டோல ஏறினா ஊரச்சுத்திப் பாக்கிறாண்டான்னு!"
மீண்டும் சரஸ்வதி மண்டபம் வந்ததும் த்ரவீலர் அண்ணன் சிரித்தபடியே விடைபெற்றார். நான் திரும்ப வீட்டுக்குப் போகும்போதும் சிரித்தபடியே நின்றார். கொடுமை!


ண்டபம் உள்ளே நுழைந்ததும் மறுபடியும் குழப்பம். மணமக்கள் பெயர் எழுதியிருக்கவில்லை. 'ஒருமாதிரியா யார் முதலில் செல்வது' என முடிவெடுத்து தயங்கி, மீண்டும் ரகசியமாக "என்ன பாஸ் இங்கதானா?","கேட்டுப் பாக்கலாமா?", வழக்கமான "மச்சி நீ கேளேன்" சம்பிரதாயம் முடித்து, அங்கே வரவேற்றுப் பொட்டுவைத்த வட்ட நிலாவிடம் கேட்டேன்,

"இது ஜேகேயோட வெடிங்தானே?"
சற்றுக் குழப்பமாகப் பார்த்தார் (அய்யய்யோ தப்பா வந்துட்டமா?)
ஒரு வகையான 'இருக்கு ஆனா இல்லை' பாவனையுடன் "ஜீவிகாவோடதுதான்" (???)
"ஜெயக்குமரன்..ன்..."
"அவர் இன்னும் வரல!" (ஓ! அப்போ அவர்தானா? அப்பாடா!)
"இல்ல முதல்ல தெர்யாம வேற ஒரு ஹோலுக்க நொழஞ்சி தொர்த்தி வுட்டானுங்க அதான்"
இப்போது தலையசைத்து சிரித்தார்
'நைஸ் சுமைல்' - மனதிற்குள் ஒரு 'அருமை' கமெண்ட் போட்டு உள்ளே சென்றோம்!


அங்கே ஒரு பெண்மணி, 'நானும் ஒரு ரசிகை தானுங்கோ' என்றார். அறிமுகப்படுத்திக் கொண்டபோது, ஃபேஸ்புக்கில் பார்ப்பதைவிட நேரில் பயங்கரமாக இருப்பதால் அடையாளம் தெரியவில்லையென வெகுவாகப் பாராட்டினார்.

தலைவர் ஜேகே மணமேடையில் வந்து அமர்ந்துகொண்டார். முகத்தில் ஒரு கலவரம் இருந்ததாகத் தோன்றியது. புதுக் கூண்டுக்குள் புகுந்த முயல்குட்டிபோல கண்ணில் தெரிந்த மிரட்சி என் பிரமையாக இருக்கலாம். அவ்வப்போது அண்ணன் புன்னகைத்துக் கொண்டார். புன்னகையில் கலந்திருந்தது பீதி போலவுமிருந்தது. பிரமிப்பு போலவுமிருந்தது. 'டெக்னிக்கலாக' பதற்றத்தைக் குறைக்கவோ என்னவோ அண்ணியிடம் அவ்வப்போது பேசிக்கொண்டிருந்தார். 'ஒருவேளை படலையிலிருந்து கேள்விகள் கேட்பாரோ?' நினைக்கவே திகிலாயிருந்தது!

வழக்கமாக நம்மவர் திருமணங்களில் மணமேடை சற்றுத்தூரத்தில், மணமக்கள் தனியாக இருக்க, மற்றவங்க தூர இருந்து வேடிக்கை பார்ப்பார்கள். இங்கே மணமேடை அருகில், தவிர மணமக்களைச் சுற்றி நிறையப்பேர் நின்றிருந்தார்கள் - இந்தியப் பிரபலங்கள் திருமணம்போல. இது ஒரு நல்ல விஷயம். கலவரமாக முழித்துக் கொண்டிருக்கும் மாப்பிள்ளைகளின் டென்ஷன் குறைக்க, அனைவரும் இதனைப் பின்பற்றுவது நம் சமுதாயத்தின் அவசியத் தேவை என உரக்க... ஆணித்தரமாக...உறுதியாக... பணிவாக...கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.


மிகக்கவர்ந்த  விஷயம், திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு புத்தகங்கள் வழங்கியது. முன்னைய காலங்களில் தாம்பூலப்பை என்பது, தாம்பூலமாக மட்டும் இருந்து, பின்னர் பலகாரங்களாகப் பரிணமித்து, அப்படியே குங்குமச் சிமிழ், பிள்ளையார் சிலையாகி, நம் மக்களால் குபேரன் சிலை எனத் தவறாக அழைக்கப்படும் சிரிக்கும் புத்தர்சிலை (மைத்ரேய புத்தர்?) என வளர்ந்திருப்பது வரலாறு. ஜேகே புத்தகங்கள் வழங்கியது. அட்டகாசமான முயற்சி!

லோஷன்  தனக்கு 'மீண்டும் ஜீனோ' கிடைத்ததைப் பற்றி ஃபேஸ்புக்கில் கூறியபோதுதான் தெரிந்தது. நாங்கள் மிஸ் பண்ணிவிட்டதால், அதுபற்றி ஒன்றும் கூறவில்லை. இது பற்றி ஜேகே சற்றுக் கடுப்பாகியிருந்ததாகத் தெரிகிறது. சிரமப்பட்டு எடுத்த புதிய நல்ல முயற்சியைக் கண்டுகொள்ளாமல் விட்டால் யாருக்குத்தான் கோபம் வராது? நம் புத்தகக் கடைகளில் 'புத்தகம்' வாங்கியவர்களுக்குத் தெரியும் அந்தக் கஷ்டம்! Hats off ஜேகே!

இதையே நம்மவர்கள் பின்பற்றினால், என்போன்ற தாம்பூலப்பை வாங்காமல் எஸ்கேப் ஆகும் ஆத்துமாக்கள் இனி வாங்கிச் செல்ல முற்படுவார்கள். ஆனால், அதிலும் ஒரு சிக்கல். எந்த நல்ல விஷயத்தையும் நம்மவர்கள் கோக்குமாக்காக மாற்றிவிடுவதில் வல்லவர்கள். புத்தகம் கொடுக்கிறோம் பேர்வழி என 'முப்பது வகை பச்சடிகள்', 'கோலம் போடுவது எப்படி?', 'முப்பது நாளில் அழகியாகிவிடுவது எப்படி?'என்று அலற வைத்துவிடும் அபாயமிருக்கிறது. நல்ல புத்தகங்கள் கொடுப்பது நம்மவரிடையே ஒரு நல்ல ஆரம்பமாக அமையட்டும்!

வாழ்த்துக்கள் ஜேஜே!

14 comments:

 1. சமீபத்தில் என் பையனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்தவர்களுக்கு , திருக்குறள் கொடுத்து மிரள வைத்தேன் என்பதை சந்தோசத்துடன் பதிவு செய்கிறேன்.

  ReplyDelete
 2. பாவிப்பயல் நானு. கலியாணவீடு எங்கே என்று சொல்லாமலேயே இன்வைட் பண்ணியிருக்கிறன். இந்த மாட்டருக்கு வீட்டில திட்டு வாங்க போறன். கார்ட் அன்பை முறிக்கும் என்று ஸ்டேட்மென் வேற வீட்ல விட்டன். அலைக்கழிந்து இருக்கிறார்கள். சாரி பாஸ். புத்தகம் எப்படி கிடைக்காமல் போனது? கம்பனில ஊழலா? விசாரிக்கோணும். மிஸ் பண்ணின ஆட்களுக்கு அவர்கள் கலியாணத்தில் புத்தகம் அன்புடன் வழங்கப்படும்!

  ReplyDelete
  Replies
  1. இல்ல பாஸ் நீங்க கரெக்டாத்தான் சொன்னீங்க ..இடையில நாங்கதான்! :-)

   Delete
 3. ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

  ReplyDelete
 4. 'ஒருவேளை படலையிலிருந்து கேள்விகள் கேட்பாரோ?'

  ReplyDelete
 5. அந்த தெஹிவளை திருமண மண்டபத்தை தொலைபேசியில் கூறிய நண்பர் நானேதான்! தெகிவளை மண்டபத்திலும் ஒரு JK க்குத்தான் கல்யாணம் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன் :P

  ReplyDelete
 6. அருமையான,சிந்திக்க வைக்கும் பகிர்வு(வெளி நாட்டில் வாழ்வதால் இருக்குமோ?)புத்தகம் வழங்கியது முன்னோட்டமான முயற்சி!வாழ்த்துக்கள்,வழங்கியவருக்கும்,(புத்தகம்)பெற்றவர்களுக்கும்!

  ReplyDelete
 7. புத்தகம் கொடுக்கிறோம் பேர்வழி என 'முப்பது வகை பச்சடிகள்', 'கோலம் போடுவது எப்படி?', 'முப்பது நாளில் அழகியாகிவிடுவது எப்படி?'என்று அலற வைத்துவிடும் அபாயமிருக்கிறது. நல்ல புத்தகங்கள் கொடுப்பது நம்மவரிடையே ஒரு நல்ல ஆரம்பமாக அமையட்டும்!

  வழிமொழிகிறேன் உற்சாகமாய்..!

  ReplyDelete
 8. என்னாது JK க்கு கல்யாணமா ? அப்போ எத்தனியாவது?

  ReplyDelete
  Replies
  1. நீங்க யார பாஸ் கேக்குறீங்க? :-))

   Delete

Followers

Blog Archive

Powered by Blogger.

Archives

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |