Friday, April 5, 2013

தாய்நிலம்!


"தம்பி என்னைத் தெரியுமா?" மெல்லிய உடல்வாகுடன் இருந்த அந்த அக்கா சிரித்துக் கொண்டே கேட்டார். பக்கத்தில் இன்னொரு வயது முதிர்ந்த பெண்மணி.

யோசித்துக் கொண்டே பார்த்தேன்.

"நீங்க அப்ப சின்னப்பிள்ளை. ஞாபகமிருக்காது. உங்கட வீட்டுக்குக் கிட்டதான்" மீண்டும் அவரே சொன்னார்.

"அப்பிடியா?"

"ஓம் உங்கட வீட்ல டீ.வி எல்லாம் பாக்க வருவம். இப்ப கொஞ்சம் முதல் அப்பா அம்மாவைக் கண்டு கதைச்சனான்"

அப்படி யாரையும் நினைவில் இல்லை. யாராயிருக்கும்? யோசித்துக் கொண்டே, "உங்க பேர் என்ன?" - கேட்டேன்.

"உங்களுக்கு ஞாபகமிருக்காது தம்பி"

"சொல்லுங்க"

அவர் நம்பிக்கையில்லாமல் சிரித்துக் கொண்டே, "ரதீஸ்வரி"

"ஓ..! நீங்களா? எனக்குத் தெரியும். மகேஸ் அக்கா எங்க?" அவருடைய அக்கா பற்றியும் விசாரித்தேன்.

கொஞ்சம் பேசிக் கொண்டிருந்துவிட்டு போகும்போது மகிழ்ச்சியுடன் சொன்னார். "தம்பிக்கு எல்லாரையும் ஞாபகம் இருக்கு".

அதிர்ச்சியாக இருந்தது. ரதீஸ்வரி அக்காவா இது? ஆளே அடையாளமே தெரியாமல் மெலிந்து போய்.. சற்று நேரம் அவர் போவதையே  திரும்பி, பார்த்துக் கொண்டிருந்தேன்.

ல்லாமே மாறிப்போய் விட்டிருந்தது. சரியாக இருபத்திரண்டு வருடங்கள். நான் பிறந்து வளர்ந்த, சின்னஞ்சிறு வயதில் விட்டு விலக்கப்பட்ட என்தாய்நிலம் அவ்வளவு அந்நியமாக தெரிந்தது. பழக்கப்படுத்திக் கொள்ள நினைவுகளின் அடுக்குகளிளிருந்து தேடிக் கொண்டே மெதுவாக நடந்துகொண்டிருந்தேன்.

சொந்த மண்ணில் வாழும் உரிமை மறுக்கப்பட்டு நாடோடிகளாக வாழும் அனுபவத்தை நீங்கள் எப்போதாவது அனுபவித்ததுண்டா? சின்னசிறு வயதில் மட்டுமே பார்த்த ஊரின் எந்தக் காட்சிகளையும் கற்பனை செய்து பார்க்க முயன்று, முடியாமல் நினைவுகளால் மட்டும் உணர்ந்திருக்கிறார்களா? சிறுவயதில் கேட்ட பாடல்கள் அடிமனதில் இருக்கும் சிறுவயது ஞாபகங்களை எப்போதாவது கிளறிவிட, தூக்கம் தொலைந்ததுண்டா? 

மீண்டும் பல வருடங்களின் பின் தாய்மண் திரும்பும்போது, அது தன் பழைய அடையாளங்களைத் முற்றிலும் துறந்து, அந்நியமாய் தெரியும்போது, என்ன தோன்றும்? முதன் முதலாக சிறுவயதில் நீங்கள் நடைபயின்ற வீதியில் மீண்டும் நடந்து செல்கையில், பள்ளிக்கூடம், சின்னவயது நண்பர்களுடன் விளையாடி, உருண்டு, புரண்ட கோயில் மணல் வீதி எல்லாம் பார்க்கும்போது, பழைய நினைவுகள் மெதுவாக மீட்டப்படுவதை உணர்ந்ததுண்டா?


தோ நான் சென்றுகொண்டிருக்கும் இந்த ஒழுங்கை எனக்கு முற்றிலும் புதிதானதுதான். சின்ன வயதில் ஒரு முறை கூட தனியாக இங்கே நடந்ததில்லை. ஆங்காங்கே ஒரிரு புதிய வீடுகள் கட்டிக் கொண்டும், காணிகளைத் துப்புரவு செய்துகொண்டும் இருந்தவர்கள் ஒரு கணம் நிறுத்தி, அந்நியனான என்னை அடையாளம் கண்டுகொளும் முயற்சியில் கவனிக்கிறார்கள்.

அவர்களுக்கு என் அப்பாவைத் தெரிந்திருக்கும். சிறுவயதில் என்னைக் கூடத் தெரிந்திருக்கலாம். இதோ கேற்றிலிருந்து நீண்ட சிமெண்ட் மேடை நடைபாதை போடப்பட்ட அடையாளம் மட்டும் தெரிகிறதே, ஒரு பெரிய வீடு இருந்ததற்கான எந்த அடையாளமுமின்றி சிறு கற்குவியல் மட்டுமே எஞ்சியிருக்கிறதே இது? இது ராசமணி அன்ரி வீடல்லவா? பலாலி இராணுவத் தளத்திலிருந்து முதலாவது ஷெல் வந்து விழுந்ததும், அந்தச் சுற்றாடலிலுள்ளவர்களின் முதற்கட்ட 'பாதுகாப்புடன் கூடிய பின்னகர்வு நடவடிக்கை' அந்த வீட்டிற்குச் செல்வதாகவே ஒரு காலத்தில் அமைந்திருக்கும். அந்த வீடு கற்குவியலாகக் காட்சியளித்தது.

மோட்டார்சைக்கிளில் மீன் விற்றுக் கொண்டிருந்தவரிடம், "அண்டைக்குத் தந்த மீன் சரியில்ல! பச்சத்தண்ணி மாதிரி இருந்திச்சு" 'கஸ்டமர் கொம்ப்ளெயிண்ட்' குரல் ஒன்று நடந்து வந்து கொண்டிருந்தது  கேட்டது.. படலையைத் திறந்துகொண்டு வந்த குரலின் சொந்தக்காரர் நடுத்தர வயதானவராக இருந்தார். ஆங்காங்கே தலை நரைத்திருந்தாலும், என்றும் மாறாத அதே புன்னகையில் அடையாளம் காட்டினார் பஞ்சண்ணை!

"தம்பி உங்களைத் தெரியும் எனக்கு ஞாபகமிருக்கு! ம்ம்ம்...யாரோட மகன்?"
"கிருபாகரன்"
"ஒமோம் ! எப்பிடித் தம்பி... இப்பதான் இங்கால வாறீங்கள் போல"


ரு சிறிய வைரவர் கோவிலைக் கடந்தபோது, வழக்கம்போல எந்த மதத்துக் கோவிலைக் கண்டாலும் செய்வதுபோல கை அனிச்சையாக ஒரு சல்யூட் வைத்தது. ஏதோ தோன்றியதும் இரண்டடி பின்னகர்ந்தேன். அந்தச் சிறிய வைரவர் சிலை அப்படியே ஞாபகத்தில் இருந்தது. ஒரு குழந்தை நிற்பதுபோல! கண்கள் புருவங்கள், அழகான புன்னகை. ஒரு குழந்தையை மனதில் கொண்டே அதனை உருவாக்கியிருக்கலாம்.

சற்றே தூரத்தில் ஒருவரிடம் அப்பா பேசிக்கொண்டிருந்தார். கறுத்து, தாடி வளர்த்திருந்த அவரைக் காட்டி தெரியுமா எனக் கேட்டார். அருகில் சென்று "ஆனந்து?" என்றேன். ஆனந்துக்கும் அவ்வளவு மகிழ்ச்சி. தன் மனைவி, குழந்தையை அறிமுகப்படுத்தி வைத்தார். என்னை விட ஒரு வயது மூத்தவர். அவர் அண்ணன், தம்பி பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.

சற்று நேரத்தில் அங்கு வந்த ஒரு பெரியவர். என்னைப் பற்றிக் கேட்டார். அப்பா பெயர் சொன்னதும் "உங்களுக்கு என்னைத் தெரியாது. அப்பாட்ட கேளுங்கோ தம்பி" என ஆரம்பித்து நிறையப் பேசிக் கொண்டிருந்தார். என்னுடன் ஆரம்பப் பாடசாலையில் படித்த சிவாகரனின் தந்தை அவர் எனத் தெரிந்துகொண்டேன். 

"அவன் இப்ப பிரான்சில தம்பி! வீடு உடைஞ்சவங்களுக்கு கட்ட காசு  தாறேண்டு கூப்பிட்டுப் பதிஞ்சவங்கள் தம்பி. பிறகு சொன்னாங்கள் உங்களுக்கு எதுக்கு? ஐரோப்பாவில இருந்து காசு வருது எண்டுறாங்கள். நாஞ்சொன்னன் தம்பியவ..இல்லையெண்டா முதல்லயே சொல்லி, எங்களை மீட்டிங் ஒண்டுக்கும் கூப்பிடாதேங்கோ. சும்மா நேரத்த மினக் கெடுத்தி.." அவரே தொடர்ந்தார்.

"தம்பி இதையெல்லாம் நம்பி இல்ல. நாங்கள் யாரையும் நம்பியே வீடு கட்டினனாங்கள்? எங்கட பிள்ளையள வளர்த்தனாங்கள்? படிப்பிச்சுப் பட்டதாரி ஆக்கினனாங்கள்? எல்லாம் இந்த மண்ணில பாடுபட்டு உழைச்சதுதானே? இந்த மண்தான் எல்லாமே. இதுமட்டும் போதும்!"


கூரை அகற்றபட்டு, உடைந்து, சிதைந்து போயிருந்த எங்கள் வீட்டில் தொலைந்துபோன எதையோ தேடுவதுபோல சுற்றிக் கொண்டிருந்தேன் -வெளிப்புறமாக. கூரை திறக்கப்பட்டு பாதி உடைந்த சுவர்த் தடுப்புக்கு எது வெளிப்புறம், உட்புறம்? வீட்டின் முற்றம் இருந்த இடத்தில், சுற்றிவர என எங்கும் செடிகள் முளைத்திருந்தன. இடையிடையே மண் திட்டுக்களில் நான் அந்த வீட்டில் பிறந்து வளர்ந்ததற்கான ஏதாவது ஒரு சின்ன அடையாளம் இருக்குமா எனத் தேடத் தோன்றியது.  ஒரு சிறு விளையாட்டுக் கார்ச்சில்லு, ஒரு ‘ரெனோல்ட்‘ பேனா மூடி, ஒரு பிய்ந்துபோன ரப்பர் செருப்பின் பாகமோ, உடைந்த சிறு விளையாட்டுப் பொருளோ, பெருமளவில் சேகரித்த 'எட்னா சொக்கலேட்' ஸ்டிக்கர் ஒன்று, கோயில் திருவிழாவில் வாங்கி விளையாடிய பறக்கும்தட்டு இப்படி எதுவாகினும் கிடைக்குமா?

நான் இருந்ததற்கான எந்த ஒரு சிறு அடையாளமாவது என் சிறுவயது நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு நினைவுச் சின்னத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். ஒரு வெடித்து நெளிந்த மண் நிரம்பியிருந்த சில்வர் டம்ளர் ஒன்று கிடந்தது. ஓரிரு அந்தக்காலத்தைய 'லக்ஸ்பிறே' பால்மாவின் மஞ்சள் நிற பைக்கற் துண்டுகள் கிடந்தன. எனக்கான பிரத்தியேக அடையாளங்கள் ஏதுமில்லை. ஒருவேளை கொஞ்சம் மண்ணைக் கொத்திப் போட்டால் ஏதும் கிடைக்குமோ எனத் தோன்றியது. எப்போதோ நீங்கிச் சென்ற சொந்த மண்ணில், வீட்டில் தான் வாழ்ந்ததற்கான ஏதாவது ஓர் அடையாளத்தைத் தேடுவது மனிதர்கள் ஒவ்வொருவருக்குமான இயல்புதானே!

சிறுவயதில் விளையாடும்போது பத்திரமாக வைப்பதாக நினைத்து மறைத்து வைப்போம், பின்னர் நாங்களே அதை மறந்து போய்விடுவோம். இன்னோர் சந்தர்ப்பத்தில் வேறொரு பொருளைத் தேடும்போது எதிர்பாராமல் கிடைத்துவிடும். இது எல்லோருக்கும் வாய்த்த அனுபவமல்லவா? நானும்கூட எதிர்பாராமல், ஏதாவது கிடைக்குமா எனத் தேடினேன்.

ன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு, மக்களாட்சி நடைமுறையிலிருக்கும் சீனா. Puyi, அருங்காட்சியகத்தின் வாயிலில் நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே செல்கிறார். கண்முன் மிகப்பிரமாண்டமான அரண்மனை. படை வீரர்கள் அணிவகுத்து நிற்கும் மிகப்பெரிய மைதானம் வெறுமையாக இருக்கிறது. பிரதான அரசவைக்குச் செல்லும் நீண்ட படிக்கட்டுகளில் ஏறிச்செல்கிறார். ஒரு முறை திரும்பிப் பார்க்கிறார்.

தனிமையும், இருளும் சூழ்ந்த மண்டபத்தில் இருக்கிறது தங்கத்தாலான சிம்மாசனம். அவர் முகத்தில் சிறு புன்னகை. கயிற்றுத் தடுப்பைத் தாண்டி, சிம்மாசனத்தின் படிகளில் ஏறுகிறார்.

"நில்லுங்கள், அங்கே போக அனுமதியில்லை" ஓர் சிறுவன் வருகிறான்.
"யார் நீ?"
"நான் இங்கேதான் இருக்கிறேன். காவலாளியின் மகன்"
"நானும் இங்கேதான் இருந்தேன். இதில்தான் அமர்ந்திருந்தேன்"
"யார் நீங்கள்?"
"நான் சீனாவின் பேரரசனாக இருந்தேன்"
"நிரூபியுங்கள்" என்கிறான் சிறுவன்.

ஒரு குழந்தைபோல் உற்சாகமாகி, புன்னகையுடன் சென்று சிம்மாசனத்தில் அமர்கிறார். முகத்தில் மகிழ்ச்சி பொங்க, அப்படியே எட்டி, கீழ்ப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏதோ ஒரு பொருளை எடுத்துத் தன் சட்டையில் துடைத்து அவனிடம் கொடுக்கிறார். அது வெட்டுக்கிளி வளர்க்கும் ஒரு சிறிய மரக்கூடு. குழந்தைப்பருவத்தில் பேரரசனாக வாழ்ந்தபோது ஓர் படைவீரன் கொடுத்தது. அவர் விளையாடும்போது மறைத்து வைத்தது. The last Emperor படத்தில் இடம்பெற்ற காட்சி இது.

ன் சொந்த நாட்டை இழந்து, பிற தேசங்களில் அடையாளங்களைத் துறந்து, அலைந்து கொண்டிருக்கும் நாடோடி இளவரசன் போலவே  சுற்றித் திரிகிறோம். சொந்த மண் ஒவ்வொருவரையும் மனதளவில் மண்ணின் மைந்தனாக மட்டுமல்ல தன் தாய்நிலத்தின் மன்னனாகவே உணர வைக்கிறது.

எங்கு சுற்றித் திரிந்தாலும், தேசங்கள் கடந்து வாழ்ந்தாலும் எம்மையறியாமலே சொந்த மண் பற்றிய நினைவுகளைச் சுமந்து கொண்டே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு பண்டிகைக்கால நாளின் காலைப் பொழுதோ, ஒரு பால்யகால புகைப்படமோ, ஏதோ ஒரு சோப் வாசனையோ திடீரென தாய்நிலம் பற்றிய நினைவுகளில் சடுதியாக மூழ்கடித்து மனதைக் கனக்கச் செய்துவிடுகிறது.

ஊரும் நம்மைப் போலவே தன் இயல்பான எந்த அடையாளமுமின்றி கனத்த மௌனத்தைப் போர்வையாக்கி, உறங்கிக் கொண்டிருக்கிறது.

( 'வானம் தாண்டிய சிறகுகள்' என்ற தொடருக்காக வாரப்பத்திரிகை ஒன்றில் எழுதியது. )

6 comments:

  1. பகல் வணக்கம்,ஜீ!நலமா?////இன்னும் அந்தப் பாக்கியம் எனக்குக் கிட்டவில்லை.மூன்று தடவைகள் சென்றும்................................பார்ப்போம்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பாஸ்.. நலம்! கிட்ட வாழ்த்துக்கள்..வாருங்கள்!

      Delete
  2. அருமை ஜீ.... இத படிக்கும்போது ரகுமானின் குரலில் அந்த பாட்டு //உந்தன் தேசத்தின் குரல் //ஞாபகம் வருது...
    இரண்டுமே ஒரே உணர்வுகளை தருகின்றது. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. Brilliant writing Jee. How is the response from the magazine readers?

    ReplyDelete
    Replies
    1. அதப்பற்றி எனக்குத் தெரியாது பாஸ்! ஏற்கனவே நான் எழுத யோசிச்சு சோம்பேறித்தனத்தால் தள்ளிப்போட்டுக் கொண்டிருந்தேன். என்னை எழுத வச்சிருக்கு..அவ்வளவுதான்! :-)

      Delete