Friday, April 12, 2013

பயணம்...ர் நீண்ட பேருந்துப் பயணத்தின்போது, ஆரம்பத்திலேயே தூங்கிப் போய்விடுபவர்களைப் பார்க்கும்போது, சற்றே பொறாமையாக இருக்கும். அது ஒரு திறமைதான். அதிலும் எந்தத் தயக்கமோ, தயவு தாட்சண்யமோ இன்றிப் பக்கத்திலிருப்பவர் தோள்மீது சாய்ந்து தூங்குவதென்பது ஒரு வரம். வரம் அபூர்வமாகவே கிடைக்குமாயினும், நம்மிடையே ஏராளமான அபூர்வப் பிறவிகள் இருக்கிறார்கள் என்பதை அனுபவத்தில் உணர்ந்துகொள்ள முடிகிறது.

திருகோண மலையிலிருந்து யாழ் செல்ல வேண்டியிருந்தது. அதற்குச் சொகுசுப் பேரூந்து ஏதுமில்லாததால் சோகத்துடன் அமர்ந்துகொண்டேன். இரவு பத்து மணி. இருக்கைகள் அனைத்தும் பயணிகளால் நிறைக்கப்பட்டு புறப்பட்டது. எந்த மேலதிக வசதிகளும் இல்லாத ஒரேயொரு பேரூந்துதான் அந்த நேரத்திற்கு! சரிந்து அமரவும் முடியாத இருக்கைகள்.  அதுவும் வழமைபோல இல்லாமல் ஒருபக்கத்தில் இரண்டு, மற்றையதில் மூன்று பேர் அமரும்படியான இருக்கை அமைப்பு வேறு!  எனக்கருகில் ஓர் நடுத்தரவயது மனிதர், அடுத்து அவர் மனைவி. அங்கிள் சிநேகமாகப் புன்னகைத்து, தன்னைப்பற்றி, என்னைப்பற்றி அளவளாவிக் கொண்டார்.

அரைமணி நேரத்தில் ஆரம்பித்தது அவஸ்தை. அவர் தூங்க ஆரம்பித்தார். அதில் எனக்கொன்றும் பிரச்சினையில்லை. என்ன, என் தோள்மீது சாய்ந்து தூங்க அரம்பித்திருந்தார். நொந்துபோய் அமர்ந்திருந்தேன். ஆனாலும் அவர் மிகவும் நல்லவராக, நாகரீகமானவராக இருந்தார். அது கூடச் சில சமயங்களில் மற்றவர்களுக்குத் தொல்லையாக அமைந்துவிடுகிறது. தனது செயலுக்கு அவ்வப்போது மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அட! இவ்வளவு அவஸ்தையையும் சமாளித்து லேசாகத் தூங்க ஆரம்பித்த என்னை தட்டி எழுப்பி ஒருமுறை சொறி தம்பி சொன்னார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!


வ்வொரு பயணங்களும் விதவிதமான அனுபவங்களைக் கொடுக்கின்றன. ஒரு நெடுந்தூரப் பயணம் கொடுக்கும் கலவையான அனுபவங்கள் அலாதியானவை. 

இடைவிடாது பேசிக்கொண்டே வரும் சக பிரயாணி, அபூர்வமாக வாய்க்கும் ஒத்த ரசனை கொண்ட தற்காலிக நண்பர், தவறுதலாக இருக்கை மாறி அமர்ந்து அதுபற்றி உணராமலே 'நியாயம்' பேசுபவர்கள், தூக்கம் வரும்வரை நாட்டு நிலைமை பற்றித் தீவிரமாகக் கவலைப்படுவோர், உழைக்கும் வர்க்கத்தின் மீதான சுரண்டல் பற்றிக் கவலைப்பட்டுவிட்டு, சத்தமாகக் குறட்டைவிட்டுத் தூங்கி அடுத்தவர் தூக்கத்தைச் சுரண்டுபவர்கள், பக்கத்திலிருப்பவர் தோள்மீது சாய்ந்து உறங்கும் 'தனிமனித சுதந்திர ஆர்வலர்கள்' , எப்போதும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே, எப்போது வாந்தி எடுப்பாரோ எனக்கிலியை ஏற்படுத்தும் பயங்கரவாதிகள் எனப்பல சுவாரஷ்யமான மனிதர்களை சந்திக்க வைக்கின்றன. இனிமையான தருணங்கள். இமசையான அனுபவங்கள் எனக் கொட்டிக் கிடக்கின்றன. ஓர் தேர்ந்த எழுத்தாளனுக்கு ஒவ்வொரு பயணமும் ஒரு சிறுகதைக்கான  கருவினைக் கொண்டிருக்கின்றன.

ஒரு நெடுந்தூரப் பேருந்துப் பயணத்தின் போது மனம் தனது பயணத்தைத் தனியாக ஆரம்பித்து விடுகிறது. மிக வேகமாக வருஷங்கள் கடந்து பின்னோக்கிச் சென்று விடுகிறது. அநேகமாகப் பால்யகாலத்துக்கு அழைத்துச் சென்று விடுகிறது. சின்னவயது முதல் வாழ்க்கையில் கடந்து சென்ற மனிதர்கள் பலரை நினைவு படுத்துகிறது. முதன்முதல் பயணித்த ஒரு நீண்ட பேரூந்துப் பயணத்தை, ரயில் பயணத்தை ஞாபகப் படுத்துகிறது. இழந்துவிட்ட உறவுகள், தவறவிட்ட சில தருணங்கள் என மனத்தைக் கனக்க வைத்துவிடுகின்றது. ஒரு நீண்ட பயணத்தினால் ஏற்படும் மிதமிஞ்சிய களைப்பு என்பது உண்மையில் மனத்தின் பாய்ச்சலால் ஏற்படுவதுதானோ?


சில பயணங்கள் ஒருவரின் வாழ்க்கைப் பாதையை மாற்றி விடலாம். அதுவே ஒரு வரலாற்று நாயகனை உருவாக்கலாம். ஏதோ ஒரு திட்டமிடலுடன் ஆரம்பித்த ஒரு பயணம், பிற்காலத்தில் சற்றும் எதிர்பார்க்காத ஒரு பெரிய மாற்றத்தை அவர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்துக்கே ஏற்படுத்தலாம். அப்படித்தான் 'எர்னஸ்ட்டோ குவேரா' என்ற இருபத்துமூன்று வயது இளைஞனும், அவரது நண்பரும் ஓர் உல்லாசப் பயணத்தைத் தொடங்குகிறார்கள். ஒரு பழைய மோட்டார் சைக்கிளில் ஐந்தாயிரம் மைல் தூரத்தை நாலரை மாதத்தில் கடப்பதாக திட்டமிடுகிறார்கள். உல்லாசம்,பொழுதுப்போக்கு மற்றும் முடிந்த வரை தம் இளமைக்குத் 'தீனி' போடுதல் என்பவற்றை மட்டும் நோக்கமாகக் கொண்ட அந்தப் பயணம் ஆரம்பிக்கப்படுகிறது. பயணம் படிப்படியாக அவர்கள் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. பெருவின் மச்சு பிச்சு (Machu Picchu) என்ற அழிக்கப்பட்ட Incan இனத்தின் வரலாற்றுப் பெருநகரம், வாழ்ந்து மறைந்துபோன அவ்வினம் அவர்கள் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த உலகத்துக்கு ஓர் 'சே குவேரா!' கிடைத்தார். The Motorcycle diaries (2004) என்கிற Argentina திரைப்படம் இதுபற்றி விரிவாகப் பேசுகிறது.


திடீரென வாய்க்கும் திட்டமிடப்படாத பயணங்கள் வாழ்வு முழுமைக்கும் மறக்க முடியாதவையாக அமைந்துவிடுகின்றன.அது எம்போன்றவர்களுக்கு புதிதல்லவே! அப்படியான என் முதல்பயணம் ஏதுமறியாத சின்னஞ்சிறு வயதில் ஏற்பட்டது. தூக்கத்திலிருந்து திடீரென கலைக்கப்பட்ட அந்த அதிகாலைப் பொழுதில், அம்மாவின் பதற்றம் நிறைந்த முகம் கலங்கலாகத் தெரிந்தது. என்னைத் தோளில் அள்ளிப்  போட்டுக் கொண்டு வேகமாக நடந்ததும், அயலவர், சொந்தங்களையும் அதே போல கண்டேன். எங்க போறம்?”,  “இண்டைக்கு ஸ்கூல் இல்லையா?” போன்ற என் கேள்விகளுக்கு யாரும் பதில் சொல்லவில்லை. என் பள்ளித் தோழர்கள், தோழிகள் சிலரையும் பார்த்தபோது உண்டான உறசாகமும், மகிழ்ச்சியும் மெல்ல மெல்ல வடிந்து போனது. வழமைக்கு மாறான சத்தங்களுடன் ஆரம்பித்த அந்த விடிகாலைப் பொழுது, வழமைக்கு மாறான விபரீதமான நாளொன்றின் ஆரம்பமாக இருந்தது. பின்பு அதுவே வழமையாகிப் போன ஒரு நெடிய பயணத்தின் ஆரம்ப நாளாக இருந்தது பின்நாட்களில் புரிந்துபோனது.


டம்பெயர்வு என்பது ஒரு விரும்பாத பயணம். அது கொடுக்கும் அனுபவங்கள் நம்மில் பலருக்கும் வாய்த்திருக்கிறது. அந்த அனுபவங்களை, அதன் தாக்கங்களை அன்றாட வாழ்வில் கண்டு கொள்ள முடிகிறது. பொதுவாக யாழ்ப்பாணத்தில் இருந்த காலப்பகுதியில் ஒரு தொலைக்காட்சியோ அல்லது வேறு எந்த உபகரணங்களோ வாங்கினால் அது அடைக்கப்பட்டு வந்த பெட்டியை யாரும் எறிந்துவிட  விரும்புவதில்லை. "எப்பவாவது தேவைப்பட்டிச்செண்டா..." என்று இழுப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். அந்தத் தேவை என்னவென்பதை சிலர் வெளிப்படையாகவே "தச்சமயம் ஓட வேண்டி வந்தாலும்..." நேரடியாகவே கூறுவார்கள். யாழ்ப்பாணத்திலாவது பரவாயில்லை. கொழும்பு வந்த பிறகும் அதுவே தொடர்கிறது. வாடகை வீட்டிலிருந்து இன்னோர் வாடகை வீட்டுக்கான பயணத்தின்போது உதவினாலும் அடிப்படையில் "எப்பவாவது ஓட வேண்டி வரும்" என்பது மனதில் ஆழப்பதிந்துவிட்டது. அது மாறுவதாகவும் தெரியவில்லை.

சில பயணங்கள் வாழ்வு முழுமைக்கும் மறக்க முடியாத அனுபவங்களைக் கொடுத்துவிடுகிறன. சில அதுவரை சந்தித்திராத, அறிமுகமில்லாத மனிதர்களின் அன்பினை உணர வைத்துவிடுகின்றன. சில நம் கூடவே இருக்கும் மனிதர்களின் அதுவரை பார்க்காத வேறுபட்ட முகங்களை இனங்காட்டிச் செல்கிறன. ஒரே இன மக்களின், ஒரே பிரதேச மனிதர்களின் மக்களின் மாறுபட்ட குணவியல்புகளைச் சொல்கின்றன. ஒரு குறுந்தூரத்திற்கான நெடிய பயணம் அது. ஐந்து கிலோமீட்டருக்கும்  குறைவான தூரத்தைக் கடக்க பன்னிரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் நகர்ந்து சென்ற அந்த ஒரே ஒரு பயணமே பலருக்கு வாழ்வை உணர்ந்துகொள்ளப் போதுமானதாக இருக்கிறது. எவ்வளவு பேரானாலும் இன்முகம் காட்டி வரவேற்று, ஆதரவளித்த சக மனிதர்கள் பலரையும், தாகத்துக்கு நீர் கொடுக்க மறுத்த சில 'நல்ல' மனிதர்களையும் அறிமுகம் செய்து வைத்தது.


வாழ்க்கை ஓர் பெரும்பயணம். அது சிலசமயம் தெளிந்த நீரோடையில் அமைதியாக பயணிக்கும் அழகிய படகு போல செல்கிறது. சிலவேளைகளில் காட்டாற்று வெள்ளம்போல் அலைக்களித்துச் செல்கிறது. மேலும் சில புயலில் அகப்பட்டுக் கொண்ட படகுபோல் இடம்தெரியாமல் தொலைந்துபோகிறது!  ஏதோ ஓர் இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கி எப்போதும் பயணப்பட்டுக் கொண்டேயிருக்கிறோம். சிலர் இலக்கை அடைகிறார்கள். சிலர் திசை மாறி விடுகிறார்கள். சிலர் பாதியிலேயே தொலைந்து போகிறார்கள். இனி எதுவும் செய்வதற்கில்லை என்ற நிலையில் வாழ்வை அதன் போக்கிலேயே வாழ்ந்து வருபவர்கள் பலர்.

வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு கனவோடு பயணிப்பவர்கள் இருக்கிறார்கள். ஏராளமானோர் ஒரே கனவை இலக்காகக் கொண்டு வெவேறு பாதைகளில் பயணித்திருக்கிறார்கள். கனவுகளுடனேயே வாழ்ந்து, அதற்காகவே வாழ்ந்து, எதுவும் நிறைவேறாமல் அந்தக் கனவுகளோடும் , ஏக்கங்களோடுமே தொலைந்தும் போயிருக்கிறார்கள். சக பயணிகளாலும் தொலைந்து போயிருக்கிறார்கள். ஒரு தலைமுறையின் நிறைவு பெறாத பயணத்தை அடுத்த தலைமுறையும் தொடரலாம்.


கனவுகளைச் சுமந்துகொண்டு, நிஜங்களை சகித்துக் கொண்டு, நிம்மதியைத் தேடி, வெற்றியைத் தேடி, அங்கீகாரத்தைத் தேடி, அடையாளங்களை நிறுவிக் கொள்வதற்கு வாய்ப்புகளைத் தேடி, அமைதியைத் தேடி, பாதுகாப்பைத் தேடி வாழ்வின் இறுதிவரை பயணம் தொடர்கிறது. திசை மாறலாம், குறிக்கோளை அடையமுடியாது போகலாம், பாதியில் தொலைந்து போகலாம். எனினும் நம்பிக்கையுடன் பயணிப்போம்!

( 'வானம் தாண்டிய சிறகுகள்' என்ற தொடருக்காக பத்திரிகை ஒன்றில் எழுதியது. )

4 comments:

 1. பயணங்கள் எப்போதும் ரம்மியமானவை புதிய புதிய அனுபவங்களை தந்து கொண்டே இருக்கும்.. வாழ்க்கை பயணம் மட்டும் கட்டா பூல ஓடி கொண்டிருக்கிறது . சின்ன வயதில் இடம் பெயர்வு என்றால் ஜ
  குதூகலம் தான் .

  ReplyDelete
 2. வணக்கம்,ஜீ!அருமை!!பயணங்கள் முடிவதில்லை.உயிர் காக்க மன்னாரிலிருந்து................................ஓடிய உயிர்கள் எத்தனை,எத்தனை?ஹூம்!

  ReplyDelete
 3. அருமை ஜி...
  பயணங்கள் சுகானுபானமானவை...
  பயணங்கள் முடிவதில்லை...

  ReplyDelete
 4. எங்களைப் போன்றவர்களிற்குப் பயணத்தின் அனுபவங்கள் எப்போதும் கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. என்னுடைய ஒவ்வொரு பயணத்தையும் முக்கியமாகக் கருதுகிறேன். அது எங்களுடைய வாழ்க்கையின் ஏதோவொரு அங்கத்தில் இணைப்பாய் இருக்கிறது. ஜீ அருமையான பதிவு.

  ReplyDelete

Followers

Powered by Blogger.

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |