Tuesday, July 17, 2012

The Willow Tree (2005)



கண்ணாடிச்சுவரில் தெரியும் தன் விம்பத்தைக் காணும் யூசுப் உற்சாகம் வடிந்து, அருகில் சென்று பார்க்கிறார். சிறுவயதில் பார்த்த தன் முகத்தை முப்பத்தெட்டு வருடங்களுக்குப் பின் பார்த்ததும், ஏமாற்றத்தில், அதிர்ச்சியில், அமைதியாகி விடுகிறார்.

பல ஆண்டுகளாகப் பார்வையிழந்து, அதுவே இயல்பாக வாழ்ந்து  பழகியிருந்த ஒருவர் மீண்டும் பார்வையைப் பெறும்போது ஏற்படும் உணர்வுகள், மகிழ்ச்சி அளவிட முடியாதது! ஆனால் இந்தப் புதிய வாழ்க்கையில் என்னென்ன மனச்சிக்கல்கள், பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்? இதுபற்றி வேறு எந்தப் படத்திலாவது சொல்லப்பட்டிருக்கிறதா எனத் தெரியவில்லை!

சிறு வயதில் பார்வையை இழந்த யூசுப் தனது தடைகளைக் கடந்த முயற்சியினால் படித்து, கல்லூரிப் பேராசிரியராக இருப்பவர். அன்பான மனைவி, அழகான சின்ன மகள் என மகிழ்ச்சியாக இருக்கும்  யூசுப் தனது பார்வையை மீண்டும் பெறவேண்டும் தன் பிரிய உலகைப் பார்க்கவேண்டும் என்ற என்ற நியாயமான ஆசை, வேண்டுதலுடன் வாழ்பவர். அவருக்குப் பார்வை திரும்பக் கிடைப்பதற்கான சாத்தியம் இருக்கிறது என சிகிச்சைக்காக பிரான்சுக்குப் பயணமாகிறார்.

தனிமையில் தனது மகள் பாடி ஒளிப்பதிவு செய்து கொடுத்த காசெட்டை திரும்பத் திரும்பக் கேட்டு மகிழ்கிறார் யூசுப். காசெட் சிக்கிக் கொள்ள அதைச் சரிப்படுத்திக் கொடுக்கிறார் புதிதாக அறிமுகமாகும் நண்பரொருவர். இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, சிறுவயதில் தனது பார்வையற்றோர் பள்ளிக்கூடத்தில் வழங்கப்பட்ட வில்லோ மரத்தைப் பற்றிக் கூறுகிறார்.  'நாங்கள் இருவரும் இருவரும் இணைந்தே வளர்ந்தோம்' என்று கூறும் யூசுப் அது தனக்கு என்றும் அதிருஷ்டத்தைக் கொடுக்கிறது எனக்கூறுகிறார். நம்புகிறார். 'அருகில் எங்காவது இருக்கிறதா?' எனக் கேட்க இருவரும் நடந்து செல்கிறார்கள். ஒரு வில்லோ மரத்தடியில் நின்று யூசுப், புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

இழந்த பார்வையை யூசுப் மீண்டும் பெறுகிறார். அவர் நினைத்தது போலவே நிம்மதியை, மகிழ்ச்சியை அடைந்தாரா என்பதைப் பற்றிச் சொல்கிறது படம்.


சிகிச்சை முடிந்து பெரும் எதிர்பார்ப்பு, குழப்பத்துடன் இருக்கும் யூசுப், கட்டுக்களைப் பிரிப்பதற்கு முதல்நாளே தாங்க முடியாத ஆர்வத்தில் சற்றுத்தளர்த்தி கண்தெரிகிறதா என திருட்டுத்தனமாகப் பார்க்கிறார். இரையைக் காவிச் செல்லும் எறும்பு ஒன்றைக் காணும் அவர், மிகுந்த குதூகலத்துடன் கட்டுக்களைப் பிரித்தெறிந்து விட்டு ஒரு குழந்தை போலக் குதித்துக் குதித்து நடக்கிறார். கண்ணாடிச்சுவரில் தெரியும் தன் விம்பத்தைக் காணும் யூசுப் உற்சாகம் வடிந்து, அருகில் சென்று பார்க்கிறார். சிறுவயதில் பார்த்த தன் முகத்தை முப்பத்தெட்டு வருடங்களுக்குப் பின் பார்த்ததும், அந்த ஏமாற்றத்தில், அதிர்ச்சியில், அமைதியாகி விடுகிறார்.

பார்வையில்லாதிருந்தபோது தனியாக நடமாடித்திரிந்த யூசுப்புக்கு பார்வை கிடைத்ததும், தனது வீட்டிற்கு வழி தெரியவில்லை. வீதியில் மேடுபள்ளங்களில் தடுமாறி நடக்கிறார். ட்ரெயினில் பிக்பாக்கெட் அடிக்கும் ஒருவனை ஆச்சரியத்துடன், அதிர்ச்சியுடன் பார்க்கிறார். உலகம் அவர் நினைத்தற்கு மாறாக, இதற்கெல்லாம தான் முற்றிலும் புதியவராக, சம்பந்தப்படதவர் போல உணர்கிறார். இதுவரை தான் வாழ்ந்த வாழ்க்கையில் தான் எந்த விதத்திலும் சம்பந்தப்படாதது போலவும், வாழ்வின் முக்கிய பகுதியை இழந்துவிட்டோம் என்றும் கவலை கொள் கிறார் யூசுப்.

தன் வாழ்க்கையைத் தானே வாழ வேண்டும் என்று நினைக்கும் யூசுப், மனைவி பிள்ளைகளைப் பிரிந்து, தாயும் மனதளவில் விலகி நோயாளியாகிவிடும் நேரத்தில் பிரான்சில் சந்தித்த நண்பரின் கடிதம் வந்து சேர்கிறது அதில், "திரும்பக் கிடைத்த பார்வை உங்களுக்கு உண்மையில் மகிழ்ச்சியைக் கொடுக்கிறதா?, அந்த வில்லோ மரத்தைப் பார்த்தீர்களா?" என்றிருக்கிறது! கூடவே பிரான்சில் அவர் அதிருஷ்டத்தைக் கொடுப்பதாக நம்பும் வில்லோ மரத்தின்கீழ் எடுத்துக் கொண்ட புகைப்படமும்!


பார்வை பெற்று பிரான்சிலிருந்து தாயகம் திரும்பும்போது விமான நிலையத்தில் அவரை வரவேற்க அவரின் மாணவர்கள், உறவினர்கள், நண்பர்கள் எனப் பெருந்திரளானோர். முதலில் தான் சிறுவயதில் பார்த்த தாயை அங்கிருக்கும் இளம்பெண்களில் தேடுகிறார் யூசுப். எல்லோரும் மகிழ்ச்சியாரவாரத்துடன் இருக்க, சிறுபுன்னகையுடன் கண்கலங்கும் தன் முதிய தாயை அடையாளம் கண்டுகொள்ளும் யூசுப்,  உணர்ச்சிப் பெருக்கில் பேச முடியாமல் தவிக்கும் காட்சி மிக அருமையானது! அவரது தாயார் மனைவியை அடையாளம் காட்ட, கண்களில் ஒரு சிறிய ஏமாற்றம், தன் சின்ன மகளைக் கண்டதும் பார்வையில் அப்படியொரு கனிவு! - இவையெல்லாம் நடிப்பு என்றால் என்ன என்பது பற்றிச் சொல்கிறது.

மிக அருமையான பின்னணி இசை. மருத்துவமனையிருந்து விமான நிலையம் செல்லும் காட்சியிலும், குறிப்பாக அம்மாவைச் சந்திக்கும்போதும் ஒலிக்கும் இசை!

ஈரானின் கடுமையான சட்டவிதிகளுக்கு அமைவாகவும், அதேவேளையில் ஒரு படைப்பாளியாக தனது நேர்மையையும் விட்டுக் கொடுக்காமல் நல்ல படைப்புக்களையே வழங்கும் Majid Majidi யின் அற்புதமான படைப்பு!

மொழி : Persian
ஆண்டு : 2005

Majid Majidi யின் ஏனைய...

9 comments:

  1. யூசுப் “தன்னுடைய எண்ணங்களின் வழி சிருஷ்டித்து வைத்திருக்கிற உலகம் நிஜத்துக்கு வெகு தொலைவில் இருக்கிறது“ என்பதனை உணரும் இடங்கள் ஏமாற்றத்தை மட்டுமே வழங்கியிருக்கும்.

    பார்வையற்ற ஒருவர் தன்னுடைய அரைவாசி வாழ்க்கை காலத்தை அதுவும், வாழ்க்கையின் முக்கிய காணங்களையெல்லாம் தன்னுடைய எண்ணங்களின் வழி மட்டுமே உருவகப்படுத்தி வந்திருப்பார். அப்படியிருக்கிற போது அவரின் ஏமாற்றங்களில் நியாயங்கள் இருக்கும். ஆனாலும், அந்த “நியாயம்“ நிஜத்துக்கு வெகு தொலைவிலேயே இருக்கிறது.

    சந்தர்ப்பம் கிடைத்தால் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  2. தல ... உங்களுக்கு எப்படித் தான் இந்த மாதிரி நல்ல படங்கள் எல்லாம் மாட்டுதோ? இன்னும் இவரின் Children of Heaven பார்க்கல. சந்தர்ப்பம் கிடைத்தால் இரண்டையும் டவுன்லோட் செய்து பார்க்கணும். :)

    ReplyDelete
  3. //இதுபற்றி வேறு எந்தப் படத்திலாவது சொல்லப்பட்டிருக்கிறதா எனத் தெரியவில்லை!//

    அப்ப நம்ம பேரழகன் படத்துல சொன்ன மேட்டர் இது இல்லையா? :))

    ReplyDelete
  4. காது கேக்காம இருக்கற ஒருத்தருக்கு hearing aid மாட்டினதும் அவரின் மனநிலைகளை ஒரு short film ஆக நண்பர்கள் நாங்கள் எடுத்தோம்.. பெரிய தொழில்நுட்ப அறிவெல்லாம் இல்லாததால் கல்லூரி அளவிலேயே இரண்டாம் பரிசுதான் கிடைத்தது... அந்த shotfilmஐ தாங்கி நின்றதே அதன் ஹீரோதான்.. அப்படி ஒரு நடிப்பு...(தெரிஞ்சிருக்குமே அவர் யாருன்னு..ஹி ஹி...)

    ReplyDelete
  5. மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கும் என்று நினைக்கிறேன். கண்டிப்பாக பார்க்கிறேன். நன்றி நண்பரே

    ReplyDelete
  6. இதெல்லாம் கட்டாயம் பார்ப்பேன் என்று கூறமாட்டேன் பாஸ் :)
    எத்தனையோ பட விமர்சனம் எழுதின நீங்க இப்போ அடுத்த கட்டத்துக்கு பாய வேண்டிய தருணம் வந்திரிச்சு..
    உங்ககிட்ட இருந்து "அந்தமாதிரியான"(ஐ மீன் சூப்பர் :P)விமர்சனங்களை எதிர்பாக்கிறோம்..
    எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு :)

    ReplyDelete
  7. உங்களின் விமர்சனம் படம் பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறது...

    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

    என் தளத்தில் : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

    ReplyDelete