Wednesday, July 11, 2012

இணையப் போராளி ஜீ..



ணையப் போராளி ஜீ தீவிர சிந்தனையிலிருந்தான்!

இப்போதெல்லாம் எதற்கு எழுதவேண்டும் என்றொரு கேள்வி அவன் மனதில் அடிக்கடி எழுகிறது! இதே கேள்வி மற்றவர்களிடம் எப்போதோ எழுந்தது வேறு விஷயம் 'இவனெல்லாம் எதுக்கு எழுதுறான்?'

எந்த ஒரு சீரியசான விஷயத்தையும் எள்ளலாக, நக்கலாக கூறிச் செல்லலாம் என முட்டாள்தனமாக நம்பியதால் ஒரு மொக்கைப் போராளியாக பெயர் வாங்கியிருந்தான்! அதெல்லாம் செல்லாது சமூக அக்கறை என்பது ஏ சமூகமே எனக் கேள்வி கேட்பது, உணர்ச்சியுடன் பொங்குவது, விழிப்புணர்ச்சி வழங்குவது மட்டுமே என்கிறார்கள் சமூக போராளிகள்! 

மொக்கை எனத் தலைப்பிடப்படுவது எப்போதும் வெறும் மொக்கையாகத்தான் இருக்கும் என்றும், சீரியஸாக எழுதப்படுவது வாசிக்கும்போது 'கெக்கே பிக்கே' எனச் சிரிப்பு வந்தாலும் அது சீரியஸ் என்றே கொள்ளவேண்டும் என்பதும், நகைச்சுவை எனில் அழுகை வந்தாலும் எப்பாடுபட்டேனும் சிரித்தேயாக வேண்டும் எனவும் லேட்டாகப் புரிந்து நொந்து போயிருந்தான்.

அதுவும்தவிர 'என்னதான் கூகிள்காரன் இலவசமா ஒரு பிளாக் கொடுத்து எழுத அனுமதித்தாலும் இன்னும் எனக்கு இந்த அறச்சீற்றம், சமூக அக்கறை எதுவும் வரவில்லை ' என அவனே(!) ஒரு முறை கூறிக் கொண்டான். அதைப் பார்த்த பலரும் உடனே சீரியஸாக தங்கள் தீர்க்க தரிசனத்தை வியந்துகொண்டார்கள்.

ஆனாலும் சமீபகாலமாக ஒருவித எரிச்சலில், வெறுமையான மனநிலையில் இருந்தான். யாரிடமாவது 'ஒறண்டை' இழுக்கவேண்டும் என்ற எண்ணம் கூட அடிக்கடி தோன்றுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! சுற்றிலும் நிகழும் சம்பவங்கள் வயிற்றைப் பிசைவது, நெஞ்செரிவது போன்ற உணர்வுகளைக் கொடுக்கின்றன.

ஒருவேளை தனக்குள்ளும் சமூக அக்கறை, அறச்சீற்றம், தார்மீகக்கோபம் எல்லாம் பிரவகித்து விட்டதோ? அதன் அறிகுறிகள்தான் இவையோ? என்று ஓர் இன்பமான சந்தேகம் அவனுக்குத் தோன்றியது. அதெல்லாம் ஒன்றுமில்லை இது நிச்சயமாக கேஸ்ட்ரிக்தான் - என்கிறார் திருகோணமலை சீ வியூ வீதியிலிருக்கும் டாக்டர் ஜான்சன்!

இன்றைய அவனது உபாதைக்குக் காரணம் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி ரத்து! மற்றபடி நேற்றிரவு அகால வேலையில் சாப்பிட்ட பிட்சா என நீங்கள் நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல! நிகழ்ச்சிக்குப் போகும் எண்ணம் அவனுக்கு இருந்திருக்கவில்லை. உண்மையைச் சொன்னால் ஹரிஹரன் வருவதுகூட ரத்து செய்யும்வரை அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் இதையெல்லாம் வெளியில் சொல்லுவது போராட்ட விதிமுறைகளுக்கு முரணானது இல்லையா?

ஜீயிற்கு அரசியல் அறிவு பூஜ்ஜியமாக இருந்தாலும் அவ்வப்போது அரைவேக்காட்டுத்தனமாக எதையாவது யோசிப்பது வழக்கம்! ஆனாலும் இது விஷயமாக அவனுக்கு எதுவும் புரியவில்லை! அதுதான் எரிச்சலுக்குக் காரணம்!

ஸ்கைப்பில் ஆனந்து மாமா அழைத்ததில் சிந்தனை கலைந்தது...

ஆனந்து மாமா - தீவிர அரசியல் பேசுபவர். தவிர ஒரு இராணுவ ஆய்வாளராக செயற்படும் தகைமையும் கொண்டிருப்பவர். யாழ் கோட்டையில் இராணுவம் கொடியேற்றியபோது வன்னி வீட்டில் ஆனந்துமாமா ஆற்றிய உரையை மறக்கமுடியாது. "ஆமியால கே.கே.எஸ் ரோட்டாலையோ, பலாலி ரோட்டாலையோ நேரடியா வந்து பிடிக்க முடிஞ்சுதா? தலையைச் சுத்தி மூக்கைத் தொட்ட கணக்கா சுத்தி வந்து பிடிச்சிட்டு வெற்றி எண்டு சொல்லுறது சேர்ப்பில்லை!" 

"எப்பிடி இருக்கு அங்க? ஹரிஹரன் நிகழ்ச்சி கான்சலாம்...மகிந்தருக்கு சரியான நோஸ்கட்! - ஆரம்பித்தார் ஆ.மா.
"எப்பிடி சொல்றீங்க?"

"எங்கட சனம் நிகழ்ச்சிக்குப் போய் ஆடிப் பாட அதைப் படம்பிடிச்சு தமிழ்சனம் சந்தோஷமா இருக்கெண்டு பிரச்சாரம் செய்யத்தானே உதெல்லாம்..இப்ப?"

"இப்ப அந்தப்பிரச்சாரத்தை முறியடிச்சு கொழும்பில மக்கள் அழுது கொண்டிருக்கிறதை உலகத்துக்கு காட்டியாச்சு எண்டுறீங்க?"

"நீர் என்ன சொல்ல வாறீர்?அரசாங்கம் பிரச்சாரம் செய்யிறது சரி எண்டுறீரோ?"

"அரசாங்கம் செய்யிறத சத்தமில்லாம செய்யுது! நேர யாழ்ப்பாணம் கூட்டிபோய் நிகழ்ச்சிய நடத்துறாங்க. சங்கர் மகாதேவன் வந்து போனது எத்தன பேருக்குத் தெரியுமோ? பணத்துக்காக விளம்பரம் செய்யும்போதுதான் வெளில தெரிஞ்சு எதிர்ப்பு கிளம்புது! அதுவும் அப்பப்ப!" 

"அது சரி யாழ்ப்பாண மக்களின்ர போராட்ட உணர்வை மழுங்கடிக்கிற வேலையை அரசாங்கம் எப்பவோ திட்டமிட்டு மேற்கொண்டு.." - ஆ.மா. இப்போது ஒரு பேச்சாளர் போலவே ஆரம்பித்தார்.

"ஆமா அங்க எல்லாரும் போராட்ட சிந்தனையாவே இருக்காங்க இவங்க மழுங்கடிக்க ட்ரை பண்றாங்க  சும்மா காமெடி பண்ணாதீங்க மாம்ஸ்!"

"தம்பி உந்த நக்கல எல்லாம் விடும் ஐசே! எங்கட சனம் கரண்ட், சினிமா,  என்டர்டெயின்மென்ட் கண்ட உடனே எல்லாத்தையும் மறந்திட்டுது"

"எல்லாம் ஆரம்பிக்கும்போதே நீங்க சொல்ற எல்லா என்டர்டெயின்மென்ட்டும் இருந்ததுதானே? அப்பிடீன்னா கரண்டைக் கட் பண்ணி, பழையபடி மண்ணெண்னை விளக்க எரியவிட்டா உணர்வு வந்துடுமா? என்னமோ லைட் அணைச்சாத்தான் மூட் வரும்கிறமாதிரி.."    

"சனம் பழசை எல்லாம் மறந்துபோச்சு! அதுதான் தமிழனுக்கு இந்த நிலை வரலாறை மறந்து வாழுறவங்கள் எப்பிடி உருப்படுவாங்கள்?" - ஆ.மா. ஏழாம் அறிவு பார்த்ததிலிருந்து ஒரு மார்க்கமாகப் பேச ஆரம்பித்திருந்தார்.  படம் பார்த்து வரலாறு கற்றுகொள்வது தப்பா என்ன!

"போற போக்கைப் பார்த்தா  மகிந்தவுக்கு  தெரியாமத்தான் சிரிக்கவே  வேணும் போலருக்கு!நாங்கள் மகிழ்ச்சியாயிருப்பது எங்கே மகிந்தவுக்கு வெற்றியாகிடுமோன்னு நினைக்கும்போதுதான்..." நாடக பாணியில் பேசி, "கடைசில தமிழர்களும் மகிந்தவும் குணா கமலும் அபிராமியும்போல ஆகிட்டாங்க. சீனாக்காரனுக்கே கராத்தே கற்றுக் கொடுத்த தமிழனின் நிலையைப் பார்த்தீங்களா மாம்ஸ்?" - ஜீ உருக்கமாகக் கேட்டான். 

சற்றுக் காண்டாகிப் போன ஆ.மா."சுரணையில்லாத சனம். திரும்பவும் அடிச்சாத்தான் புத்தி வரும்!"

"நாங்க சேபா இருந்துகொண்டு அவனுக்கு அடிக்கவேணும். புத்திவரவேணும் சொல்றது,யாழ்ப்பாணச் சனம் கொழும்புச் சனத்துக்கு நல்ல அடி விழவேணும்னு யோசிக்கிறது இதெல்லாம் புதுசா என்ன? ஆனா பாவம் கஷ்டப்படுறவன் தொடர்ந்து கஷ்டப்படுறான். அவங்களைப் பற்றி யாரும் கவலைப்படுறதா தெரியல! நியாயமாப் பார்த்தா இந்த நிகழ்ச்சிய எல்லாம் வன்னிலதான் நடத்தணும்"

"என்ன தம்பி விளையாடுறீரே? அவங்களையும் உங்கள மாதிரி கெடுக்க ஐடியாவோ அங்கதான் எங்கட போராட்ட உணர்வுகள் இன்னும் நீர்த்துப் போகாம இருக்கு!"

"இப்பிடி உசுப்பேத்தியே இன்னும் அடிவாங்கிக் குடுங்க.அங்க இருக்கிறவனுக்கு என்னென்ன பிரச்சினைன்னு யாருக்கும் சரியாத் தெரியாது. அரசாங்கத்துக் கெதிரா நடக்கிற ஒவ்வொரு விஷயமும் அவங்களைத்தான் ஒவ்வொருமுறையும் பாதிக்குது! எத்தின பேர் டிப்ரெஷன்ல இருக்காங்க தெரியுமா? சைக்காலஜிக்கலா எவ்வளவு பிரச்சினை? உண்மைல அவங்களுக்குத்தான் ரிலீப் தேவை"

"அவங்களைப்பற்றி யாருமே  உண்மையா கவலைப்படுறதில்லை!அடிவாங்கிறதுக்கும், அய்யய்யோ அடிச்சிடாங்களேன்னு நாங்க அனுதாபம் காட்ட, கூப்பாடு போட எப்பவும் எங்களுக்கு அவங்க தேவை! இப்போ நீங்க அவங்களை அப்படியே வச்சிருக்கிறதுதான் சரீங்கிற மாதிரியே பேசுறீங்க! இந்த விஷயத்தில் அரசாங்கமும் உங்களோட ஒத்துப் போகுது!"

"நாங்கள் உசுப்பேத்தி விடுறமெண்டு சொல்றீர்?எங்களுக்கு அக்கறை இல்லையா?நாங்கள் தான் அவங்களுக்காண்டி ஆர்ப்பாட்டம் செய்து, சர்வதேசத்தை திரும்பிப் பார்க்க.."

"உண்மையிலேயே அவங்களுக்காகத்தான் செய்தீங்களா? அவ்வளவு நாளா சும்மா இருந்துட்டு திடீர்னு உங்களுக்குப் பாசம் பொங்கினது...  அதுவும்  நீங்க புலிகளால ஆபத்துன்னு பி.ஆர் வாங்கிட்டு, பிறகு அவங்களுக்கு ஆதரவா..."

"அது இப்ப தேவையில்லாத  கதை... நீர் இவ்வளவு கதைக்கிறீர்? கடைசி நேரத்தில கொழும்பில இருந்து நீர் என்ன கிழிச்சனீர்?"

ஜீ தீவிரமாக யோசித்ததில்.... ஒரு கேவலமான பிளாஷ்பேக்! 

அப்போதெல்லாம் ஜீயும் நண்பர்கள் ஏழெட்டு பேரும் தினமும்  மாலை ஆறுமணி தொடங்கி வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்னால் கூடி அரட்டையடிப்பது வழக்கம். ஏழரைக்கு KFC அல்லது பிட்சாவில் இரவுணவு. பின்பு அரட்டை பதினோரு மணிவரை! தீவிர யுத்த ஆய்வும்(?!) உண்டு!

ஒருமுறை வங்கியின் ருத்ரா மாவத்தை பக்கமாக இருக்கும் படிக்கட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, ஆட்டோகாரர்கள் உள்ளிட்ட சிலர் தோரணம் கட்டிக் கொண்டிருந்தனர். யுத்தம் முடிந்துவிட்டது என இரண்டு நாளில் அறிவிப்பு வரப்போவது தெரியாமல் ஒருத்தன் சொன்னான், "கொஞ்ச நாள்ல செம்ம அடிவிழப்போகுது அது தெரியாம தோரணம் கட்டுறானுங்க"

சஞ்சு சொன்னான், "பாங்க் வாசல்ல இருக்கிறம். கமெரா இருக்கும் எல்லாம் ரெக்கார்ட் ஆகியிருக்கும்...வந்து பிடிக்கிறாங்களோ தெரியாது"

"டேய்...!!!"

மீண்டும் சஞ்சுவே அலட்டிக்காம சொன்னான், "பிடிச்சா கமெரா ஒழுங்கா வேலைசெய்யுதோன்னு டெஸ்ட் பண்ணத்தான் அப்பிடிக் கதைச்சனாங்கள்னு சொல்லுவேன்!"
*****
தையெல்லாம் ஆ.மாமாவிடம் சொல்லமுடியுமா?

"நாங்க எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை வெளிநாட்டில இருந்திருந்தா நாங்களும்..." அதைக் கவனிக்காமலே ஆ.மா. சொன்னார்

"உங்கள மாதிரி எதுவும் செய்யாம இருக்கிறதுக்கு எதையாவது செய்யிறது நல்லதுதானே!"
"எதையாவது செய்யிறத விட எதைச் செய்தா நல்லாயிருக்கும்னு தெரிஞ்சு.."

"உந்த விதண்டாவாதம் செய்யிற ஆக்களாலதான் இப்பிடியிருக்கிறம்... தம்பி நான் பிறகு கதைக்கிறன்....மானாட மயிலாட துவங்குது!"

ஜீ இப்போது கொதிப்புடன் இருந்தான். என்ன செய்யலாம்?

செல்பேசி அழைக்க, "சொல்லு மச்சான்"

மகிழ்ச்சியுடன் "அப்பிடியா? ஓக்கேடா!"

அடுத்த 'போராட்டம்' முடிவாகிவிட்டது!

கொன்கோர்ட் வாசல்ல...

'பில்லா 2' டிக்கட் கிடைச்சிருக்காம்!

"போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம்....ஆனால் போராட்டம் என்றும் தொடரும்

17 comments:

  1. என்னவொரு அறச்சீற்றம் பாஸ் உங்களுக்கு, யாரும் எதையும் செய்யாமல் இருந்தாலே போதும் ஜனங்களாவது நிம்மதியா இருக்கட்டும், உங்க பிளாஸ்பேக் போராட்டமும் சூப்பர்

    ReplyDelete
  2. :)
    என்ன சொல்றதேண்டு தெரியேல்லை... ம்ம்ம்ம்

    ReplyDelete
  3. உங்களின் பதிவுகளை சமீப சில வாரங்களாய்தான் வாசிக்கிறேன்.. இந்த ஒரு பதிவு ஆனா ரொம்ப ஸ்பெஷல்... முதல் சில பத்திகள் ஏதோ தன்னிலை விளக்கம் மாதிரி ஆரம்பிச்சுது.. ஆனா போக போக போக்கு புரிந்தது...நல்லாயிருந்தது...

    ReplyDelete
  4. "போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம்....ஆனால் போராட்டம் என்றும் தொடரும்"

    இந்த வரிகளே போதுமாக இருக்கிறது! வேறென்ன சொல்ல. நான் ஏதாவது சொல்லி என்னை கட்டிவைத்து உதைத்துவிடுவார்கள் போராட்ட காரர்கள்!

    ReplyDelete
  5. மரம் வளர்ப்பது யாரோ பயன் பெறுவது யாரோ என்ட மாதிரி இருக்கு...........

    மருதமூரானின் கருத்துக்களை நானும் வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  6. என்ன சொல்ல எனக்கும் தெரியல லோசன் அண்ணா போல!ம்ம்

    ReplyDelete
  7. நிதர்சன உண்மை :)

    ReplyDelete
  8. கடைசியாக ஒரு வரி சொல்லியிருக்கிறீர்களே ஜீ... அதுவே போதும்....

    சும்மா சங்குதிக் களைக்க நான் விரும்பவில்லை...

    ReplyDelete
  9. /கஷ்டப்படுறவன் தொடர்ந்து கஷ்டப்படுறான். அவங்களைப் பற்றி யாரும் கவலைப்படுறதா தெரியல!//


    ம்ம்ம்

    ReplyDelete
  10. சூப்பர் ஜீ. இன்னும் கொஞ்சம் தெளிவாவே சொல்லியிருக்கலாம்ன்னு தோணுது, இருந்தாலும் உங்க பாணியில நச்சுன்னு சொல்லியிருக்கீங்க...

    ReplyDelete
  11. "போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம்....ஆனால் போராட்டம் என்றும் தொடரும்" .....
    சரியாக கூற்றும் அதை விரிக்கும் பதிவும்..!

    ReplyDelete
  12. பில்லா டூ படம் டிக்கட் கிடைச்சா போதும்...எல்லாம் சரியாகிடும்!

    ReplyDelete
  13. போகாதீங்க..............
    சமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க நண்பரே..
    http://dohatalkies.blogspot.com/2012/07/2-doha-qatar.html
    நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்.
    அந்த bottle க்கு நன்றி.
    கிரேட் எஸ்கேப்.

    ReplyDelete
  14. அட்டகாசமான கதை சொல்லல்...ஆரம்ப இணையப் பகுதி இல்லாமலேயே கதை நன்றாகத் தானே உள்ளது தம்பீ?

    ReplyDelete