Wednesday, June 27, 2012

இந்திய அமைதிப்படையும் கேணல் ஜெயமோகனும்!எழுத்து எவ்வளவு வலிமையானது என்பதை நான் உணர்ந்துகொண்ட தருணம் அது! வார்த்தைகளில் விவரிக்க முடியாத உணர்வு. என்போலவே பலரும் அன்று முழுவதும் மன உளைச்சலுடன்,தூக்கம் தொலைந்து அவதிப்பட்டிருக்கலாம். இந்திய அமைதிப்படை குறித்த ஜெயமோகனின் கட்டுரை அது!


இந்திய அமைதிப்படை தமிழ்ப்பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது என்ற திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரம் தமிழ் நாட்டில் வெகுவாக முன்னெடுக்கப்பட்டது. அதுவே பின்னர் தமிழர்களுக்கு உண்மையிலேயே பேரழிவு வந்தபோது வழக்கமான மிகை, பொய்ப்பிரச்சாரம் என்றே அனைவரும் எடுத்துக்கொள்ளக் காரணமாக அமைந்தது - என்பதே அதன் சாராம்சம்.

பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் எதையும் கேட்டேயறியாத, யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய, ஒன்றுமே தெரியாத ஒரு நல்ல அதிகாரி இதுபற்றி ஜெயமோகனிடம் கேட்கிறார். எண்பது வயதுப் பாட்டியையும் தங்கள் சகாக்கள் விட்டு வைக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் தாங்கள் செய்த விசாரணை பற்றிக் கூறி, அப்படியெதுவுமே நடக்கவில்லை என உறுதிப்படுத்துகிறார் இன்னொரு அதிகாரி. அதுவரை சங்கடத்துடன் நான்கு மாதங்கள் வெளியிடாமல் வைத்திருந்த இந்தக் கடிதங்களை சரியாக மே-16 ஆம் திகதி வெளியிட்டிருந்தார் ஜெயமோகன்.

மேலும் இந்திய அமைதிப்படை குண்டுதேடும் சாக்கில் பெண்களை மரியாதையில்லாமல் சோதனை செய்கிறார்கள், முன்னறிவிப்பில்லாமல் வீடுகளுக்குள் நுழைந்து சோதனயிடுகிறார்கள் -  என்று அக்கால கட்டத்தில் எழுதப்பட்டிருந்த கட்டுரையைக் கூட ஜெமோ இப்போது மிகவும் கசப்புடன் ஒற்றைப்படையான வேகத்துடன் எழுதப்பட்ட கட்டுரை என நினைக்கிறாராம்.

"உலகிலுள்ள எல்லா இராணுவமும் ஒரே மாதிரியானதே" எனும் ஜெமோ, மனிதனின் கும்பல் மனநிலை பற்றிக்கூறி, இராணுவம் என்பது ஆயுதமேந்திய ஒரு கும்பலே எனத் தெளிவாகச் சொல்கிறார். ஆனாலும் இந்திய ராணுவம் மட்டும் அந்தக் கும்பல் மனநிலையை விட்டு காந்தீய வழியில் நடந்துகொண்டிருக்கும் என நம்பியது வேடிக்கையானதே!

இராணுவ நடவடிக்கையின்போது, ஒரு பிரதேசத்தை தாக்குதல் படையணி போரிட்டு, முன்னகர்ந்து கைப்பற்றும். புதிதாக ஒரு பிரதேசத்துக்குள் நுழையும் தாக்குதல் படையணியிடம் இருக்கும் மனிதநேயம், மூர்க்கம், ஆவேசம் எல்லாவற்றையும் அவர்கள் போரின்போது சந்தித்திருக்கும் எதிர்ப்புக்கள், இழப்புக்களே தீர்மானிக்கும்.கைப்பற்றிய இடத்தைத் தக்கவைக்க, கண்காணிப்பு, ரோந்து என்பவற்றிற்கு இன்னொரு படையணி. இந்த அணி அப்பிரதேச மக்களுடன் சுமுகமாக, நல்லுறவுகளைப் பேணும் வகையில் நடந்துகொள்ளும். அப்படியே அறிவுறுத்தப்படும் - ஆனால் திட்டமிட்ட இன அழிப்பை மேற்கொள்ளும் நோக்கம் இருக்கும் பட்சத்தில் இது மாறுபடலாம்!

யாழ்ப்பாணத்து மக்களைப் பொறுத்தவரை இலங்கை இராணுவத்தை விட மிக மோசமான அனுபவங்களைப் பெற்றது இந்திய ராணுவத்திடமிருந்தே. இதை இரண்டு சூழ்நிலைகளிலும் வாழ்ந்த யாரைக் கேட்டாலும் யோசிக்காமலே கூறிவிடுவார்கள். 1995  ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை இலங்கை படைகள் கைப்பற்றும்வரை அங்கிருந்த பெரும்பான்மையான மக்கள், ஒரு குறிப்பிட்ட இளைய தலைமுறையினர் சிங்கள இராணுவத்தினரை நேரில் பார்க்காதவர்களாகவே இருந்தனர். அதுவரை சந்தித்த உயிர் இழப்புகள், அவலங்கள் எல்லாமே விமானக் குண்டுவீச்சு, எறிகணைத் தாக்குதல்களாகவே இருந்தன.

இலங்கை இராணுவம் செய்த ஒரு படுகொலையை நேரில் பார்த்தவர்கள் மிகக் குறைவு! ஆனால் இந்திய இராணுவம் பற்றிச் சொல்வதற்கு அந்தக் காலப்பகுதியில் என்போலவே குழந்தைப் பருவத்திலிருந்தவர்களுக்கும், இளைஞர்கள், முதியவர்கள் என எல்லோரிடமும் ஒரு பயங்கரமான அனுபவம் இருந்தது.

சிங்கள இராணுவம் எப்போதுமே தமிழர்களுக்கு எதிரி. யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றினால், என்னவெல்லாம் நிகழுமோ என்ற மிதமிஞ்சிய அச்சஉணர்வு எல்லோரிடமும் இருந்தது. ஏற்கனவே இந்திய அமைதிப்படையிடம் பெற்ற அனுபவமும் இதை அதிகப்படுத்தியது! ஆனால் மக்கள் இராணுவத்தைச் சந்தித்தபோது அவர்கள் நடந்துகொண்டமுறையில், இராணுவம் குறித்த பயம் குறைந்து, படிப்படியாக அற்றுப்போனது. இதை நானும் அனுபவித்து உணர்ந்திருக்கிறேன்.

இந்திய அமைதிப்படை (IPKF - Indian Peace Keeping Force) தமிழர்களின் நண்பனாக, பாதுகாவலனாக வந்தது. அது ஒரு மதிய நேரம். வானில் தொடர்ச்சியாக இடி உறுமுவது போல ஒரு வித்தியாசமான அதுவரை கேட்டிராத ஒலி! யன்னல் கதவுகளின் கண்ணாடிகள் அதிர்ந்து கொண்டிருந்தன. சற்று நேரத்தில் தெரிந்தது இலங்கை வான் பிராந்தியத்தில் நுழைந்து, இந்திய விமானங்கள் உணவுப் பொதிகளை போட்டுச் சென்றது (ஒப்பரேசன் பூமாலை)

எங்கும் இதே பேச்சு. எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சி. எந்த ஆதரவுமின்றித் தவித்துப் போயிருந்த மக்களுக்கு புத்துணர்ச்சி கொண்டார்கள் எங்களுக்கு இந்தியா இருக்கு! யாரும் எதுவும் செய்ய முடியாதென்ற நம்பிக்கை. முதன்முதல் IPKF யாழ்ப்பாணம் வந்தபோது கொடுத்த வரவேற்பு அடைந்த ஆரவாரம் அப்படியிருந்தது. ஆனால் சில மாதங்களில் IPKF - Innocent People Killing Force ஆக மாறிப்போனது!

திடீரென ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது. எல்லோரும் வீடுகளை விட்டு பக்கத்திலுள்ள கோவிலுக்குப் போய்த்தங்கிக் கொள்ள வேண்டும். அந்த வீட்டிற்கு வருகிறது இந்திய ராணுவம். அன்றுதான் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்திருந்த மகனை நோக்கிச் சென்ற ஒரு இராணுவ வீரன் தன் கத்தியை அவன் நெச்சில் சொருகி அடிவயிறு வரை இழுக்கிறான். தாய், தந்தை, அண்ணன்கள், தங்கைகள் கதற அவர்கள் கண்முன்னால் துடித்து இறந்து போகிறான். உடலைக் கொண்டுசெல்லவோ, வீட்டில் வைக்கவோ அனுமதிக்கப்படவில்லை. வீட்டு முற்றத்திலேயே எரித்துவிட்டுக் கண்ணீருடன் சென்றது அந்தக்குடும்பம். சம்பவம் இடம்பெற்றபோது அயல் வீட்டிலிருந்தவர் இருபது வருடங்களுக்கு முன்னர் விவரித்தபோது அவர் குரலிலிருந்த துயரம் , நடுக்கம் இப்போதும் நினைவில்.

இதுபோல ஏராளம்! கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் தன் சிறுவயதில் உறவினரோடு பலரை ஒன்றாகச் சேர்த்துப் புதைத்ததை விவரித்த நண்பன். பிரம்படி, நாச்சிமார் கோவிலடியில் இடம்பெற்ற படுகொலைகள். வீதியில் வரிசையாகப் பலரைப் படுக்கவைத்து யுத்த டாங்கியினால் ஏற்றிக் கொல்லப்பட்டவர்களில் தந்தையை இழந்தவன் எனப் பலர். இப்படி எல்லோரிடமும் ஏதோவொரு அனுபவமாவது இருந்தது.

இதை நேரடியாக அனுபவித்தவர்கள் கூறும்போது, அந்த வலி, உணர்வு கலந்தே இருக்கும். இதுகூட ஜெமோவிற்கு மிகவும் கசப்புடன் ஒற்றைப்படையான வேகத்துடன் கூறப்படும் குற்றச்சாட்டாகத் தோன்றியிருக்கலாம்! இதற்குப் பின்னணியில் அரசியல் இருந்ததும், அதற்கு பெருமளவு இந்திய ராணுவம் பலிகொடுக்கப்பட்டதும் உண்மை! ஆனால் ராணுவம் செய்த கொடுமைகளை ஒரேயடியாக மறுதலித்து, அவையெல்லாம் பொய்ப்பிரச்சாரம் என்று திரித்ததில்தான் தெரிகிறது ஒரு எழுத்தாளனின் தேசபக்தி!

இந்திய அமைதிப்படையும் உலகிலுள்ள ஏனைய இராணுவங்கள் அந்நிய நாட்டில் எப்படி நடந்துகொள்ளுமோ அப்படியேதான் நடந்துகொண்டது! இவையெல்லாம் நடக்கவேயில்லை என்று கூறிய ஜெமோ இப்போது "நான் அமைதிப்படை அங்கே போர்க்கொடுமைகளைச் செய்யவில்லை என்று சொல்ல வரவில்லை. எந்த ராணுவமும் ஆக்கிரமிக்கும் மண்ணில் மட்டுமல்ல சொந்த மண்ணிலேயே கொடுமைகளைச் செய்யும் என்றே நான் நினைக்கிறேன்" என்று சப்பைக்கட்டு கட்டி இறுதியில்...

தான் எழுதிய கட்டுரைக்கு ஈழத்தமிழர்கள் இந்தியாவை மன்னிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதுபோல் ஒரு முடிவைக் கூறிவிட்டார் "எழுத்தாளனின் குரல் எங்கும் அறத்தின் குரலாகவே இருக்கும்" - எனக் கூறிக்கொள்ளும் ஜெயமோகன்!

இதையெல்லாம் விடப் பெரிய கவலை சிலருக்கு! யார் சொல்வதைக்கேட்டு ஜெமோ தனது கருத்தை மாற்றிக் கொண்டார். ஜெமோவின் கட்டுரையை விட இதுதான் சகித்துக் கொள்ள முடியாத பெரிய கவலையாக இருக்கிறது அவர்களுக்கு!

ஷோபாசக்தி! - ஒரு புலி எதிர்ப்பாளர். புலி எதிர்ப்பாளர்கள் யாரும் தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவானவர்களாக இருக்க முடியாது என்பது நம்மவரின் ஆழ்ந்த நம்பிக்கை. மாற்றுக்கருத்துச் சொல்பவர் - இவர்கள் தேசத்துரோகிகளாகவே இருப்பது வழமை! தேசத்துரோகிகள் கூறுவதெல்லாம் பொய்தான். இதை நிறுவுவதற்குக் காரணங்களைத் தேடும்போது, மாற்று அரசியல் என்பதைப் புலி எதிர்ப்பு அரசியலாகவே செய்துவரும் ஷோபாசக்தி அசட்டையாக சில தகவல் பிழைகளை எழுத்தில் செய்வார். யாழ் கோட்டைச் சமரில் புலிகள் ஆட்டிலறி அடித்ததுபோல! புலிகளிடம் அட்டிலறி இல்லாத காலத்தில் அவர்கள் அட்டிலறி அடித்ததாகப் பொய் கூறியிருக்கிறார். ஆகவே ஷோபாசக்தி கூறுவதெல்லாம் பொய்!

'முறிந்த பனை' (Broken Palmyrah) என்ற நடுநிலைமையான (இதற்கு புலிகளிடம் தன் உயிரைக்கொடுத்து நிரூபித்திருந்தார் ரஜனி திரணகம)ஆவணத்தை ஷோபாசக்தி முன்வைத்ததை கண்டுகொள்ளாமல்,ஷோபாசக்தியின் கருத்தை கேட்டு ஜெமோ தன் கருத்தை மாற்றியதாக நம்மவர்கள் வருத்தம் கொள்வதில் எந்த ஆச்சரியமுமில்லை!

தமிழர்கள் கொண்டாடும் எந்த ஆளுமைகள் குறித்தும் எதிராகவும், கட்டுடைத்தும் தொடர்ந்து எழுதிவரும் ஜெமோ அவ்வப்போது மலையாளிகளின் மேன்மையான பண்புகள் (இதுகுறித்து மத்திய கிழக்கில் பணிபுரியும் நண்பர்கள் நன்கறிவர்) கண்டு அடிக்கடி நெகிழ்ந்து, கண்ணீர்விட்டு, தொடர்ந்து போற்றிப் புகழ்வது வழக்கம்.

உலகின் எந்தவொரு பிரச்சினைக்கும் சளைக்காமல் கருத்து சொல்வதும், முல்லைப்பெரியாறு அணை பற்றிய கேள்விக்கு மட்டும் அதுபற்றி நிபுணர்கள்தான் கூறவேண்டும், எழுத்தாளன் என்பவன் எல்லாப்பிரச்சினை பற்றியும் பேச வேண்டியதில்லை என நாசூக்காகத் தவிர்த்துவிடுவதும் தெரிந்ததே!

ஆனால் ஒரு பெருந்துயரை, அதற்குச் சாட்சியாக லட்சக்கணக்கானோர் உலகெங்கும் இருக்க, அதுகுறித்த நியாயமான குறைந்தபட்ச தேடலின்றி, அப்படியெதுவும் நடக்கவில்லை எனக் கூறிவிடும் அளவிற்கு உலகில் எந்த மூலையிலும் தமிழர்களின் சுரணையுணர்வு ஒரேயளவானது என்பதை நன்கு புரிந்து வைத்திருக்கிறார்.

தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர் என்று ஷோபாசக்தியைப் புறக்கணிக்கும் புலம்பெயர் அறிவுஜீவிகள், ஒட்டுமொத்த தமிழ்த்தேசியத்துக்குமே எதிராக தொடர்ந்து தன்தளத்தில் எழுதிவரும் ஜெமோவை அழைத்து, விருது கொடுத்து மகிழ்வதும், அவரோ இவர்கள் சொல்லும் கருத்துக்களை வெறும் ஒற்றைப்படையான கசப்புடன் கூடிய பொய்ப்பிரச்சாரங்கள் என்றே எடுத்துக் கொள்வதும் இனியும் தொடரும்!

தவிர, ஜெமோ இப்போது சிங்களவர்களின் தரப்பு நியாயம்(?!) குறித்துக் கவலைப்படுவதாகத் தெரிகிறது. "சிங்களவர்களின் தரப்பே பேசப்படாமல் இங்கே ஒலிக்கும் ஆவேசங்கள் நியாயமானவைதானா என்ற ஐயம் உண்மையிலேயே எனக்குள்ளது" - இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் ஜெமோ இல்லாதது பிரிட்டிஷ் காரர்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பு! இந்தியாவை ஆக்கிரமித்து வைத்திருந்த அவர்களின் தரப்பு நியாயம் பற்றி பேச ஒரு அறம் சார்ந்த எழுத்தாளன் அவர்களுக்கு கிடைக்காதது துரதிருஷ்டமே!

ஆக விரைவில் இப்படியொரு கேள்வி பதில் ஜெமோ தளத்தில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அன்புள்ள ஜெ!
நான் முள்ளி வாய்க்காலில் இறுதிப்போரில் பங்குபற்றியவன். அங்கு திட்டமிட்ட இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. நான் அப்படி ஒரு சம்பவத்தையும் பார்க்கவில்லை. இதுபற்றி கோத்தாபாய ராஜபக்சேவிடம் கேட்டபோது அவரும் இதையே தெரிவித்தார். நான் இந்த பிரச்சினையில் நீங்கள் தலையிடவேண்டும்(?!) என்று சொல்லவில்லை. எனக்கு ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு நீங்கள் பதில் சொல்லவேண்டும் என்று கேட்கிறேன்.
- டென்சில் கொப்பேகடுவ

இந்த கோரிக்கையின் உண்மையை(?!) நான் ஏற்கிறேன். முள்ளிவாய்க்கால் குறித்து எனக்கும் பல குழப்பங்கள்! நான் சந்தித்த இலங்கைத் தமிழர்கள் அதுபற்றிக் கூறும்போது மிகவும் கசப்பான, ஒற்றைப்படையான #@%$%#...

16 comments:

 1. பதிவினூடு ஆழமாகவே நகர்ந்து சென்றேன்,எமது ஊர் (வல்வெட்டித்துறை)ரிலும் தொடர்ந்து 3 நாட்கள் IPFK நடத்திய கொலைவெறியாட்டத்தில் எத்தனையோ உறவுகள் மாண்டு போனனர், இன்றும் அவ்அடையாளங்களுடன் ஊரில் இருக்கும் வயதில் மூத்தவர்களை காண்கிறேன், இதன் கொலைவெறியாட்டம் எவ்வளவு தூரம் மக்களை தூண்டி எங்கே போய் உடனே முடிந்தது என்று அனைவருக்கும் தெரியும், ஜெமோ நியாயபடுத்த முனைந்து இன்னும் நினைவுள்ள மக்களை கொத்திதெழ வைக்கிறார்.

  ReplyDelete
 2. தெளிவான ஒரு பார்வை..
  சரியான சொர்கொர்வைகளும், மனதை இன்று வரை இன்பமாக்கும் விஷயங்களையும் சான்றாகப் பகிர்ந்துள்ளீர்கள்.
  ஜெ.மோ அடிக்கடி சொல்லிக்கொள்வது போல ஒரு பரந்துபட்ட வாசிப்பாளனாக இருந்தால் இதையும் கொஞ்சம் வாசித்து எங்கள் தரப்பு நியாயங்களையும் அறியட்டும்.

  இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இணுவிலில் நானும் கண் முன்னே நடந்த இந்தக் கோரங்களைக் கண்ணுற்றுள்ளேன் சகோ :(
  மீண்டும் இங்கே வாசிக்க வாசிக்க ஏதோ ஒரு இனம்புரியாத பயம் & கவலை & கோபம்....

  ReplyDelete
 3. ipkf ராணுவத்தினர் கையில் பீடிங் பாட்டில் மட்டுமே வைத்திருந்ததாக எழுதுவார்.
  நம்புவதற்க்கு சிலர் இருக்கிறார்கள்.

  இவரது உலோகம் என்ற கதை திரைப்படமாக வர இருக்கிறது.
  அதற்கான டிரையிலர்தான்...
  இந்த பொய் பரப்புரை.

  ReplyDelete
 4. ”இந்திய அமைதிப்படை என்கிற அற்புதமும், கேணல் ஜெயமோகனும்” என்கிற தலைப்புத்தான் கட்டுரையை வாசித்து முடித்ததும் மனதில் தோன்றியது.

  சில விடயங்களின் அரசியல் ஆழம் குறித்த மேம்போக்கான அணுகல்போக்கில் ஜெமோ வகையறாக்கள் தொடர்ந்தும் இலங்கைப் பிரச்சினையைப் பேசி வருகிறார்கள். அதுபோக, தங்களின் தேசியத்தின் மீதான அக்கறையை காட்ட அவர்களுக்கு தேவையானவற்றை ஜெமோ வகையறாக்கள் தொடர்ந்தும் செய்து வருகின்றன.

  இந்திய தேசியத்தின் மீதான ஜெமோவின் அக்கறையை நான் கேள்வி கேட்க விரும்புவதில்லை. அவர், இலங்கை தமிழர்கள் பற்றிய குறைபாட்டு சிந்தனையுள்ள கருத்துக்களை உதிர்த்து தன்னுடைய இந்திய நேர்மையை நிரூபிக்கிற வரை.

  இந்திய அமைதிப்படை வடக்கு- கிழக்கில் நிகழ்த்திய கொடூரங்கள் பற்றிய ஜெமோவின் கருத்தியல் என்பது மிகவும் பொறுக்கித்தனமானது மட்டுமே. அதுவும் காந்தீயத்தை(?) போற்றுகிறவரிடமிருந்து வந்திருக்கிற ஹிட்லர் தனம்!

  ReplyDelete
 5. ஜீ .. மிக முக்கியமான பதிவு .. இதைவிட ஒரு உரிய பதிலை யாராலும் கொடுக்கமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால் ஜெமோ இதையெல்லாம் தெரியாமல் எழுதுவார் என்று நாம் நினைக்குமளவுக்கு அவர் அவ்வளவு முட்டாள் இல்லை. தெரிந்தே எழுதும் (கெட்ட வார்த்தை) .... தட்டி எழுப்பமுடியாது .. தூங்குபவனை தானே எழுப்பலாம்..

  //இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் ஜெமோ இல்லாதது பிரிட்டிஷ் காரர்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பு! இந்தியாவை ஆக்கிரமித்து வைத்திருந்த அவர்களின் தரப்பு நியாயம் பற்றி பேச ஒரு அறம் சார்ந்த எழுத்தாளன் அவர்களுக்கு கிடைக்காதது துரதிருஷ்டமே!//

  நச்!

  ReplyDelete
 6. உலகில் கொடூரமான இராணுவங்களில் இந்திய இராணுவமும் ஒன்று.
  அவர்களின் பல படுகொலைகளில் வல்வைப் படுகொலைகளைப் பார்த்த அனுபவம் உண்டு, அல்வாய் பங்குவேம்படி மயானத்தில் கிட்டத்தட்ட 20 உடல்களை ஒன்றாக ஊர்மக்கள் எரியூட்டியதைப் பார்த்தவன். இதனை விட பல அப்பாவிகளை இரவில் கைது செய்து சில நாட்களின் பின்னர் காணாமல் போனோர் பட்டியலில் சேர்த்த பெருமை இந்திய இராணுவத்தையே சேரும்.

  அத்தகைய கொடூரர்களுக்கு வக்காலத்து வாங்கும் ஜெமோவுக்கு ஜால்ரா அடிக்கும் எங்களவர்களை நினைக்கத்தான் மனது வேதனைப் படுகின்றது.

  ReplyDelete
 7. சரியான பதிவு, ஜீ.
  எந்த ராணுவ அதிகாரியும் கடிதம் எழுதி இருக்காவிட்டாலும் ஜெமோ அப்படித்தான் எழுதி இருப்பார். அத்தகைய சித்தாந்தத்தில் ஊறியவர் அவர். அவரது பெரும்பாலான கட்டுரைகள் முன்கூட்டியே அவர் மனதில் இருக்கும் முடிவினை அதற்கேற்ற ஆதாரங்களை மச்சும் கொண்டு அலசுவதாகவே இருக்கும். நடுநிலைக்காக ஓரிரண்டு சப்பைக்கட்டு எதிர்வாதங்களையும் சேர்த்துக் கொள்வார்.

  எழுத்துத் திறமை மிக்கவர்கள் எழுதுவது எல்லாம் சரி என்று நினைப்பவர்களை நினைக்கும் போதுதான் வருத்தமாக இருக்கிறது!.

  ReplyDelete
 8. விரிவாக அலசியிருக்கிறீர்கள்!

  ReplyDelete
 9. ம்ம்ம் என்ன சொல்லுவது அன்நாட்கள் மீண்டும் கோபமாக வருகின்றது இந்தியப்படைகள் மீது இது எல்லாம் எங்கே புரியும் விஸ்ணுபுரம் எழுதியவருக்கு வீட்டில் பெண்கள் இருந்தால் என்ன பாடு பட்டோம் என்பதை இவருக்குச் சொல்லி எப்படிப்புரியவைப்பது வீண் அரசியல் ஆசையில் எங்கள் மனங்கள் மீது மீண்டும் காந்தியின் படையை காறித்துப்ப செய்கின்றார் என்றுமட்டும் சொல்ல முடியும் ! 

  ReplyDelete
 10. இவர்களை......என்னத்தை சொல்ல.....

  ReplyDelete
 11. ஆதித்தன்June 29, 2012

  கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடந்த பேரழிவை நேரில் அனுபவித்தவர்களில் நானும் ஒருவன். 53 உடலங்களை கல்லூரி மைதானத்திற்க்கு வடக்கு பக்கமாக இருக்கும் வேப்பமரத்திற்க்கு கீழ் புதைத்தோம்.
  அன்றைய இந்திய இராணுவத்தின் நரபலிவேட்டையில் காயப்பட்ட சிறுமி ஒருத்தி மருத்துவ உதவி இல்லாமல்
  வலியால் பல நாட்கள் துடி துடித்தது இன்றும் வலிக்கிறது.......

  ReplyDelete
 12. தெளிவான ஆதாரக்கருத்துகளுடன், மறுக்க முடியாத உண்மையுடன் எழுதப்பட்டுள்ள பதிவு. சொல்ல வேண்டியதை நச்சென்று தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள் தம்பி.

  ReplyDelete
 13. ”வன்முறை அமைப்புகள் அனைத்தும் அடக்குமுறையை ஆயுதமாகக் கொண்டவையே. ஆனால் முறைப்படுத்தப்பட்ட ராணுவம் வன்முறை அமைப்பு அல்ல என்று நம்புவது மிகப்பெரிய மடமை. அது மேலும் பலமடங்கு அடக்குமுறைத்தன்மை கொண்டது. ”

  -- இது சென்ற ஆண்டு ஜெமோ எழுதியது தான்..அதற்குள் அவர் நிலைப்பாட்டில் ஏன் இந்தத் தடுமாற்றமோ? பிற்காலத்தில் வரலாற்றைத் திரிப்பதற்கு ஜெமோவின் அந்தப் பதிவே தொடக்கப் புள்ளியாக அமையும் வாய்ப்பே அதிகம். அறத்தை அடிப்படையாகக் கொண்ட எழுத்தாளர் இதைச் செய்திருக்கக்கூடாது.

  ReplyDelete
 14. சரியான பதிவு ஜீ...
  தெளிவான பார்வை.

  ReplyDelete
 15. Well written truth..I can understand the justified resulted angry/outcome actions from Tamils due to the cruel activities of IPKF.

  ReplyDelete

Followers

Blog Archive

Powered by Blogger.

Archives

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |