Wednesday, March 14, 2012

கர்ணன் - போராளி!



ர்ண கொடூரம் என்று சொல்வார்கள்தானே? எப்படி அந்தச் சொல் உருவாகியது? கர்ணனுக்கும் கொடூரத்துக்கும்  என்ன சம்பந்தம்? கர்ணன் அவளவு கொடூரமானவனா? அப்படித் தெரியவில்லை! கர்ணனை எல்லாரும் திட்டமிட்டு கொடூரமாக கொன்றதால் அப்படி ஒரு சொல் உருவாகியிருக்குமோ?

மகாபாரதக் கதையில் கர்ணன் மாதிரி தேவர், முனிவர், அரசர், சாதாரண மனிதர் ஆகிய எல்லாத் தரப்பினராலும் மோசமாகப் பாதிக்கப்பட்ட, பலி(ழி) வாங்கப்பட்ட வேறொரு பாத்திரம் இருந்ததாகத் தெரியவில்லை. போர்க்களம் போகுமுன்பாகவே மிகப் பலவீனமாக்கப்பட்ட நிலையில் களம்புகுந்த வீரனாக அவன் மட்டுமே இருந்தானென நினைக்கிறேன். சின்ன வயதில் மகாபாரதக் கதை தெரிந்துகொண்டபோது, என்னவோ கர்ணனைப் பிடித்துக் கொண்டது.

நான்காம் வகுப்புப் படிக்கும்போது, எங்கள் தமிழாசிரியர் பாடப்புத்தகத்தைத் தாண்டி நிறையக் கதைகள் சொல்வார். அருமையாகப் பாடுவார். இராமாயணம், பெரியபுராணம், மகாபாரதம், இவற்றிலிருந்தெல்லாம் நிறையப் பேசுவார். பாடுவார். எனக்கும் அவரைப் பிடித்திருந்தது!

மகாபாரதக் கதை சொல்லும்போது ஒரு சிக்கல் வந்தது. கதை சொல்பவர் கதையில் தனக்குப் பிடித்த, தான் மிக ரசித்த கதாபாத்திரத்தின் சார்பாகவே கதை கூறிச் செல்வதை புதிதாகக் கதை கேட்பவனால் ரசிக்கமுடியும் -பெரும்பாலான கதைகளே அப்படித்தான் எழுதப்பட்டிருக்கும். சொல்லப்பட்ட கதையை அப்படியே சொல்வதே கதைசொல்பவரின் நடுநிலை. ஆனால் அதற்கும் மேலாகத் தான் ரசிக்கும் பாத்திரத்தை உயர்த்தி, சிலாகித்துப் பேசுவதை, முக்கியத்துவம் கொடுப்பதை எல்லோராலும் ரசிக்கமுடியாது!

எங்கள் ஆசிரியருக்கு பெரும்பாலானோரைப் போலவே அர்ச்சுணனைப் பிடித்திருந்தது! ஒரு சிலருக்கு மட்டும் என்னைப்போலவே கர்ணனைப் பிடித்திருந்தது!அது இயல்பானதுதான்! அனால் நான்காவது வகுப்பில் படிக்கும் எனக்கு 'இவர் அர்ச்சுணனை மட்டுமே அளவுக்கு மீறி முன்னிலைப் படுத்துகிறார்' எனப் புரியுமளவுக்கு தன்னை வெளிப்படுத்திக் கொண்டது - முதன்முறையாக அவர் பற்றிய எண்ணத்தில் மாற்றம் கொண்டுவந்தது!

றுதியில் வெல்பவனே ஹீரோ, தோற்பவன், இறந்து விடுபவன் வில்லனாகவே இருக்கவேண்டும் என்பது போன்ற நம்பிக்கையின் அடிப்படையில் கர்ணனை மோசமானவனாகவே சித்தரித்தார். தமிழ் சினிமாவைப் போலவே பெரும்பான்மையானோர் எதிர்மறையான குணங்கள் கொண்டவர்களை, பலவீனங்கள் கொண்ட மனிதனை ஹீரோவாக யாரும் ஏற்றுக் கொள்வதில்லை!

ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தும், சொல்லிக் கொடுக்கும் நிலையில் இருப்பவர்கள், மிக முக்கியமாக ஆசிரியர்கள் தங்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை மற்றவர்கள்மேல் திணித்துவிடாமல், மாணவர்கள் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் சுதந்திரத்தை அனுமதிப்பது அவசியம். அனால் துரதிருஷ்டவசமாக என்னைப்போலவே பலருக்கும் அப்படி வாய்த்ததில்லை.

அதனால் சின்னவயதிலேயே நடிக்கத் தொடங்கிவிட்டோம்! எங்கள் சொந்தக் கருத்துக்களை மனதில் புதைத்துக் கொண்டு வெளியில் ஆமாம் சார்! இல்லாவிட்டால் ஆசிரியர் அதைக் காரணமாக வைத்து இன்னோர் சந்தர்ப்பத்தில் 'கர்ண கொடூரமாக' நடந்துகொள்ளும் அபாயமிருந்தது!

ருமுறை தொலைக்காட்சியில் கர்ணன் படம் ஒளிபரப்பானபோது உடனேயே அணைத்துச் சென்றுவிட்டேன். சிவாஜியூடாக கர்ணனைக் காண விரும்பாததே காரணம்.

நாம் ரசித்த எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதனைத் திரையில் எதிர்கொள்வதில்தான் பிரச்சினையே!நாம் மனதில் உருவாக்கி வைத்திருக்கும், அல்லது நாம் முதன்முதலில் ஓவியமாகவோ, திரையிலோ ரசித்த விம்பத்தை பாத்திரமேற்று நடிக்கும் நடிகர் ஈடு செய்ய வேண்டுமே என்ற கவலைதான். மேலும் முதல் மரியாதை, தேவர்மகன் போன்ற ஒரு சில படங்கள் தவிர்த்து, சிவாஜி தனது எல்லாப்படங்களிலும் நடிகர் சிவாஜி கணேசனாகவே எனக்குத் தெரிந்ததால், நான் சிவாஜியூடாகக் கர்ணனைக் காண விரும்பவில்லை.

வாழ்வில் வெற்றி பெற்றவர்களையே நாம் விரும்புகிறோம், ஆதர்ஷமாகக் கொள்கிறோம். அந்த அடிப்படையில் கர்ணனைப் பலருக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். கர்ணன் தன் வாழ்நாள் முழுவதும் போராளியாகவே வாழ்ந்திருக்கிறான். துரதிருஷ்டத்திற்கும், ஒடுக்குமுறைக்கும் எதிரான முழுமையான போராளியாக! துரதிருஷ்டம் துரத்த, துரோகங்கள் தொடர, நயவஞ்சகர்களால் ஏமாற்றப்பட்ட நிலையில் தன் முடிவு தெரிந்திருந்தும், இறுதிவரை தன் கொள்கையிலிருந்து மாறாமல், நிலைகுலையாமல் போராடினான்.

கடமையைச் செய் பலனை எதிர்பாராதே - என்பதுதான் கீதாசாரம் என்று சின்னவயதில் கேட்ட ஞாபகம்! அது சரியாக இருக்கும்பட்சத்தில், மகாபாரதத்தில் கர்ணன்தான் கீதாசாரப்படி சரியாக வாழ்ந்திருப்பான் போலிருக்கிறது! - ஒருவேளை கர்ணன் இறந்தபின், கர்ணன் பற்றிய உண்மைகள் அனைவருக்கும் தெரிந்தபின், கண்ணன் அர்ச்சுணனுக்கு கீதோபதேசம் செய்திருப்பானானால், 'கர்ணனைப் பார்!' என்றே இலகுவாக சொல்லியிருப்பான்.

'நியாயமே வெல்லும்' என்று போதிக்கப்பட்டிருப்பதால், நம்பப் படுவதால், வெல்பவர்கள் நியாயவாதிகளாகவும், தோற்றவர்கள் அநியாயம் செய்தவர்களாகவும் நிலைநிறுத்தப் படுகிறார்கள்.அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள்.

வெற்றி பெற்றவர்களின் வரலாறுகள் மட்டுமே இங்கே தேடப்படுகின்றன. விரும்பப்படுகின்றன. அவற்றைப் படித்து மகிழ்ந்து, நம்பிக்கையை வளர்த்துக்  கொள்கிறோமே தவிர, தோல்வி கொடுக்கும் பாடங்களை கற்றுக் கொள்ளவோ, காரணங்களைத் தெரிந்துகொள்ளவோ விரும்புவதில்லை. காலங்கடந்து விழித்துக் கொள்ளும்போது அதற்கான அவசியமும், அவகாசமும் இல்லாமலே போய்விடுகிறது!

32 comments:

  1. ////'நியாயமே வெல்லும்' என்று போதிக்கப்பட்டிருப்பதால், நம்பப் படுவதால், வெல்பவர்கள் நியாயவாதிகளாகவும், தோற்றவர்கள் அநியாயம் செய்தவர்களாகவும் நிலைநிறுத்தப் படுகிறார்கள்.அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள்.

    வெற்றி பெற்றவர்களின் வரலாறுகள் மட்டுமே இங்கே தேடப்படுகின்றன. விரும்பப்படுகின்றன. அவற்றைப் படித்து மகிழ்ந்து, நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறோமே தவிர, தோல்வி கொடுக்கும் பாடங்களை கற்றுக் கொள்ளவோ, காரணங்களைத் தெரிந்துகொள்ளவோ விரும்புவதில்லை. காலங்கடந்து விழித்துக் கொள்ளும்போது அதற்கான அவசியமும், அவகாசமும் இல்லாமலே போய்விடுகிறது!////

    இதுதான் மனித மனங்களின் அடிப்படையாக (போலியாக) இருக்கிறது. அல்லது சமூகத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

    என்னைப் பொறுத்தவரையில் “கர்ணன்“ இறுதி வரை போராளியாகவே இருந்தான். தனக்காக அல்ல; மற்றவர் நலனுக்காக மட்டும்!!

    ReplyDelete
  2. yes i agree
    karnan is real hero
    He has good habit than Dharman.
    I always blame Dharman.
    He did not have sence while paying gamble.
    How bad he did made a bit of his wife.
    If any good hadbit men will bit his wife

    ReplyDelete
  3. வணக்கம் ஜி!என்ன திடீரென்று,கர்ண கடூரமாக???சிவாஜியையே கர்ணனாகப் பார்க்கப் பிடிக்கவில்லைஎன்றால்,நம்பியார்????ஹ!ஹ!ஹா!!!!!!!

    ReplyDelete
  4. pidiththirukku ! naan ungal karuththai earkkiren

    ReplyDelete
  5. நல்ல அலசல் தான் நண்பரே ..
    வெற்றியாளர்களை மட்டுமே கொண்டாடும் உலகமிது ..
    நன்றி பதிவுக்கு

    ReplyDelete
  6. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  7. மகாபாரதம் படித்த அனைவரையும் நிச்சயம் பாதிக்கும் பாத்திரம் கர்ணன்.(எனக்கு சிவாஜி கர்ணனை மிகவும் பிடிக்கும்!)

    ReplyDelete
  8. எனக்கும் நட்பை மதித்த கர்ணனையும் பலவீனமான முட்டாள் தம்பிகளுக்காக எவரையும் எதிர்க்கத்துணிந்து தம்பிகளின் நலனுக்காகவே வாழ்ந்த துரியோதனனையும் பிடிக்கும். பாண்டவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்த அன்பைவிட துரியோதனன் தன் தம்பிகள் மீது உயிரையே வைத்திருந்தான். அவர்களின் நலன் பற்றியே சிந்தித்திருந்தான். கர்ணண் மற்றும் துரியோதனன் இருவரும் மிகவும் அருமையான பாத்திரங்கள் மகாபாரதத்தில்.

    ReplyDelete
  9. //ஆசிரியர்கள் தங்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை மற்றவர்கள்மேல் திணித்துவிடாமல், மாணவர்கள் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் சுதந்திரத்தை அனுமதிப்பது அவசியம்.//
    ஆசிரியர் மட்டுமன்றி பெற்றொர் உறவினர் சமுதாயம் என பல பகுதியனரதும் திணிப்புக்களினால் சுயத்தை தொலைத்தவர்களாக அடுத்தவரின் விருப்பு வெறுப்புகளை பிரதிபலிப்பவர்களாக மாற்றப்படுகிறோம்.

    ReplyDelete
  10. ஜீ எனக்கும் பாரதக்கதையில் கர்ணனையே அதிகம் பிடிக்கும்.

    ReplyDelete
  11. மிக முக்கியமாக ஆசிரியர்கள் தங்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை மற்றவர்கள்மேல் திணித்துவிடாமல், மாணவர்கள் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் சுதந்திரத்தை அனுமதிப்பது அவசியம்.

    சிறப்பான பார்னை..

    ReplyDelete
  12. பொதுவாக தோற்றவர்கள்தான் அதிகமாக ஞாயவாதிகளாக இருந்திருப்பார்கள்!...ஏனெனில் தோற்றவனால் வரலாற்றை எழுதி இருக்க முடியாது...பிழைத்தவர்களே எழுதி இருக்கவேண்டும்...அது கதையானாலும் உண்மயானாலும் ஒன்றே!

    ReplyDelete
  13. பாரதத்தில் மனதில் நின்ற பாத்திரம் கர்ணன்
    பற்றிய விளக்கம் அருமை நண்பரே..

    ReplyDelete
  14. மற்றுமொரு அட்டகாசமான பதிவு. கதை சொல்லிகள் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியதுமான உங்கள் கவலை நியாயமானது.

    // கர்ணன் பற்றிய உண்மைகள் அனைவருக்கும் தெரிந்தபின், கண்ணன் அர்ச்சுணனுக்கு கீதோபதேசம் செய்திருப்பானானால், 'கர்ணனைப் பார்!' என்றே இலகுவாக சொல்லியிருப்பான்.//

    மிகப் பிடித்த இடம் :))))

    ReplyDelete
  15. கர்ணம் என்றால் காது.கர்ண கடூரமாக பாடுகிறார் என்றால் காதுக்கு இனிமையில்லாமல் என்று அர்த்தம்,கர்நாடக சங்கீதம் என்றாலும் காதால் ரசிக்கக்கூடிய பாடல் என்றுதான் அர்த்தம், இதற்கும் கர்ணனுக்கும் சம்பந்தமில்லை.
    பாரதம் தனிஒரு எந்த மனிதனையும் போற்றி புகழவில்லை. இதில் பரந்தாமன் கண்ணன்,பிதாமகர் பீஷ்மர் உட்பட' அனைவரும்' சில கட்டங்களில் தவறு செய்தோரே.. உயிர் பிழைத்தவரும், உயிரிழந்தோர் உறவினரும் பாகுபாடு இல்லாமல் ஒப்பாரி வைக்கின்ற அளவு இழப்பு அனைவருக்குமே. ஒவ்வொரு பாத்திரமும் நியாயமும் , குறைகளும் ஒருங்கே கொண்டவையே..(அம்பை உட்பட.) ஆதலால் உங்கள் பதிவில் காணப்படும் குறை,குற்றம் சொல்லும் தொனி தேவையற்றது. மகாபாரதம் அதனால் தான் காப்பியமாக , காலகாலமாக போற்றப்பட்டு வருகிறது.

    ReplyDelete
  16. @vivek kayamozhi
    //கர்ண கடூர// நன்றி உங்கள் விளக்கத்திற்கு! தெரிந்துகொண்டேன்.

    //பாரதம் தனிஒரு எந்த மனிதனையும் போற்றி புகழவில்லை. இதில் பரந்தாமன் கண்ணன்,பிதாமகர் பீஷ்மர் உட்பட' அனைவரும்' சில கட்டங்களில் தவறு செய்தோரே..//
    உண்மை! பாரதம் சரியாகவே சொல்கிறது. எனக்குப் பாரதம் பிடிக்கும்!

    //ஆதலால் உங்கள் பதிவில் காணப்படும் குறை,குற்றம் சொல்லும் தொனி தேவையற்றது//

    இதில் பாரதத்தைக் குறை, குற்றம் சொல்லவில்லை. நாங்கள் சந்தித்தவர்கள், எங்களின் புரிதல் பற்றிய பதிவு மட்டுமே! நன்றி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்!

    ReplyDelete
  17. சிரஞ்சீவி பட்டம் சிலருக்குத் தான் உண்டு. அதில் கர்ணனும் ஒருவர் ! சேர்ந்த இடம் தவறாக இருந்தாலும் நட்பிற்காக மாண்ட கொடை வள்ளல் ! பகிர்வுக்கு நன்றி நண்பரே !

    ReplyDelete
  18. அவருக்கு அர்ச்சுணன்,
    உங்களுக்கு கர்ணன்,
    எனக்கு ஏகலைவன்?
    விடுங்க ஜீ, நமக்கு பிடித்ததை தான் நாம் உயர்த்தி பேசுவம், ஆனாலும் வரலாறு மிகவும் முக்கியம் ஜீ!!

    ReplyDelete
  19. என்னமோ ஜீ இப்பவெல்லாம் எந்தப் பதிவையும் ஈழத்தோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கவே வருகிறது.உங்கள் பதிவிலும் அப்படித்தான் !

    ReplyDelete
  20. //''வெற்றி பெற்றவர்களின் வரலாறுகள் மட்டுமே இங்கே தேடப்படுகின்றன. விரும்பப்படுகின்றன. அவற்றைப் படித்து மகிழ்ந்து, நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறோமே தவிர, தோல்வி கொடுக்கும் பாடங்களை கற்றுக் கொள்ளவோ, காரணங்களைத் தெரிந்துகொள்ளவோ விரும்புவதில்லை. காலங்கடந்து விழித்துக் கொள்ளும்போது அதற்கான அவசியமும், அவகாசமும் இல்லாமலே போய்விடுகிறது!''//

    மிகவும் உண்மை

    ReplyDelete
  21. //'நியாயமே வெல்லும்' என்று போதிக்கப்பட்டிருப்பதால், நம்பப் படுவதால், வெல்பவர்கள் நியாயவாதிகளாகவும், தோற்றவர்கள் அநியாயம் செய்தவர்களாகவும் நிலைநிறுத்தப் படுகிறார்கள்.அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள்.//

    சிலவேளைகளில் சந்தர்பங்கள் இடம் மாறியும் போகலாம். அடிப்படை உண்மையை தேட வேண்டும்

    ReplyDelete
  22. 'தோல்வி கொடுக்கும் பாடங்களை கற்றுக் கொள்ளவோ, காரணங்களைத் தெரிந்துகொள்ளவோ விரும்புவதில்லை'மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள். தோல்வியிலிருந்துதான் பல பாடங்களை நாம் கற்றுக் கொள்ள முடியும்.

    ReplyDelete
  23. கர்ணனை பற்றி மட்டுமல்லாமல் பல நல்ல விஷயங்களை உள்ளடக்கிய பதிவு..!!

    ReplyDelete
  24. அருமையான பதிவு எனக்கும் எப்போதும் கர்ணனை பிடிக்கும்

    ReplyDelete
  25. நண்பரே!

    மஹாபாரதக் கதைப்படி கர்ணன் நல்லவன்தான். ஆனால், பொய் சொல்லி வித்தை கற்றான்.

    ஊர் முன்னிலையில் ஒரு பெண் மானபங்கப்படுத்தப்பட்டபோது, பீஷ்மரைப் போல திருதராஷ்டிரனைப் போல வாய்மூடி மௌனியாக இருந்திருந்தால்கூட அவனை மெச்சியிருக்கலாம். ஆனால், அவனும் அவள் நிலை கண்டு எள்ளி நகையாடினான். அவனது நியாயம் நேர்மை அப்போது எங்கே போயிற்று. அதனாலேயே அவன் வீழ்ந்தான்.

    அர்ஜூனன் வித்தையில் குறைந்தவன் என்று நாம் மதிப்பது. கர்ணனின் நாகாபானத்தில் இருந்து அர்ஜூனைக் கிருஷ்ணன் காப்பாற்றினான் என்பதால் நமக்கு ஏற்படுகிறது. ஆனால், மஹாபாரதத்தில் நேருக்கு நேராக அர்ஜூனனிடம் இருமுறை தோல்வி கண்டிருக்கிறான் கர்ணன்.

    அறத்தாலும் அர்ஜூனன் தாழ்ந்தவனில்லை. கர்ணனும் தாழ்ந்தவனில்லை. ஆனால், திறமையால் அர்ஜூனன் சிறிது மேம்பட்டவனாகவே இருந்தான். கர்ணன் வள்ளலாக இருந்தான்.

    இன்னொன்று இந்தப் பதிவு சிவாஜியை மெனக்கெட்டு குறைத்து மதிப்பிட்டிருப்பதாகத் தெரிகிறது. முதல் மரியாதை, தேவர் மகனைத் தவிர்த்து மற்ற எல்லா படங்களிலும் சிவாஜி அந்தப் பாத்திரங்களாகத் தான் தெரிந்தார். முதல் மரியாதை மற்றும் தேவர் மகனில் அப்படியே தேவருக்கு உரிய தகுதிகளுடன் நடிகர் சிவாஜியாகத் தெரிந்தார் என்பது எனது தாழ்மையான கருத்து.

    ReplyDelete
    Replies
    1. சுயம்வரத்தில் அழைப்பும் விடுத்து விட்டு தேரோட்டி மகன் என்று அவமானப்படுத்துகிறாள்
      பாஞ்சாலி. அவையில் பாஞ்சாலியைக் கர்ணன் அவமானப்படுத்தியது தவறென்றால் கர்ணனைப் பாஞ்சாலி அவமானப் படுத்தியதும் தவறுதான். ஆக கர்ணன் கெட்டவனென்றால் பாஞ்சாலியும் கெட்டவள்தான்.

      Delete
    2. \\\\\\\\\\\\\\மஹாபாரதத்தில் நேருக்கு நேராக அர்ஜூனனிடம் இருமுறை தோல்வி கண்டிருக்கிறான் கர்ணன்.\\\\\\\\\\\\\

      இந்த நிகழ்வு பற்றி கொஞ்சம் விளக்கவும்

      Delete
    3. //சுயம்வரத்தில் அழைப்பும் விடுத்து விட்டு தேரோட்டி மகன் என்று அவமானப்படுத்துகிறாள்
      பாஞ்சாலி. அவையில் பாஞ்சாலியைக் கர்ணன் அவமானப்படுத்தியது தவறென்றால் கர்ணனைப் பாஞ்சாலி அவமானப் படுத்தியதும் தவறுதான். ஆக கர்ணன் கெட்டவனென்றால் பாஞ்சாலியும் கெட்டவள்தான்.//

      அந்த ஏகாதிபதிகளின் துயரைக் கண்ட வில்லைச் சுமப்பவர்களில் முதன்மையான கர்ணன், அந்த வில்லிருக்கும் இடத்திற்குச் சென்றான். அவ்வில்லை விரைவாகத் தூக்கி, நாணேற்றி, அந்த நாணில் கணைகளைப் பொருத்தினான். சூரியனின் மகனும், சூத குலத்தைச் சேர்ந்தவனுமான கர்ணன் நெருப்பைப் போல அல்லது சோமனைப் போல அல்லது சூரியனே வந்தது போல, அந்தக் குறியை அடிக்கத் தீர்மானித்ததைக் கண்ட வில்லாளிகளில் முதன்மையானவர்களான பாண்டுவின் மகன்கள், அந்தக் குறி அடிக்கப்பட்டு, தரையில் விழுந்ததாகவே நினைத்தனர். ஆனால், கர்ணனைக் கண்ட திரௌபதி சத்தமாக, "நான் ஒரு சூதனை எனது தலைவனாகக் கொள்ள மாட்டேன்." என்றாள். இதைக்கேட்ட கர்ணன், எரிச்சலுடன் சிரித்து, மேல்நோக்கிச் சூரியனைப் பார்த்து, வட்டமாக வளைக்கப்பட்ட வில்லை ஒருபுறமாகத் தூக்கி ஏறிந்தான்.

      மேலும் படிக்க : http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section189.html

      இவளை {திரௌபதியை} இந்தச் சபையின் முன்பு ஒற்றையாடையில் கொண்டு வருவதோ அல்லது அவளது ஆடைகளைக் களைவதோ ஆச்சரியப்பட வேண்டிய செயல் அல்ல. பாண்டவர்கள் கொண்ட செல்வங்களும், அவளும், பாண்டவர்கள் அனைவரும் சுபலனின் மகனால் {சகுனியால்} நீதியுடன் வெல்லப்பட்டனர். ஓ துச்சாசனா, நீதி மொழிகள் பேசும் இந்த விகர்ணன் சிறுவனே. பாண்டவர்களின் உடைகளையும், திரௌபதியின் உடையையும் களைந்து விடு" என்றான் {கர்ணன்}.

      மேலும் படிக்க : http://mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section67.html

      @Duraikumar இப்போதும் நீங்கள் சொல்வது சரி என்று சொல்வீர்களா?

      சூதனைத் தலைவனாகக் கொள்ளமாட்டேன் என்று சொன்னதற்காக, ஆடையைக் களையச் சொல்வது நியாயம்தானா?

      உங்கள் கூற்றுப்படியே அவளை நீங்கள் கெட்டவளாகக் கருதினாலும், அவளது ஆடையை அவிழ்க்க நீங்கள் கூட சொல்ல மாட்டீர்களே... ஆனால் கர்ணன் சொல்கிறான் என்பதைக் கவனிக்கவும்.

      Delete
  26. \\\\\\\\\\\\\\மஹாபாரதத்தில் நேருக்கு நேராக அர்ஜூனனிடம் இருமுறை தோல்வி கண்டிருக்கிறான் கர்ணன்.\\\\\\\\\\\\\

    இந்த நிகழ்வு எந்த இடத்தில் என்று விளக்கவும் அல்லது #இணைப்பு# அளித்தாலும் நன்று.

    ReplyDelete
  27. @Kottai Muthu நீண்ட நாட்களாக இந்தக் கேள்வியைக் காணாதிருந்து விட்டேன்.

    அர்ஜுனன் கர்ணனை கடைசி போரைத் தவிர இரண்டு முறை வென்றிருக்கிறான். இன்னும் சொல்லப்போனால் மூன்று முறை வென்றிருக்கிறான்.

    உதாரணத்திற்கு : http://mahabharatham.arasan.info/2014/08/Mahabharatha-Vanaparva-Section239.html
    http://mahabharatham.arasan.info/2014/12/Mahabharatha-Virataparva-Section54.html
    http://mahabharatham.arasan.info/2014/12/Mahabharatha-Virataparva-Section60.html

    என்ற லிங்குகளைக் காணுங்கள்.

    ReplyDelete