Friday, January 6, 2012

இசைப்புயல் - உண்மையான Oscar நாயகன்!


நம் ஒவ்வொருவருக்கும் அடிமனதில் சில ஆசைகள், தேவைகள், ஏக்கங்கள் இனம்புரியாத என்னென்னவோ இருக்கும்! அது என்ன என்று எங்களுக்கே தெரியாமல் இருக்கும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவற்றை கண்டடையும்போது, அடடா! இதைத்தான் எதிர்பார்த்தோமா?...எனத் தோன்றும்! இது எதற்கும் பொருந்துமல்லவா? இசைக்கும் கூட!

அப்படித்தான் எனக்கும் தோன்றியது....ஏதோ ஒன்று வித்தியாசமாக, இதுவரை உணராத இனம்புரியாத உணர்வு....முதன்முதலாய் 'சின்ன சின்ன ஆசை' பாடல் கேட்டபோது! 

மின்சாரமில்லாத அந்தக் காலத்தில் வீட்டில் இலங்கை வானொலியில், தேநீர்க்கடைகளிலும், அயலவர், உறவினர் திருமண வீடுகளிலும் சக்கை போடு போட்டன ரோஜா பாடல்கள்! பாடல்வரிகளை நான் எப்போதுமே கவனித்ததில்லை. இசை மட்டுமே - இப்போதும்!

அதிலும் எனக்கு 'புது வெள்ளை மழை' அப்படிப் பிடித்துக்கொண்டது! குறிப்பாக அந்தப்பாடலின் பின்னணி இசையே பனிச்சாரலடிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது! சில வருடங்களின் பின்னரே நான் பாடல்காட்சியைப் பார்த்தேன்! (அதே போல் James Horner இன் Titanic theme பாடலில் அலையடிப்பதை உணரலாம்)

ஒரு கட்டத்தில் வெறித்தனமான ரஹ்மான் ரசிகனாக...எல்லாப் பாதையும் ரோமிற்குச் செல்வதைப் போல எந்தப் பேச்சினிடையேயும் ரஹ்மான் வந்துவிட, அப்போது நான் வவுனியாவிலிருந்து யாழ் வந்து பள்ளியில் இணைந்திருந்ததால் 'வவுனியா ரஹ்மான்' என்று வகுப்பில் அழைப்பார்கள்! 

அநேகமாக ரஹ்மானின் 2000 இற்கு முன் வெளியான அனைத்துப் பாடல்களும் மிகவும் பிடித்திருந்தது! பிறகு வந்தது பிடிக்கவில்லை என்று அர்த்தமில்லை முன்பு வந்தது அதிகம் பிடித்தது...இன்றுவரை! அதிலும் ரோஜா, கிழக்குச்சீமையிலே, பம்பாய், இந்தியன்,  ஜீன்ஸ், முதல்வன், தேசம் படங்களின் பின்னணி இசை, டைட்டில் இசை என்றும் புதிதாகவே!

குறிப்பாக இந்தியன் படத்தில் சுதந்திரப் போராட்ட காலத்துக்கு வரும் பின்னணி இசை, 'கப்பலேறிப் போயாச்சு' பாடலின் ஆரம்பத்தில் ஒலிக்கும் புல்லாங்குழல் இசை ஏற்படுத்தும் உணர்வுகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது, படத்துடன் பார்க்கும்போது சிலிர்க்க வைக்கும்! அதுபோலவே பச்சைகிளிகள் தோளோடு பாடலின் ஆரம்பத்தில் T.L மகராஜன் குரலில் வரும் 'தன்னானானே' ஹம்மிங்!

கிராமிய இசை என்று சொல்லும்போதும் ரஹ்மான் இசையமைத்த பாடல்களே என்றும் உடனே நினைவுக்கு வருகின்றன. கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா படங்களில் வரும் பாடல்களும், பின்னணி இசையும் மறக்க முடியாதவை. ஷாகுல் ஹமீத், T.L மகராஜன் குரல்களில், புல்லாங்குழல் இசையும் கலந்து மிக அற்புதமாக அமைந்திருக்கும்.

குழந்தைகள் பாடுவது போன்ற பாடல்களில் உண்மையிலேயே குழந்தைக் குரலைப் பதிவு செய்தவர். எஸ்.ஜானகியை வைத்து மிமிக்ரி செய்யும் கொடுமையான அனுபவத்திலிருந்து மீட்டெடுத்தவர் ரஹ்மான்.

பாரதிராஜா குரலில் கூட இனிமையான ஒரு பாடலை, சோகத்தைச் சொல்லும் உணர்ச்சிகரமான பாடலைக் கொடுக்க முடியுமா? கருத்தம்மா படத்தில் இடம்பெற்ற 'காடு போட்டால் காடு' பாடலை மலேசியா வாசுதேவனுடன் இணைந்து பாரதிராஜா! எனக்கு மிகப் பிடித்த மற்றுமோர் பாடல்!

எம். எஸ். வி. குரலில் 'விடைகொடு எங்கள் நாடே' - இந்தப் பாடல் ஏற்படுத்தும் உணர்வலைகளை என்னதான் பெரிதாக விளம்பரப் படுத்தப்பட்டபோதும் எந்த ஈழத்தமிழர் உணர்வு சொல்லும்(?!) பாடல்களும் நெருங்க முடியவில்லை. அதுபோல ஸ்வதேஷ் (தேசம்) படத்தில் இடம்பெற்ற 'எந்தன் தேசத்தின் குரல்' பாடலும், அதற்குப் பயன்படுத்தப்பட்ட ஷெனாய் இசையும், தாய்மண்ணைப் பிரிந்திருக்கும் எவரையும் உருக வைக்கும்!

சமீப கால ரஹ்மானின் பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்தது, 'ஓமனப் பெண்ணே' பாடல்! எத்தனை முறை கேட்டபோதும் அலுக்கவில்லை. முதல் இன்டர்லூட்டில் வரும் அந்தப் பெண்குரல், இசை ஓர் அற்புதம்! இன்னும் நிறைய இருக்கு! ஒரு தொடராகவே எழுதலாம்!

எனது நண்பன் பார்த்தியும் ஒரு தீவிர ரஹ்மான் ரசிகன்/வெறியன்! இருவரும் சந்தித்துப் பேசும்போது பெரும்பகுதி பேச்சு இசை, ரஹ்மான் பற்றியே! நாங்கள் ரசித்த ரஹ்மானின் ஒவ்வொரு பாடல் பற்றியும், அதில் வரும் சின்ன சின்ன இசை நுணுக்கங்கள் பற்றியும் வெள்ளவத்தை கடற்கரையில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம். பேச்சு சுவாரஸ்யத்தில் இரண்டு முறை அருகில் ரயில் வரும்வரை கவனிக்காமல்!


பிடித்த பாடல்களைக் கேட்டுக்கொண்டே வேறு வேலைகளைச் செய்தல் என்பது என்னளவில் சாத்தியமாவதில்லை! இசையைக் கவனிப்பதும் கரைந்து போவதுமே என்னியல்பு! அதிக சத்தம் பிடிக்காது. ஓசைகள் அடங்கிய ஆழ்ந்த இரவுகளில் எனது அறையை மட்டுமே நிரப்பும் 5.1 surround ஒலியில்...நிசப்தமான பின்னிரவில் 'புத்தம் புது பூமி வேண்டும்' கேட்பது மிகவும் பிடிக்கும். இது யாழ்ப்பாணத்தில் இருந்தவரை மட்டுமே! நாடோடியாய் மாறியபின் mp3 player இல் ஒடுங்கிக்கொண்டது என் இசை.

என் தனிமை, சந்தோஷம், சோகம், உற்சாகம் எல்லாவற்றிலும் என்னோடு பயணம் செய்யும் என் இன்னொரு நிழலாக இசை...அதுவும் குறிப்பாக ரஹ்மானின் பின்னணி (BGM) இசை! 

என் உற்சாகமான பொழுதுகளிலும் , காலையில், இளந்தேன்றல் வீச, நடந்து செல்லும்போதும் இயல்பாகவே எனக்குள் 'முதல்வன் தீம் மியூசிக்' ஒலிக்க ஆரம்பித்து விடுகிறது எனக்குமட்டும் கேட்க!

ஆரம்பகாலத்தில் ஏராளமான விமர்சனங்களை எதிர்கொண்டு அமைதியாக தன் திறமையை நிரூபித்தபோது, குற்றம் சாட்டியவர்கள் அமைதியான போதும், ஆஸ்கர் கிடைத்தபோது பலரும் தங்கள்  இயலாமையை, வயிற்றெரிச்சலை  வித விதமாக வெளிக் காட்டிக் கொண்டார்கள்! வழமை போலவே இது எதையும் கண்டுகொள்ளாமல் தனது வழியில் ஏ.ஆர்.ரஹ்மான்!

எளிமை, தன்னடக்கம், இறைநம்பிக்கை இவற்றின் வடிவமான இசைப்புயலின் 46 ஆவது பிறந்தநாளில் அவர் மேன் மேலும் சாதனைகளைப் படைக்க வாழ்த்துவோம்!   

23 comments:

 1. ரகுமான் இசையை ரசித்தவிதத்தை நன்றாகவே சொன்னீர்கள்..இளைய ராஜாவிற்கு பிறகு பெயர் சொல்லும் ஒரு இசையமைப்பாளர் இவர்..ஆஸ்கர் மூலம் தமிழுக்கு பெருமை சேர்த்தவர்..

  இசைப்புயலின் 46 ஆவது பிறந்தநாளில் அவர் மேன் மேலும் சாதனைகளைப் படைக்க வாழ்த்துவோம்! நிச்சயமாய்..

  ReplyDelete
 2. ரஹ்மான் - சரியான இசை ஆளுமை. இவற்றுக்கு மேலக என்னால் எதுவுமே சொன்னாலும், அது அதற்கு முன் அடிபட்டுப் போகும்!

  ReplyDelete
 3. உண்மை தான் தன்னுடைய அமைதியான வழியின் மூலம் விமர்சனங்களை புறம் தள்ளியவர்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. Happy b'day Rahman sir.
  சமீபத்தில் வந்துள்ள ரஹ்மானின் "ராக்ஸ்டார்" பட ஆல்பமும், படத்தின் பின்னனி இசையும் அற்புதம் வார்த்தையால் விவரிக்க முடியாது...

  ReplyDelete
 5. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

  http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

  ReplyDelete
 6. புது வெள்ளை மலை இங்கு பொழிகின்றது//

  அடடா அந்தப்பாட்டு இப்போது கேட்டாலும் மனம் இனிமையாக துள்ளுகிறதே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...!!!

  ReplyDelete
 7. Nice post @ good time.. :)

  ReplyDelete
 8. புது வெள்ளை மழை பாடலை அந்த காலகட்டத்தில் நானும் அப்படித்தான் கேட்டுக் கொண்டிருந்தேன். அற்புதமான இசை...!

  ReplyDelete
 9. ரஹ்மானின் மாஸ்டர்பீஸ் என்று நான் கருதுவது திருடா திருடா பாடல்கள்தான். பாடல்கள் ஒவ்வொன்றுமே தனித்துவம் மிக்கவை, அதில் இருந்த ஃப்ரெஷ்னஸ், ஃபீல் சான்சே இல்ல. புத்தம் புது பூமி பாடலை நானும் பலமுறை பின்னிரவுகளில் திரும்ப திரும்ப கேட்டிருக்கிறேன். கேட்க கேட்க அதே உணர்வைத்தரும்!

  ReplyDelete
 10. ரஹ்மானை வாழ்த்துவதில் உங்களுடன் இணைந்து கொள்கிறேன்!

  ReplyDelete
 11. ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கான அர்ப்பணிப்பு :) வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. படித்தேன் ரசித்தேன்!
  அண்ணனுக்கு நன்றி.

  ReplyDelete
 13. கோடானு கோடி வாழ்த்துக்களுடன் அடியேனின் சிறு பிறந்தநாள் வாழ்த்துக்களும் இணையட்டும்.

  சமீபத்தில் எனக்கு மிகவும் பிடித்தது விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தில் வரும் ”மன்னிப்பாயா”? என்னதான் இருந்தாலும் அந்த இசையும் சின்மயியின் வசீகர குரலும் யாரையும் கிறங்கவைக்கும்.

  ஆனால் என்ன தான் இருந்தாலும் ரஹ்மானின் பழைய பாடல்கள் கொடுக்கும் பீலிங்கை தற்போதைய பாடல்கள் கொடுக்காதது ஏன்?

  ReplyDelete
 14. சந்தோஷமான விசயம்...அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்களின் பதிவின் வழியாக ))

  ReplyDelete
 15. காடு பொட்டக் காடு, விடை கொடு எங்கள் நாடே.... சான்சே இல்ல சார்..

  பதிவு சூப்பர்....

  ReplyDelete
 16. //எளிமை, தன்னடக்கம், இறைநம்பிக்கை இவற்றின் வடிவமான இசைப்புயலின் 46 ஆவது பிறந்தநாளில் அவர் மேன் மேலும் சாதனைகளைப் படைக்க வாழ்த்துவோம்! //

  இணைந்து வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 17. ஜீ...இப்போதுகூட அவரின் “தீயில் விழுந்த தேனா...”அம்மாப் பாட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.என் வாழ்த்தும் அவருக்கு.தமிழில் நிறைவான பாடல்கள் தரக் கேட்டுக்கொள்வோம் !

  ReplyDelete
 18. ரகுமானை மட்டுமே கொண்டாடும் புதியதொரு 'கல்ட்' உருவாகிறது என்று நினைக்கிறேன். அது ஒருபுறமிருக்க இப்போதைய தமிழ்மணத்தின் நட்சத்திரப் பதிவுகளில் என்னுடைய 'இளையராஜாவா..ரகுமானா?' பதிவில் ரகுமானைப்பற்றி இப்படி எழுதியிருக்கிறேன்.

  'ரகுமானுக்கு இன்றைய நிலையில் கிடைத்திருக்கும் பரிசுகளும் சரி அங்கீகாரங்களும் சரி புகழ்வெளிச்சங்களும் சரி அவருடைய உழைப்பிற்கும் திறமைக்கும் கிடைத்திருக்கும் அங்கீரங்களாக அவை கருதப்பட்டாலும் வேறொரு பக்கத்திலிருந்து ஒரு வகையான முணுமுணுப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.இளையராஜாவை இசையின் கடவுளாகக் கொண்டாடுகின்றவர்களின் சார்பாக வரும் முணுமுணுப்பு அது. இந்த முணுமுணுப்பு நியாயமானதுதானா, ரகுமானுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் நியாயமானதுதானா என்பதையெல்லாம் அலசுவதற்கு முன்னால் இந்தியாவில் எந்த ஒரு இசையமைப்பாளருக்கும் கிடைக்காத அங்கீகாரமும் அதைச் சார்ந்த பரிசுகளும் அதற்கேற்ற புகழ்வெளிச்சமும் கோடானுகோடி பணமும் ரகுமானுக்குக் கிடைத்திருப்பதை நாம் முழு மனதுடன் ஒப்புக்கொண்டாகவேண்டும். அதைவிட முக்கியம் இத்தனைப் புகழ்வெளிச்சம் தம்மீது விழுந்திருக்கும் நிலையிலும் துளிக்கூட ஆர்ப்பாட்டமோ,அலட்டலோ,கர்வமோ,ஆணவமோ இல்லாமல் அதனை ஒரு சின்னச்சிரிப்புடன் ஏற்றுக்கொள்ளும் ரகுமானின் பெருந்தன்மை. அவ்வளவு சாதாரணமாக எந்த ஒரு மனிதரிடத்தும் அல்லது எந்த ஒரு கலைஞரிடத்தும் காணமுடியாத மிக அரிய பண்பு இது.அற்புதமானதொரு குணம் இது. இந்த ஒன்றிற்காகவே ரகுமானுக்கு இன்னமும் நூறு ஆஸ்கார்களும்,நூறு கிராம்மிகளும் தரலாம்' என்று எழுதியிருப்பதை ரகுமான் ரசிகர்களிடம் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்.

  ReplyDelete
 19. தொழில் மீது கொண்ட மாறாத பக்தியும் எந்த நிலையிலும் மாறாத தன்னடக்கமுமே அவரது இந்த நிலைக்கு முக்கிய காரணம். அருமையான பதிவு.

  ReplyDelete
 20. ரகுமானுக்கு வாழ்த்துக்கள்! இப்பொது ரகுமானின் இசையில் பழைய அற்புதங்கள் இல்லையென்பதுபோல் உணர்வது தவிர்க்கமுடியாதது. இப்போதுள்ள ரெண்டில் இப்படியான வெஸ்ரேன சாயல் அடிக்கும் பாடல்கள் தவிர்க்கமுடியாதது!!

  ReplyDelete
 21. கருத்தம்மா பெஸ்ட் சாய்ஸ்

  ReplyDelete
 22. அட, நம்மாளு... இந்த பையனும் நல்லாதான்யா இசை அமைக்கிறான்... பதிவில் விட்டுப்போனத்தில் எனக்கு மிகவும் பிடித்தது இருவர், மே மாதம்... சான்சே இல்ல,

  ReplyDelete
 23. //பழைய பாடல்கள் கொடுக்கும் பீலிங்கை தற்போதைய பாடல்கள் கொடுக்காதது ஏன்?//

  //இசையில் பழைய அற்புதங்கள் இல்லையென்பதுபோல் உணர்வது//


  யுவராஜ்,கஜினி,டெல்லி 6, ஜானே து யா ஜானேனா இப்படங்களின்
  பாடல்களை யாருமே கேட்கவில்லையா. நீங்கள் பட்டியலிட்ட‌
  அத்தனையும் விட TOP MOST டாச்சே

  ReplyDelete

Followers

Blog Archive

Powered by Blogger.

Archives

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |