Thursday, January 12, 2012

நண்பன்!



ரோஜருக்கு ஹெல்மெட் அணிவது பிடிக்காது!

சரியாகச் சொன்னால் ஹெல்மெட் அணிந்தவர்களைப் பிடிக்காது! ரோஜரை யாரும் ஹெல்மெட் அணியச் சொன்னதாகவும் தெரியவில்லை.


எந்த நாட்டிலாவது நாய்களுக்கு ஹெல்மெட் அணிவிக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா என்ன!

ரோஜர் விரோதமாகக் குரைத்துக் கொண்டிருந்தது! தாத்தா தான் சொன்னார் அனுடைய ஹெல்மெட் பிரச்சினை பற்றி! 

'ஹெல்மெட் போடாம வந்தா அண்ணாவ போலீஸ் பிடிச்சிடுவாங்களே!' 
(அண்ணாவா? ஆகா!)
தாத்தா சமாதானப் படுத்த, 'தம்பி' ஒரு மாதிரி அடங்கி முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தாத்தாவும், பாட்டியும் மட்டுமே அந்தப் பெரிய வீட்டில். பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில்! ரோஜர்தான் இப்போ அவர்களுக்கு பிள்ளை மாதிரி!

அவன் காலைல இருந்து சாப்பிட வேற இல்லையாம். சொல்லிக்கொண்டே தாத்தா தட்டில் சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்தார். முற்றத்தில், நிழலில் படுத்திருந்த ரோஜர் நிமிர்ந்து பார்த்துவிட்டு எனக்குச் சம்பந்தமில்லை என்பதுபோல் பேசாமல் இருந்தான்.

பாட்டி வந்து 'ரோஜர் சாப்பிடுங்கோ!'
'அம்மா சொல்லிட்டாதானே சாப்பிடுங்கோ! அச்சாப் பிள்ள!' -தாத்தா.
ரோஜர் சாப்பிடத் தொடங்கினான்.

'அம்மா சொன்னாத்தான் சாப்பிடுவான். இல்லாட்டி அப்பிடியே பாத்துட்டிருப்பான்!' - தாத்தா.

நாய்களும் பலநேரங்களில் குழந்தைகள் போலவே இருக்கின்றன. கொஞ்சல், பிடிவாதம், செல்லக்கோபம், ஈகோ எல்லாம் அவற்றுக்கும்! தன்னைக் கவனிக்க வேண்டும், தனக்கு முன்னுரிமை தரவேண்டும் என்றும்கூட நினைப்பதாக சமயங்களில் உணரமுடிகிறது!

************

மதியம் சாப்பிடும்போது என்னைக் கொஞ்சம் முறைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தவுடன், சின்ன வயதில் ஒவ்வொருநாள் காலையிலும் ரேடியோவில் கேட்கும் தென்கச்சி கோ.சுவாமிநாதன் கூறிய நகைச்சுவை அசந்தர்ப்பமாக நினைவுக்கு வந்தது!

'ஏங்க உங்க நாய் என்னை முறைச்சுப் பாத்துட்டே இருக்கு?'
'அதை விடுங்க! அதுக்கொரு கெட்ட பழக்கம். அதோட தட்டில யார் சாப்பிட்டாலும் அதுக்குப் பிடிக்காது!'

வழக்கமா முதலில ரோஜருக்கு சாப்பாடு வைச்சுட்டுத்தான் தாத்தா சாப்பிடுவாராம். இன்றைக்குப் புதுசா வந்த ஒருத்தனுக்கு முதல்மரியாதை செய்துட்டாங்களே என்ற ரோஜரின் கோபம் நியாயமாகவே பட்டது!

ரோஜருக்கு சிக்கன் பிடிக்கும் என்பதாலேயே சிக்கன் சமைப்பதாகச் சொன்னார்கள். சாப்பிட்டுக் கொண்டிருந்த ரோஜருக்கு சிக்கன் துண்டுகளை எடுத்துப் போய் போட்டேன். நிமிர்ந்து பார்த்தான்!

'பாத்தியா அண்ணா சிக்கன் எல்லாம் தர்றான்! நீதான் அவனோட கோவிக்கிற!' -பாட்டி!

பாட்டி சொன்னது ரோஜருக்குப் புரிந்திருக்க வேண்டும். கொஞ்சம் சிநேகமாகிட்டான். சாப்பிட்டு முடித்ததும், பக்கத்தில வந்து பார்த்துக் கொண்டிருந்தான். தொட்டுப் பார்க்கலாமா? உள்ளூர பயமாயிருந்தது.

முதன்முதல் பழகும்போது,நாய்களைத் தொடும்போது தலையில் தொடக்கூடாதாம்.தோள்களைத் தொடுவதே சைக்காலஜிக்கலா நல்லது என்று எப்போதோ படித்தது ஞாபகம் வந்தது.

தோள்களைத் தொடும்போது நாமும் அவற்றுக்கு சமமாக, ஒரு நண்பன் போல எண்ணத்தைத் தோற்றுவிக்கும். மாறாக தலையைத் தொடும்போது (எஜமானன் தவிர புதிதாகப் பழகும்போது நாம் அவற்றை அடிமைப் படுத்துவதைப் போல தவறான எண்ணத்தைத் தோற்றுவிக்கும் என்கிறார்கள்.

மெதுவாகத் தோளைத் தொட, தலையைத் திருப்பி கையை நக்கி, ஏதோ சொல்ல வருவது போல மெல்ல அவனுடைய பாஷையில் முனகினான்.

************

ரோஜர் நிலைகொள்ளாமல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். பாட்டி சொன்னார், 'வழக்கமாக சாப்பிட்டதும் பாட்டி ஒரு குட்டித்தூக்கம் போடுவாராம். அந்த நேரத்தில் பாட்டியின் கட்டிலுக்கு அருகில் ரோஜரும் தரையில் தூங்குவானாம்.

இன்று பாட்டி தூக்கத்தைத் தவிர்த்ததால் ரோஜர் டென்ஷனாகிட்டான். அவனுக்கு ஒன்றும் கதை சொல்லவேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும், மின்விசிறி கட்டாயம் வேண்டுமாம். பாட்டி விசிறியைச் சுழலவிட, சமர்த்தாகத் தூங்கப் போனான் ரோஜர்.

மனிதர்களைப் புரிந்து கொள்வதில், நல்ல நண்பனாக நடந்துகொள்வதில் நாய்களுக்கு எப்போதும் சம்மதமே. ஏனெனில் வேட்டையாடிய காலம்தொட்டே அவை மனிதனோடு நெருங்கிய உறவைப் பேணி வருபவை.

இந்த விஷயத்தில் பூனைகளை எடுத்துக்கொண்டால், அவை மனிதனை தமக்கு சமமானவர்களாக நினைப்பதில்லையாம். இயல்பாகவே அவற்றுக்கு இருக்கும் தாம் புலிக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கெத்து, பந்தா இதற்குக் காரணமாயிருக்கலாம்.

நாம் ஒரு நாயைக் கூட்டிக்கொண்டு வாக்கிங் சென்றால் நாய் புரிந்து கொள்ளும் தன்னை நாங்கள் கூட்டிச் செல்கிறோம் என்று. இதுவே ஒரு பூனையைக் கூட்டிச் சென்றால் அது நினைத்துக் கொள்ளுமாம் 'நான்தான் இவனைக் கூட்டிச் செல்கிறேன்' என!

பூனை நம்மீது வந்து உரசுவதுகூட பாசத்தினால் அல்ல. இவன் நம்மாளு என்று காட்டுவதற்குத்தான் என்கிறார்கள்.

************

அலார்ம் வைக்காமலே நாலு மணிக்கு சரியா எழும்பி வந்தான். அது டீ டைம்னு தெரிஞ்சிருக்கு அவனுக்கு! ரோஜர் டீ குடிப்பதில்லை போலும்! தாத்தா நான்கைந்து பிஸ்கட்டுகளை (மனுஷ பிஸ்கட்தான்) உடைத்து ஒவ்வொன்றாக ஊட்டிவிட்டார்.

கையிலிருந்த பிஸ்கட்டுகள் தீர்ந்ததும் ' முடிஞ்சு போச்சு ஆ' கைகளை விரித்து குழந்தைகளுக்குச் சொல்வது போல சொல்ல,  ரோஜர் 'பே' ன்னு பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, மௌனமாக வெளிநடப்பு செய்தான்!   

ரோஜரை அவர்கள் ஒரு பிள்ளையாகவே பார்க்கிறார்கள்! ரோஜருக்காக விசேஷமாக உணவு தயாரிக்கிறார்கள்! அவனுக்காக வெளியூர்ப் பயனங்களை முடிந்தவரை தவிர்க்கிறார்கள்! அவனுடன் பேசும்போது தங்களை அம்மா, அப்பா என்றே சொல்லிக் கொள்கிறார்கள். அவர்கள் பேசுவதையெல்லாம் அவனும் புரிந்துகொள்கிறான். பிள்ளைகளைப் பிரிந்து தனிமையில் வாழும் அவர்களுக்கு இப்போது அருகிலிருக்கும் ஒரேயொரு உறவாக!

திரும்பி வரும்போது ரோஜர் ஒரு நண்பனை வழியனுப்புவதுபோல கேற்றில் வந்து பார்த்துக்கொண்டு நின்றான். அவனுக்கு முன்னால் ஹெல்மெட் அணியாமல் டாட்டா காட்ட ரோஜர் சிநேகமாக பார்த்துக் கொண்டிருந்தான். ரோஜர்களும், அவனின் அம்மா, அப்பாக்களும் எங்கும் நிறைந்திருக்கிறார்கள்!
   

17 comments:

  1. ரோஜர்களும், அவனின் அம்மா, அப்பாக்களும் எங்கும் நிறைந்திருக்கிறார்கள்!
    நட்புணர்வு நிரம்பிய பகிர்வு.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. ////திரும்பி வரும்போது ரோஜர் ஒரு நண்பனை வழியனுப்புவதுபோல கேற்றில் வந்து பார்த்துக்கொண்டு நின்றான். அவனுக்கு முன்னால் ஹெல்மெட் அணியாமல் டாட்டா காட்ட ரோஜர் சிநேகமாக பார்த்துக் கொண்டிருந்தான். ரோஜர்களும், அவனின் அம்மா, அப்பாக்களும் எங்கும் நிறைந்திருக்கிறார்கள்!////

    இந்த வரிகளை விட எப்படி பெரிதாகச் சொல்லிவிட முடியும்.

    நண்பன்! நண்பன்!! நண்பன்!!! எப்போதுமே நல்ல நண்பனாக இருக்கிறார்கள் ரோஜர்கள்!!!

    ReplyDelete
  3. நிச்சயமாய்..இதை படிக்கும்போது அருகிலிருக்கும் நாய் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்களே வாரிசுகள் அருகில் இருந்தால் இன்னும் எத்தனை பாசத்தை பெற்றவர்கள் செலுத்துவார்கள்..என்ன தான் பொருள் ஈட்டினாலும் பாசத்தை மகன்களால் ஈட்ட முடியுமா? நல்ல பதிவு சகோ..வாழ்த்துகள்..வாசித்தேன்..வாக்கிட்டேன்..நன்றி..

    ReplyDelete
  4. //ரோஜர் சிநேகமாக பார்த்துக் கொண்டிருந்தான்.//

    சிலர் யோசிக்கலாம் என்ன அவன் இவன் என்று அழைக்கிறார்களே என்று .
    இப்படிதான் எங்க வீட்ல நாங்க கூபிடுவோம் .நீங்க சமீபத்தில் டிவியில் ஒரு காணொளி பார்த்தீர்களா சைனாவில் ஒரு சடை வகை குட்டிரோஜர் ஸ்டேஷனில் தொலைந்துபோன /தொலைத்து போன ஒனருக்காய் தினமும் காத்திருக்கு .மனிதர்களுக்கு சக மனிதரே நண்பராய் இல்லாதபோது .நாலுகால் ஜீவன்கள் காட்டும் அன்பு great

    ReplyDelete
  5. சில சமயங்களில் சொந்தங்கள், பந்தங்கள் போன்ற மனிதர்களை விட ரோஜர் போன்ற ஒரு அன்பான நல்ல நண்பன் கிடைத்தாலே போதும் என நினைக்கவைக்கிறது இந்த உலகம்.

    ReplyDelete
  6. ஹாய் ஜீ,
    சுவாரசியமான ரசனையான பதிவு.. உங்களை வேற அவருக்கு(?) அண்ணா ஆக்கிட்டாங்க.. சந்தோசம் :)

    ReplyDelete
  7. நண்பன் தலைப்பை இப்பத்தான் வைக்கணுமா..!! நான் நண்பன்பட விமர்சனம்னு வந்து பாத்தா நாய் கதை... ஹா...ஹா..ஹா...

    ReplyDelete
  8. நல்லதொரு நண்பன் பற்றிய விமர்சனம்.நன்றி ஜீ !

    ReplyDelete
  9. வணக்கம் ஜி!அருமையான நட்புக் கதை!மெய்மறந்து வாசித்தேன்!வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  10. பாஸ் நான் நண்பன் விமர்சனம் என்று நம்பிவந்தேன் பல்பு வாங்கிட்டேன்

    ReplyDelete
  11. K.s.s.Rajh said...

    பாஸ் நான் நண்பன் விமர்சனம் என்று நம்பிவந்தேன் பல்பு வாங்கிட்டேன்///இந்தாளுக்கு இதே பொழைப்பாப் போச்சு!!!

    ReplyDelete
  12. //Yoga.S.FR said...
    K.s.s.Rajh said...

    பாஸ் நான் நண்பன் விமர்சனம் என்று நம்பிவந்தேன் பல்பு வாங்கிட்டேன்///இந்தாளுக்கு இதே பொழைப்பாப் போச்சு!!!//

    ஆகா! என்ன பாஸ் இப்பிடிச் சொல்லிட்டீங்க! படம் பாத்துட்டு எழுத முயற்சிக்கிறேன்!

    ReplyDelete
  13. உண்மை தான் மாப்ள...எனக்கும் தனிப்பட்ட ஒரு experience இருக்கு...நானும் பதிவா போடுரேன்!

    ReplyDelete
  14. விஜய் மேல் உங்களுக்கு என்ன கோவம்? இப்படி தலைப்பு வச்சு பழி வாங்கிட்டீங்க

    ReplyDelete
  15. ந்ண்பன் நல்ல நண்பன்! நல்ல பதிவு!
    http://vethakannan.blogspot.com/

    ReplyDelete
  16. நல்ல நண்பன் வேண்டும் என்று அந்த "ரோஜெர்"ம் நினைகின்றதா?

    ReplyDelete
  17. வணக்கம் நண்பா, செல்லப் பிராணிக்கு மனிதர்களைப் போல ராஜமரியாதை கொடுத்து வளர்க்கும் பெரியவர்களைப் பற்றியும், பிராணியின் அண்ணனான நம்ம ஜீயினைப் பற்றியும் பாச உணர்வுகளைத் தாங்கிய பதிவு சிறப்பாக இருக்கிறது.

    ReplyDelete