Wednesday, November 16, 2011

Schindler's List - மேலும் சில!

Oskar Schindler


ஷிண்ட்லெர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு வெற்றிகரமான மனிதனல்ல. மண வாழ்க்கையில் தோல்வி! தான் எடுத்துக் கொண்ட எந்தத் தொழிலிலும் பெரியளவில் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் பொது வாழ்க்கையில் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மாமனிதனாக உயர்ந்து நிற்கிறார். அதற்கு காரணம் தன்னலமற்ற மனித நேயமும், அன்புமே!


திரைப்படம் பற்றி! Schindler's List

ஆரம்பத்தில் சுயநலமியாக, ஆடம்பரப் பிரியராக, பணம் சம்பாதிப்பதை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த ஷிண்ட்லெர், பின்னர் தனது சொத்து முழுவதையும் இழந்தாவது தன்னால் முடிந்தளவு யூதர்களைக் காப்பாற்றுவேன் என எடுக்கும் முடிவே, இன்றும் யூதர்களின் மனதிலும், வரலாற்றிலும் அவருக்கு ஒரு தனி இடத்தைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது!

Amon Goeth

கொடியவனான நாஜிப்படை அதிகாரி அமான் கோத்திடமிருந்து தனது தொழிலாளிகளைக் காப்பாற்றுவதற்கு அவனுடன் பேரம்பேசி பெரும் விலை கொடுத்து, மிகுந்த சிரமங்களைக் கடந்து இறுதியில் 1200 பேரைக் காப்பாற்றுகிறார்.

போரின் இறுதிக்கட்டத்தில் யூதர்களுக்காக ஷிண்ட்லெர் தனது சொந்த ஊரான Moraviaவில் தொடங்கிய டாங்கி எதிர்ப்பு ஆயுதத் தொழிற்சாலை பெயரளவிலேயே இயங்கியது. போர் முடியும்வரை ஏழு மாதங்கள் உருப்படியான எந்த உற்பத்தியும் நடைபெறவில்லை. அது முழுக்க முழுக்க நாஜிக்களை ஏமாற்றி,யூதர்களைக் காப்பாற்றும் நோக்கத்திலேயே அமைக்கப்பட்டது!

ஷிண்ட்லரின் ஆயுதத் தொழிற்சாலை, Moravia, Poland.

முடிந்தவரை குடும்பமாக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், கைகால் இழந்தவர்கள் எனப் பாகுபாடில்லாமல், தொழிற்சாலையில் வேலைக்கென்று(?!) வைத்திருக்கும் ஷிண்ட்லெர் அது பற்றி நாஜிப் படையினர் கேள்வி எழுப்பும் போதெல்லாம் ஏதாவது விளக்கம் கொடுத்து வாயை அடைத்துவிடுகிறார். 

குழந்தைகள் எதற்காக என நாஜிப் படையினர் கேட்கும்போது, 'செல்களின் உட்புறச் சுவரை சுத்தம் செய்ய அவர்களின் பிஞ்சுக் கைகளாலேயே முடியும்' என்கிறார்!

அங்கு எந்த யூதரும் கொல்லப்படாமல் பாதுகாக்கிறார். அதுபற்றி முதலியேயே காவலுக்கு இருக்கும் நாஜிப்படைகளிடம் எச்சரித்துவிடுகிறார். 'இங்கு உள்ள ஒவ்வொருவரும் எனக்குத் தேவை! நீங்கள் யாரையாவது கொல்லும் பட்சத்தில் அவர்களுக்கனா தொகையை அமான் கோத் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும்! ஆகவே ஒழுங்காக நடந்துகொள்ளுங்கள்!'


அமான் கோத்தின் மாளிகை!

அமான் கோத் அந்த பல்கனியில்தான் ஒவ்வொரு நாள் காலையிலும் வந்து நின்று தனது தொலை நோக்கித் துப்பாக்கியால் சுடுவானாம்! குறைந்தது ஒருவரையாவது கொள்ளாமல் அவன் காலை உணவு உட்கொண்டதில்லையாம்!

யூதர்களின் பரம வைரிகளாக கருதிய, நடந்துகொண்ட நாஜிகளில் யூதர்களின் மனங்களை வென்ற, உயர்ந்த மரியாதையைப் பெற்ற (இப்படி வேறு சிலரும் இருந்திருக்கலாம் வெளியுலகத்திற்குத் தெரியாமல்) நாஜியான ஷிண்ட்லரின் உடல் அவர் வேண்டுகோளுக்கிணங்க யூதர்களின் புனிதப் பிரதேசமான ஜெருசலேமில் விதைக்கப்பட்டது!


ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் படத்தின் இறுதிக்காட்சிக்கான படப்பிடிப்பில், அவரின் மனைவி எமிலி, நடிகர் Liam Neeson,  ஷின்ட்லெரால்  காப்பாற்றப்பட்ட யூதர்கள் மற்றும் அவர்கள் வழித்தோன்றல்கள் ( Schindler 's Jews ) ஜெருசலேமில் அவரின் சமாதியருகே!


இந்த உலகம் உள்ளவரை, மனிதநேயமும், அன்பும் உயிர்ப்புடன் வாழும்வரை ஷிண்ட்லர் நினைவுகூரப்படுவார், மனிதர் மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்!


Steven Spielberg


ஸ்பில் பேர்க்கின் அநேகமான எல்லாப்படங்களிலும், பிரம்மாண்டம், பிரமிப்பு என்பதைத் தாண்டி அடிநாதமாக ஒரு விஷயம் இழையோடியவாறு இருக்கும் அது - அன்பு! ஜுராசிக் பார்க் திரைப்படம் வரமுன்பு, அவரது மிகப் புகழ்பெற்ற படைப்பான E.T. ( The Extra Terrestrial ) யில் முழுக்க முழுக்க விரவிக் கிடப்பது அன்புதான்! அதன்பின்பே பிரமாண்டமும், கிராபிக்சும்!

எத்தனையோ படங்களில் பிரமாண்டங்களாலும்,கணனித் தொழில்நுட்பத்தாலும் பேரைச் சொன்னதுமே ஒரு ரசிகனின் மனத்திரையில் தோன்றுவது கிராபிக்சும், ஆச்சரியங்களும் கலந்த பிரம்மாண்டமான படைப்புகளே! ஆனாலும் ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் அவரது பாணியிலிருந்து மாறுபட்டு, காலத்தால் அழியாத காவியமாக நிற்கிறது. அவரது மாஸ்டர் பீஸ் என்று நான் நினைக்கிறேன்.

ஒவ்வொரு நல்ல படைப்பாளிக்கும் வெற்றி, பணம் , புகழ், அங்கீகாரம் தவிர்ந்து, தனது மனதிற்கு திருப்தி தரக் கூடிய தனது உச்சகட்ட படைப்பொன்றை உருவாக்கவேண்டுமென்ற ஆவல் இருக்கும்!

தனது மனச்சாட்சிக்கு நேர்மையாக, தான் சார்ந்த சமூகத்திற்கு தனது படைப்பால் உச்சபட்ச மரியாதையை அல்லது ஏதோ ஒரு வகையிலான வரலாற்றுச் சிறப்பினை எடுத்துச் சொல்லும் பங்களிப்பினை வழங்க வேண்டுமென்ற நியாயமான ஆர்வம் ஒரு நல்ல கலைஞனுக்கு இருக்கும் - இருக்கவேண்டும்!

அந்த வகையில் பிறப்பால் ஒரு யூதரான ஸ்பில்பேர்க் இந்தப் படத்தின் மூலம் தான் சார்ந்த யூத சமுதாயத்துக்கு தன்னாலான உச்சபட்ச மரியாதையையும், தன் கலையினூடான மிகச்சிறந்த பங்களிப்பையும் வழங்கிவிட்டார். கூடவே ஒரு மாமனிதனை கோடிக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்!
       

14 comments:

  1. இந்த படத்தை உலகத் தரமான படம் என்று கூறுவதால் , பலர் இதை பார்க்க வேண்டுமே என்று பார்த்திருப்பார்களே ஒழிய, நம்மை போல் ஊன்றி அமர்ந்து பார்த்திருக்க மாட்டார்கள்... ஒவ்வொரு நொடியும் கடக்கும் மரண பயத்தை அந்த திரைகளில் நேரடியாக உணர்வது போன்ற காட்சியமைப்பே இந்த திரைப் படத்தின் வெற்றி...

    ReplyDelete
  2. நன்றி ஜீ.போன பதிவின் படத்திற்கு இணைப்புத் தந்திருந்தீர்கள்.அங்கேயே இதையும் பார்த்துக்கொள்ளமுடியும்தானே !

    ReplyDelete
  3. //ஹேமா said...
    நன்றி ஜீ.போன பதிவின் படத்திற்கு இணைப்புத் தந்திருந்தீர்கள்.அங்கேயே இதையும் பார்த்துக்கொள்ளமுடியும்தானே //
    இல்லை! அந்த இணைப்பில் படம் மட்டுமே!
    இது உண்மையான ஷிண்ட்லெர் - இணையத்தில் தேடுங்கள் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள!

    ReplyDelete
  4. //suryajeeva said...
    இந்த படத்தை உலகத் தரமான படம் என்று கூறுவதால் , பலர் இதை பார்க்க வேண்டுமே என்று பார்த்திருப்பார்களே ஒழிய, நம்மை போல் ஊன்றி அமர்ந்து பார்த்திருக்க மாட்டார்கள்... ஒவ்வொரு நொடியும் கடக்கும் மரண பயத்தை அந்த திரைகளில் நேரடியாக உணர்வது போன்ற காட்சியமைப்பே இந்த திரைப் படத்தின் வெற்றி..//

    உண்மைதான்! அதுக்குத்தானே ஸ்பில்பேர்க் இருக்காரே! :-)

    ReplyDelete
  5. அறிய தகவல்கள்

    ReplyDelete
  6. ஜீ... இந்த படத்தை பார்த்து ஒரு காட்சியிலாவது கண்ணீர் வடிக்காவிடில் அவருக்கு கல்மனதுதான்.

    அந்த செப்டிக் டேங்க் காட்சி, ஷவர் காட்சி என்று எல்லாமே மனதை கலங்கடிப்பவை.

    வில்லனாக நடித்திருப்பவரின் கண்ணில் தெரியும் கொலைவெறியை வர்ணிக்கவே முடியாது.

    ReplyDelete
  7. அருமையான தகவல்கள், மனம் ஒன்றிப்போனது சகோ.

    ReplyDelete
  8. nice post(www.astrologicalscience.blogspot.com)

    ReplyDelete
  9. அருமையான தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    ReplyDelete
  10. மாப்ள மறக்க முடியாத திரைப்படம்...அதுவும் ஒவ்வொரு கடினமான ஷாட்டும்!..அருமையா பகிர்ந்து கொண்டதுக்கு நன்றிய்யா!

    ReplyDelete
  11. படத்தின் அடிநாதமான அந்த கையறு நிலையையும் அதையும் மீறி ஏதாவது செய்யத் துடிக்கும் உணர்வையும் மேலும் அதிகரித்துக் காட்டும் படிகருப்பு வெள்ளை வண்ணத்தால் காட்சி படுத்தியிருப்பார் ஸ்பில்பெர்க். படத்தை மீண்டும் ஒரு முறை நினைவு படுத்தியமைக்கு நன்றிகள்

    ReplyDelete
  12. நல்ல படம் நல்ல விமர்சனம்

    ReplyDelete
  13. இது போன்ற ஒரு உன்னதமான திரைப்படத்தை என் வாழ்நாளில் நான் பார்த்ததில்லை . மனதில் என்றும் வாழும் கதாபாத்திரங்கள் , திரைக்கதை மட்டுமின்றி உருவாக்கமும் பிரமாதம்.ஒவ்வொரு காட்சியும் அற்புதம். லியாம் நீசனின் நடிப்பும் ,வசன உச்சரிப்பும் , பாடி லாங்குவேஜிம் , பென் கிங்க்ஸ்லி யின் அடக்கமான அற்புதமான நடிப்பும் , ரால்ப் fiennesin சைக்கோ த்தனமான நடிப்பும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை . எடிட்டிங் is outstanding . ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் இன் ஆகச்சிறந்த படம் . இதை விட சிறந்த படத்தை அவரால் கொடுக்க முடியாது . ஒவ்வொரு படைப்பாளியும் பார்க்க வேண்டிய திரைப்படம் .

    ReplyDelete