Friday, April 29, 2011

Cinema Paradiso


ஏதோ சில வாசனைகள், சில பழைய பாடல்கள் எங்களுடைய கடந்த காலத்தை, சிறுவயதினை எமக்கு நினைவூட்டுகின்றனவல்லவா? எனக்கும் அப்படித்தான் சில பாடல்கள் எனது சின்னஞ்சிறு பிராயத்தையும் அவை வெளியானபோது நிகழ்ந்த சம்பவங்களையும், சில சோப், பெயின்ட்  வாசனைகள் நான் வசித்த சில இடங்களையும் ஞாபகப்படுத்தும். சிறு வயதில் எங்களிடம் அன்பு காட்டிய அக்கறை செலுத்திய பெரியவர்கள் நம் எல்லோருக்கும் உண்டு. அதில் நாம் இனிமேல் சந்திக்க முடியுமா என்றே தெரியாதவர்களும், சந்திக்க முடியாதென்றே தெரிந்தவர்களும்! 

ரோமில் பிரபல திரைப்பட இயக்குனராக இருக்கும் சல்வதோர், தாயின் தோலைபேசி அழைப்பின் ஊடாக அல்ஃபிராடோ என்பவர் இறந்த செய்தியறிந்து, சோகம் படிந்த முகத்துடன் முப்பது வருடங்களாக சென்றிராத தனது சொந்த ஊரான சிசிலிக்கு போகிறார். அவரது நினைவுகள் பின்னோக்கிச் செல்ல..


டோட்டோ என அழைக்கப்படும் சிறுவன் சல்வதோர் பள்ளி நேரம் போக அவ்வூரின் தேவாலயத்து பாதிரியாருக்கு பூசைகளில் உதவுகிறான். இரண்டாம் உலகப்போர்! ஒரு தகவலும் தெரியாத ராணுவதிலிருக்கும் தந்தை, எப்போதும் தனிமையில் எதையாவது தைத்துக் கொண்டிருக்கும் தாய், ஒரு தங்கையுடன் வளர்கிறான் டோட்டோ. அவ்வூரிலுள்ள திரையரங்கில் ஒப்பரேட்டராக பணிபுரியும் அல்ஃபிராடோவுக்கு குழந்தைகளில்லை. அவர் டோட்டோ மீது பாசமாக இருக்க, அவனும் பள்ளி முடிந்ததும் தியேட்டரில் நேரத்தைக்கழிக்கிறான். ஒருமுறை பால் வாங்க கொடுத்த காசில் படம் பார்த்து அம்மாவிடம் அடி வாங்க, அல்ஃபிராடோ ஓடி வந்து, தனது பணத்தைக் கொடுத்து கீழே கிடந்து தான் எடுத்ததாகவும் அது அவனுடையதென்றும் பொய் சொல்லிக்காப்பாற்றுகிறார். அம்மா அல்ஃபிராடோ தான் அவனைக் கெடுப்பதாகக் குற்றம் சாட்டுகிறாள்.


அவ்வூரில்  எந்தப் படம் வந்தாலும் முதலில் பாதிரியார் தனியாக திரையில் பார்த்து, முத்தக் காட்சிகளையெல்லாம் நீக்கிய பின்னரே பொதுமக்களுக்குத் திரையிடப்படும். சென்சார் செய்வதை திருட்டுத்தனமாக ஒளித்திருந்து பார்க்கும் டோட்டோ, அவ்வாறு வெட்டப்பட்ட படசுருள்களை தனக்கு தருமாறு கேட்க,அவன் வளர்ந்து பெரியவனானதும் தருவதாகக் கூறுகிறார் அல்ஃபிராடோ. டோட்டோவுக்கு பரீட்சை நடைபெறும் அதே நேரத்தில் அல்ஃபிராடோவுக்கும் முதியோர் கல்விப் பரீட்சை. 'பிட்' அடிக்க டோட்டோவிடம் அல்ஃபிராடோ உதவி கேட்க அவன் தனக்கு ப்ரொஜக்டரை இயக்க சொல்லித்தர வேண்டுமென்கிறான். 'டீல்' ஓக்கேயாகி திரையரங்கின் ஒப்பரேட்டர் அறையில் டோட்டோ.


ஒரு நாள் இரவு திரைப்படமொன்றின் இறுதிநாளின் இரவு க்காட்சியின்போது டிக்கெட் கிடைக்காத ஏராளமானோர் அரங்கிற்கு வெளியே காத்திருக்க அவர்களுக்காக வெளியே எதிரிலுள்ள கட்டடத்தின் சுவரில் புத்திசாலித்தனமாக ஒரேநேரத்தில் திரையிட ஒரே மகிழ்ச்சி ஆரவாரம். 

திரையரங்கில் ஏற்படும் தீ விபத்திலிருந்து அல்ஃபிராடோ, டோட்டோவினால் காப்பாற்றப்பட்டாலும் பார்வையை இழக்க, பள்ளிக்கு சென்றவாறே இரவில் திரையரங்கிலும் பணிபுரிகிறான். அவன் தொடர்ந்து இங்கிருக்க கூடாது படித்து நன்றாக வரவேண்டுமென்று எப்போதும் அறிவுரை சொல்கிறார் அல்ஃபிராடோ.


இப்போது டோட்டோ இளைஞனாகி விட்டான். கையில் ஒரு கமெராவுடன் பார்ப்பவற்றையெல்லாம் வீடியோ எடுக்கும் அவன் எலினா என்ற அழகிய பெண்ணைப்பார்த்ததும் காதல் கோள்கிறான். அவளும்! இது எலினாவின் அப்பாவுக்கு தெரியவருகிறது. இந்த நேரத்தில் டோட்டோவுக்கு இராணுவதில் பணியாற்ற அழைப்பு வருகிறது. எலினா வந்து தனது தந்தைக்கு வேறிடத்துக்கு மாற்றலாகுவதாகவும் தனக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் சொல்ல, இதுபற்றி பேச இருவரும் முடிவு செய்து ஒப்பரேட்டர் ரூமில் எலினாவுக்காக காத்திருக்கிறான் டோட்டோ. அவள் வரவில்லை, அங்கு வரும் அல்ஃபிராடோவிடம் சொல்லிவிட்டு அவசரமாக வெளியே செல்லும் டோட்டோ திரும்பி வந்தபின், எலினா வந்தாளா? எனக் கேட்க, அல்ஃபிராடோ இல்லையென்கிறார்.சோகத்துடன் இராணுவ சேவைக்கு செல்கிறான் டோட்டோ.


ஒரு வருடத்திற்கு பின் திரும்பி வரும்போது, ஊரே அன்னியமாக, திரையரங்கிலும் வேறு யாரோ, எலினா பற்றியும் தகவல் இல்லை, அவன் எழுதிய கடிதங்களும் திரும்பி வந்த நிலையில், அல்ஃபிராடோவை அவர் வீட்டில் சந்திக்கிறான். மனதை அலை பாய விடாமல் நகரத்திற்கு போய் பெரிய ஆளாக வரவேண்டுமென்று அறிவுரை கூறுகிறார். ரயில் நிலையத்தில் "நீ இங்கு திரும்பி வருவதைப்பற்றி யோசிக்கவே கூடாது, வந்தால் உன்னுடன் பேச மாட்டேன், பழசை எல்லாம் மறந்திடு, எந்த  வேலையாக இருந்தாலும் தியேட்டரில் காட்டிய அதே ஈடுபாடோடு செய்" எனக் கண் கலங்கியவாறு கூறுகிறார்.

இப்போது..., 
முப்பது வருடம் கழித்து வெற்றி பெற்ற சினிமா இயக்குனராக வரும் சல்வதோர், அல்ஃபிராடோவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார். அங்கு சந்திக்கும் திரையரங்க உரிமையாளர் அதனை தான் விற்று விட்டதாகவும் நாளை அதனை இடிக்கப்போகிறார்கள் என்றும் கூறுகிறார். சல்வதோர் தனியாக ஒருமுறை சென்று அந்த தூசி படிந்த திரை அரங்கை சுற்றிப்பாக்கிறார்.


பழைய காதலி எலினாவையும் சந்திக்கிறார். அப்போது, அவள் தான் அன்று திட்டமிட்டபடி ஆனால் சற்றுத் தாமதமாக சந்திக்க வரும்போது, அல்ஃபிராடோ அவளிடம் அவனை பார்க்க வேண்டாமென்றும், அவன் பெரும்புகழடைய வேண்டியவனென்றும் கூறியதாகவும், அப்படி தான் அன்று சந்தித்திருந்தால் அவன் இன்று இவளவு புகழ்பெற்றவனாக ஆகியிருக்க மாட்டான் என்றும் சொல்கிறாள். 

அல்ஃபிராடோவின் வீட்டில் அவர் மனைவி சல்வதோரிடம், அல்ஃபிராடோ எப்பொழுதும் அவனைபற்றியே பேசிக்கொண்டிருப்பார் என்றும், அவனை பற்றி ஏதும் பத்திரிகைகளில் வந்தால் அதை திரும்ப திரும்ப வாசிக்க சொல்லி கேட்பார் என்றும் சொல்கிறாள். அல்ஃபிராடோ அவனிடம் கொடுக்க சொன்னதாக படச்சுருள்களடங்கிய பெட்டியை சல்வதோரிடம் கொடுக்கிறாள். 

மறுநாள் ஊர்மக்கள் எல்லோரும் கூடி நின்று கண்கலங்க, அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருந்துவிட்ட அந்த திரையரங்கு 'சினிமாபரடைசோ' வெடி வைத்து தகர்க்கப்படுகிறது. கனத்த மனத்துடன் ரோம் திரும்புகிறார் சல்வதோர்.


திரையரங்கு ஒன்றில் தனியாக சல்வதோர் அமர்ந்திருக்க அவருக்கு மட்டும் பிரத்தியேகமாக திரையிடப்படுகிறது!அல்ஃபிராடோ அவரிடம் கொடுக்கசொன்ன, சல்வதோர் சிறுவயதில் அவர் அல்ஃபிராடோவிடம் கேட்ட அந்த பழைய படங்களின் சென்சார் செய்யப்பட்ட முத்தக்காட்சிகள் திரையில் ஓடத்தொடங்குகின்றன . நெகிழ்ச்சியுடன் சல்வதோர் பார்த்துக்கொண்டிருக்க, மனதை வருடும் பின்னணி இசையுடன் படம் நிறைவடைகிறது.

படத்தின் இயக்குனர்- Guiseppe Tornatore.
மொழி- Italia
விருதுகள் - Oscar, Cannes, BAFTA, Golden Globe

இயக்குனர் சல்வதோர் வீட்டிற்கு வந்து அழைப்புமணியை அழுத்தியதும், தாய் தான் தைத்துக் கொண்டிருக்கும் துணியுடன் எழுந்து செல்ல கீழே விழுந்து உருண்டு கொண்டிருக்கும். திடீரென்று அது ஓய்வடைவதன் மூலம் அவர்களிருவரும் சந்தித்து விட்டதை உணர்த்தும் காட்சி ஒரு கவிதை!

அல்ஃபிராடோவின் இறுதி ஊர்வலத்தில் தான் சிறுவயதில் திரையரங்கில் சந்தித்த ஒவ்வொரு 'சென்சார்'பாதிரியார் உட்பட மனிதர்களையும் இனங்கண்டு லேசான தலையசைக்கும் சல்வதோர்!

சினிமா பரடைசோ தகர்க்கப்படும்போது சோகம் கவிந்த முகங்களுடன் எல்லோரும் குழுமியிருக்கும் காட்சி மனதைக்கனக்கச் செய்யும்! 

அல்ஃபிராடோ-டோட்டோ இடையிலான இனிமையான உரையாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள், பின்னணி இசை என்பன படத்தில் என்னை மிகவும் கவர்ந்தவை.

படம் பார்த்த சிலநாட்களுக்கு சிறுவயது சம்பவங்கள், சொந்த ஊர் ஞாபகங்கள், மனிதர்கள் நினைவுக்கு வருவது தவிர்க்கமுடியாதது!

டிஸ்கி: எனக்கு மிக மிகப் படித்த படம். நான் பதிவுலகிற்கு வந்து முதலில் எழுதிய பதிவு சினிமாபரடைசோ தான்! கவனிக்கப்படாததால் மீள..! 

Monday, April 25, 2011

அன்னாரின் பரமாத்மா சாந்தியடையட்டும்! - நம்மவர்


சாய்பாபாவின் திடீர்மறைவு பலரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும். அன்னாரின் ஆத்மா (பரமாத்மா?) சாந்தியடைய எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டிக்கொள்கிறேன்!

அதென்ன திடீர் மறைவு எல்லாருக்குமே இறப்பு எதிர்பாராமல்தான் நிகழுமென்றாலும், முக்காலமும் உணர்ந்த பகவான் தன்னுடைய ஜாதகம் குறித்து உணர்ந்து கூறியது பொய்த்துப் போனது அவரை ஒரு மனிதனாக மட்டுமே பார்த்த எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது என்றால் நம்பிக்கையுடன் கும்பிட்டவர்களுக்கு எவ்வளவு அதிர்ச்சியா இருக்கும்?

புத்தன் ,யேசு, அல்லா, விஷ்ணுவின் தற்காலத்திய பிரதிநிதி, தொடர்பாளராக அறிவித்துக் கொண்ட, அற்புதங்கள் நிகழ்த்திய பகவான் அவசரமாக பத்துவருடங்கள் முன்னதாகவே தனது அவதாரத்தை முடித்துக் கொண்டது நிச்சயம் அவரது பக்தர்களுக்கு ஏற்றுக்கொள்ளமுடியாத துயரம்தான்.

மனிதாபிமான அடிப்படையில் ஒரு நல்லமனிதனாக அவர் செய்த நல்ல காரியங்களை எந்த ஒரு பக்தனோ கூறி நான் கேட்டதில்லை. மாறாக ஒரு தேர்ந்த தந்திரக்காரராக அவர் செய்த வித்தைகளின் அடிப்படியில் அவரைக் கடவுளென்று நிறுவ முயன்றதே பலருக்கு அவர்பால் சம்பந்தமே இல்லாமல் ஒரு எரிச்சலுணர்வை ஏற்படுத்தி இருக்கும்.

பேச்சுக்கொருதரம் 'பகவான் என்ன சொல்லியிருக்கிறார் என்றால்' என்றே ஆரம்பித்து எதிரிலிருப்பவனை உள்ளூர அழவைத்தும், அதுக்கும் மேலேயும் போய், பகவான் சொன்ன நீதிக்கதைகள், குட்டிக்கதைகள் கூறிக் கடுப்படித்தும் வந்த, விரும்பி மூளைச்சலவை செய்துகொண்ட பக்தர்கள்!

எனது அனுபவத்தில் யாழ்ப்பாணத்தில் நான் சந்தித்த பக்தர்களில் பெரும்பான்மையானோரை இலகுவாக வகைப்படுத்திவிட முடியும்! 

வேறு பொழுதுபோக்குகள் இல்லாதவர்கள், புதுசு புதுசாக யாரையாவது கண்டறிந்து கும்பிடத் துடிக்கும் வித்தியாசமான தேடல்(?) மிக்கவர்கள், வாழ்க்கைக்கான பொருளாதாரக் கவலைகள் ஏதுமற்றவர்கள், ஏதாவது ஒரு விஷயத்தைத் தேடிப்பிடித்துக் கவலைப் படுபவர்கள், ஏதோ தனக்கு மருத்துவர்காளால் கண்டறியப்படாத வியாதி இருப்பதாகத் தாங்களாகவே  நினைத்து மற்றவர்களிடம் புலம்பிக் கொள்பவர்கள், கொலஸ்ட்ரோல், சுகர் பிரச்சினைகளுக்காக உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்ற விரும்பாதவர்கள், உடலை வளைத்து பயிற்சி செய்ய விரும்பாதவர்கள், அமைதியாக வாய்மூடி மௌனித்திருக்க முடியாதவர்கள், கண்மூடி கால்மணிநேரம் தியானம் செய்ய விரும்பாதவர்கள்.

இவர்களுக்கிடையான முக்கியமான  ஒரே பொது இயல்பு - தமிழர்களின் பிரத்தியேக சிறப்பம்சமான நல்ல வாசிப்புப் பழக்கமே இல்லாதவர்கள்! 

தங்கள் எல்லா உபாதைகளையும் பஜனை பாடியே தீர்த்துக் கொள்ளமுடியும் என நம்பிய இந்த அப்பாவி ஆத்துமாக்களுக்கு யார் ஆறுதல் சொல்வது?

இன்னொரு பாபா வருவர் என்றார்களே, அவர் ரெடியாகிட்டாரா?

அதுவரை எல்லாம் வல்ல(?!) அம்மா பகவானை வேண்டிக்கொள்வோம்! (இப்போ அவங்கதான் யாழ்ப்பாணத்தில் பிரபலமாம்!)

இந்துக்களில்,மிகுந்த பக்தியுணர்வு கொண்டவர்களே மிகப்பெரிய நாத்திகவாதிகளாகவும் இருக்கிறார்கள் - அவர்கள் தான் கடவுளை நம்பாமல் மனிதனைக் கடவுளாக்கி வணங்குகிறார்கள்! 

Friday, April 22, 2011

Spring, Summer, Fall, Winter... and Spring

Spring
ஓர் அழகான ஏரி, அதில் மிதக்கும் மரவீடு அல்லது ஆசிரமம், ஏகாந்தமான அந்த சூழலில் வசிக்கிறார் அந்த துறவி. அவருடன் ஒரு சிறுவன். அந்த வீட்டிலுள்ள பிரார்த்தனை செய்யும் இடத்திற்கு இரு புறமும் இரண்டு சிறிய படுக்கை அறைகள். அறைகள் என்றால் சுவர்கள் இல்லை, இரண்டு நிலைகளுடன் கூடிய கதவுகள் மட்டுமே. அந்த கதவினூடாகவே இருவரும் காலையில் எழுந்து வருகிறார்கள். துறவி மூலிகைகள் சேகரிப்பதற்காக ஏரியை அடுத்துள்ள மலைப்பிரதேசத்துக்கு செல்ல சிறுவனும்  உடன் வருகிறான். இருவரும் படகின் மூலம் ஏரியைக் கடந்து, அங்கும் வீட்டிலுள்ளது போன்ற அதே மாதிரியான நிலைகளுடன் கதவு மட்டுமே கொண்ட நுழைவு வாயிலைக் கடந்து இருவரும் தனித்தனியாக செல்கிறார்கள். 

குறும்புகார சிறுவன் சில மூலிகைகளைப் பறித்த பின் ஆற்றிலுள்ள ஒரு மீனைப் பிடித்து அதன் உடலுடன் ஒரு சிறு கல்லை கட்டிவிட்டு அது நீந்த முடியாமல் தவிப்பதைப் பார்த்து ரசித்து சிரிக்கிறான்.அவ்வாறே ஒரு தவளை, பாம்பு என்பவற்றுக்கும் செய்கிறான்.


இவை எல்லாவற்றையும் துறவி, அவனுக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார். எதுவும் பேசாமல் அங்கிருந்து ஒரு கல்லை எடுத்துக்கொண்டு திரும்புகிறார் அதிகாலையில் அந்தக்கல்லை தூங்கிக்கொண்டிருக்கும் சிறுவனின் முதுகுடன் சேர்த்துக்கட்டி விடுகிறார். காலையில் எழுந்த சிறுவன் நடக்கமுடியாமல் துறவியிடம் கல்லை விடுவிக்குமாறு முறையிட , அவர் முதல் நாள் சிறுவன் மீன், தவளை, பாம்புக்கு என்ன செய்தான் என்பது பற்றிக்கேட்க அவன் தனது தவறை  ஒப்புக்கொள்கிறான். ' நீ இப்படியே சென்று அவைகளைத்தேடி கண்டுபிடித்து நீ கட்டிய கல்லிலிருந்து விடுவித்தபின், உனது முதுகிலுள்ள சுமையையும் விடுவிக்கலாம். ஆனால் ஒரு நிபந்தனை, அவை இறந்து விட்டிருக்குமானால் வாழ்நாள் முழுவதும் அந்த சுமையை உன் மனதில் சுமப்பாய் ' என்கிறார். 

சிறுவன் அவசரமாக சுமையுடன் படகில் சென்று அருவியில் தேடுகிறான். தவளையை மட்டுமே காப்பாற்ற முடிகிறது, மீனும் பாம்பும் ஏற்கனவே இறந்து கிடக்க கண்டு தேம்பியழுகிறான். 

Summer
சிறுவன் வளர்ந்து பருவ வயதை அடைந்து விட்டான். தன் குருவிடம் சிகிச்சை பெறுவதற்காக வந்து தங்கியிருக்கும் அவன் வயது பெண்ணிடம் ஆசை கொள்கிறான். இருவரும் குருவுக்கு தெரியாமல் (அப்படி நினைத்துக்கொண்டு) தனிமையை உருவாக்கி பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

குருவிடம் நேரடியாக மாட்டிக்கொண்டதும், தான் தவறு செய்துவிட்டதாக கூறி  மன்னித்து விடுமாறு கேட்க, அது இயல்பானது, இயற்கையாகவே நடந்தது என கூறுகிறார். தனது சிகிச்சை பயனளித்து விட்டதை அவளிமே கேட்டு தெரிந்துகொண்டு 'நாளை நீ போகலாம் ' என்கிறார். சீடன் மனம் குழம்புகிறான். மறுநாள் காலை அவளை குரு படகில் ஏற்றிச்செல்ல அவள் போக மனமின்றி திரும்பி பார்த்தவாறே செல்கிறாள். அவள் பிரிவைத்தாங்க முடியாத சீடன் அதிகாலையில் எழுந்து, தான் வைத்திருக்கும் விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு குருவிடமிருந்து பிரிந்து வெளியேறுகிறான்.
    

Fall
முதுமையடைந்துவிட்ட துறவி தனது உணவு பொதி செய்து வந்த தினசரியை பார்க்கும்போது அதில் அவருடைய சீடனின் புகைப்படத்துடன், அவன் மனைவியைக்கொன்றுவிட்டு தப்பித்துவிட்ட செய்தியையும் காண்கிறார். அவன் தன்னிடம் வருவானென்பதை உணர்ந்தறிந்து, அவனுக்கான உடையையும் தைத்து வைக்கிறார். அவன் இன்னும் கோபம் அடங்காதவனாகவும், பதட்டத்துடனும் வருகிறான். அவளுடன் களித்த இடங்களைப்பார்த்து வெறிபிடித்தவன் போல கத்துகிறான். தனது வாழ்வை முடித்துக்கொள்ள தற்கொலைக்கு முயல, அவனை கடுமையாக அடித்து, அமைதிப்படுத்துகிறார் துறவி.


அவன் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியைக்கொண்டே தான் எழுதிய எழுத்துக்களை செதுக்கச் சொல்கிறார். அது அவனை அமைதிப்படுத்துகிறது, அவனை கைது செய்யவந்த போலீசும், அவனது பணி முடியும் வரை காத்திருந்து, அவர்களும் அவனுக்கு உதவியாய் அதில் பங்கெடுத்து மறுநாள் அழைத்துச்செல்கிறார்கள். துறவி தனது வாழ்வினை முடித்துக் கொண்டு , படகில் அமர்ந்தபடியே சமாதி அடைகிறார்.

Winter
தனது தண்டனைக்காலம் முடிந்து திரும்பி வருகிறார் இளம் துறவி. தனது குரு சமாதியடைந்த இடத்திற்கு சென்று வணங்கிய பின், குரு தனக்காக வைத்திருக்கும் ஆடையையும், குறிப்புகளையும் எடுத்துக்கொள்கிறார். ஒரு பெண் தனது குழந்தையை அவரிடம் வளர்ப்பதற்காக ஒப்படைக்கிறாள்.


இப்போது இளம் துறவி ஒரு கல்லை கயிறால் கட்டி அதை தனது இடுப்பில் பிணைத்த நிலையில் கையில் விக்கிரகத்துடன் எதிரே தெரியும் மலையுச்சியை நோக்கி நடந்து செல்கிறார். அவர் சிறுவயதில் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்வது போல அல்லது இது நாள் வரை மனதில் சுமந்த பாரத்தை இறக்கி வைப்பது போல ( மீன், தவளை, பாம்புக்கு கல் கட்டி விட்ட காட்சி மீண்டும் வருகிறது ). அங்கு விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்கிறார்.

and Spring 
இளம் துறவியிடம் ஒப்படிக்கப்பட்ட குழந்தை இப்பொழுது வளர்ந்து சிறுவனாக, அதே குறும்புத்தனத்துடன், மீண்டும் மீன், தவளை, பாம்புடன் கல் கொண்டு விளையாட, படம் நிறைவடைகிறது.

வழமையான கிம் கி டுக் படங்கள் போலவே அமைதியாக ஒரு கவிதை போல அழகாக நகரும் காட்சிகள்.
நான்கு பருவ காலங்களிலும் வெவ்வேறு விதமாகத் தோன்றும் அந்த ஏரியின் அழகு. 
கிம் கி டுக் படங்களின் வழமையான குளிர்மையான நாங்களும் சேர்ந்து பயணிப்பதுபோல் உணரும்படியான ஒளிப்பதிவு, 
கதையின் போக்குக்கு ஏற்ப பெரும்பாலும் அமைதியாகவும்  உறுத்தாததுமான இசை.
வயதான துறவியின் அமைதியான முகம், கருணையை வெளிப்படுத்தும் கண்கள், எதையும் நேரடியாகப் பார்க்கமலே அறிந்துகொள்ளும் அவர், பூனையின் வாலை மையில் நனைத்து எழுதும் காட்சி, சேவலின் காலில் கயிறு கட்டி படகை கரைக்கு இழுக்கும் காட்சி மிக அழகு.
படம் பார்க்கும்போது நிச்சயம் மனதில் ஒரு வார்த்தைகளில் விவரிக்க முடியாத அமைதியான உணர்வு ஏற்படும்.


இயக்குனர் - Kim Ki-duk 
மொழி - Korean 

டிஸ்கி 1 :- இது ஒரு மீள்பதிவு! கவனிக்கப்படாததால்.....! (நிறையப் பேர் பார்க்கவேண்டுமென்பதால்!
டிஸ்கி 2 :- முடிந்தால் நிச்சயம் இப்படத்தைப் பாருங்கள்! ஒரு நல்ல அனுபவத்தை இழந்து விடாதீர்கள்!

Thursday, April 21, 2011

பிரபஞ்சத் தளபதி ஜீ..! (பெயர்க்காரணம் -தொடர்பதிவு)


கண்களைத் திறக்க முயன்று... முடியவில்லை..மெதுவாக மிக மெதுவாக..!
பேரொலியுடன் மின்னல் வெட்டி, வானம் கிழிந்து திடீரெனப் பொழியும் பெருமழை! முன்னாள் ஒரு ஜோடிக்கால்கள்.... விழிகள் விடிய ஒன்று, இரண்டு, நான்கு பத்தாகிப் பலவாகி...! மெல்லத் தரையில் கையூன்றி, அண்ணாந்து வான்பார்த்து எழமுயல... சூழ்ந்த மக்கட்கடலின் குரலொலி அலையென ஆர்ப்பரிக்கிறது 'ஜீ...! ஜீ...!! ஜீ...!!!'

ஒக்கே கட் கட்! இத்தோட நிறுத்திக்குவம்!

என்ன பாக்கிறீங்க? புரியலையா? எனக்கு அப்பிடி ஜீ...ன்னு பேர் வந்ததுன்....
ஏய் ஏய் ஏய்! நோ பேட் வேட்ஸ்! அமைதியா இருக்கணும் கொந்தளிக்கப்படாது!

அது பாத்தீங்கன்னா ஆக்சுவலா மக்களா எனக்கு விரும்பக் கொடுத்....
டாய்..! அழப்படாது! அசிங்கமா இல்ல? ? என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு?

எப்பவுமே நாலு பேருக்கு நல்லது...

யாரப்பா கல்லைத்தூக்குறது? வேணாம். பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்! 
கல்லைத் தூக்கினவங்க எல்லாம் கீழ போடுங்க....!

நான் சொல்றத கேட்டுட்டு அப்புறம் எல்லாரும் கல்லோட தானைத் தலைவன், பதிவுலக விடிவெள்ளி எனது அருமை அண்ணன் செங்கோவியப் போய்ப்பாருங்க! (நா இல்லீங்க எல்லாம் அவருதான்!)

அண்ணன்தாங்க சும்மாருந்த என்னை தொடர்பதிவுக்கு கூப்புட்டாருங்க!

இப்ப ஒரு பிளாஷ் பேக்! (எல்லாரும் மேல பாருங்க!)

முதல்ல என்னை ஜீன்னு நண்பன் எபி தான் கூப்டுட்டு இருந்தான். ஏன்னு தெரியல ஒரு மருவாதை (சான்சே இல்ல!..ஒருவேளை அப்பிடித்தானோன்னு ஒரு நப்பாசை?) 
அப்புறம் தமிழ்ப்படங்கள்ல தாதாவை, ரௌடிங்க, கேடிங்க தலைவனை அப்பிடி கூப்டுறத பாத்ததும்தான் புரிஞ்சுது! (நண்பேன்டா!)

கொஞ்சம் கொஞ்சமா அந்தப் பேர் நண்பர்சிட்ட பரவி, அதாவது நம்ம ஏரியால உள்ளவர்களிடம்.மற்றவர்களுக்கு தெரியாது நம்ம மறுபக்கம்! (எப்பூடி பில்டப்பு? பில்டப் புயல் எஸ்.ஏ.சி. எல்லாம் கிட்ட நெருங்க முடியுமா? ) 

ஒருடைம்ல (அது என் போதாத காலம்! கொழும்பிலருந்து யாழ் போய் சிக்கி சீரழிஞ்சு..வேணாம் அந்தக்கதை சொன்னா தாங்கமாட்டீங்க!) பாத்தீங்கன்னா எங்கவீட்டுப்பக்கம் என்னோட ஒரிஜினல் பேர் தெரியாம ஜீ என்றால்தான் தெரியும். ஆனா நம்ம வீட்டில தெரியாது! 

ஒருநாள் எங்க பக்கத்து வீட்டு ஆன்டி ரோட்ல என்னப்பாத்து ஜீன்னு கூப்புட்டுக் கதைக்க அந்தநேரம் பாத்து அந்தப்பக்கமா வந்த அப்பா என்னை ஒரு மாதிரியா ஆச்சரியமா பாத்தார்! (அது ஆச்சரியமா இல்லை வழக்கம்போல அப்பாக்கள் மகனைப்பார்க்கும்....சரி விடுங்க பாஸ் இதெல்லாம் நமக்குப் புதுசா?) 

அப்புறம் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு நானும் என்னால முடிஞ்ச்ச்ச்ச அளவுக்கு ஏதாவது பண்ணிடணும்னு முடிவுபண்ணி பதிவுலகத்துக்கு வந்தப்போ பெயர் வைக்கிறதுல சின்ன குழப்பம்!

அதுல பாருங்க நான் ரொம்ப நல்லவனா இருக்கிறதால (அப்பாடா சொல்லிட்டோம்ல...அட நம்புங்கப்பா!) உண்மைய எல்லாம் எழுதிடுவேன்கிறதால ஒரு பாதுகாப்பான பேர் தேவைப்பட, நம்ம ஒரிஜினல் பேரையும் சேர்த்து உமாஜீ ன்னு யோசிச்சு, அப்புறம் அதவிட ஜீ நல்லாருக்கோன்னு எனக்குத் தோணிச்சு! (உங்களுக்கு கேவலமாத் தோணினா அத அண்ணனிடம் சொல்லவும்!)

அப்பிடியே காமெராவைப் Pan பண்ணிக் கீழே கொண்டுவாங்க...

இதுதாங்க நடந்தது!

ஆனா ஒண்ணு ஒரு வரலாற்றுப் பதிவ எழுத வைச்ச, வாய்ப்புக்கொடுத்த அண்ணனுக்கு நான் நன்றி சொல்லியே ஆகணும் என்ன இருந்தாலும் வரலாறு முக்கியம் இல்லையா? 

அப்புறம் என்ன நண்பர்ஸ்...அப்பிடியே அண்ணனைப் போய்ப் பாருங்க முக்கியமான விஷயம்..... கல்லை மறந்துடாதிங்க!  

   




Wednesday, April 20, 2011

ஏன் இந்தக் கொலைவெறி?


முதலில் என்னால் நம்பவே முடியல! யாராவது டாக்டரைப் பிடிக்காதவங்க எவனாவது விளையாடுறானுகளான்னுதான் நினைச்சேன்.

அப்புறம்தான் தெரிஞ்சுது ஷங்கர் தான்..!

ஏன்? எதுக்காக? ஏன் இந்தக் கொலைவெறி?

ஆரம்பத்தில் ராகுல் காந்தியைச் சந்தித்தது, காங்கிரசில் சேர முடிவெடுத்தபின்  பிரஸ்மீட்டில் ஒரு கேள்வி,

'ஏன் காங்கிரஸ் கட்சியைத் தேர்ந்தெடுத்தீர்கள்?'
'அந்தக் கட்சிதான் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது' - டாக்டரின் பதில்! 

என்ன ஒரு தெளிவு! அறிவு! தூரநோக்கு!
நாங்கள் தெரிந்து கொண்டோம், கற்றுக் கொண்டோம்!

பிறகு அதிமுக ஆதரவு, அரசியலுக்கு வருவார், வரமாட்டார், பேசுவார், பேசமாட்டார்,ஆதரவு கொடுப்பார்,கொடுக்கமாட்டார்!அவர்தான் பேசச்சொன்னார் - எஸ்.ஏ.சி.யின் பில்டப்புகள்!

காவலன் பிரச்சினை காரணமாக திடீரென்று தோன்றிய பாசத்தில் மீனவர் பிரச்சினைக்கு குரல்கொடுக்க மீட்டிங் போட்டு, அதில் வேலாயுதம் படம்பற்றி பேசி தனது கன்னிப் பேச்சில் பலரின் பாராட்டுக்கள்!

அதில் உலக வரைபடத்திலிருந்து இலங்கையை ஒழித்து விடுவேனென்று அவர் சொன்னதை நினைச்சு இன்னும்கூட இங்கே நிறையப் பேர் பயந்து போயிருக்கானுங்க என்றால் பார்த்துக்கொள்ளுங்க!

அதால நிறையப் பேர் அவசரமா நாட்டைவிட்டு 'எஸ்'ஸாக பாஸ்போர்ட் எடுத்து வச்சிருக்கானுங்கன்னு சொன்னா உங்களுக்கு ஒருவேளை நம்பக் கஷ்டமாக இருக்கலாம்! வேணாம் நானும் உங்களை கஷ்டப்படுத்த விரும்பல!

இதில ஒருவிஷயம் சொல்லணும்.

பட்டாசுபாலு, பான்பராக் ரவி வரிசையில் இலங்கையைச் சேர்த்தது உலக அரசியல் அரங்கில் உன்னிப்பான கவனத்தைப் பெற்றது என்பதை இங்கே கண்டிப்பாக கூறியே ஆகவேண்டும்.

அதிலும் 'நான் அடிச்சா தாங்கமாட்டே' என்ற வரிகளை அவர் எடுத்தியம்பியதை உற்று நோக்கும்போது, இது ஓர் இறுதி எச்சரிக்கையாகவே தோன்றுகிறது! 

அமெரிக்கா, ஐ.நா என யார் பேச்சும் கேட்காமல் தன்னிச்சையாகச் செயற்பட்டு வரும் இலங்கை அரசாங்கம் டாக்டரின் இந்த எச்சரிக்கையை புறக்கணிக்கும் பட்சத்தில் விளைவுகள் விபரீதமாகும் என்றே அஞ்சப்படுகிறது! 

இது குறித்து பிரபல சீரியஸ் அரசியல்வாதி சுப்பிரமணிய சுவாமி ஏதும் கருத்து தெரிவித்தாரா என்பது பற்றித் தெரியவில்லை! 

டாக்டர் பற்றி புரட்சித்தமிழன் சத்தியராஜ் ( இவர் எந்த நாட்டில புரட்சி செய்தார்? யாராவது சொல்லுங்கப்பா!) கூறிய கருத்து படு சீரியசானது, சிந்திக்கத் தூண்டுவது! 

டாக்டர் ஹாலிவுட் படங்களில் நடிக்கவேண்டுமேன்பதே அது! - தமிழ்மக்கள் மீதுள்ள அபிமானத்தால் சொன்னாரா அல்லது அமெரிக்காவுக்கே சூனியம் வைக்கும் முயற்சியா என்பது அவருக்கே வெளிச்சம்!

இந்தப் பின்னணி ஏதும் அறியாமல்தான் ஷங்கர் இப்படியொரு முயற்சியை மேற்கொண்டாரா? 

அல்லது எல்லாம் தெரிந்தபின் டாக்டர் என்றதுமே

அவரின் நடிப்பு, கதைத்தேர்வு, அரசியல் தொடர்பான தீர்க்கமான முடிவெடுக்கும் திறன், எந்தவிஷயத்தைப் பற்றியும் தெளிவாக, சுயமாக யோசித்துப் பேசும் குணவியல்புகளின் கூறுகளாலான உணர்வுகளின் அடிப்படையில் மக்கள் மனதின் ஆழத்தில் கட்டமைக்கப்படிருக்கும் உருவகத்தின் காட்சிப்படிமங்களிளிருந்து பிரதிமைப் படுத்தப்பட்ட பிம்பமாக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு பின் நவீனத்துவ முயற்சியா என்பது ஆராயப்பட வேண்டியதொன்று!  

Wednesday, April 6, 2011

Hotel Rwanda - மேலும் சில!


ருவாண்டாவில் 1994 இல் இடம்பெற்ற இனப் பிரிவினையில் ஏறத்தாழ எட்டு லட்சம் பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் சொல்லியிருக்கிறது.

அதுவும் ஹூட்டு இனத்தைச் சேர்ந்த தலைவரான Juvenal Habiyarimana கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 100 நாட்களில்! இது நாட்டின் மொத்த சனத்தொகையின் இருபது வீதமாம்! 

சிறுபான்மை இனமான டுட்சி இனத்தவரே பல நூற்றாண்டுகளாக, ருவாண்டாவின் அதிகாரவர்க்கமாக இருந்திருக்கிறார்கள். 1962 ஹுட்டு இனத்தவர் ஆட்சியைக் கைப்பற்ற, அகதிகளாக வெளியேறிய டுட்சி இனத்தவரிலிருந்து, 1990 இல் Rwandan Patriotic Front (RPF) என்ற போராளிகள் அமைப்பு உருவாக  உள்நாட்டுச் சண்டை நடக்கிறது.

1993 இல் போர்நிறுத்தம் ஏற்படுகிறது. இந்தநிலையில் 1994 இல்  Juvenal Habiyarimana கொலை செய்யப்பட, அதன் தொடர்ச்சியாக இடம்பெற்ற சம்பவங்களைக் கூறுகிறது ஹோட்டல் ருவாண்டா திரைப்படம்.

படம் பற்றி இங்கே! Hotel Rwanda     

நிஜ ஹீரோ!

நிஜ ஹீரோ Paul Rusesabaina தான் மனேஜராக இருந்த Hotel des Mille Collines என்ற 112 அறைகளைக் கொண்ட நட்சத்திர ஹோட்டலை கலவரத்தின்போது தொடர்ந்து இயங்கவைத்து 1268 பேரை தனது பொறுப்பில் வைத்துக் காப்பாற்றினார்.அவ்வப்போது, ஹுட்டு கிளர்சிக்குழுக்கள், ருவாண்டாவின் ராணுவத்திற்கு லஞ்சமாக தனது சொந்தப் பணம், நகைகள் ஹோட்டலிலிருந்த ஏராளமான மதுவகைகள்!

                                                  போலும் (Paul) , நடிகரும். 


Hotel des Mille Collines






இதுதான் அந்த ஹோட்டல். ருவாண்டாவின் தலைநகரான கிகாலியில் (Kigali) உள்ளது. (ஆகவே நண்பர்ஸ்! யாராவது ருவாண்டா போனா மிஸ் பண்ணிடாதீங்கப்பா!)

Monday, April 4, 2011

Hotel Rwanda



ஒரு நாட்டில் எந்தப் பாகுபாடுமின்றி இணைந்து வாழும் இரு இனமக்கள். இதில் பெரும்பான்மை இனத்தவர்களிடம் திட்டமிட்டு விஷமப் பிரச்சாரமாக ஊட்டப்படுகிறது இனத்துவேஷம்! விளைவு? நேற்றுவரை உறவுகளாக இருந்தவர்கள் திடீரென எதிரிகளாக மாறி சிறுபான்மையினரை கொல்ல, சொத்துக்களை சூறையாட, ஒரே நாளில் சொந்தநாட்டில், பிறந்த மண்ணில் அகதிகளாக, எப்போது வேண்டுமானாலும் உயிர் பறிக்கப்படும் நிராதரவான நிலை! 

நம்மில் பலர் இப்படியான சம்பவங்களைக் கேள்விப்படிருக்கலாம், சிலர் அனுபவப் பட்டிருக்கக் கூடும். இதே அனுபவத்தை உணர வைக்கிறது படம்!

1994, ருவாண்டா. ஒரு வானொலி அறிவிப்பு. 'டுட்சி இனத்தவரை நாம் ஏன் வெறுக்க வேண்டும்? வரலாற்றைப் படியுங்கள். இது பெரும்பான்மையான ஹூட்டுக்களின் நிலம். டுட்சிகள் வந்தேறிகள். கரப்பான் பூச்சிகள். அவர்களை அழிக்கவேண்டும்!'.


நகரின் பெரிய ஸ்டார் ஹோட்டலின் மானேஜரான போல் (Paul) நாட்டின் பெரும்பான்மையான ஹூட்டு (Hutu) இனத்தைச் சேர்ந்தவர். அவர்  மனைவி  டாடியானா சிறுபான்மை டுட்சி (Tutsi) இனத்தவர். வேலை முடிந்து வீடு செல்லும் போல் அங்கே தன மனைவியின் தம்பி குடும்பத்துடன் விருந்தினராக வந்திருக்க, மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

வெளியில் ஏதோ சத்தம் கேட்டு , மெதுவாகக் கதவைத்திறந்து பார்க்க, அங்கே ஹூட்டு இனக் கும்பல் ஒன்று எதிர்வீட்டு டுட்சி இனத்து குடும்பமொன்றை வலுக்கட்டாயமாக அடித்து வீட்டைவிட்டு வெளியேற்றுவதைக் காண்கிறார்கள். ஒன்றுமே செய்யமுடியாத நிலையில் அவர்களின் முகங்களில் கலவரம் படர்கிறது.

மறுநாள் ஹோட்டலில் அனுமதி பெற்று போலைச் சந்திக்கும் மைத்துனனும் அவன் மனைவியும் கலவரம் பெரிதாகப் போவதாகத் தகவல் கிடைத்ததாகவும், வானொலியில் அதற்கான சங்கேத வார்த்தை ' உயரமான மரங்களை வெட்டுங்கள்' என்பதாகவும் சொல்கிறார்கள். அதற்கு போல்,' ஐ.நா.வின் அமைதிப்படை, உலகப்பத்திரிகையாளர்கள் வந்திருப்பதால் அப்படி எதுவும் ஆகாது' என ஆறுதல் கூறுகிறார்.  

இரவு ஆளரவமற்ற தெருக்கள், அங்காங்கே பற்றியெரியும் வீடுகள் கண்டு அதிர்ச்சியுடன் வீடு திரும்பும் போல், வீட்டில் ஏராளமான டுட்சி இனத்தவர் அடைக்கலம் புகுந்திருப்பதைக் காண்கிறார். மறுநாள் காலை துப்பாக்கிச் சத்தங்கள் கேட்க, எல்லோரும் பதட்டத்துடன் வானொலி முன்! வானொலியில்,
'நம் தலைவரைக் கொன்றுவிட்டார்கள், இதுவே தருணம், உயரமான மரங்களை வெட்டுங்கள்!'


போல் வீட்டிற்கு வரும் ஒரு ஹூட்டு குழு, போலின் மனைவி, குழந்தைகள் உட்பட அங்குள்ள டுட்சிகள் அனைவரையும் கொல்லப்போவதாகக் கூற, ஏராளமான பணம், நகைகளை லஞ்சமாகக் கொடுத்து, அனைவரையும் பத்திரமாகத் தனது ஹோட்டலுக்குக் கூட்டிச்சென்று தங்கவைக்கிறார்.

நகரிலுள்ள மேலும் பல டுட்சிகள், செஞ்சிலுவைச் சங்க பெண் அதிகாரி அழைத்துவரும் அநாதை இல்லக் குழந்தைகள் என ஹோட்டலில் தங்குவோர் தொகை அதிகரிக்கிறது. இதனால் வேலை செய்ய மறுக்கும் பணியாளர்கள், நாட்டு சூழ்நிலை காரணமாக ஹோட்டலை மூட முடிவு செய்யும் வெளிநாட்டிலுள்ள முதலாளி ஆகியோருடன் பேசி, ஹோட்டலைத் தொடர்ந்தும் இயங்க வைக்கிறார் போல். இதற்கிடையில் போலின் மைத்துனன் குடும்பம் என்னவானது என்றே தெரியவில்லை.

நாளுக்குநாள் பிரச்சினை தீவிரமாக போல், அங்குள்ளவர்களிடம், 'வெளி நாடுகளிலுள்ள உங்கள் உறவினர்களைத் தொடர்புகொண்டு பேசி நாட்டை விட்டு தப்பி வெளியேறும் வழி வகைகளைச் செய்யுங்கள்' என்கிறார். அதன்மூலம் சிலருக்கு அழைப்பு வருகிறது. போல் குடும்பத்தினருக்கும் விசா வந்திருக்கிறது. ஐ.நா.அமைதிப் படையினரின் பாதுகாப்புடன் கவச வாகனத்தில் விசா கிடைத்தவர்கள் ஏறி அமர, தனது மனைவி, குழந்தைகளை ஏற்றிவிட்டு, இறுதி நேரத்தில் தான் வாகனத்தில் ஏறாமல் நின்றுவிட, ஓடும் வாகனத்தில் மனைவி, குழந்தைகள் கதறுகிறார்கள்.


ஹோட்டலில் பணிபுரியும் ஹூட்டு இனத்தவன் ஒருவன், டுட்சி இனத்தவர் தப்பிச்செல்லுவதை போட்டுக் கொடுத்துவிட, ஐ.நா.வாகனத் தொடரணியை சூழ்ந்து விடுகிறார்கள் ஹூட்டுக்கள். ஒருவழியாக அனைவரையும் காப்பாற்றி மீண்டும் ஹோட்டலுக்கு திருப்பிக் கொண்டுவருகிறார் ஐ.நா.வின் கனேடியக் கேணல் தர அதிகாரி.

போல் பிறகு என செய்கிறார்? அவரது மனைவி, பிள்ளைகளைக் காப்பாற்றினாரா? ஹோட்டலில் தங்கி இருந்தோர் கதி? தனது மைத்துனன், குடும்பத்தைக் கண்டுபிடித்தாரா? 

அதிகாலையில் ஹோட்டலுக்குத் தேவையான சாமான்களை வாங்கி வரும்போது போலின் வாகனம் சரியாக ஓடாமல் பள்ளத்தில் விழுந்ததைப் போல துள்ளுகிறது. இறங்கிப்பார்க்கும் போல், பார்க்கச் சகிக்கமுடியாமல் நிலைகுலைகிறார். அங்கே, சாலை எங்கும் பரவிக்கிடக்கின்றன  நூற்றுக்கணக்கான மனித உடல்கள்!


நிலைமையின் தீவிரத்தால் அமெரிக்க, இங்கிலாந்து படையினர் வர, டுட்சி அகதிகள் தங்கள் காப்பாற்றப்பட்டோமென்று மிக்க மகிழ்ச்சியடைகிறார்கள். ஆனால் அவர்கள் ஹோட்டலில் தங்கியுள்ள வெள்ளையர்களை மட்டுமே மீட்க வந்திருப்பது பின்னர் புரிந்து உற்சாகம் வடிந்து, அமைதியாகும் காட்சி மிக உருக்கமானது.




மீட்கவந்த படையினருக்கும், கனேடிய கேணல் அதிகாரிக்கும் இடையிலான வாக்குவாதத்தைத் தூரத்திலிருந்தே அவதானித்து நிலைமையைப் போல் புரிந்து கொள்ளும் காட்சி.

மீட்கப்பட்ட வெள்ளையர்கள் தங்களுடன் டுட்சி குழந்தைகளை அழைத்துச் செல்ல முயல, அந்த முயற்சி வலுக்க்டாமாகப் படையினரால் தடுக்கப் படுகிறது.அந்தப் பேருந்திலிருந்து ஒரு வெள்ளைப் பெண் அந்தக் குழந்தைகளை சோகமாகப் பார்க்க, அந்தப்பெண்ணின் மடியில் அமர்ந்திருக்கிறது அவள் வளர்க்கும் நாய்!

போலும், டடியானாவும் முகாமில் இறந்த குழந்தைகளின் புகைப்படங்களில் டடியானாவின் தம்பி குழந்தைகளைத் தேடும் காட்சி, அனாதைக் குழந்தைகள் கூட்டாகச் சேர்ந்து பாடும் காட்சி என்பவை மனதை நெகிழச் செய்பவை.




ஐ.நா.வின் வாகனத்தில் போல் மற்றும் ஹோட்டலிலிருந்த ஏனைய மக்கள் ஐ.நா. முகாமிற்குச் செல்லும்போது, ஹூட்டு இனக்குழு ஆவேசத்துடன் தொடர, திடீரென தோன்றும் இன்னொரு குழு ( டுட்சி) அவர்களை துரத்திச் சுடுகின்றது. அப்போது மகிழ்ச்சியுடன் கூவும் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனின் உற்சாகம் எங்களையும் ஒருகணம் தொற்றிக்கொள்ளும்!


ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, அந்த இனத்திலிருந்து உருவான ஒரு போராளிக்குழு ஆயுதமேந்தி போராட வரும்போது, வழியின்றித் தவித்த அந்த மக்களின் மனநிலை எப்படியிருக்கும்? சொல்வது கடினம் உணர்ந்தவர்களுக்கே புரியும்!


இந்த உலகில் எங்கெல்லாமோ ஆக்கிரமிப்புகள், திட்டமிட்ட இன அழிப்புகள்  நிகழ்ந்துகொண்டிருந்தாலும் போல் போன்ற மனிதாபிமானமுள்ள நல்ல குணமுள்ள மனிதர்கள் எங்கும் வாழ்கிறார்கள்!


1983 இல் இலங்கையில் இடம்பெற்ற கலவரத்தில், நல்ல மனம் கொண்ட சிங்கள மக்களால் பல தமிழர்கள் வீடுகளில் மறைத்து வைத்து காப்பாற்றப்பட்டதாக சம்பந்தப்பட்டவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்!

                    இவர்தான் அந்த ஒரிஜினல் ஹீரோ போல் (PAUL RUSESABAGINA )

படம் நிறைவடையும்போது, ' போல், ருவாண்டாவின் கிகாலி நகரிலிருந்த ஹோட்டலில் 1268 அகதிகளைத் தன் பாதுகாப்பில் வைத்துக் காப்பாற்றினார். இன்று பெல்ஜியத்தில் தன் குடும்பத்துடன் வசிக்கிறார்' என்ற எழுத்துக்கள் தோன்றுகின்றன!

2004 இல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம் Oscar  உட்பட ஏராளமான விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, Berlin , Toronto International Film Festivals விருதுகள் உள்ளிட்ட  பலவிருதுகளை வென்றது.

இயக்கம் : Terry George
மொழி : English , French


இது தொடர்பான பதிவு -Hotel Rwanda - மேலும் சில தகவல்கள்!