Monday, January 31, 2011

சிநேகமுள்ள சிங்கம் - பாலகுமாரன்


சித்திரைப் பாண்டியன் - என்னை மிகவும் பாதித்த, கவர்ந்த ஒரு கதாபாத்திரம்!

எழுத்தாளர் பாலகுமாரனின் கதைகளை முதலில் எனது பதினைந்து வயதில் வாசித்திருப்பேன் என்று நினைக்கிறேன். அப்போது சரியான புரிதல்கள் இல்லாததாலோ என்னவோ மற்றைய எழுத்தாளர்களைப் (ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா) போலவே ஒரு விறுவிறுப்பான சுவாரஸ்யத்துக்காக மட்டுமே வாசித்தேன். வேறேதும் விசேடமாகக் கவரவில்லை. (தலைவர் சுஜாதாவிற்கு மட்டும் எப்போதுமே தனியிடம்)

இடையில் சில வருடங்களாக மற்றையதெல்லாம் விட்டு தலைவனின் எழுத்தை மட்டுமே! இருபது வயதில் தற்செயலாக மீண்டும் பாலகுமாரனின் புத்தகமொன்றை வாசித்தபோது, ஏதோ ஒரு வித்தியாசமான தனித்தன்மை இருப்பதாகத் தோன்ற, தொடர்ந்து எனது பெருமளவு நேரத்தை ஆக்கிரமித்துக் கொண்டார் பாலகுமாரன். கூடவே மனதையும்!

எங்கள் வீட்டிற்கு அருகாமையிலிருந்த நூலகத்தில் எனது தேடுதல் வேட்டை தொடங்கி சிறிது நாளிலேயே கைவிட நேர்ந்தது பெரிதாக எதுவும் சிக்காததால்! பிறகு சற்றுத்தொலைவிலிருந்த ஒரு தனியார் நூலகத்திற்கு எல்லையை(?!) விரிவுபடுத்த, அங்கு நல்ல தீனி கிடைத்தது. அப்போது கிடைத்த ஒரு புத்தகம்தான் சிநேகமுள்ள சிங்கம்! சித்திரைப் பாண்டியன் அதில் வரும் நாயகன் பெயர். 

ஒரு நல்ல படம் பார்த்தால் இரண்டு, மூன்று நாட்கள் அதன் பாதிப்பு இருக்கும், இருக்கவேண்டும் அது போலவே ஒரு நல்ல நாவலை வாசித்தாலும்! அனால் எழுத்தின் வீச்சு இன்னும் அதிகம் என்றே நான் நினைக்கிறேன். சினிமாவில் விஷூவலாகவே காட்டப்படுவதால் நாங்கள் பார்ப்பதோடு சரி. 

ஆனால் ஒரு நல்ல ஆழமான எழுத்துக்களால் சொல்லப்படும் கதை, காட்சிகள் தொடர்பான விவரிப்பு, காரெக்டர் டீட்டெயிலிங்  இவற்றை ஒருங்கிணைத்து எமது மனத்திரையில் காட்சிகள் விரிகின்றன அல்லது உருவாக்கிக் கொள்கிறோம். அதனால்தான் அதன் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது என நான் நினைக்கிறேன்!

தொடர்ந்து பல நாட்களாக அந்த காரெக்டர் மனதில். அநேகமான பாலகுமாரனின் கதைகளின் நாயகன் எல்லோருமே தனித்துவமான குணங்களையுடைய ஒருவனாகவே இருப்பது வழமை என்றாலும் சித்திரைப் பாண்டியன் மட்டும் தனியாக! வேறு எந்தக் கதைகளினதும் கதாபாத்திரங்களின் பெயர்கூட ஞாபகத்தில் இல்லை. அதுவும் வாழ்வில் தோற்ற ஒருவனின், அரசியல், துரோகங்களால் அலைக்கழிக்கப்படும் ஒருவனின் கதை!

அந்தப் பொழுகளில் எனது நண்பன் 'எபி' யுடன் உரையாடும்போது நான் பாலகுமாரன் பற்றிப் பேச, அவன் வாசித்திருக்கவில்லை. அவனுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் முதல் அறிமுகம் சும்மா 'நச்'சுன்னு இருக்க வேண்டாமா? நான் 'சிநேகமுள்ள சிங்கத்தையே வாசிக்கக் கொடுத்தேன். என்னைப்போன்ற ரசனையையுடைய அவனுக்கும் சித்திரைப் பாண்டியனே ஹீரோவானான். பிறகென்ன 'எபி'யும் பாலகுமாரன் தேடலில் இறங்க, இனிமையான வாசிப்பனுபவங்கள்!

ஒரு காரெக்டர் ரெண்டு வரியில் ஒரு வசனம் பேசினால், அதன் அர்த்தம், பேசுபவரின் உள்மனதில் உள்ள எண்ணங்கள், தர்க்கங்கள், எழுத்தாளரின் விளக்கங்கள், கேள்விகள், பதில்கள் என இரண்டு மூன்று பக்கங்களுக்கு ஆழமாக ஆராய்ந்து விவரித்துச் செல்வது பாலகுமாரனின் பாணி. அதனால் சில நண்பர்கள் போரடிப்பதாகவும் சொன்னதுண்டு. ஆனால் எனக்கு அது பிடித்திருந்தது. ஒரு புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் ஏதோ வாழ்க்கையில் நாமும் ரொம்ப அனுபவப்பட்ட மாதிரி ஒரு எண்ணம் தோன்றும் அப்போதெல்லாம்.

முதன் முதலில் வேலை கிடைத்து அலுவலகம் சென்றபோது, பலதரப்பட்ட மனிதர்களோடு, என்னைவிட எல்லோரும் வயதுகூடியவர்களாக, வெவ்வேறு நாட்டவர்களாக இருந்த  சூழலில், நான் சரியாக எல்லோரையும் புரிந்து கொள்ள, நடந்துகொள்ள  ஏதோ ஒருவகையில் எனக்கு அவரின் எழுத்துக்கள் துணை நின்றதாக உணர்ந்தேன்!

வாழ்வின் சில பாதுகாப்பான பகுதிக்குள் மட்டுமே பழக்கப்பட்ட வயதில், வெளி மனிதர்கள், முரண்பாடுகளைச் சந்தித்திராத பருவத்தில் நல்ல புத்தகங்களே வழிகாட்டிகளாகவும், வாழ்வியலைச் சொல்லிக் கொடுப்பவையாகவும் இருக்கின்றன.

சினிமாவில் பல படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றியிருந்தலும் யாராலும் மறக்கமுடியாத, எல்லோருக்கும் தெரிந்த ஒரு பிரபலமான வசனம்,
'நாலு பேருக்கு நல்லது செய்தா எதுவுமே தப்பில்ல!'

அவர் எடுத்துக் கொள்ளும் கதைக்களத்திற்கான விபரிப்பில் அதற்கான உழைப்பு தெரியும் .உதாரணமாக இரும்புக்குதிரைகள், அதே போல சினிமா உலகைப்பற்றிக்கூரும் ஒரு நாவல் - பெயர் ஞாபகமில்லை. சுஜாதாவின் கனவுத்தொழிற்சாலை ஒரு இண்டலெக்சுவல் ஹீரோவின் பார்வையில் சொல்லப்படும். இது உதவி இயக்குனர், ஏனைய தொழிலாளிகளின் பார்வையில் பயணிக்கும் கதை!

தனது சுய சரிதையான முன்கதைச்சுருக்கத்தில் தனது இளமைக்காலம், தவறுகள், கற்றுக்கொண்டவை பற்றி ஒளிவு மறைவின்றி கூறியிருப்பார். சுஜாதா பற்றி, தனக்கு சிறுகதை எழுத சொல்லித்தந்தவர் என்றும், பின்னாளில் சுஜாதாவிடமே குடிபோதையில் சவால் விட்டது பற்றியும் கூறியிருப்பார். முன்கதைச்சுருக்கம் படித்தபின்னர் அவரது எல்லாக்கதா நாயகர்களிலும், அவரது சாயலே தெரிவதை உணர முடிந்தது.

நான், எனது நண்பர்கள் சிலர் ஓஷோவைத் தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்த காலத்தில், யாராவது புதிதாக ஓஷோ படிப்பவரைச் சந்தித்தால் ஒரு தனி மகிழ்ச்சி! எங்களுக்கும், அவருக்கும். (அப்படியானவர்களைச் சந்திப்பது அருமையாக இருந்ததால்/இருப்பதால்) ஓஷோவின் வாசகன் என்றதும் அவர்களின் அடுத்த கேள்வி, 'அப்போ பாலகுமாரன் படித்திருப்பீர்களே?'. பின்பு நானே ஒருசிலரிடம் செக் பண்ணியதுண்டு. அதென்னவோ அப்படித்தான்! 

பழைய பாலகுமாரனைப் பார்த்து சில வருடங்களாகிறது. சமீபத்தில் ஓரிரு கட்டுரைகளப் பார்த்தபோது, ஒன்ற முடியவில்லை. ஒருகாலத்தில் வெறித்தனமாக வாசித்த எழுத்தாளன். வயதாகிவிட்டது எழுத்துக்களில் பிரதிபலிப்பதாகத் தோன்றுகிறது.எந்த வயதிலும் இளமையாகவே வாழ்வதென்பது, தலைவர் சுஜாதா போன்ற ஒருசிலருக்கே சாத்தியமாகிறதோ!       

19 comments:

  1. நீங்கள் இறுதியாகச் சொல்லி முடித்த உணர்வுதான் எனக்குள்ளும் !

    ReplyDelete
  2. பாலகுமாரனின் நூல்களை நான் இதுவரை படித்ததில்லை! ( ஏதோ ஏனைய எழுத்தாளர்களின் நூல்களை எல்லாம் கரைச்சு குடிச்ச மாதிரி ) ஆனால் உங்களுடைய பதிவைப் படித்த பிறகு அவருடைய பழைய நூல்களைப் படிக்க வேண்டும்போல் இருக்கு! பதிவுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. நல்ல பதிவு..நன்றி

    ReplyDelete
  4. அருமையான பதிவு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. என் உணர்வுகள் . உங்கள் எழுத்தில்

    ReplyDelete
  6. சில கதைகள் மட்டுமே படித்திருக்கிறேன் மற்றபடி ஆழ்ந்தவாசிப்பு இல்லை

    ReplyDelete
  7. பாலகுமாரனை அதிகம் வாசித்ததில்லை. மெர்குரிப் பூக்களோடு சரி. உங்களின் பார்வை வாசிக்கத் தூண்டுகிறது.

    ReplyDelete
  8. இதுவரை எனக்கு இவரை பற்றி தெரியாது

    நன்றி

    ReplyDelete
  9. வாசிக்கவில்லை! பார்ப்போம் தருணம் கிடைக்கறதா என்று!!!

    ReplyDelete
  10. உண்மைதான் ஜீ, சிங்கத்திற்கு வயதாகிவிட்டது..ஓவரான புகழ்ச்சியால் அழிந்தாரோ என்று தோன்றும்...என் கல்லூரிக்காலத்தில் மதுரையில் இவரது புக்கைத் தேடி அலைந்திருக்கிறேன்...அந்த வீச்சு இப்போது அவரிடம் இல்லை...பாலா-ஓஷோ மேட்டர், என் விஷயத்திலும் உண்மைதான்..

    ReplyDelete
  11. முன்கதைச்சுருக்கம் படித்தபின்னர் அவரது எல்லாக்கதா நாயகர்களிலும், அவரது சாயலே தெரிவதை உணர முடிந்தது.

    .... I have heard the same comment from few other friends too....

    ReplyDelete
  12. சங்கரின் படங்களுக்கு ஆரம்பத்தில் வசனம் எழுதியவர் இவர், பின்னர் இவரைக் கழற்றிவிட்டு சங்கர் உங்க தலைவரை எழுத வைச்சிட்டார்! சங்கர் படத்திற்கு பாலகுமாரானா? சுஜாதாவா? பொருத்தம்

    ReplyDelete
  13. மன்னித்து கொள்ளவும்...நான் பாலகுமாரன் நாவல்கள் படிப்பதில்லை...:))ஆனால் அவரை பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டேன் ஜீ...

    ReplyDelete
  14. நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. ஆம் நண்பா அவரது எழுத்தின் சாயல் மாறிவிட்டதாகவே எனக்கும் தோன்றுகிறது.. எனக்கும் இந்த சினேகமுள்ள சிங்கத்தைப் பிடிக்கும். ஆனால் என் ஃபேவரிட்.. "கடலோரக் குருவிகள்"... நான் வாழ்வில் மோசமான தருணங்களைச் சந்தித்த போதெல்லாம்.. எனக்கு ஆறுதல் இந்த நாவல்தான்... இப்போது "புருஷ வதம்" (3 புத்தகங்கள்) நன்றாக இருக்கிறது.. வாய்ப்பு கிடைத்தால் படியுங்கள்..

    ReplyDelete
  16. நானும் பாலகுமாரன் நாவல்கள், மெர்க்குறிப்பூக்கள், இரும்புக்குதிரை, தாயுமானவன் இன்னும் பல நாவல்களும் படிச்சிருக்கேன். எழுத்து மிகவும் ரசிக்கும்படிதான் இருக்கும். தற்சமயங்களில் ஆன்மீகம் பக்கமாக கவனம் திரும்பி உள்ளது அவருக்கு.அத்பற்றி ஆழ்ந்து எழுதி வருகிரார். அதில் விருப்பமில்லாதவர்கள்.அதை ர்சிக்கமுடிவதில்லை

    ReplyDelete
  17. உண்மையில் நானும் ஆரம்ப காலத்தில் பாலகுமாரனின் புத்தகங்களை விருப்பத்துடன் படித்தகாலங்கள் உயர்தரம் கற்றநேரங்களே. என்னிடம் உள்ள புத்தகங்களில் பாலகுமாரனின் புத்தகங்களே அதிகமாகவை. (வாங்கியவை அல்ல ஒருவர் தந்தவை.)
    பாலகுமாரனின் புத்தகங்களில் வித்தியாசத்தை உணரமுடியும் என்பது உண்மை.
    சிகேமுள்ள சிங்கம் 2003இல் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு பயணிக்கும்போது படித்துமுடித்த நினைவுகள் உள்ளன.

    ReplyDelete
  18. \\பழைய பாலகுமாரனைப் பார்த்து சில வருடங்களாகிறது. சமீபத்தில் ஓரிரு கட்டுரைகளப் பார்த்தபோது, ஒன்ற முடியவில்லை.//
    நானும் ஒரு காலத்தில் பாலகுமாரனின் வெறித் தனமான வாசகன். அவரது அந்தக் கால எழுத்துப் போல் இல்லை இப்போது.

    ReplyDelete