Sunday, August 15, 2010

இதே பூமி....இதே நிலவு....அரிசிலாற்றங்கரையில்.....

நிலா வெளிச்சம், கருமை படர்ந்த மரங்களும், கிளைகளும், மெலிதாக வீசும் காற்றில் இலைகளின் சலசலப்பு - அழகான இந்தப் பொழுதில் உங்களுக்கு என்ன தோன்றும்?

எனக்கு மனதில் ஒரு மென்சோகம் படரும். ஏன்?
நிலவு வெளிச்சத்துக்கும் சோகத்துக்கும் என்ன சம்பந்தம்?

நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?

நிலவொளி சோகத்தை ஏற்படுத்துகிறதா? இல்லை அந்த ஒளியில் எமது அடிமனதின் சோகங்கள் கிளறப்பட்டு பிரதி பலிக்கிறதா?

இதைவிட இன்னொன்றும்  கற்பனையில் தோன்றும்.
ஒரு ஆற்றங்கரை, குதிரையின் குழம்புச் சத்தம்.
இதே போன்ற ஒரு ராத்திரியில் தானே இதே பூமி, இதே நிலவில்தானே அரிசிலாற்றங்கரையில் வந்தியதேவன் குதிரையில் சென்றிருப்பான்.

நீங்கள் கல்கியின் பொன்னியின் செல்வன் வாசித்தவரா? அப்படியானால் நிச்சயம் உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கும், அல்லது இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.


ஆறாம் வகுப்பு முடித்து, பள்ளியின் ஆண்டிறுதி விடுமுறையின் போது எனக்கு வாசிக்கக் கிடைத்தது. சில தினகலாகத் தொடர்ந்து வாசித்தேன் என்று சொல்ல முடியாது, அதே தியானமாக இருந்தேன்.

நாளின் அத்தியாவசிய கருமங்கள் தவிர்ந்த ஏனைய பெரும்பகுதி முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டது பொன்னியின் செல்வன்.

மின்சாரமில்லாத அந்த இரவுகளில் மண்ணெய் விளக்கில் வெகு நேரம் விழித்திருந்து வாசித்தது இன்னும் பசுமையாய் என் நினைவுகளில்.

இடையிடையே வீட்டு முற்றத்தில் நிலா வெளிச்சத்தில் வந்து நிற்கும்போது, மனம் நூற்றாண்டுகள் கடந்து, கடல் கடந்து,

அரிசிலாற்றங்கரையிலும், பழையாறையிலும், தஞ்சை, கோடிக்கரை என சஞ்சரிக்கும்.

எனது நினைவிலும் , கனவுகளிலும் வாட்களும், வேல்களும், குதிரையின் குழம்பொலிகள், யானையின் பிளிறல்கள், வெற்றி முழக்கங்கள்.

வந்தியத்தேவன், குந்தவை, ஆதித்த கரிகாலன், ஆழ்வார்க்கடியான், அருள்மொழி, வானதி, பூங்குழலி, சேந்தன் அமுதன், பார்த்திபன், பழுவேட்டரையர்கள், நந்தினி, சுந்தரச் சோழர், அநிருத்தர், கந்தமாறன், ரவிதாசன் எல்லோரும் என் சொந்தக்காரர், அயலவர்கள் ஆனார்கள்.

அவர்களின் உருவமும், குணவியல்புகளும் மனதில் ஆழமாக பதிந்து போய், பார்க்கும் மனிதர்களிளெல்லாம் அவர்களைத் தேட முயற்சித்திருக்கிறேன்.

கல்கியின் அளவுக்கு மீறாத வர்ணனைகள், நகைச்சுவை கலந்த எழுத்து, ஓவியர் மணியம் வரைந்த அருமையான, உயிரோட்டமுள்ள ஓவியங்கள் என்றும் மனதை விட்டகலாதவை.

குறிப்பாக ஆரம்பத்தில் வந்த அந்த ஓவியங்கள் பின்னாளில் எந்தப் பதிப்பிலும் நான் காணவில்லை. கல்கியில் தொடராக வந்தபின் முதல் பதிப்பான புத்தகங்கள் வைத்திருந்த வாசிக்கக் கொடுத்த கண்ணன் மாமாவும் மறக்க முடியாதவர்.

இதைத் திரைப்படமாகவோ, தொடராகவோ எடுத்தால் நிச்சயம் நன்றாயிருக்காது (வாசித்தவர்களுக்கு). கல்கியும், மணியமும் மனதில் பதித்துச் சென்ற பாத்திரங்களுக்கு யாருமே இணையாக முடியாது.

                  முன்பு எம்.ஜி.ஆர். திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் இருந்தாராம். அவர் வந்தியத்தேவனாக? நடிப்பதை ஓரளவாவது ஜீரணிக்க முடிந்தாலும் (நிச்சயமாக என்னால் முடியாது), அதைவிடக் கொடுமை, எம்.ஜி.ஆர்.வந்தியத் தேவேனாக நடித்தால்,         குந்தவை? ஜெயலலிதாவோ, சரோஜாதேவியோ குந்தவையாக நடித்தால்?

அய்யய்யோ நினச்சாலே பயங்கரமா இருக்கு. நல்ல வேளை தஞ்சைப் பிரகதீஸ்வரர்தான் காப்பாற்றினார்.

தல, தலைவர், வாத்தியார்


வாழ்வின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செயல்களிலும் ஏதோ ஒரு வகையில் தன்னை நினைவூட்டுகிறார். எனக்கு மட்டுமல்ல எத்தனையோ பேருக்கு.

ஒரு எழுத்தாளனால் ஒவ்வொரு வாசகர்களிலும் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா?

எங்களுக்கெல்லாம் 'தல' , 'தலைவர்', எல்லாமே அவர்தான்.

அவர்தான் 'வாத்தியார்'.
அவர் சொல்லிக் கொடுத்ததைப் போல் யாருமே எதையும் சொன்னதில்லை, சொல்லவும் முடியாது.

        எனக்கு பதின்மூன்று வயதில் அறிமுகமானார். ஒரு கணேஷ்-வசந்த் கதை மூலம். வீட்டில் ஏற்கனவே தெரிந்திருந்ததால், அவர் பெண்ணா என்ற குழப்பம் இருக்கவில்லை. நிறையப் பேருக்கு அப்படி ஒரு குழப்பம் வேறு.

(நிறைய பேர் சுஜாதா என்றாலே, சினிமா அம்மா சுஜாதா, பாடகி சுஜாதா என்று....ஒருத்தன் அந்நியன் வந்தபோது பாடகி சுஜாதாவா  வசனம் எழுதினது? ன்னு கேட்டு என்னைக் கலவரப் படுத்தினான். ம்ம்ம் நம்ம தமிழரின் வாசிப்புப் பழக்கம் அப்படி....
அதிலும் நம்ம பெரும்பான்மையான பெண்கள் வாசிப்பது, ரமணி சந்திரன் என்பவர் படைக்கும் மாபெரும் 'இலக்கியக் காவியங்களை').

சுஜாதா இலக்கியவாதியா இல்லையா என்ற குழப்பம் வேறு பலருக்கு.

        ஒரு உண்மையான இலக்கியவாதியாக  தான் வாழுகின்ற சூழ்நிலையை, சமகாலத்து நிகழ்வுகளை தனது எழுத்துக்களில் பிரதிபலித்தார், ஏனைய உலக இலக்கியங்களை, கருத்துக்களை அறிமுகம் செய்து வைத்தார். இந்தப் பணியை அவரைப் போல் யாரும் செம்மையாகச் செய்ததில்லை.

தன்னுடைய பொழுது போக்கு கதைகளான கணேஷ்-வசந்த் கதைகளினூடாக கூட சில்வியா பிளாத், நீட்ஷே போன்றவர்களை எங்களுக்கு அறிமுகம் செய்தார்.

'கணையாழியின் கடைசிப் பக்கங்கள்' அவர் தொடாத விஷயங்களே இல்லை. முப்பது வருஷம் கழித்து வந்த 'கற்றதும் பெற்றதும்' தொடரிலும் மீண்டும் அதே உற்சாகம், துள்ளல், இளமை.

திரைப்படத் துறையில் அவரின் பங்களிப்புகள் ஏராளம்.

அனாலும் 'சினிமா அவரைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை' நடிகர் கமல்ஹாசன்.
அந்நியன் விமர்சனத்தில், 'multiple personality disorder (உபயம்- சுஜாதா) என்று விகடன் எழுதியது.

குறிப்பாக இயக்குனர் ஷங்கரின் படங்களில் அவரின் 'டச்' படத்தின் வசனங்களில் தெரியும்.
இந்தியன் - 'புத்திக்கு தெரியுது, மனசுக்கு தெரியல'
முதல்வன் - முதல்வரின் நேர்காணல் வசனங்கள், அந்தப் பிரபலமான இறுதி வசனம் ' that was a great interview  '
அந்நியன் - 'அஞ்சு பைசா திருடினா தப்பா?' வசனங்கள்.

இலக்கியங்கள் காலங்களைக் கடந்தவை. ஆனால், தமிழ் இலக்கியவாதிகள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்களின் எழுத்துக்கள் ஒரு கால வரையறைக்குட்பட்டவை. முப்பது வருடத்துக்கு முன் எழுதிய எழுத்து இபொழுது சூழ்நிலைக்கு பொருந்தாது, ஒரு வயது போன தன்மை தெரியும். வாசிக்க சோர்வு தட்டும். 

ஆனால் சுஜாதா முப்பது வருஷத்துக்கு முன் எழுதியது இப்பொழும் புதிதாகவே தோன்றுகிறது. இன்னும் முப்பது வருஷம் கழிந்தபின் வரும் இளைஞனுக்கும் புதிதாகவே இருக்கும்.

அவர் காலங்களைக் கடந்தவர், இறுதிவரை இளைஞனாகவே இருந்தார், அவர் எழுத்துக்களும் என்றும் இளமையானவை.

இறுதி நாட்களில் கூட 'கற்றதும் பெற்றதும்' தொடரில் எழுதினார் 'நான் வழமையாகச் செல்லும் பூங்காவில் ஒரு எழுபது வயதுத் தாத்தாவைப் பார்ப்பேன்'. அதுதான் சுஜாதா! 

Friday, August 13, 2010

Windstruck



ஒரு துணிச்சலான, அதிரடியான பெண் போலீசுக்கும் (ஜின்), ஒரு அப்பாவி இளைஞனான ஆசிரியருக்கும் (வூ) இடையிலான அழகான காதல் கதை.

அழகான என்றால் சும்மா இல்லை. கொள்ளை அழகு. ஒவ்வொரு காட்சிகளும் அந்தப் பெண்ணும்.



திருடன் என்று துரத்துவதாக நினைத்து, ஏற்கெனவே திருடனைத் துரத்திக் கொண்டிருந்த 'வூ' வைப் பிடித்து, கைது செய்து, காவல் நிலையத்துக்கு கொண்டுசெல்லும் காட்சியில் இருவரும் அறிமுகமாகிறார்கள். அவர்களுக்குள்ளும், எங்களுக்கும்.

அந்த இரண்டு முக்கிய பாத்திரங்களைக் கொண்டே ஒரு அழகான, எளிமையான, நேர்த்தியான....இன்னும் என்ன சொல்றது.




'தன்னைத் தவறுதலாகக் கைது செய்ததற்கு ஒரு 'sorry ' கூடச் சொல்லவில்லை' என 'வூ' கேட்க 'எனக்கு அப்படிக் கேட்டு பழக்கமில்லை, வேண்டுமானால் உன் பேரை 'sorry' ன்னு மாற்றிக்கொள் நான் கூப்பிடுகிறேன்' என்கிறாள்.

அந்தப் பெண்ணின் இயல்பான நடிப்பு, குறும்புத்தனமான முகபாவனைகள், தவறான ஆளைப் பிடித்து விட்டோம் ன்னு தெரிந்தும், சக போலீசுக்கு புரிந்த பின்னரும் தொடர்ந்து செய்யும் 'பில்ட் அப்'. 



வகுப்பறைக் காட்சி, காலையில் எழுந்து 'வூ' சொறிந்து கொள்ளும் காட்சி.
மருத்துவமனையில் 'வூ' சிகிச்சையில் இருக்கையில் 'ஜின்' னின் தவிப்பு. சோகம்.

சக போலீஸ் கதா பாத்திரங்களின் நடிப்பு. 

குளிர்மையான ஒளிப்பதிவு.


பெண்கள் மட்டும் படிக்கும் 'வூ' வின் வகுப்பறைக்குள், கையில் சாப்பாட்டுடன் நுழையும் ஜின், 'இது உங்களில் யாருடையது?' எனக் கேட்க, எல்லோரும் இல்லை என, ' அப்படியானால் இது 'வூ' வுடையது' என்றவுடன் வகுப்பில் ஆரவாரம்.




'வூ' வைத் தன் காதலன் என மாணவிகளிடம் சொல்கிறாள். சங்கோஜப் படும் 'வூ' அவளை ஒருவாறு வெளியேற்ற, போகிற போக்கில் சும்மா ' We slept together ' என்று அடித்து  விட, மீண்டும் வகுப்பில் ஆரவாரம்.


('வூ' விற்கு விலங்கிட்ட பின் சாவியைத் தொலைத்து விட்டதால் திறக்க முடியாமல் இப்படித்தான் ஒன்றாகத் தூங்கினார்கள்.)




படம் பார்த்து இரண்டு நாட்களானாலும் திரும்பத் திரும்ப காட்சிகள் நினைவுக்கு வரும். நல்லபடம் னா அப்படி வரணும், இருந்தாலும் இந்த சிம்பிளான கதை அப்படி பாதிக்கிறது என்றால் அது இயக்குனரின் திறமையும், நடிகர்களும் தான்.

இயக்கம் - Kwak  Jae -Yong 
மொழி - Korean
நாடு  - South Korea

Wednesday, August 11, 2010

Tsotsi

ஒரு நல்ல படத்தை, எவ்வளவு கேவலமாகத் தமிழில் எடுக்கலாம்? அல்லது எடுக்கிறார்கள்?

Tsotsi , யோகி

Tsotsi - ஒரு அருமையான படம்
யோகி - தொலைக்காட்சியில், பாடல் காட்சிகளிலும், சிறு காட்சிகளிலும் பார்த்தது (அது போதாதா?) முழுன்மையாகப் பார்க்கும் அளவுக்கு என் மனம் இன்னும் பக்குவப் படவில்லை.

Tsotsi


 
எதற்கும் கவலைப்படாத ஒரு சேரிப்புற ரவுடியின் வாழ்வில் எதிர்பாராமல் ஒரு குழந்தை இணைந்து கொள்ள, என்னவாகிறது? - இதுதான் படத்தின் தீம்.

சிறுவயதில் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு, இரக்கமற்ற தந்தையிடமிருந்து ஓடிவந்து சேரிப்புறத்தில் தஞ்சமடைந்து, வளர்ந்த சொற்சி, நண்பர்களோடு சேர்ந்து வழிப்பறி, கொள்ளை, கொலை என வாழ்ந்து வருகிறான்.


       ஒருநாள் பென்ஸ் காரொன்றை திருடும்போது, உள்ளே ஒரு குழந்தை, தாயை சுட்டு விடுகிறான். குழந்தையை என்ன செய்வதென்று தெரியாமல், அனாதையாக விட்டுச் செல்லவும் மனமில்லாமல், இறுதியில் தனது வீட்டுக்குக் கொண்டு செல்கிறான். ஒருவருக்கும் தெரியாமல் தானே வளர்க்க முடிவு செய்கிறான். வீட்டுக்கு வரும் நண்பர்களை உள்ளே நுழைய விடாமல், சந்தேகப் படும் அவர்களை ஒருவாறு சமாளித்து அனுப்புகிறான்.

        கைக் குழந்தையுடன் செல்லும் ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று, அவளை மிரட்டி பாலூட்ட வைக்கிறான். முதலில் வற்புறுத்தலால் சம்மதிக்கும் அவள், நாளாக அக்குழந்தையின் மேல் பாசம் கொள்கிறாள்.


         ஒரு நாள் நண்பர்களுடன் ஒரு வீட்டைக் கொள்ளையடிக்க செல்லும்போது, அது அந்தக் குழந்தையின் வீடு எனத் தெரிய வருகிறது. குழந்தையின் தந்தையிடமிருந்து அதன் தாய் அவன் சுட்டதால், இடுப்புக்கு கீழ் வழங்காமல் இருப்பதையும், குழந்தையைப் பிரிந்து இருவரும் மிகவும் வருந்துவதையும் உணர்கிறான். பணம், நகையை விட்டு குழந்தையின் விளையாட்டு பொம்மைகள், உணவுப் பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்கிறான்.

ஒரு சிறு குழப்பத்தில் குழந்தையின் தந்தையை சொற்சியின் சகா கொல்லப் போக, அவனைக் கொன்று தந்தையைக் காப்பாற்றுகிறான். இன்னொரு சகா வெறுத்துப் போய் அவனிப்பிரிந்து செல்கிறான்.

      இப்பொழுது அவனுடன் குழந்தை மட்டுமே. அதான் ஆடம்பரமான பெரிய வீட்டைப் பார்த்த அவனுக்கு தனது குடிசையில், பாதுகாப்பின்றி வைத்திருப்பது அவன் மனதுக்கு கஷ்டமாக இருக்க, போலீஸ் வேறு அவனைத் தேட, முதன்முறையாக தான் வாழ்க்கையில் நேசித்த, அன்பு கொண்ட ஒரேயொரு ஜீவனைப் பிரிந்து விட முடிவு செய்கிறான்.


குழந்தையை அதன் வீட்டில் கொண்டுபோய் விட தூக்கி செல்லும்போது, அந்தப் பெண் எங்கே எடுத்துச் செல்கிறாய்? அவனை நான் வளர்க்கிறேன் என்னிடம் விட்டுவிடு எனக் கேட்க, அவன் எதுவுப் பேசாமல் போகிறான்.

      துப்பாகிகளால் குறிவைத்தபடி போலீசார் சுற்றிநிற்க, குழந்தையை தாயிடம் ஒப்படைத்துவிட்டு, அழுதபடி, சொற்சி கைகளை மேலே மெதுவாக தூக்க படம் நிறைவடைகிறது.

மிகத் தெளிவான, எளிமையான, குழப்பமற்ற திரைக்கதை, காட்சியமைப்பு, ஒளிப்பதிவு (குறிப்பாக அந்த 'ஸ்லம்' காட்டப்படும் விதம்)

சொற்சி பாத்திரத்தின் இயல்பான நடிப்பு, குழந்தைக்குப் பாலூட்டுவதை பார்க்கும்போது வெளிப்படும் (தாய்ப் பாசத்துக்கு ஏங்கும்) முகபாவனை

இயக்கம் - Gavin Hood
Country- South Africa
Award - Academy Award for Best Foreign Language Film 2005
           - Nominated for Golden Globe for Best Foreign Language Film 2006

யோகி

tsotsi என்றால் ரவுடி / பொறுக்கி
யோகி என்றா? ( பெயரிலேயே வித்தியாசமா யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க)

அதில டீன் ஏஜ் ஹீரோ.
இதில நம்ம 'யூத்து' அமீர்.

அதில பெயருக்கு ஏற்றமாதிரி ஹீரோ ரவுடி. மற்ற எல்லாரும் இயல்பான பாத்திரங்கள்.
இதில தமிழ் சினிமா விதிகளின்படி ஹீரோ நல்லவர், வல்லவர், நியாயமானவர் இன்னபிற. அவர்தான் ஹீரோவாச்சே.. அப்போ மற்ற எல்லாரும் கெட்டவங்க.

அதில, அவன் கெட்டவனாகவே வாழ்கிறான். அவன்தான் படத்தில் வில்லன். அதையும் தாண்டி இறுதிக் காட்சியில் அவன் மேல் எங்களுக்கு இரக்கம் ஏற்படும்.
இதில இவர் 'ஹீரோ'வா இருக்கிறார், நடக்கிறார், இறுதியில் சாகிறார். எங்களுக்கு? (அப்பாடா! போயிட்டானா? அவ்வளவு சேட்டை, தாங்க முடியல!)

ஆனா இரண்டிலையும் ஹீரோயின் சறம் கட்டி இருக்காங்க. அபிரிக்காவில பெண்கள் சறம் கட்டுவாங்க ஒக்கே. தமிழ் நாட்டிலையும் கட்டுறாங்களா? எனக்குத் தெரியல.

          ஒண்ணு மட்டும் எனக்குப் புரியவே மாட்டேங்குது. யோகிய ஏன் இரண்டு வருஷமா எடுத்தாங்க? ஒன்னுமே தெரியாத நானே, புது முகங்களை வைத்து (பழைய முகம்னா 'நடிக்கத்' தொடங்கிடுவாங்களே), ஒவ்வொரு ஸீனா பாத்துப் பாத்து, காட்சியமைத்து (அவ்வளவு தெளிவா இருக்கு படம்), ஆறு மாசத்தில எடுத்துடலாம் ன்னு நினைக்கிறேன்.
அமீருக்கு ஏன் இவ்வளவு நாள்? இதில டைரக்க்ஷன் வேற ஒருத்தர், கதை அமீரோடதாம் (பார்ரா!!)

tsotsi யை அப்படியே தமிழில் எடுத்திருந்தால், தமிழ் சினிமாவின் ஒரு நல்ல படைப்பாக இருந்திருக்கும். ம்ம் என்னமோ போங்க!