Saturday, June 26, 2010

அறியாத வயசு

நாங்கள் மிகவும் தீவிரமாக இருந்தோம். எங்கள் மூவரில் யாருக்கு 'அந்த' யோசனை முதலில் தோன்றியது, யார் முதலில் வெளிப்படுத்தியது என்று எதுவும் தெரியவில்லை.


ஈனா நம்பிக்கை இல்லாமல், இப்பிடித்தான் ஒவ்வொரு தடவையும் 'பிளான்' பண்றதாகவும் பிறகு கைவிடுவதாகவும் என்று கூற, கடுப்பான ஞானா, 'எதையும் அவசரப்பட்டு செய்யக்கூடாது நீ எதையும் யோசிக்காம கதைக்கிறே'

ஒக்கே ஒக்கே இந்த முறை 'அத' முடிக்கிறோம் - இது நான்

ஒருமனதாக நாங்கள் தீர்மானித்துவிட்டோம்.

'எப்ப ?' - ஈனா

'நேற்று என்பது முடிந்து போனது, நாளை என்பது நிச்சயமற்றது, இன்று மட்டுமே நிஜம்' -நான் (அடிக்கடி அசந்தர்ப்பமாக இதைத்தான் கூறுவேன்)

என்னை முறைத்துக்கொண்டிருந்த ஞானா ' புதன் கிழமை?'

'சரி' - ஈனா
'எங்கே?'

'அங்க தானே வேற எங்க'
(எங்கள் பகுதியில் 'அந்த' விஷயத்துக்கு பிரபலமான இடம் )

'எட்டு மணி , ஓக்கேயா ?'
'ஒகே'

நாள் பார்த்து முகூர்த்தம் குறிக்கப்பட்டாயிற்று.

அந்த புதன்கிழமையும் வந்தது. காலையிலிருந்தே இனம் புரியாத ஒரு த்ரில், அல்லது கிளுகிளுப்பு அல்லது அடிவயிற்றில் லேசான ஒரு...ஒரு (அதான் இனம் புரியாத ன்னு சொல்லியாச்சே )


இதுவரை எங்களில் யாருக்கும் 'அந்த' அனுபவம் இல்லை. எவ்வளவு நாளைக்குத்தான் 'இப்படியே' இருப்பது?

மாலை ஏழு மணி. நாங்கள் மூவரும். 'இந்தப்பக்கத்தால போக வேணாம்...சொந்தகாரங்க...சுத்திபோகலாம்' - ஞானா


லேசாக தூறும் மழை. 'அதுவும் நல்லது தான்' - ஞானா. 'எதுக்கு'ன்னு யாரும் கேட்கவில்லை.


உள்ளே வந்து விட்டோம். எல்லோரும் எங்களை பார்ப்பதை போன்ற உணர்வு. ஒரு ரூமில் மூவரும்.

'யாரும்  வந்தால் தெரிஞ்சிடும். அவ்வளவுதான் ' - ஈனா கலவரப்படுத்தினான்.
ஞானா வெளியே போய் ஒரு மொட்டைத்தலை ஆசாமியிடம்  கதைத்தான்.


திரும்பி வந்து, 'வெயிட்' பண்ணட்டுமாம்.

' என்ன மாதிரி?' அனிச்சையாய் அவன் ஒரு விரலைக்காட்ட,
'மூணு பேருக்குமா?'

'..........'

'..........'


யாரும் எதுவும் பேசவில்லை. இது நிச்சயமாக நமது வாழ்வின் முக்கிய தருணம், இது நம்மை அடுத்தகட்டத்துக்கு..? கொண்டு செல்லும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை.


இப்பொழுதே எங்கள் முகத்தில் 'எதையோ'  சாதித்து விட்ட திருப்தி.
ஆழ்ந்த மௌனமும், மழைத்துளியின் ஓசையும் மட்டுமே.


'டொக்..., டொக்..'


ஒரு பியரும், மூன்று 'கிளாஸ்' களும் வைக்கப்பட்டன எமது மேசையில்.