Friday, December 10, 2010

இதயம் ஒரு கோவில்..

சில பாடல்கள், 'சோப்' வாசனைகள் எமது கடந்த காலத்தை நினைவூட்டுவதை உணர்ந்திருக்கிறீர்களா? குறிப்பாக சிறு வயதில் நாம் கேட்டு ரசித்த பாடல்களை இப்போது கேட்கும்போது, அந்தக் காலத்திற்கே ஒரு காலயந்திரம்போல் உடனடியாக எம்மைக் கூட்டிச் சென்றுவிடுகின்றனவே! 

தொலைந்து போன சிறுவயது நினைவுகள் கிளறப்பட்டு மனதிலோர் ஏக்கம் உண்டாவதை உணர்ந்திருக்கிறீர்களா?


கார்த்திகை மாதம், மழை விட்டிருந்த முன்னிரவு நேரம், மின்சாரமில்லாத காலப்பகுதி,  சற்றே தூரத்தில் அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் தாத்தா. எரியும் தணலும், புகையும்...மெலிதான வெளிச்சத்தில்...சைக்கிள் டைனமோவைச் சுற்றி, வானொலிப் பெட்டியை உயிரூட்டிக் கொண்ருக்கும் என்னிலும் எட்டு வயது மூத்த அண்ணன் ஒருவனின் அருகில் அமர்ந்திருக்க...சன்னமான குரலில் எஸ்.பி.பி.' கேளடி கண்மணி பாடகன்...' 

அந்தப் பாடலை முதலிலேயே கேட்டிருந்த போதும், இப்படிக் கேட்டது மறக்க முடியாத அனுபவம். இப்போது கண்கள் மூடி அதைக் கேட்டாலும் உடனேயே அந்தக் காலப் பகுதிக்குச் சென்றுவிடுகிறது மனம்.


நீங்கள் முதன்முதல் கேட்டு ரசித்த பாடல் எது?
எங்களுக்கு நினைவு தெரிந்து, ஆகக் குறைந்தது எந்த வயதில் நடந்த சம்பவத்தை நினைவு படுத்திச் சொல்ல முடிகிறது?
அது போலதான் பாடல்களும்! 

அப்படி நான் சிறுவயதில் கேட்டு, ரசித்த பாடல்கள் 'இதயக் கோவில்' பாடல்கள்.
எங்கள் வீட்டிற்கருகே இருந்த சோதிலிங்கம் என்பவர், அப்போது இருபத்தி மூன்று  வயதிருக்கலாம் மத்திய கிழக்கு நாடொன்றுக்குச் சென்று வந்திருக்கவேண்டும். ஒரு பெரிய ரேடியோ Amplifier set எல்லாம் வைத்து, காலையில் விடிந்ததுமே ஆரம்பிக்கும் 'இதயம் ஒரு கோவில்'.

காலை நேரத்தில் அமைதியான அந்த இசையும், அதில் இழையோடியிருக்கும் ஒரு சந்தோஷமான உணர்வும் கேட்டவுடன் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும். எனக்கு/என்னைப் பிடித்துக் கொண்டது அந்தப் பாடல். அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே.

அதிலிருந்து தொடர்ந்து பல இளையராஜா பாடல்கள்! பாடல்வரிகள், அர்த்தங்கள் எதுவுமே தெரியாமல்! 

'பாடியழைத்தேன் உன்னை ஏனோ..', 'ஏழிசை கீதமே' இரண்டும் எனது மிக விருப்பத்திற்குரிய பாடல்களாக்கிப் போனது! இன்று வரை அந்தப் பாடல் வரிகளை நான் சரியாகக் கவனித்ததில்லை! ஜேசுதாசின் குரலும், இசை, இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ், இன்டலூட் மியூசிக் இவற்றுக்காகவே! அநேகமாக எனக்குப் பிடித்த எல்லாப் பாடல்களிலுமே பாடல் வரிகளைக் கவனிப்பதில்லை. இசைக்காகவே!

பாடல்களோடு கூடவே அவற்றை அறிமுகப்படுத்துகிற சோதிலிங்கம் மாமாவையும் பிடித்துக் கொண்டது.

அப்போதெல்லாம் இளைஞர்கள் எல்லோரும் அப்போதைய ரஜினி மாதிரியான ஒரு ஹேர் ஸ்டைலில் இருந்தார்கள். இன்னும் சரியாகச் சொன்னால் சுப்பிரமணியபுரம் ஸ்டைல். தலை, உடை எல்லாம் அப்படியே. அதனால் தானோ என்னவோ அந்தப் படம் பார்க்கும்போது கதைமாந்தர் எனக்கு நெருக்கமானவர் போன்றதோர் உணர்வு. நான் குழந்தையாக இருந்து கவனித்த முதல் மனிதர்கள்  சுப்பிரமணியபுரம் ஸ்டைலிலேயே இருந்தார்கள். சோதிலிங்கம் மாமாவும் அப்படித்தான் இருந்தார். எப்போதும் ஒரு புன்முறுவலுடன் அன்பாகப் பேசுவார்.

சூழ்நிலை காரணமாக எல்லோரும் எங்கெங்கோ சிதறிப்போய், யாரையும் சந்திப்போமா என்று தெரியாமலும், சந்திக்கவே முடியாதென்றே தெரிவானவர்களும்!

அப்படித்தான் அவரும்! பதினைந்து வருடங்களுக்கு முன்னரே காணாமல் போனோர் பட்டியலில் இணைந்து விட்டதாகக் கேள்வி.    


எப்பொழுதெல்லாம் எனக்கு என் பால்ய காலத்தைப் பார்க்க ஆசையேற்படுகிறதோ, உடனே MP3 ப்ளேயரில் பாடல்களை ஒலிக்க விட்டு, கண்களை மூடி...!

காலம் நம் வாழ்க்கையில் எவ்வளவோ மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும் நினைவுகள் மட்டும் இன்னும் பசுமையாய் நெஞ்சில்.இப்பொழுதும் எனக்கு இதயக்கோவில் பாடல்கள் கேட்கும்போது, எங்கள் சொந்த ஊர், எனது சிறு வயது கூடவே சோதிலிங்கம் மாமா. 


42 comments:

 1. "காலம் நம் வாழ்க்கையில் எவ்வளவோ மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும் நினைவுகள் மட்டும் இன்னும் பசுமையாய் நெஞ்சில்"

  அருமை அருமை அருமை.... பதிவு வாசிக்கும் போது ஊர் போய் வந்தேன்..
  வாழ்த்துக்கள் தொடருங்கள் ஜீ..

  ReplyDelete
 2. கடந்த கால நினைவுகள் என்னைக்குமே பசுமை தான் நண்பரே

  ReplyDelete
 3. காலம் நம் வாழ்க்கையில் எவ்வளவோ மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும் நினைவுகள் மட்டும் இன்னும் பசுமையாய் நெஞ்சில்.


  ..... absolutely right!

  ReplyDelete
 4. டச்சிங்! அழகாய் சொன்னீர்கள்.

  ReplyDelete
 5. //பிரஷா said...
  அருமை அருமை அருமை.... பதிவு வாசிக்கும் போது ஊர் போய் வந்தேன்..
  வாழ்த்துக்கள் தொடருங்கள் ஜீ..//
  நன்றி! நன்றி! :-)

  //Arun Prasath said...
  கடந்த கால நினைவுகள் என்னைக்குமே பசுமை தான் நண்பரே//
  :-)நன்றி!

  //Chitra said...
  ... absolutely right!//
  :-)நன்றி!

  /சைவகொத்துப்பரோட்டா said...
  டச்சிங்! அழகாய் சொன்னீர்கள்//
  :-)நன்றி!

  ReplyDelete
 6. மிகச் சரியாக சொன்னீர்கள்.
  சில வாசனைகள். சில பாடல்கள் நம் கடந்த காலத்தை நினைவு படுத்தும். என் அப்பா சிங்கப்பூரில் இருந்தார். அவர் வரும்போதெல்லாம் வீட்டில் பரவியிருக்கும் வாசனை என்னைப் பொறுத்தவரை அப்பாவின் வாசனை.இன்றும் பர்மா பஜார் பக்கம் போனால் கிறுக்கன் மாதிரி நின்று அப்பாவின் வாசனையை சேமித்துக் கொண்டு வருவேன். என் தம்பி இளையராஜா ரசிகன். போன வாரம் என்னிடம் மதுரை சோமு சிடி கிடைத்தால் வாங்கிக் கோடு என்றான். எப்போதிருந்து அவன் மதுரை சோமுவின் ரசிகனானான் என்று என் மனைவியும் அவன் மனைவியும் விழித்தார்கள். எனக்குத் தெரியம் அவன் தேடிக்கொண்டிருப்பது மதுரை சோமுவை அல்ல , என் அப்பாவின் நினைவுகளை.
  உங்கள் பதிவு நினைவுகளை கிளறிவிட்டது.
  நன்றி

  ReplyDelete
 7. அருமையான பசுமையான நினைவுகள்......

  ReplyDelete
 8. //சிவகுமாரன் said...
  எனக்குத் தெரியம் அவன் தேடிக்கொண்டிருப்பது மதுரை சோமுவை அல்ல , என் அப்பாவின் நினைவுகளை.
  உங்கள் பதிவு நினைவுகளை கிளறிவிட்டது//

  நன்றி! உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு! அருமையான பகிர்வுகள் உங்கள் கவிதைகள் போலவே! :-)

  //ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...
  அருமையான பசுமையான நினைவுகள்...//
  நன்றி! :-)

  ReplyDelete
 9. //காலம் நம் வாழ்க்கையில் எவ்வளவோ மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும் நினைவுகள் மட்டும் இன்னும் பசுமையாய் நெஞ்சில்.

  உண்மைதான் நண்பரே... எனக்கும் இப்படி ஒரு பெரிய பட்டியலே உண்டு..

  ReplyDelete
 10. "ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும், கேட்கும்போதெல்லாம் சில ஞாபகம் பூப்பூக்கும்"
  இந்தவரிகள் எவ்வளவு யதார்த்தமானவை பார்த்தீர்களா? அட..என்ன ஆச்சரியம் உங்கள் பதிவுகள் நான், என் உணர்வுகளுடன் எழுதியதைப்போலவே உள்ளதே! எமக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் ஒவ்வொரு பாடலும் உள்ளுக்குள் அந்தக்காலகட்ட நினைவுகளை இதயத்தில் படம்போட்டுவிடும் என்பது உண்மை.
  "ஆயிரம் மலர்களே மருங்கள் அமுதகீதம் பாடுங்கள்" இந்தப்பாடல்தான் என் மனதில் உட்கார்ந்த முதல்பாடல் என்று எனக்கு தெரியும். சம்பவங்கள்கூட கறுப்பு வெள்ளையாக மனத்தில் இப்போதும் உள்ளது.
  ஸா... மீண்டும் ஒருமுறை யோசிக்கவைத்துவிட்டீர்கள்.. இசை உணர்வுகளுடனும், காலங்களுடனும் கலந்ததுதான்.

  இன்று மட்டும் விடைதெரியவில்லை ஜீ... நான் நினைக்கின்றேன் என் மூன்று அல்லது நான்கு வயதில் கேட்ட பாடல் "வெண்ணிலா வெள்ளித்தட்டு, வானிலே முல்லை மொட்டு" என்ற ஒருபாடல். இப்போதெல்லாம் அந்தப்பாடலை கேட்கமுடிவதில்லை. ஆனால் அந்த வேளைகளில் இந்தப்பாடலைக்கேட்டால் எனக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத நிகழ்வுகள் விபரிக்கமுடியாத உணர்வுகள் வரும். பின்னர் சிலவேளைகளிலும் அந்தப்பாடலைகேட்கும்போதும் அதே உணர்வு... இதுவரை விடை தெரியவில்லை. இப்போதும் அந்தப்பாடலை தேடிக்கொண்டிருக்கின்றேன்.

  ReplyDelete
 11. //பிரியமுடன் ரமேஷ் said...
  உண்மைதான் நண்பரே... எனக்கும் இப்படி ஒரு பெரிய பட்டியலே உண்டு..//
  :-)நன்றி நண்பா!

  ReplyDelete
 12. //Jana said...
  அட..என்ன ஆச்சரியம் உங்கள் பதிவுகள் நான், என் உணர்வுகளுடன் எழுதியதைப்போலவே உள்ளதே! எமக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் ஒவ்வொரு பாடலும் உள்ளுக்குள் அந்தக்காலகட்ட நினைவுகளை இதயத்தில் படம்போட்டுவிடும் என்பது உண்மை//

  //இசை உணர்வுகளுடனும், காலங்களுடனும் கலந்ததுதான்//

  வாங்க ஜனா அண்ணா! பின்னூட்டத்தில ஒரு குட்டிப் பதிவே போட்டுடீங்களே! இன்னும் நிறைய இருக்கு! சொல்ல முடியல! நன்றி உங்கள் பகிர்வுக்கு! :-)

  ReplyDelete
 13. நீங்கள் சொன்ன மாதிரி காலம் கடந்தும் வாழும் அந்த பாடல்கள்.......

  ReplyDelete
 14. அட அடிக்கடி ஊருக்கு வாறிங்க போல வரும் போது சொல்லாம் தானே... ஒரு எட்டு வந்து பார்ப்போமில்ல...

  ReplyDelete
 15. //NKS.ஹாஜா மைதீன் said...
  நீங்கள் சொன்ன மாதிரி காலம் கடந்தும் வாழும் அந்த பாடல்கள்....//
  :-)நன்றி!

  //ம.தி.சுதா said...
  அட அடிக்கடி ஊருக்கு வாறிங்க போல வரும் போது சொல்லாம் தானே... ஒரு எட்டு வந்து பார்ப்போமில்ல...//

  அதுக்கென்ன! சந்திக்கலாமே! வரும்போது சொல்றேன்! :-)

  ReplyDelete
 16. //அப்படித்தான் அவரும்! பதினைந்து வருடங்களுக்கு முன்னரே காணாமல் போனோர் பட்டியலில் இணைந்து விட்டதாகக் கேள்வி.//

  எனக்கும் பிரியமான மாமா ஒருவர் இப்படி காணமல் போய்விட்டார்.. காலம் கடந்தும் நிற்கும் பாடல்கள் போலவே .. நம் மனதை ஆளுகின்றன நினைவுகள்..

  ReplyDelete
 17. அந்த பொற்காலம் இனி வரப்போவதில்லை . அதன் சாயல்களை பாடல் கேட்கையில் உணரலாம் .

  ReplyDelete
 18. //சிறு வயதில் நாம் கேட்டு ரசித்த பாடல்களை இப்போது கேட்கும்போது, அந்தக் காலத்திற்கே ஒரு காலயந்திரம்போல் உடனடியாக எம்மைக் கூட்டிச் சென்றுவிடுகின்றனவே! //

  உண்மைதான்

  ReplyDelete
 19. அனுபவம் சூப்பர்..தேர்வு சிறப்பு

  ReplyDelete
 20. //கே.ஆர்.பி.செந்தில் said...
  எனக்கும் பிரியமான மாமா ஒருவர் இப்படி காணமல் போய்விட்டார்.. காலம் கடந்தும் நிற்கும் பாடல்கள் போலவே .. நம் மனதை ஆளுகின்றன நினைவுகள்..//
  :-)நன்றி!

  //பார்வையாளன் said...
  அந்த பொற்காலம் இனி வரப்போவதில்லை . அதன் சாயல்களை பாடல் கேட்கையில் உணரலாம்//
  :-)நன்றி!

  //nis said...
  உண்மைதான்//
  :-)நன்றி!

  //ஆர்.கே.சதீஷ்குமார் said...
  அனுபவம் சூப்பர்..தேர்வு சிறப்பு//
  :-)நன்றி!

  ReplyDelete
 21. //காலம் நம் வாழ்க்கையில் எவ்வளவோ மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும் நினைவுகள் மட்டும் இன்னும் பசுமையாய் நெஞ்சில்//

  அருமை நண்பரே,

  எனது பழைய நினைவுகளையும் ஊரின் நினைவுகளையும் ஞாபகபடுத்தி நெகிழவைத்து விட்டீர்கள் அருமை

  சிறப்பு நன்றிகள் ராகதேவனின் பாடல்களை தேர்வு செய்தமைக்கு

  தொடரட்டும் உங்கள் பணி...

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 22. //மாணவன் said...
  சிறப்பு நன்றிகள் ராகதேவனின் பாடல்களை தேர்வு செய்தமைக்கு//
  அவை என் வாழ்வோடு கலந்தவை தேர்வு செய்ய ஏதுமில்லை! :-)

  //தல தளபதி said...
  touch pannitinga boss...//
  நன்றி boss!

  ReplyDelete
 23. எனக்கும் சில பாடல்கள் உண்டு ஜீ! சில பாடல்கள் கேட்டால் அந்த நினைவுகள் தாலாட்டும்!!

  ReplyDelete
 24. /காலம் நம் வாழ்க்கையில் எவ்வளவோ மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும் நினைவுகள் மட்டும் இன்னும் பசுமையாய் நெஞ்சில்.இப்பொழுதும் எனக்கு இதயக்கோவில் பாடல்கள் கேட்கும்போது, எங்கள் சொந்த ஊர், எனது சிறு வயது கூடவே சோதிலிங்கம் மாமா. //

  ரொம்ப அருமையா சொல்லிருக்கீங்க.
  பசுமையான நினைவுகள்.
  பழச கிளறிட்டீங்களே!!

  ReplyDelete
 25. ஆமாம் ஜீ.. சரியாக சொன்னீர்கள். இப்படி ஒரு உணர்வை நானும் அனுபவித்திருக்கிறேன்.

  ReplyDelete
 26. மீண்டும் இளமைக்காலதுக்கு அழைத்து சென்றது உங்கள் பாடலும் விமர்சனமும் .. எங்கள் காலத்தில்,மின்சாரவச்தியில்லை . ஆனாலும் பற்றரி போட்டுபாட்டும் நாடகமும் கேட்ட காலம். அதுஒரு பொன்னான காலம் மீண்டும வருமா? இதயக்கொவிலும் அதன் ஞாபகங்களும் அருமை. காலத்தி வென்றவை. பகிர்வுக்கு நன்றி பாராட்டுக்கள்.

  ReplyDelete
 27. //வைகை said...
  எனக்கும் சில பாடல்கள் உண்டு ஜீ! சில பாடல்கள் கேட்டால் அந்த நினைவுகள் தாலாட்டும்!!//
  :-)நன்றி!

  //அன்பரசன் said...
  ரொம்ப அருமையா சொல்லிருக்கீங்க.
  பசுமையான நினைவுகள்.
  பழச கிளறிட்டீங்களே!!//
  :-)நன்றி!

  //கனாக்காதலன் said...
  ஆமாம் ஜீ.. சரியாக சொன்னீர்கள். இப்படி ஒரு உணர்வை நானும் அனுபவித்திருக்கிறேன்//
  :-)நன்றி!

  //நிலாமதி said...
  அதுஒரு பொன்னான காலம் மீண்டும வருமா? இதயக்கொவிலும் அதன் ஞாபகங்களும் அருமை. காலத்தி வென்றவை. பகிர்வுக்கு நன்றி பாராட்டுக்கள்//
  வாங்க!நன்றி! :-)

  ReplyDelete
 28. அருமையான நினைவுகள்..

  ////காலம் நம் வாழ்க்கையில் எவ்வளவோ மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும் நினைவுகள் மட்டும் இன்னும் பசுமையாய் நெஞ்சில்////

  உண்மை..

  ReplyDelete
 29. சில பாடல்கள், 'சோப்' வாசனைகள் எமது கடந்த காலத்தை நினைவூட்டுவதை உணர்ந்திருக்கிறீர்களா? குறிப்பாக சிறு வயதில் நாம் கேட்டு ரசித்த பாடல்களை இப்போது கேட்கும்போது, அந்தக் காலத்திற்கே ஒரு காலயந்திரம்போல் உடனடியாக எம்மைக் கூட்டிச் சென்றுவிடுகின்றனவே! ////
  நிஜமான வார்த்தைகள். உங்கள் கட்டுரை என் கடந்தகால நினைவுகளை மீட்டி சென்றது. வாழ்த்துக்கள் ஜீ

  ReplyDelete
 30. //சூழ்நிலை காரணமாக எல்லோரும் எங்கெங்கோ சிதறிப்போய், யாரையும் சந்திப்போமா என்று தெரியாமலும், சந்திக்கவே முடியாதென்றே தெரிவானவர்களும்!//
  ம்ம்...எவளவு கொடுமை....

  ReplyDelete
 31. //இப்பொழுதும் எனக்கு இதயக்கோவில் பாடல்கள் கேட்கும்போது, //

  எனக்கும் ரொம்ப இஷ்டம் ஜீ இதயக்கோவில் சாங்க்ஸ் எல்லாமே..அதுவும் என் முதல் சாய்ஸ் "பாட்டு தலைவன் பாடினான் ...." spb பின்னுன்னு பின்னுன்னு பின்னிருப்பார்...அப்புறம் "யார் வீட்டு ரோஜா..பூ பூத்ததோ சாங்..." எனக்கும் ரொம்ப வரிகளை கவனிக்கும் பழக்கம் இல்லை...இசை பிடிசுருசுனால் நான் முணு முணுக்கும் போதுகூட எதாவது டம்மிய நானா வரிகள் போட்டு முணு முணுப்பேன்..:)))

  நல்லா இருக்கு ஜீ..இந்த பதிவு...இளையராஜா சார் ம் இருக்கார்..எனக்கு புடிச்ச இதயகோவிலும் இருக்கு...அதனாலே ரொம்பவே பிடிச்சுருக்கு...உங்கள் ரசனைகளை..உங்கள் சூழல் சார்ந்து சொல்லிருக்கிறது நல்லாவும் இருக்கு...ஜோதிலிங்கம் மாமா சீக்கிரம் கிடைப்பாங்க ஜீ..!!!

  ReplyDelete
 32. /எப்பொழுதெல்லாம் எனக்கு என் பால்ய காலத்தைப் பார்க்க ஆசையேற்படுகிறதோ, உடனே MP3 ப்ளேயரில் பாடல்களை ஒலிக்க விட்டு, கண்களை மூடி...!//

  நினைவுகள் எப்பவுமே பொக்கிஷம் ஜீ...அதை அழகா பூட்டி வச்சி அழகா நினைவு படுத்தி பகிர்ந்துக்கிறது சந்தோஷமான அனுபவம்...உங்கள் அழகான நினைவுகளை தொடர்ந்து பகிர்ந்துக்கோங்க...:))

  ReplyDelete
 33. காலங்கள் உருண்டோடினாலும் நம் பால்ய காலங்கள் நினைவுகளை நினைத்து பார்ப்பது ஒரு சுகம்தான் .நன்றி நண்பரே

  ReplyDelete
 34. This is one of your best Post....
  எனது கடந்த காலத்தின் அழகிய நினைவுகளை பாடல்கள் நினைவூட்டும் போது சிலிர்துக்கொள்வேன் !! 1995 ஆம் வருட இடப்பெயர்வை இன்னும் ஞாபகபடுத்திக்கொண்டிருக்கிறது அப்பொழுது வானொலியில் கேட்ட பாடல்கள்....
  நீங்கள் அருமையாய் சொல்லிவிட்டீர்கள்... வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 35. "பாடி அழைத்தேன்" மற்றும் "ஏழிசை கீதமே", இரண்டு பாடல்களும் "ரசிகன் ஒரு ரசிகை" திரைப்படத்திற்காக ரவீந்திரன் இசையில் ஜேசுதாஸ் பாடியது.

  "ஏழிசை கீதமே" பாடலின் சரணத்தை முழுதும் மூச்சு விடாமல் ஜேசுதாஸ் பாடியிருப்பார்.

  இந்த பாடல் எஸ்.பி.பி.யின் "மண்ணில் இந்த காதல்" பாடலுக்கு முன்னமே வந்து விட்டது.

  ReplyDelete
 36. sorry my dear, for your kind information,
  பாடி அழைத்தேன் உன்னை, & ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் ... இவை இளையராஜா அவர்களின் இசையில் வந்ததல்ல ..

  மலையாள இசையமைப்பாளர் தேவேந்திரன் இசையில் உருவான பாடல்கள்.
  நான் இளையராஜாவின் கிறுக்கன், ஆனால் இந்தப் பாடல்களும் நீங்கள் சொன்ன வகையைச் சேர்ந்த்து தான்...

  ReplyDelete
 37. //பதிவுலகில் பாபு said...
  அருமையான நினைவுகள்..//
  :-)நன்றி!

  //ரஹீம் கஸாலி said...
  நிஜமான வார்த்தைகள். உங்கள் கட்டுரை என் கடந்தகால நினைவுகளை மீட்டி சென்றது. வாழ்த்துக்கள் ஜீ//
  :-)நன்றி!

  //ஆனந்தி.. said...
  நினைவுகள் எப்பவுமே பொக்கிஷம் ஜீ...அதை அழகா பூட்டி வச்சி அழகா நினைவு படுத்தி பகிர்ந்துக்கிறது சந்தோஷமான அனுபவம்...உங்கள் அழகான நினைவுகளை தொடர்ந்து பகிர்ந்துக்கோங்க...:))//
  :-)நன்றி!

  //நா.மணிவண்ணன் said...
  காலங்கள் உருண்டோடினாலும் நம் பால்ய காலங்கள் நினைவுகளை நினைத்து பார்ப்பது ஒரு சுகம்தான் .நன்றி நண்பரே//
  :-)நன்றி!

  //க.சுரேந்திரகுமார் said...
  This is one of your best Post....//
  :-)நன்றி!

  ReplyDelete
 38. //malarvannan said...
  "பாடி அழைத்தேன்" மற்றும் "ஏழிசை கீதமே", இரண்டு பாடல்களும் "ரசிகன் ஒரு ரசிகை" திரைப்படத்திற்காக ரவீந்திரன் இசையில் ஜேசுதாஸ் பாடியது//

  //Mohammed Rafi TMH said...
  sorry my dear, for your kind information,
  பாடி அழைத்தேன் உன்னை, & ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் ... இவை இளையராஜா அவர்களின் இசையில் வந்ததல்ல ..

  மலையாள இசையமைப்பாளர் தேவேந்திரன் இசையில் உருவான பாடல்கள்.//

  நன்றி malarvannan &
  Mohammed Rafi TMH !
  உங்களின் தகவல்களுக்கு! :-)

  ReplyDelete
 39. அருமை அருமை அருமை.அலசல் அருமை.

  ReplyDelete
 40. "ஆஹா...! இந்தாளு நம்மள மாதிரியே சிந்திக்கிறான்யா....!"
  அருமை ஜீ,
  (மிக்க நன்றி நண்பா...
  என் சகோதரர்களுடன் கழித்த அந்த மறக்க முடியாத தருணங்களுக்கு அழைத்துச் சென்றதற்கு....!)

  ReplyDelete
 41. ஐய்யய்யோ ஜீ! இதுக்கு பிறகு நீங்க போட்ட "மலரும் நினைவு" பதிவுல "ஓவரா எக்ஸைட்" ஆகி ஒரு பக்கத்திக்கு இடுகை எழுதினதால "ஒவர் டயேட்"....அதால ஒரு மாசம் "ரெஸ்ட்"...ஜூட்

  ReplyDelete

Followers

Blog Archive

Powered by Blogger.

Archives

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |