Friday, December 31, 2010

ஒரு புதிய விடியலை நோக்கி...


வழக்கம் போல பத்தோடு பதினொன்றாக இல்லாமல் ஒரு புதிய தசாப்தத்திற்குள் நுழைகிறோம்! 

கடந்த பத்தாண்டுகளில் கடந்துவந்த அனுபவங்கள், கற்றுக்கொண்ட பாடங்கள், பெற்றுக்கொண்ட பல்புகள்(?!) ஏராளம்!


ஒவ்வொரு புத்தாண்டிலும் தீர்மானங்கள் சிலவற்றை எடுத்து அடுத்த பத்து நாட்களிலேயே மறந்து விடுவது வாடிக்கை! சில திரும்ப ஞாபகம் வரும்போது எங்கேயோ கேட்டமாதிரி இருக்கும்! அதுதான் இந்த முறை என் டிஜிட்டல் டைரியில் (அதாங்க பிலாக்கில்) குறித்து வைக்கிறேன்.

Positive ஆக think பண்ணுவது - வாழ்க்கையில் நெகடிவ் ஆன சம்பவங்களே தொடர்வதால், அப்படியே யோசிக்கப்பழகிட்டேன் (இதைக் கண்டிப்பா மாத்திறேன்)

முடிந்தவரை கலகலப்பாக இருப்பது - பார்த்தவுடன் நான் ஒரு Friendly யான ஆசாமியாகத் தோன்றுவதில்லை என்பது எனது நண்பர்கள் கூறும் குற்றச்சாட்டு. (அதாவது நெருக்கிப் பழகும்வரை புரியாதாம் அனால் புதிதாகப் பழகுவது கடினம் - எனக்கே குழப்பமா இருக்கு)

நிறைய வாசிக்க வேண்டும் - கடந்த மூன்று வருடங்களாக வாசிப்புப் பழக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது...சரி செய்வேன்!

எல்லோரிடமும் இனிமையாகக் கதைக்க ட்ரை பண்ணுவது - நான் பணிபுரியும் அலுவலகங்களில் எல்லாம் சொல்லிவைத்தது போல் பெண்கள் One-way, உம்மாண்டி என ரகசியப் பெயர்களால் அழைப்பது வழமை (இதை மாற்றுவது கஷ்டம்தான்)

சோம்பேறித்தனத்தை விட்டொழிப்பது - ஒரு பதிவு போடுவற்குள் படும்பாடு இருக்கிறதே...நிறைய 'உலகசினிமா' இதனால் எழுதப்படாமல்!


அப்புறம் Bachelor life அ முடிஞ்சவரை நல்லா enjoy பண்ணனும் (இது ரொம்ப முக்கியம்...நண்பர்களுக்கும் சொல்லணும்!)


தொடரும் குழப்பம் - கடவுளை நம்புறதா? வேணாமா?
கடந்த நான்கு வருடங்களாக இது குழப்பமாவே இருக்கு! அதற்குமுன் பத்து ஆண்டுகள் நாத்திகனாகவே இருந்தேன்.
(ஆத்திகனாகவோ, நாத்திகனாகவோ இருப்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. இடையில் இருப்பதுதான் கொடுமை!)

சின்ன குழப்பம் - நான் பதிவுலகில் இருப்பதே என் ஓரிரு நண்பர்கள் தவிர நிறையப்பேருக்குத் தெரியாது...சொல்லலாமா வேணாமா?

இந்த வருடத்தில் பல கலவையான அனுபவங்கள் வலிகள், ஏமாற்றங்கள், நம்பிக்கைத் துரோகங்கள் எனப் பல வழமை போலவே மோசமானவை!

சில இனிமையானவை! அதில் முக்கியமானது நான் பதிவுலகுக்கு வந்தது! (நிச்சயமா எனக்கு இனிமை மற்றவங்களுக்கு?! )

நிறைய நண்பர்கள்...இங்கேயும்...கடல் கடந்தும்...முகம் தெரியாமல்...உணர்வுகளால் நெருக்கமாக...நான் தனியாக இல்லை எனக்கூறுவது போல....!
இனிய பதிவுலக நண்பர்கள் சிலரை நேரில் சந்தித்தேன்!
பலரை இன்னும் பதிவுகளிலேயே!
என்றாவது சந்திப்போம் நண்பர்களே!

புதுவருட வாழ்த்துக்கள் நண்பர்களே! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்!!
விடியும் புத்தாண்டு நம் எல்லோருக்கும் நல்லதாக அமையட்டும்!

Thursday, December 30, 2010

கமலின் வெற்றுக் கோஷம்!


சமீபத்தில் ஒரு வீடியோ பார்த்தேன். மன்மதன் அம்பு படத்திற்கான விழாவில் கமலும், த்ரிஷாவும் இணைந்து கவிதையொன்று வாசித்து சர்ச்சை கிளப்பினார்களே...அதேதான்!

அப்போது த்ரிஷா கேட்பார் கமலிடம், 'நீங்க பக்திமானா?' உடனே கமல் முகத்தை சுளித்து, அருவருத்து, ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்ட மாதிரி 'சேச்சே' என்று அவசரமாக மறுப்பார்! யாரோ கொஞ்சப்பேர் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்! நிச்சயமாக அவர்கள் கமல் ரசிகர்களாக இருக்க மாட்டார்கள்! ஒரு கமல் ரசிகனாக சொல்கிறேன்! (எனது ரசிகர்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் அல்ல - கமல்)

ஏன் கமல் இப்படி நடந்து கொள்கிறார்? இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு, பதில் சொல்லி 'சீன்' போடவேண்டிய அவசியம் என்ன?
அவர் பகுத்தறிவுவாதி! கடவுள் மறுப்பு கொள்கையுடையவர்! அதனால் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறாராம்! - இப்படியெல்லாம் நம்புவதற்கு கமல் ரசிகரான ஒன்றும் நாங்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் அல்ல! 

நாத்திகவாதம், கடவுள்மறுப்பு, பகுத்தறிவு பிரச்சாரம் இதையெல்லாம் ஏற்கனவே பெரியார் சிறப்பாகச் செய்து விட்டார் என்றே நினைக்கிறேன். இப்போதெல்லாம் அந்தக் கோஷங்கள் எல்லாம் வழக்கொழிந்து போய் விட்டது! இப்போதெல்லாம் ஒருவன் நாத்திகனாயிருப்பது பெரிய ஆச்சரியமான விஷயம் இல்லை! (அப்படியா இருந்துட்டுப் போ! என்றளவில்தான்) 

அவனவன் தெளிவாத்தான் இருக்கிறான். கடவுளை நம்புகிறவன் நம்புகிறான். நம்பிக்கையில்லாதவன் அவன் பாட்டுக்கு இருக்கிறான். யாரும் யாரையும் தொந்தரவு பண்ணுவதில்லை! நான் நாத்திகவாதி என்று சொல்லிக் கொள்வதில் யாரும் பெருமைப்படுவதில்லை (கமலைத் தவிர!). ஒரு காலத்தில் அப்படிச் சொல்லிக் கொள்வதில் ஒரு பெருமை இருந்திருக்கலாம் (பெரியார் காலத்தில்?) 

தமிழ்நாட்டில் மதச்சார்பின்மையைக் காட்ட ஒரு எளிதான வழியை வைத்திருக்கிறார்கள் அரசியல்வாதிகள்! அது....இந்துமதத்தைத் தாக்குவது! பெரும்பான்மையான மதம் என்பதால் யாரும் கண்டுகொள்ளவும் மாட்டார்கள். கட்சிக் கொள்கையையும் காப்பாற்றியதாகவும் ஆயிற்று! இதுவே மற்ற மதங்களைப் பற்றிக் கதைப்பார்களா? கதைத்தால் என்னவாகும்?

அரசியல்வாதிகள் செய்வதை விடுங்கள் அது அவர்களின் தொழில்(?!) தர்மம்! அதையே எதற்கு கமலும் பின்பற்றுகிறார்? உன்னைப் போல ஒருவனில் முஸ்லிம்களையும் கொஞ்சம்...இதெல்லாம் எதற்காக? இதெல்லாம் மற்றவர்களின் உணர்வுகளைப் புண் படுத்துவதாகத்தான் இருக்குமே தவிர.... என்னவோ நாட்டில எல்லோரும் மூட நம்பிக்கையில் உழல்வதாகவும், கமல் வந்து பிரச்சாரம் செய்து, எல்லோரையும் நல்வழிப் படுத்தி..? அதுவும் கமல் சொல்றதை சினிமாகாரங்களே சீரியஸா எடுக்கிறதில்ல! இதுல நாட்டுக்கு...?

கமலின் மாபெரும் மரண மொக்கைப் படமான தசாவதாரத்தைப் பார்த்து நொந்து போய் இருக்கும்போது படத்தின் இறுதிக்காட்சியில் கடவுள் பற்றி ஒரு மெசேஜ் 'கடவுள் இல்லேன்னு சொல்லல இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன்!' - சத்தியமா விஜய் ரசிகர்கள் மட்டுமே கைதட்டி, விசிலடித்தார்கள்! எங்கள் நிலைமையோ பனையில இருந்து விழுந்தவனை மாடேறி மிதிச்சமாதி! நாங்களும் அப்படித்தானே நினைச்சோம்! (படம் நல்லா இல்லைன்னு சொல்லல..நல்லா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்!)

கமல் கடவுள் நம்பிக்கை இல்லாதவர், பகுத்தறிவுவாதி இதெல்லாம் எல்லாருக்கும் தெரியுமே? இதை ஏன் திரும்பத் திரும்பக் கூறிக் கொள்ள வேண்டும்? கமலுக்கே தன்மேல் சந்தேகமா? தனக்கு ஞாபகப்படுத்திக் கொள்கிறாரா? 

இதில எனக்கு ஒன்றும் வருத்தம் கிடையாது! நான் ஒரு பக்திமானோ, ஆத்திகவாதியோ, மதவாதியோ இல்லை! ஆனால் இப்படியான வெற்றுக் கோஷங்கள் எரிச்சலை ஏற்படுத்திகின்றன! அடுத்தவனின் நம்பிக்கை, உணர்வுகளை தாக்கி, கொச்சைபடுத்தி எதைச் சாதிக்கப் போகிறோம்? ஒரு நல்ல கலைஞன் ஏன் இப்படி என்ற ஆதங்கம் மட்டுமே!

கமல் ஒரு நல்ல நடிகர். திறமைசாலி. ரசிகர்களாகிய நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது நல்ல தரமான படங்களை மட்டுமே! அதைச் செய்கிற வழியைக் காணவில்லை! இன்னும் கே.எஸ்.ரவிக்குமாருடன் சேர்ந்து காமெடி பண்ணிக் கொண்டு..!?

Tuesday, December 28, 2010

சுஜாதா = கணேஷ் + வசந்த்?


சுஜாதாவின் வாசகர்களால் என்றும் மறக்கமுடியாத, தவிர்க்கமுடியாத இரு கதா பாத்திரங்கள் கணேஷ்-வசந்த்.

அனால் சுஜாதா என்றதுமே சிலபேருக்கு கணேஷ்-வசந்த் தான் ஞாபகத்துக்கு வருவார்கள். இது ஒரு துரதிருஷ்ட வசமான கவலைக்குரிய விஷயம்!  இது அவர் பெயரைக் கேட்டாலே அலர்ஜியாகிற இலக்கியவாதிகளின்(?!) நிலை!


பொதுவாக இரண்டு வெவ்வேறுபட்ட குண இயல்புகளை, நடத்தைகளைக் கொண்ட கதாபாத்திரங்கள் இணைந்து வரும்போது, அதிக வரவேற்பைப் பெறுகின்றன.

கணேஷ் - பொறுப்பான, அதிகம் பேசாத, கண்ணியமான, பெண்கள் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொல்லாத, கொஞ்சம் கண்டிப்பான ஆசாமி.
வசந்த் - கிண்டல், கேலி, விளையாட்டுத்தனம், வாய் அதிகம், எவ்வளவு பிசியிலும் பெண்களை கொஞ்சம் 'சைட்' அடித்தவாறு, ஜாலியான ஆசாமி.

தனது இரு வேறுபட்ட மனநிலைகளுக்கு கொடுத்த பாத்திர வடிவங்களா கணேஷ்-வசந்த்? ஒருவேளை பொறியியலாளர் ரங்கராஜன் 'கணேஷ்' ஆகவும், எழுத்தாளர் சுஜாதா 'வசந்த்' ஆகவும் இருந்தார்களா?

கணேஷின் அறிமுகம் நைலான் கயிறு நாவலில். அப்போது கணேஷ் டெல்லியில் இருந்ததாக ஞாபகம். ஒரு துணைக் கதாபாத்திரமாக வந்தார். வசந்த் அப்போது இல்லை.
பாதி ராஜ்ஜியம், அனிதா-இளம் மனைவி கதையிலும் கணேஷ் மட்டுமே.

கணேஷ் தனியாக வந்த கதைகளில் கணேஷிடம், வசந்தின் சில இயல்புகளைக் (அதே கிண்டல்,கேலி, பெண்கள்) காண முடிந்தது. ஏதோ ஒரு கதையில் நீரஜா என்ற பெண் உதவியாளர் இருந்தார். பிரியாவில் ( அல்லது காயத்ரி? ) தான் வசந்த் அறிமுகம் என்று நினைக்கிறேன்.

'காயத்ரி'யைத் திருட்டுத் தனமாக வீட்டில் வைத்து வாசித்த ஞாபகம் இருக்கிறது. அந்தவயதில் அது 'அடல்ஸ் ஒன்லி' ஆகவும், நான் கேள்விப்பட்டேயிராத சில விஷயங்களையும் உள்ளடக்கியிருந்தது!

பிரியா, காயத்ரி திரைப்படங்களாக வெளிவந்தனவாம். நான் பார்க்கவில்லை.

'எதையும் ஒரு வழி' பண்ணிவிடும் மணிரத்னம் குடும்பம் கணேஷ்-வசந்த் தொலைக்காட்சித் தொடராக்கியது. அந்தக் 'கொடுமையை' ஓரிரு முறை அனுபவித்திருக்கிறேன். 
இதையெல்லாம் சுஜாதா ஏன்தான் அனுமதித்தாரோ?

ஏராளமான பெண் ரசிகைகளைக் கொண்டிருந்தான் வசந்த். ஒரு கதையில் வசந்துக்கு திருமணம் செய்வதாக சுஜாதா முடிவு செய்ய, பலத்த எதிர்ப்புக் கிளம்பியதாம் பெண்கள் தரப்பிலிருந்து. அநேகமாக, பெண்களைக் கவர்ந்த கற்பனை ஹீரோக்களுக்கு திருமணம் நடைபெறுவதில்லை/கூடாது  என்பது ஒரு பொதுவான நியதி.

(சில ஜேம்ஸ்பாண்டு படங்களில் அவருக்குத் திருமணம் நடைபெறும். ஆனால் அப்போதே எங்களுக்குத் தெரிந்துவிடும் அடுத்தடுத்த காட்சிகளில் பாவம் அந்தப் பெண் எதிரிகளால் கொல்லப்பட்டு விடுவாரென்று!)

நான் ரசித்த சில கணேஷ்-வசந்த் கதைகள்.
நிர்வாண நகரம், ஆ, எதையும் ஒருமுறை, கொலையுதிர்காலம், வசந்த் வசந்த், மறுபடியும் கணேஷ், காயத்ரி, பிரியா, மேற்கே ஒரு குற்றம், டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு (நாடகம்), சில்வியா, மெரீனா, யவனிகா, ஐந்தாவது அத்தியாயம், விதி, கொலையரங்கம், விபரீதக் கோட்பாடு, ஆயிரத்தில் இருவர்

சுஜாதா எழுதிய சரித்திர நாவலான 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை'யில் வரும் பாத்திரங்களான 'கணேச'ப்பட்டர், 'வசந்த'குமாரன் இருவரும் கணேஷ்-வசந்தாகவே தோன்றுகின்றனர் எனக்கு.

எண்பதுகளில் கணேஷ்- வசந்த் எந்த அளவுக்கு பிரபலமடைந்து இருந்தார்கள் என்பதை சுஜாதாவே சொல்கிறார்,

......கணேஷ் வந்து “நைலான் கயிறு” ல்ல வந்தான் ’68ல்ல. வசந்த் வந்து “பிரியா” ல்ல தான் அறிமுகமானது. கணேஷ் முதல்லே “Solo”வா இருந்தான். ஆனா கதை எழுதறபோது Structureல கஷ்டமா இருந்தது. கணேஷ் வந்து மனசில, நினைச்சுகிட்டு இருந்ததை சொல்ல Counterpoint character தேவையாய் இருந்தது. கணேஷ் வந்து matured; வசந்த் immatured childish ஆக இருக்கான். கூட்டங்களுக்கெல்லாம் போனா “வசந்தை” ஏன் அழைச்சிட்டு வரல்லேன்னு கேக்கறாங்க. பஸ்லே பார்த்தேன்னு… சொல்றாங்க. பெண்கள் நிறைய பேர் வசந்துக்கு கல்யாணம் பண்ணி வைக்காதீங்கன்னு எழுதறாங்க.. psychologicalஆ அது ரொம்ப Interestஆ இருந்தது. கல்யாணத்தை கலைச்சிடுங்க, வேண்டான்னு சொல்றாங்க. They feel they will lose something charming அது மட்டுமல்ல… One reader sent a telegram நான் அவனுக்கு வந்து என் bloodஐ கொடுக்க தயாரா இருக்கேன்னு” They believe that Vasanth exists. எல்லோருக்கும் அவன் character பிடித்து இருக்கு. அந்த மாதிரி இருக்க ஆசைப்படறாங்க....

திரைப்பட இயக்குனர் வசந்த், சுஜாதாவின் வசந்த் பாத்திரத்தின் பாதிப்பிலேயே தனது பெயரை 'வசந்த்' ஆக மாற்றியதாகச் சொல்கிறார். எனக்குத் தெரிந்த ஒரு பெண் தனது பிரியமான நாய்க்குட்டிக்கு 'வசந்த்' எனப் பெயரிட்டு அழைத்தார்.

சில சிக்கலான விஷயங்களை கணேஷ்-வசந்த் கதைகளில் போகிற போக்கில் கூறிச் செல்வார் சுஜாதா!

ஒரு கதையில் போகிற போக்கில் வசந்த், 'நீட்ஷே' பற்றிக் கூறிச் சென்றதால் தான் நீட்ஷே யைத் தேடி வாசித்ததாக சாரு கூறியிருந்தார்.
(சாரு கூறியதன் பின்னர் தற்செயலாக வீட்டில் ஒரு 'நீட்ஷே' பற்றிய சிறு புத்தகம் கையில் சிக்க வாசித்தேன்)

இறுதியாக வந்த சில்வியா தொடரில், கவிஞர் சில்வியா பிளாத் பற்றிய தகவல்கள் கதையின் போக்கினூடே சொல்லப்பட்டது. கதையின் நாயகியான சில்வியாவுக்கும் அதே மனப்பிறழ்வு நோய் (Silvia Plath - Pulitzer Prize பெற்ற அமெரிக்க பெண் கவிஞர், எழுத்தாளர். தனது முப்பதாவது வயதில் 1963 இல் லண்டனில் தற்கொலை செய்து கொண்டார்)

இதையே சீரியஸாக சில்வியா பிளாத்தும், இருவேறுபட்ட மனநிலைகளின் பிறழ்வு என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையாக எழுதினால் நானெல்லாம் எஸ்கேப்.

நகைச்சுவை உணர்வும், சகிப்புத் தன்மையுமே ஒரு சமூகத்தின் நாகரீகத்துக்கு அளவுகோலாக உள்ளன என்கிறார் சுஜாதா.

நமக்குள் இருக்கும் நகைச்சுவை, வாழ்வின் ரசிப்புத் தன்மை கலந்த ஒரு கொண்டாட்டமான மனநிலை எப்பொழுது எம்மை நீங்கிச் செல்கிறதோ அப்போதே நாம் மனதளவில் வயது போனவர்களாகிறோம் என்பது எனது கருத்து.

நம்மில் பலர் இளவயதிலேயே வயது போனவர்களாகவே இருக்கிறார்கள்!சில இலக்கியவாதிகளை(?!) வாசிக்கும்போது நமக்கும் நரைகூடிக் கிழப்பருவமெய்தின உணர்வைக் கொண்டு வந்துவிடுவார்கள்!

அந்தக் கொண்டாட்டமான மனநிலையை முதுமையிலும் தக்க வைத்திருப்பவர்கள் மனதளவில் இளமையானவர்களாகவே இருக்கிறார்கள்.

சுஜாதாவின் கொண்டாட்டமான மனநிலையே 'வசந்த்'! - இதுவும் எனது கருத்து. அவர் இறுதிவரை அப்படியே இருந்தார். அதனால் அவருடைய எழுத்துக்களும் என்றும் இளமையானவையாக இருக்கின்றன.

சுஜாதா படிக்கும் வயதில் நம்மில் பலரைப்போலவே பெண்களுடன் பேசிப் பழக சந்தர்ப்பங்களின்றி கூச்ச சுபாவமுள்ளவராகவே இருந்ததாகக் கூறியுள்ளார். அவருக்குள்ளிருந்த நகைச்சுவை உணர்வும், கிண்டலும், கேலியும் பின்னாளில் வசந்தாக வெளிப்பட்டிருக்கக்கூடும். எங்களுக்குள் இருக்கும் அதே உணர்வுகள் வசந்த்தை ரசிக்க, வரவேற்கச் செய்கின்றன.

எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு 'வசந்த்' இருக்கிறான் என்றே நான் நினைக்கிறேன். நாம்  வளர்ந்த, வாழும், பணிபுரியும்  இடங்களில்  எம்மால்  வெளிப்படுத்தப்படாத ஒருவனாக! எனக்குள்ளும், இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்குள்ளும் நிச்சயமாக ஒரு 'வசந்த்'! எந்த விகிதத்தில் கலந்திருக்கிறான் என்பதே ஆளாளுக்கு வித்தியாசம்!

அவரின் சில எழுத்துகளில் வரும் நகைச்சுவை வசந்த் எழுதியதைப் போலவே இருக்கும்.
ஸ்ரீரங்கத்துத் தேவதைகளில் 'மாமி, சேலை கட்டிய குதிரை போல நடந்து போனாள்!'.

இறுதியாக கற்றதும் பெற்றதும் தொடரில் இவ்வாறு தனது அனுபவத்தைக் கூறுகிறார்.
பார்க்கில் தனக்குப் பக்கத்தில் பெஞ்சில் அமர்ந்திருந்த தாத்தா!? தனது வயதைக் கண்டுபிடித்துச் சொல்லுமாறு கேட்க,

....நான் யோசித்து, 'கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கள்', 
'மத்த விரல்களை ரெக்கை மாதிரி அசையுங்கோ' , 
'ரெண்டு கையையும் ஏரோப்ளேன் மாதிரி வச்சுண்டு மெதுவா குதிங்கோ..பாத்து...பாத்து...'
அவர் அப்படியே எல்லாம் செய்ய, 

' உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!'
அவர் அசந்து போய், கை குடு எப்படிப்பா இவ்ளோ கரெக்டா சொன்னே?'
ஒரு ட்ரிக்கும் இல்லை, நேற்றுத்தான் இதே சமயம், இதே பெஞ்சில உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன்னிங்க, மறந்துட்டீங்க!'

தன்னுடைய எழுபது வயதில் வசந்த் இப்படித்தானே இருப்பான்(ர்)!

- பதிவர் ஜனாவின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்தப்பதிவு!
- தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்!

Friday, December 24, 2010

10 வருடங்களில் பிடித்த 10 பாடல்கள்!

நண்பர் 'அதிரடி ஹாஜா'வின் அழைப்பினை ஏற்று, இந்தப்பதிவு! எனக்குப் பிடித்த சில பாடல்களில் 2001 - 2010 காலத்திற்கு இடைப்பட்டவை இவை!


பூவே வாய் பேசும்..
படம் - 12B
இசை - ஹரிஷ் ஜெயராஜ்



வெள்ளைப் பூக்கள்...
படம் - கன்னத்தில் முத்தமிட்டால் 
இசை - ஏ.ஆர்.ரஹ்மான்



என்ன இது என்ன இது..
படம் - நளதமயந்தி
இசை - ரமேஷ் விநாயகம்





மூங்கில் காடுகளே...
படம் - சாமுராய்
இசை - ஹரிஷ் ஜெயராஜ்





இளம் காற்று வீசுதே...
படம் - பிதாமகன்
இசை - இளையராஜா




யார் யார் சிவம்...
படம் - அன்பே சிவம்  
இசை - வித்யாசாகர்




என்னை பந்தாட...
படம் - உள்ளம் கேட்குமே 
இசை - ஹரிஷ் ஜெயராஜ்





உந்தன் தேசத்தின் குரல்...
படம் - தேசம் (Swades)
இசை - ஏ.ஆர்.ரஹ்மான்




முழுமதி அவளது...
படம் - ஜோதா அக்பர்    
இசை - ஏ.ஆர்.ரஹ்மான் 




ஒண்ணுக்கொண்ணு...
படம் - நந்தலாலா 
இசை - இளையராஜா


உங்களுக்கு பிடிச்சிருக்கா?

Saturday, December 18, 2010

அன்பே சிவமும், சில அவஸ்தையான பொழுதுகளும்!

சில விஷயங்களைச் செய்வதற்கு அதற்கேற்ற 'மனநிலை' (mood ) அமைய வேண்டும்! சில புத்தகங்கள் வாசிக்க - லியோ டால்ஸ்டாய், தாஸ்தாயேவ்ஸ்கியின் கதைகளை வாசிக்க ஒரு தனிப்பட்ட மனநிலை அவசியமென்று நான் நினைக்கிறேன். கடந்த நான்கு வருடமாக நான் ஓஷோவின் எந்தப் புத்தகத்தையும் வாசிக்கவில்லை.


அதேபோல உலக சினிமா! அதற்கும் ஒரு தனி மனநிலை வேண்டுமென்று என் நண்பர்கள் சிலர் சொல்வார்கள். அதை நானும் உணர்கிறேன். நல்ல படமொன்றைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வமும், மனதில் எந்தவிதக் குழப்பமுமற்ற நிலையிலேயே அவற்றைப்பார்க்க முடியும்! (சில விதிவிலக்குகள் உண்டு). 

தமிழிலும் அவ்வாறே! சோகமாக, குழப்பத்தில் இருக்கும்போது, நகைச்சுவைத் திரைப் படங்களையோ, காட்சிகளையோ பார்த்து மனதை ரிலாக்ஸ் ஆக மாற்றுவதுதான் எல்லோரும் செய்வது. அந்த நேரத்தில் கலைப் படைப்புகளை, வெயில், மகாநதி போன்ற படங்களையா பார்க்கமுடியும்? 

ஆனால் இந்த விதிகளுக்கு முரணாக, எனது சோகமான, தனிமையாய் உணரும், மனக்குழப்பமுள்ள பொழுதுகளில், நான் விரும்பிப் பார்க்கும் படம் 'அன்பே சிவம்'. படம் பார்த்ததும் குழப்பங்கள் நீங்கி, ஒரு தெளிவு பெற்று விட்டதைப் போல, எனது தனிமையிலிருந்து விடுபட்டதைப் போல, சோகங்களைக் களைந்தது போன்ற, ஒரு அமைதியான மனநிலையை ஏற்படுத்துகிறது!


சமீபத்தில் நண்பன் பார்த்தியுடன் (நாங்கள், நண்பர்கள் எல்லோரும் கமல் ரசிகர்களே) உரையாடும்போது, 'உன்னைப் போல ஒருவனில் கமலை ஒரு Common man ஆக உணர முடியவில்லை. ஹிந்தியில் நஸ்ருதீன்ஷா அந்தப் பாத்திரத்தில் பொருந்தியது போல், கமல் தமிழில் இல்லை. படத்தில் கமல், கமல்ஹாசனாகவே தெரிகிறார்' என்று சொன்னேன். அவன் சொன்னான் ' உண்மை! அன்பே சிவத்தில் கமல் நல்லசிவமாகவே (விபத்துக்குப் பின்) தெரிகிறார்'. உண்மைதான்!

இரு வேறுபட்ட பொருந்தாத மனநிலையுடைய இருவர் சூழ்நிலை காரணமாக ஒன்றாக இணைந்து பயணம் செய்கிறார்கள் - இதுதான் படத்தின் தீம்.

1987 இல் வெளிவந்த ஹாலிவுட் படம் Planes Trains and Automobiles.
Steve martin, John candy நடித்தபடம்.

Steve martin ஒரு விளம்பர நிறுவனத்தின் எக்ஸிகியூடிவ் (அன்பே சிவம் மாதவன் போலவே - மாதவனின் முக பாவனைகளும் இவரைப்போலவே இருக்கும் அன்பே சிவத்தில்) John Candy அதிகமாக, அர்த்தமுள்ளதாக் பேசுபவர் (நல்லசிவம் போல). சிக்காகோவிலிருந்து நியூயோர்க் செல்லும்போது பிளைட்...இன்னும் சொல்லவேணுமா?

அன்பே சிவம் அப்பட்டமான copy என்று சொல்லமுடியாது! கமலின் flashback, காதல், கம்யூனிசக் காட்சிகள் எல்லாம் தமிழில் மட்டுமே! ஆனால் ஹாலிலிவூடை விட தமிழில் மிக அழகாக எடுக்கப்பட்டிடுக்கிறது, காட்சிகள் ஒவ்வொன்றும்!

எனக்கும் கமல், மாதவன் தோன்றும் காட்சிகள், அவர்களுக்கிடையிலான உரையாடல்கள் மட்டுமே மிகவும் பிடிக்கும். கம்யூனிசம் எல்லாம் வலிந்து திணித்த காட்சிகள் போலத் தோன்றுகிறது...காதல் காட்சிகளும் இல்லாமலே கூட ஒரு அழகான படமாகஉருவாக்கியிருக்கலாம்
ஆனால்...படம் வெற்றியடையாதென்று முதலிலேயே தெரியாதே! அப்படி நினைத்து யாராவது படம் எடுப்பார்களா?


'யார் யார் சிவம்' பாடலின் இசை, கமலின் குரல், படமாக்கப்பட்ட விதம் எல்லாமே எனக்கு மிகவும் பிடிக்கும்!

படத்தில் வரும் வசனகளில் ஒன்று,
'அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் ஏராளம்!'

இப்போது எனக்குப் பார்க்கவேண்டும் போலத் தோன்றுகிறது!

Friday, December 17, 2010

Super ஸ்டாரின் Super 10

ஜனா அவர்களின் அழைப்பை ஏற்று, எனக்குப்பிடித்த ரஜினி படங்களைப் பட்டியலிடுகிறேன்! 

பதினாறு வயதினிலே
பரட்டையைத் தவிர்த்துவிட்டு ஒரு ரஜினியின் கதாபாத்திரத்தை என்னால் நினைக்க முடிவதில்லை! தெனாவெட்டான ஊரின் மைனர் கதாபாத்திரத்தில் சூப்பரா நடிச்சிருப்பார்! அதிலும் சப்பாணி கமலைக் கலாய்க்கும் காட்சிகள் அருமை! பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் இடம்பெற்ற 'செந்தூரப்பூவே பாடல்' எனக்கு மிகவும் பிடிக்கும்.

அவள் அப்படித்தான்
இந்தப் படத்தைப் பல நாட்களாக (ஆண்டுகளாக) பார்க்கவேண்டுமென்று ஆசை. இதுவரை எனக்கு DVD கிடைக்கவில்லை! ஓரிரு காட்சிகள் மட்டுமே பார்த்தா ஞாபகம். உடனே பிடித்துக் கொண்டது (கமலிடம், ரஜினி ஒரு பெண் பற்றிப் பேசும் காட்சி). தமிழ் சினிமாவில் இதையும் ஒரு முக்கியமான படமாகக் கூறுகிறார்கள்.


முள்ளும் மலரும்
ரஜினியின் சிறந்த நடிப்புக்கு சான்று கூறும் ஒரு படைப்பு! இயக்குனர் மகேந்திரனின் சிறந்த படங்களில் ஒன்று. அண்ணன்- தங்கை பாசத்தை வழமையான காலம் காலமாக இருந்துவந்த தமிழ்சினிமா பாணியிலிருந்து விலகி மகேந்திரனின் ஸ்டைலில். ரஜினி படம் என்ற உணர்வின்றி, முற்று முழுதாக ஒரு இயக்குனரின் படமாக இருக்கும்!

ஆறிலிருந்து அறுபதுவரை
நிச்சயமாக ரஜினியின் ஸ்டைலை விரும்பும் தீவிர ரசிகர்களுக்குப் பிடிப்பது கடினம்! மிக இயல்பாக கதை சொல்லும் ஒரு சாதாரண ஏழை மனிதனின் கதை. எமது சமூகத்தில் பணம் என்பது வாழ்க்கைக்குத் தேவையான ஒரு விஷயம் என்ற நிலையை விடுத்து, பாசம் ,சொந்தம், நமக்குத் தேவையானவர்கள், தேவையில்லாதவர்கள் எல்லாவற்றையும் பணமே தீர்மானிக்கிறது என்ற அவல நிலையைச் சொன்ன படம் இது!


நெற்றிக்கண் 
ரஜினி இரு வேடங்களில் நடித்த இப்படத்தில், எல்லோரையும் போல எனக்கும் அப்பா ரஜினியை மிகவும் பிடிக்கும்! அந்த ஸ்டைல், பேச்சு, காலையில் நித்திரை விட்டெழும்போது கைகளால் முகத்தை மூடிச் சிறிது விலக்கி, சுவரில் மாட்டப்பட்டிருக்கும் படத்தைப் பார்ப்பாரே.....சூப்பர்!


படிக்காதவன் 
சின்ன வயதில் ரசித்த 'ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்', 'ஒரு கூட்டுக்குயிலாக' பாடல்களினால் அறிமுகம்! அதில் வரும் நகைச்சுவைக் காட்சிகள் என்னை மிகவும் கவர்ந்தவை.



தளபதி
மணி ரத்னத்தின் படங்களில் ஒரு முக்கியமான படைப்பு! ரஜினி என்ற ஒரு பெரிய சூப்பர் ஸ்டாரின் இமேஜையும் தக்கவைத்துக் கொண்டு, தனது படங்களுக்குரிய அடையாளங்களையும் தொலைத்துவிடாமல், அதேநேரம் வியாபார ரீதியிலும் ஒரு வெற்றிப்படமாக உருவாக்கியது மணிரத்னத்தின் திறமை (எல்லாருக்கும் தெரிந்த கதை வேறு!) ஸ்டைலை முன்னிலைப் படுத்தாத ரஜியின் இயல்பான நடிப்பை இதில் பார்க்கலாம்.

பாட்ஷா
இன்றுவரை தொடரும் தமிழ் சினிமாவின் தாதா கதைக்கான ஒரு 'டெம்ப்ளேட்' ஆக மாறிப்போன ஒரு திரைப்படம்! இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிற்கு ஒரு பெரிய அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்தது  இப்படத்தின் மாபெரும் வெற்றி. அநேகமாக ரஜினிக்கும்- அரசியலுக்கும் இடையிலான ஒரு இழுபறி நிலையை இந்தப்படம்தான் ஆரம்பித்து வைத்தது என நான் நினைக்கிறேன்.



முத்து
இந்தப் படத்தை விட பாடல்களே என்னைக் கவர்ந்தவை! சாவகச்சேரியில் இடம்பெயர்ந்து இருந்த காலங்களில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒளிபரப்பாகும் இப்பாடல்களை இப்பொழுது கேட்டாலும், பழைய நினைவுகளை மீட்டுகின்றன! இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு ஒரு பெரிய அந்தஸ்தை பெற்றுக் கொடுத்த படம் இது.

எந்திரன்
எந்திரன் பற்றி என்னதான் விமர்சங்களை முன்வைத்தாலும், எத்தனை படங்களின் copy என்று பட்டியலிட்டாலும், அவையெல்லாம் இயக்குனர் ஷங்கர் மேலுள்ள குற்றச்சாட்டுகளே! ரஜினியைப் பொறுத்தவரை ஒரு மிகச் சரியான தேர்வு! அவரைத் தவிர யாரும் யாரும் சரியாகச் செய்யமுடியாத படம். அதிலும் அந்த வில்லன் ரோபோ பழைய கால ரஜினியை ஞாபகப் படுத்தியது!

யாராவது விரும்பிறவர்கள் இந்தப் பதிவைத் தொடருங்கப்பா!

Wednesday, December 15, 2010

தூர்தர்ஷனும் யாழ்ப்பாணமும்


எங்களுக்கும் தூர்தர்ஷனுக்குமான தொடர்பு மகாபாரத காலத்துப் பழமை வாய்ந்தது! அதாவது, இந்திய ராணுவம் இலங்கையில் இருந்த காலப்பகுதியில் தூர்தர்ஷனில் மகாபாரதம் தொடர் ஒளிபரப்பினார்கள். அதைச் சொன்னேன்!

ஹிந்தியில்தான். இருந்தாலும் பெரியவர்கள் கதை சொல்ல, ஞாயிறு காலை பத்துமணிக்கு டீ.வி.முன்னால். ஏனைய பொழுதுகளில் ரூபவாஹினி மட்டுமே. பிறகு இந்திய இராணுவம் வெளியேற, மகாபாரதப் போர் தொடங்கும் முன்னரே எங்கள் போர் ஆரம்பித்துவிட, யாழ்ப்பாணத்தில் மின்சாரம் நின்று போயிற்று!

சரியாக ஆறு வருடம் கழித்து யாழில் திரும்ப மின்சாரம் வந்தபோது, புதிதாக டீ.வி. வாங்கியோரும், இருந்ததைத் திருத்தியும் (எங்க வீட்ல இருந்தது 16  வயதான நேஷனல் கலர் டீ.வி., அது எந்த திருத்தலுக்கும் அவசியமின்றி வேலை செய்ததில் அப்பாவுக்கு ஒரு பெருமை) பாவிக்கத் தொடங்கும் போது, எல்லோருடைய பெரு விருப்பத்துக்குரிய தெரிவு தூர்தர்ஷன்தான். ஏனெனில் வேற எந்த சானலும் கிடையாது.

முதன் முதல் டீ.வி. பார்க்கும்அந்த நாள் இருக்கே...எங்கள் வயதில் இருந்த ஒவ்வொருத்தனுக்கும் அது ஒரு திருவிழா மாதிரி. அப்போ பொதிகை ஆரம்பிக்கவில்லை. தூர்தர்ஷனின் நேஷனல்... ஒரே ஹிந்திதான். அப்பப்போ கொஞ்சம் தமிழ்! 

முதல் நாள் டீ.விக்கு முன்னால பயபுள்ளைக பழியாக் கிடந்து, ஹிந்தி நியூஸ், ஹிந்தி சீரியல் எல்லாம் சின்சியரா, சீரியஸா பார்ப்பாங்க.
மகாபாரத காலத்தில பார்த்த அதே விளம்பரங்களை மீண்டும் திரையில் பார்க்கும்போது அட அட என்ன ஆச்சர்யம், சந்தோஷம்! ( பத்து வருஷம் கழிச்சுப் பழைய பிரண்டைப் பார்த்த மாதிரி )

வெள்ளிக் கிழமையில் ஒளியும்ஒளியும் போடுவார்கள். எட்டரை நிகழ்ச்சிக்கு ஆறு மணியிலிருந்தே பயபுள்ளைக காத்திருக்க, முத்து முத்தா நான்கு பாடல்கள் போடுவாங்க! அது அநேகமா விஜயகாந்த், சத்தியராஜ், பிரபு, சரத்குமார் பாடலா இருக்கும்.

அதே வெள்ளிக்கிழமை இரவு பத்து மணிக்கு ஒரு படம் போடுவாங்க பாருங்க. அதப் பாக்கிறதுக்கு எத்தனை போராட்டங்கள், சோதனைகள்!
மின்வெட்டு காரணமாக பத்து மணிக்கு வரும் மின்சாரம் சரியான நேரத்துக்கு வராது. வெறுத்துப் போய் இருப்போம்!

மின்சாரம் சரியான நேரத்தில வந்துட்டா...ஒளிபரப்பு நிலையத்தினர் ஹிந்தில இருந்து, தமிழுக்கு மாற்றி இருக்க மாட்டார்கள்! இது அத விடக் கொடுமை! ஹிந்திப் படத்தை இருபது நிமிடம் பார்த்துக் கொண்டிருக்க திடீர்னு தமிழுக்கு மாற்றுவார்கள். என்ன படம்னே தெரியாது! அநேகமா அப்படியான படம் தான் போடுவாங்க.

எல்லாமே சரியா இருந்தா ( எப்பவாவது ஒருநாள் ) சந்தோஷமா பார்த்துட்டே இருந்தா படத்தோட டைட்டில் வரும்! 'வா ராஜா வா!'
வாழ்க்கைல கேள்வியே படாத ஒரு படமா இருக்கும். இருந்தாலும் தைரியத்த இழக்காம, மனசத் தளரவிடாம இருந்தா, டைட்டில தொடர்ந்து பதின்மூன்று விளம்பரம்!

முதலாவதா 'வீக்கோ டெர்மரிக்' அதே பழைய சோப் விளம்பரம்.
பத்து வருஷத்துக்கு முன்னாடி குளிச்சிட்டிருந்த அதே 'ஆன்டி' தான் இப்போ 'அக்காவாகி' குளிச்சிட்டிருந்தா! (புரியல? நாங்க வளர்ந்திட்டோம்னு சொல்றேன்!)

விளம்பரம் முடியும்போதே கண்ணைக் கட்ட ஆரம்பிச்சுடும். அதையும் தாண்டி, கொள்கைப்பிடிப்போட இருந்தா...ஒரு ஐந்து நிமிடம் விட்டு இன்னொரு பத்து விளம்பரம்!...இதுல பாதிப்பேரு அவுட்!
ஒரு கட்டத்தில் படுமொக்கைப் படத்தின் வெப்பம் தாங்காமல் எலோருமே தூங்கி, கரெக்டா வணக்கம் போடும்போது எழுந்திருந்து பார்ப்பாங்க! (அது மட்டும் எப்பிடீன்னே தெரியல!)

அந்தக்காலத்தில் ரூபவாஹினியில் எல்லாம் ஒரு நிமிடம் ஏதாவது ஒளிபரப்பில் குளறுபடி (மிக அரிதாகத்தான் நடக்கும்) நேர்ந்தாலே உடனே 'தடங்கலுக்கு வருந்துகிறோம்' ன்னு ஒரு கார்டு போடுவாங்க!

ஆனா தூர்தர்ஷன்ல என்னதான் ஆனாலும், எவ்வளவு நேரம் குழறுபடி நடந்தாலும் அவர்கள் எதற்குமே வருந்தியதில்லை! (ஒரு வேளை அவர்களே யாரும் நம்ம சானல் பார்க்க மாட்டார்களென நம்பினார்களோ?) ஒருவேளை தமிழக மீனவர்கள் மீது இந்தியா அரசு காட்டும் அக்கறை போலவே தனது தமிழ்நேயர்கள் மீது அரசு தொலைக்காட்சியும் அன்பு கொண்டிருந்ததோ?  

என்னதான் இருந்தாலும், தேசிய விருது பெற்ற கருத்தம்மா, அந்திமந்தாரை போன்ற பல படங்களை நான் தூர்தர்ஷனில்தான் பார்த்தேன்! 
( நல்ல விஷயத்தையும் சொல்லணுமில்ல? )

திடீரென்று தோன்றியது..யாழ்ப்பாணத்தில் இப்போது யாராவது தூர்தர்ஷன் பாக்கிறார்களா? எனக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் எல்லா வீடுகளிலும் கேபிள் கனெக்சன் இருப்பதால் இலங்கையின் தமிழ் சானலான சக்தி டீ.வி.யைக்கூட யாரும் பார்ப்பதில்லை (கொழும்பில்தான் பார்க்கிறார்கள் ).

ஆனால் யாரும் பழசை மறந்திருக்க மாட்டார்கள்!
அதனால்தானோ என்னவோ...ரிமோட்டில் சானல் மாற்றிக்கொண்டு உலாவரும்போது, எல்லா சானலிலும் கொஞ்ச நேரம் தரித்து நின்று பார்த்தாலும் பொதிகை வரும்போது நிற்காமல் ஓடுகிறார்கள் (நானும்)!

Monday, December 13, 2010

ஒரு கமல் ரசிகனாக..


கமலை எனக்கு எப்போதிலிருந்து பிடிக்கத் தொடங்கியது? நான் முதன்முதல் பார்த்த கமல் படம் எது? அநேகமானோரைப் போல் எனக்கும் சின்னஞ்சிறு வயதில் ரஜினியைத்தான் பிடித்தது. பிறகு விவரம் (!?) தெரிந்ததும்...(அப்போ ரஜினியைப் பிடித்தவர்களுக்கு இன்னும் விவரம் தெரியலையா என்று கேட்கக் கூடாது! நான் என்னைப்பற்றி சொன்னேன் )

எனக்குத் தெரிந்து நான் முதன்முதலாக முழுதாக ரசித்த கமல் படம் 'ஒரு கைதியின் டைரி'. அந்தப் படத்தில் ஒரு வில்லனிடம் கமல் பேசும் 'கேட்கிற நிலைமைல நீ இல்ல. ஆனா சொல்ற நிலைமைல நான் இருக்கேனே!' என்ற வசனம் மிகவும் பிடித்துக் கொண்டது.

ராஜபார்வை படத்தில் கமல் கண் தெரியாதவர் எனத் தெரியவரும் அறிமுகக் காட்சி சின்ன வயதில் என்னைக் கவர்ந்து கொண்டது.

கமலின் படங்களில் நாயகன், மகாநதி, குணா, இந்தியன் என்னை மிகவும் கவர்ந்தவை. நாயகனும், இந்தியனும்தான் என்னால் திரும்பத் திரும்பப் பார்க்க முடிந்தவை. ( அன்பே சிவம்? அதற்குத் தனிப் பதிவே போடலாம் )

டீன் ஏஜில் ஒரு தீவிர கமல் ரசிகனாகிப் போனேன். இந்தியன் வந்ததிலிருந்து அவர்தான் தலைவர்! அப்போது கமல் ரசிகன் என்றாலே நண்பர்கள் ஒரு மாதிரித்தான் பார்ப்பார்கள்.
ஏதாவது வித்தியாசமாக(?!) கருத்துக் கூறப் போனால், நீ கமலோட ஆள்தானே?' என்று ஏடாகூடமாக கேட்பார்கள்.

அதிலே இன்னோர் அர்த்தமும் இருக்கும். இப்பிடித்தான் எதையாவது உளறுவான் கண்டுக்காதிங்க! ஏனெனில் அப்படித்தானே திரையுலகிலும் கமல் பேச்சுக்கு கிடைக்கும் மரியாதை. எவ்வளவோ நல்ல விஷயங்களை கமல் செய்து செயற்படுத்தியும், அறிமுகப்படுத்தியும் எத்தனை பேர் அவற்றைப் பின்பற்றுகிறார்கள்? அவர்களும் 'கமல் இப்படித்தான் எதையாவது சொல்லிட்டிருப்பார். நாம நம்ம வழிலயே போவோம்' 

தமிழ் சினிமாவில் மிகை நடிப்பில்லாமல் இயல்பான நல்ல நடிப்பை முதன்முதலாகத் தந்தவர் கமல் என்றே நான் நினைக்கிறேன். அதற்குமுன் (நாகேஷ் இருந்தும்கூட) சிவாஜியைத்தான் நடிப்பில் சிறந்தவரென்று(?!) (ஏன் இப்போதும்கூட) நம்புகிறார்கள் பலர்.

எல்லாரும் பழைய படங்களையே திரும்பத் திரும்ப copy பண்ணிட்டிருக்க, சிலர் ஹாலிவுட்ல இருந்து 'சுடும்'போது அது புதிய விஷயமாகப் பேசப்படும். அதையே கமல் செய்து விட்டால் போதும் ஒரு பெரிய கூட்டமே துப்பறியக் கிளம்பி எங்கேயிருந்து கமல் 'சுட்டார்' என்று புள்ளி விபரமெல்லாம் வெளியிடும்.

அதில முக்கியமான விஷயம், மற்றவர்கள் 'சுடும்'போது அப்படியே அப்பட்டமாகத் தெரியும். ஆனால் கமல் அப்பட்டமாகச் 'சுட்டாலும்' உடனே தெரியாது. அதற்கும் ஒரு திறமை வேண்டும். அதைவிடத் திறமை வேண்டும் கமல் சுட்டதைக் கண்டுபிடிக்க! அது அந்தக் காலத்தில், இப்போது அப்படி அல்ல!


வெறும் மசாலாக் காதல் படங்களிலேயே பல காலமாக நடித்துக் கொண்டிருந்த கமல் நல்ல முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியதுமே, பெரும்பாலான பெண்களுக்கு கமலைப் பிடிக்காமல் போய்விட்டது!

அநேகமாக இப்போது எங்கள் நண்பர்கள் அனைவருமே கமல் ரசிகர்களே! அதில் அனைவர்க்கும் பிடிக்காத மோசமான படம் என்று நாங்கள் கருதுவது 'வாழ்வே மாயம்'. ஆனால் கமலைப் பிடிக்காத பல பெண்களுக்குப் பிடித்த படமும் அதுவே!

பெண்கள் விஷயத்திலும் 'வித்தியாசமான' முயற்சிகளை அவர் மேற்கொண்டதும் பெண்கள் பலருக்கு கமலைப் பிடிக்காமல் போக ஒரு முக்கிய காரணம்.

நடிப்பு வேறு, சொந்த வாழ்க்கை வேறு என்று எமது தமிழ்ச் சமுதாயத்தில் பிரித்துப் பார்ப்பதில்லை. நடிகன் என்பவன் சமுதாயத்திற்கே வழிகாட்ட வேண்டும் என்று எதிர்பார்க்க, அவர்களும் ( ஒழுங்கா நடிக்கவே....வராது ) உடனே நாற்காலிக் கனவு காண ஆரம்பித்து விடுகிறார்கள் ( இந்த நடிப்பைவிட அது கஷ்டம்னு தெரியாமல் ).

இதுல என்ன கொடுமைன்னா..பெண்கள் விஷயத்தில் தலைவர் வாங்கிக் கட்டிக்கொண்ட கெட்ட பெயர், ரசிகர்களான எங்களையும் விடாது தொடர்ந்தது. அந்த நிலையைக் கமல் ரசிக நண்பர்கள் பலரும் சந்தித்திருப்பார்கள்.

கமல் கெட்டவன், மோசமானவன். அப்போ கமல் ரசிகனும் அப்படித்தானே? அதுவும் கமல் சரிகாவைப் பிரிந்ததும் இன்னும் நிலைமை மோசமாக, கமல் ரசிகனென்று வெளில தெரிந்தாலே கேவலமான 'லுக்' ஒன்று விடுவார்கள். ஆனா யாருகிட்ட?
( விடுறா..விடுறா... சூனா.. பானா.. போ போ போயிட்டேயிரு...! ) இது கூட ஒரு பெருமையாதான் இருந்திச்சு! ( பார்ரா! )

ஆனாலும், யாரென்றே தெரியாத ஒரு பெண், கமல் ரசிகனென்று தெரிந்து என்னைப் பார்த்த பார்வை இருக்கே.....இன்னும் முடியல! மறக்க!!

கிஸ்கி 1 - தீவிர கமல் ரசிகனாக ஆறு வருடங்களுக்கு முன் நான் இருந்த அப்போதைய மன நிலையை பிரதிபலித்து எழுதிய பதிவு இது.

கிஸ்கி 2 - அப்போது எனக்கு உலக சினிமா பரிச்சயமே இல்லை (தமிழ் , ஹாலிவுட் மட்டும்தான்) அப்போது கமல் 'உலகநாயகன்' என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இருக்கவில்லை!

கிஸ்கி 3 - இப்போதும் கமலை எனக்குப் பிடிக்கும்!

Sunday, December 12, 2010

Saving Private Ryan


ஒரு கடல்வழித் தரையிறக்கத்திற்கு தயாராக இராணுவ வீரர்கள் துருப்புக்காவி கடற்கலங்களில். இன்னும் கொஞ்ச நேரத்தில் கரையை நெருங்கப் போகிறார்கள். பரிச்சயமில்லாத புதிய களமுனை. கரையில் இவர்களை எதிர்கொள்ள, தயாராகக் காத்திருக்கும் எதிரிகள். என்ன நிகழுமோ எனத்தவிப்புடன் நிலைகொள்ளாமல் சிலர். பயணம் ஒவ்வாமல் வாந்தி எடுத்தவாறு சிலர்.


கரையை நெருங்கி கடற்கலத்தின் கதவு திறக்கப்பட, சரமாரியாகத் தாக்கத் தொடங்குகிறார்கள் எதிரிகள். சிலர் கலத்திலேயே உயிரைவிட, கடலில் இறங்கிய உடனே சிலர், தண்ணீருக்குள் மூழ்கி மேலேவரும்போது பிணமாக. குண்டு மழையிலிருந்து தப்பிய சிலர் தட்டுத் தடுமாறி, பாதுகாப்பாக நிலை எடுத்து பதுங்கிக் கொள்கிறார்கள்.

- Saving Private Ryan படத்தில் வரும் உண்மையில் நடைபெற்ற சம்பவம்.


இரண்டாம் உலகப்போர். ஜூன் 6 , 1944 . ஆங்கிலக் கால்வாயூடாக பிரான்சின் Omaha கடற்கரையைக் Normandy,France)  கைப்பற்றும் நோக்கில் பாரிய தரையிறக்க நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்காவுக்கும், அங்கு நிலைகொண்டிருந்த ஜெர்மனுக்கும் நடந்த பாரிய சண்டை. அரைமணி நேரம் மட்டுமே நடந்த அந்த சண்டையில் அண்ணளவாக 3000 அமெரிக்க படையினரும், 1200 ஜெர்மன் படையினரும் கொல்லப்பட, அமெரிக்கா வெற்றிகொள்கிறது.


இரண்டாம் உலகப் போரை மையமாகக் கொண்டு எத்தனையோ ஹாலிவுட் படங்கள் வெளிவந்திருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்த படம் இது.

படத்தின் கதை....
நான்கு சகோதரர்கள் கொண்ட ரின் குடும்பத்தில் (நால்வரும் அமெரிக்க இராணுவத்தில்) மூன்று பேர் சண்டையில் இறந்துவிட, இறுதியாக உள்ள Private James Francis Ryan ஐ சேவையிலிருந்து விடுவித்து, சொந்த நாட்டுக்கு அனுப்ப முடிவு செய்கிறார்கள். ரோந்துப் படையணியில் பிரான்சில் இருக்கும் Ryan (Matt Damon) தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில். அவனைத்தேடி , Omaha தரையிறக்கத்தில் பங்கு கொண்ட கப்டன் ஜோன் எச்.மில்லர் (Tom Hanks) தலைமையில் ஒரு சிறிய குழு புறப்படுகிறது. பின்பு என்னவாகிறது?


இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கப் படையில் பணியாற்றிய Niland Brothers என்ற நான்கு சகோதரர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை எழுதப்பட்டது.

1998 இல் ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இயக்கத்தில் வெளியான இப்படம், ஸ்பில்பேர்க் இற்கு இரண்டாவது முறையாக சிறந்த இயக்குனருக்கான Oscar விருது உட்பட, ஐந்து Oscar விருதுகளைப் பெற்றுக் கொண்டது.

     Nornmandy, France இலுள்ள அமெரிக்கப்படையின் கல்லறை.


கத்தி முனையில்  சூயிங்கம் ஒட்டி, அதில் மிரர் பொருத்தி, எதிரிகளை கண்காணிக்கும் இந்தக் காட்சியை அப்படியே ஆளவந்தானில் 'சுட்டு' இருப்பார் கமல்.


படத்தின் ஆரம்பத் தரையிறக்கக் காட்சிகள் போரின் உக்கிரத்தையும், வலியையும் கண்முன் நிறுத்துகின்றன. நிச்சயம் இதைவிடப் பெரிய ஒரு சண்டை நிகழ்ந்திருக்கிறது எமது நாட்டிலும்....எந்த ஆவணப்படுத்தலும் இல்லாததால் வெளியே தெரியாமல்!   

 

Friday, December 10, 2010

இதயம் ஒரு கோவில்..

சில பாடல்கள், 'சோப்' வாசனைகள் எமது கடந்த காலத்தை நினைவூட்டுவதை உணர்ந்திருக்கிறீர்களா? குறிப்பாக சிறு வயதில் நாம் கேட்டு ரசித்த பாடல்களை இப்போது கேட்கும்போது, அந்தக் காலத்திற்கே ஒரு காலயந்திரம்போல் உடனடியாக எம்மைக் கூட்டிச் சென்றுவிடுகின்றனவே! 

தொலைந்து போன சிறுவயது நினைவுகள் கிளறப்பட்டு மனதிலோர் ஏக்கம் உண்டாவதை உணர்ந்திருக்கிறீர்களா?


கார்த்திகை மாதம், மழை விட்டிருந்த முன்னிரவு நேரம், மின்சாரமில்லாத காலப்பகுதி,  சற்றே தூரத்தில் அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் தாத்தா. எரியும் தணலும், புகையும்...மெலிதான வெளிச்சத்தில்...சைக்கிள் டைனமோவைச் சுற்றி, வானொலிப் பெட்டியை உயிரூட்டிக் கொண்ருக்கும் என்னிலும் எட்டு வயது மூத்த அண்ணன் ஒருவனின் அருகில் அமர்ந்திருக்க...சன்னமான குரலில் எஸ்.பி.பி.' கேளடி கண்மணி பாடகன்...' 

அந்தப் பாடலை முதலிலேயே கேட்டிருந்த போதும், இப்படிக் கேட்டது மறக்க முடியாத அனுபவம். இப்போது கண்கள் மூடி அதைக் கேட்டாலும் உடனேயே அந்தக் காலப் பகுதிக்குச் சென்றுவிடுகிறது மனம்.


நீங்கள் முதன்முதல் கேட்டு ரசித்த பாடல் எது?
எங்களுக்கு நினைவு தெரிந்து, ஆகக் குறைந்தது எந்த வயதில் நடந்த சம்பவத்தை நினைவு படுத்திச் சொல்ல முடிகிறது?
அது போலதான் பாடல்களும்! 

அப்படி நான் சிறுவயதில் கேட்டு, ரசித்த பாடல்கள் 'இதயக் கோவில்' பாடல்கள்.
எங்கள் வீட்டிற்கருகே இருந்த சோதிலிங்கம் என்பவர், அப்போது இருபத்தி மூன்று  வயதிருக்கலாம் மத்திய கிழக்கு நாடொன்றுக்குச் சென்று வந்திருக்கவேண்டும். ஒரு பெரிய ரேடியோ Amplifier set எல்லாம் வைத்து, காலையில் விடிந்ததுமே ஆரம்பிக்கும் 'இதயம் ஒரு கோவில்'.

காலை நேரத்தில் அமைதியான அந்த இசையும், அதில் இழையோடியிருக்கும் ஒரு சந்தோஷமான உணர்வும் கேட்டவுடன் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும். எனக்கு/என்னைப் பிடித்துக் கொண்டது அந்தப் பாடல். அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே.

அதிலிருந்து தொடர்ந்து பல இளையராஜா பாடல்கள்! பாடல்வரிகள், அர்த்தங்கள் எதுவுமே தெரியாமல்! 

'பாடியழைத்தேன் உன்னை ஏனோ..', 'ஏழிசை கீதமே' இரண்டும் எனது மிக விருப்பத்திற்குரிய பாடல்களாக்கிப் போனது! இன்று வரை அந்தப் பாடல் வரிகளை நான் சரியாகக் கவனித்ததில்லை! ஜேசுதாசின் குரலும், இசை, இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ், இன்டலூட் மியூசிக் இவற்றுக்காகவே! அநேகமாக எனக்குப் பிடித்த எல்லாப் பாடல்களிலுமே பாடல் வரிகளைக் கவனிப்பதில்லை. இசைக்காகவே!

பாடல்களோடு கூடவே அவற்றை அறிமுகப்படுத்துகிற சோதிலிங்கம் மாமாவையும் பிடித்துக் கொண்டது.

அப்போதெல்லாம் இளைஞர்கள் எல்லோரும் அப்போதைய ரஜினி மாதிரியான ஒரு ஹேர் ஸ்டைலில் இருந்தார்கள். இன்னும் சரியாகச் சொன்னால் சுப்பிரமணியபுரம் ஸ்டைல். தலை, உடை எல்லாம் அப்படியே. அதனால் தானோ என்னவோ அந்தப் படம் பார்க்கும்போது கதைமாந்தர் எனக்கு நெருக்கமானவர் போன்றதோர் உணர்வு. நான் குழந்தையாக இருந்து கவனித்த முதல் மனிதர்கள்  சுப்பிரமணியபுரம் ஸ்டைலிலேயே இருந்தார்கள். சோதிலிங்கம் மாமாவும் அப்படித்தான் இருந்தார். எப்போதும் ஒரு புன்முறுவலுடன் அன்பாகப் பேசுவார்.

சூழ்நிலை காரணமாக எல்லோரும் எங்கெங்கோ சிதறிப்போய், யாரையும் சந்திப்போமா என்று தெரியாமலும், சந்திக்கவே முடியாதென்றே தெரிவானவர்களும்!

அப்படித்தான் அவரும்! பதினைந்து வருடங்களுக்கு முன்னரே காணாமல் போனோர் பட்டியலில் இணைந்து விட்டதாகக் கேள்வி.    


எப்பொழுதெல்லாம் எனக்கு என் பால்ய காலத்தைப் பார்க்க ஆசையேற்படுகிறதோ, உடனே MP3 ப்ளேயரில் பாடல்களை ஒலிக்க விட்டு, கண்களை மூடி...!

காலம் நம் வாழ்க்கையில் எவ்வளவோ மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும் நினைவுகள் மட்டும் இன்னும் பசுமையாய் நெஞ்சில்.இப்பொழுதும் எனக்கு இதயக்கோவில் பாடல்கள் கேட்கும்போது, எங்கள் சொந்த ஊர், எனது சிறு வயது கூடவே சோதிலிங்கம் மாமா. 


Saturday, December 4, 2010

எங்க வீட்ல யார் சொல்றது?


'ச்சே! இப்பிடி ஆயிடுச்சே!'

'ஆனாலும் ஏதோ நல்ல காலம் பெரிசா பயப்பிடுற அளவுக்கு அடிபடல. ஒரு கிழமை ஹொஸ்பிடல்ல இருக்கணுமாம். அதெல்லாம் பெரியாஸ்பத்திரில நல்லா கவனிப்பாங்க'.

'ஆனா சுதாவோட அம்மாவைத் தான் சமாளிக்க ஏலாது. சும்மாவே பயந்த மனிசி. மகனுக்கு அச்சிடென்ட் எண்டா அழுது ஊரைக் கூட்டிடும். இப்பவே காணேல்ல எண்டு தேடுவாங்க வீட்ல'.
-சைக்கிளை ஊன்றி மிதித்துக் கொண்டே, யோசித்தவாறு.

'மத்தியானம் சாப்பிடவேற இல்ல. பசிக்கல. ஆனா தலையிடி. கைக்கடிகாரம் ஆறு மணி என்றது. பதினைந்து நிமிஷத்தில கோண்டாவில் போயிடலாம். எட்டரைக்குத் தானே ஊரடங்கு? போயிட்டு வர நேரம் காணும்'.

தட்டாதெருச் சந்தியில, டெலிபோன் கதைக்க ஒரு கியூ. அதில ஒரு ஆமிக்காரனும்.

'இன்னும் டெலிபோன் லைன் அதிகமா குடுக்கத் தொடங்கல. செல்போன் எப்படி இருக்குமெண்டு இங்கிலீஷ் படத்தில பாத்ததுதான். இப்பதான் கொழும்பிலயே கொஞ்சம் கொஞ்சமா பாவிக்கிறாங்களாம். எப்பிடியும் மிலேனியம் பிறந்தாப்பிறகுதான் இங்க வரும்'.

'எதுக்கும் எங்க வீட்ல சொல்லிட்டு போகலாமா..? வேணாம் வந்திடலாம். இரவு ஸ்ரார்ல டேர்மினேட்டர் போடுறாங்கள். வந்து பாக்க வேணும்'.

கொக்குவில் சந்தியில ஒரு சாப்பாட்டுக் கடையில வடை,டீ.

'அப்பாடா! தலையிடி குறைஞ்ச மாதிரி இருக்கு. இப்பவே இருட்டீட்டுது. மழை வரப் போகுதோ? குடையும் இல்ல. ஏதோ டியூட்டரில கிளாஸ் முடிஞ்சிருக்கு..அந்த ரோஸ் சுடிதார் நல்லா இருக்கு..
பாத்திட்டு போன மாதிரி..'

'யாரு...?'

'இப்போ அதுவா முக்கியம்?'.

தாவடி செக்பொய்ன்ட் கியூவில், சைக்கிளை இறங்கி தள்ளிக்கொண்டே...பொக்கட்டில் கையை....

'அய்யய்யோ என்னோட purse ? ஐடென்டிடி கார்டு காட்டணுமே? சாப்பாட்டுக் கடையில விட்டுட்டேனா? கடைக்காரன் எடுத்து வச்சிருப்பான். ஆனா இப்போ திரும்பிப் போகவும் ஏலாதே'.

'ஆமிக்காரனை எப்பிடி சமாளிக்கிறது? சிங்களம் தெரிஞ்சாலும் சமாளிக்கலாம்...அடிப்பாங்களோ....?

அது கூடப் பரவாயில்ல அரெஸ்ட் பண்ணுவாங்களோ....?

இங்கேயே இருத்தி வச்சிடுவாங்களோ?'

சுதா, அவங்கம்மா, செல்போன், டேர்மினேட்டர், ரோஸ் சுடிதார், ஐடென்டிடி கார்டு எல்லாமே சுத்தமாக மறந்து போய் புதிய கவலை ஆக்கிரமித்துக்கொண்டது...

'நான் அரெஸ்ட்டானா, எங்க வீட்ல யார் சொல்றது?'

Thursday, December 2, 2010

The Road Home


ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் ஏதோ ஒரு வீதி வாழ்வோடு கலந்திருக்கும். அதில் அன்றாடம் எதிர்கொள்ளும் தெரிந்தவர்கள், பார்வையில் மட்டும் அறிமுகமானவர்கள், மனதிற்குப் பிடித்தவர்கள், பிடித்த வீடுகள், மரங்கள். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்திலும், அனுபவங்களிலும் கூடவே ஒரு மௌன சாட்சியாக இருக்கின்றன வீதிகள்.

தந்தை இறந்த செய்தியறிந்து தனது கிராமத்துக்கு வரும் 'யுசெங்'கிடம் அவரது உடல் நாற்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள வைத்தியசாலையில் இருக்கிறது என்கிறார்கள் ஊரிலுள்ள பெரியவர்கள். வயதான அவன் தாய் ஷாவோ கிராமத்திற்கு வரும் வீதி வழியே அவரது உடலைத் தூக்கிகொண்டே நடந்து வரவேண்டும் எனக் கூறுகிறாள். கடுமையான பனிக் காலம் வேறு. வயதான அந்தத் தாயின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் ஏற்பாடு செய்கிறான்.


அப்படி என்ன அந்த வீதிக்கு முக்கியத்துவம்? ஏன் தூக்கிக் கொண்டு நடந்துவர வேண்டும்?

அந்தப் பாதையில்தான் அவள் முதன்முதலில் பார்த்தது, ஏதேச்சையாக சந்திப்பதுபோல் ஒவ்வொரு நாளும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டது, பிரிவுத்துயரின் கொடுமையில் அவளோடு கூடவே சாட்சியாக இருந்து அந்தப்பாதை. அப்படிக் கொண்டு வந்தால்தான் அவருக்கு இறுதிவரை எதுவும் மறக்காமல் இருக்கும் என்கிறாள் தாய்.

அப்பாவின் அறைக்குள் வரும் யுசெங், தான் பெற்றோர் கல்யாணமான புதிதில் எடுத்த போடோவைப் பார்த்ததும், அவர்களின் இளமைக் காலத்தை நினைத்துப் பார்க்கிறான். அப்படியே கடந்தகாலம் காட்சிகளாக விரிகின்றது.


அந்தக் கிராமத்திற்கு பள்ளி ஆசிரியராக பணிபுரிய வருகிறான் ஷாங்யு. அவனைப் பார்த்த உடனேயே காதல் கொள்கிறாள் அழகான இளம்பெண் ஷாவோ. கம்யூனிச சீனாவில் பள்ளிக்கூடம் இல்லாத அந்த ஊரில் ஆசிரியர் உட்பட எல்லோரும் சேர்ந்து பள்ளி கட்டடம் கட்டும் பணியில். எல்லா வீடுகளிலிருந்தும் பணியாளர்களுக்கு உணவு வர, மரியாதை கருதி, ஆசிரியர் எடுத்துக் கொண்ட பின்னரே ஏனையோர். ஒவ்வொரு முறையும் மற்றவர்கள் அறியாமல் தனது பீங்கான் பாத்திரத்தை அவர் பக்கமாக முதலில் நகர்த்தி வைக்கிறாள் ஷாவோ.


கண்களின் வழியே அவர்களின் காதல் வளர்கிறது. கிராமத்தில் ஒவ்வொரு நாளும் ஒருவர் வீட்டில் ஆசிரியருக்கு விருந்து வைக்கிறார்கள். ஷாவோவின் முறை வரும்போது, வீட்டில் ஷாவோ அந்த பீங்கான் கோப்பையைக் காட்டி, ஞாபகம் இருக்கிறதா? எனக் கேட்க, ஷாங்யு அர்த்தமுள்ள ஒரு புன்சிரிப்பால் தனது காதலை வெளிப்படுத்துகிறான்.

ஷாங்யு நகரம் சென்றுவிட, ஷாவோ மிகவும் வருந்துகிறாள். அவன் சொன்ன காலத்தில் திரும்பவில்லை. பனிக்காலத்தில், பள்ளி விடுமுறையும் வருகிறது.இரவுகளில் அவன் வரும் பாதையில் குளிரையும் பொருட்படுத்தாமல் நடந்து செல்கிறாள். ஊரவர்களுக்கு விஷயம் தெரியவர, ஷாங்யு வந்ததும், அவனை அழைத்துப் பேசி, திருமணம் செய்து வைக்கிறார்கள். பின்பு அவர்கள் பிரியவே இல்லை.


பழைய காட்சிகள் முடிய இப்போது, தந்தையின் உடலைத் தூக்கிக்கொண்டே நடந்து வருகிறார்கள்.தூக்கிவந்த ஒருவரும் பணமும் பெற்றுக்கொள்ளவில்லை.எல்லோரும் அவரின் மாணவர்கள். பள்ளிக்கூடத்திக்கு எதிரிலேயே அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

இறுதியாகத் தந்தை படிப்பித்த பள்ளியில் பாடம் நடத்தச் சொல்கிறாள் தாய். அவனும் அவ்வாறே செய்ய அந்த சத்தம் கேட்டு தாய் ஷாவோ ஓடி வரும் காட்சி, அவள் மீண்டும் அந்தக் காலப்பகுதிக்கே சென்றுவிட்டதாய்க் காட்டுகிறது.

மிகக் குறைந்த வசனங்களுடன், அழகாக, கவிதைத் தனமாகச் சொல்லப்படும் காதல் காட்சிகள் சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை வலியுறுத்திச் சொல்கிறது.


ஷாங்யு பரிசளித்த ஹேர் கிளிப்பைத் தொலைத்துவிட்டு பாதையில் ஷாவோ தேடிக்கொண்டிருக்கும் காட்சி, காதலர்களால் பரிமாறிக் கொள்ளப்படும் மிகச் சிறிய பரிசுப் பொருட்களுக்கும் உள்ள பெறுமதியைச் சொல்கிறது.

கிணற்றில் நீர் அள்ளிக் கொண்டிருக்கும் ஷாவோ, ஷாங்யு பார்த்துக் கொண்டிருப்பதைக் காண்கிறாள். அவளைப் பார்த்ததும் ஷாங்யு நீர் எடுக்க அங்கே வருகிறான். அவன் வருவதைப் பார்த்ததும் ஷாவோ தான் அள்ளிய நீரை மெதுவாக மீண்டும் கிணற்றுக்குள் ஊற்றும் காட்சி என்னை மிகவும் கவர்ந்த கவிதை.

இயக்கம் - Zhang Yimou 
மொழி - Mandarin

1999 இல் வெளியான இந்தப்படம், Golden Rooster for Best Picture, Berlin International Film Festival விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றது.

Wednesday, December 1, 2010

குவாட்டர் வித் சீனு!

வணக்கம்! இன்றைய குவாட்டர் வித் சீனு நிகழ்ச்சில நம்மை சந்திக்க வந்திருக்கிற பிரபலம்....குடிகர் 'கட்டிங்' குமார்.

நடிப்பவர்களை நடிகர் என்கிறோம் அப்பிடின்னா குடிக்கிறவன் குடிகன்தானே?


வணக்கம் 'கட்டிங்' குமார்!
வணக்கங்க!

இந்த நிகழ்சிக்கு வந்தது..,
ரொம்ப ஹாப்பியா இருக்கு! (ஆ குஜாலா கீதுங்க!)

இந்த 'கட்டிங்'கிற டைட்டில் எப்பிடி?
அது (குடி) மக்களா எனக்குக் குடுத்த பட்டம்...முதன்முதலா அப்பிடி அழைச்சது ப்ரொடியூசர் 'கொக்டெய்ல்' மோகன். அவருக்கு ரொம்ப 'கடன்' பட்டிருக்கேன்.

இந்தத்துறைக்கு நீங்க வந்தது, திட்டமிட்டா இல்லை ஆக்ஸிடென்ட்டா?
(இல்லைங்க வந்தப்புறம்தான் நிறைய ஆக்ஸிடென்ட் ஆகியிருக்கு..வந்தது இன்சிடென்ட் தான்!)
ஆக்சுவலா, சின்ன வயசுல ஸ்கூல் படிக்கும்போதே எதையாவது சாதிக்கணும்னு ஒரே ஆர்வம்

குறிப்பா எப்பிடி இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தீங்க?
நாம தேர்ந்தெடுக்கிற விஷயம் நாட்டுக்கு பயன்படணும்னு உறுதியா இருந்தேன். இந்ததுறைலதான் அரசுக்கு நிறைய வருமானம் வருதுன்னு. 

(அட நீங்க வேற! பியர் குடிச்சா குண்டாகிடலாம்னு எவனோ ஒரு நாதாரி சொன்னத நம்பி, குடிகாரனானதுதான் கண்டமிச்சம்!)

உங்கள் முதல் அனுபவத்தைப் பற்றி சொல்லுங்க?
முதன்முதலா பார் முன்னாடி நின்னப்போ, ரொம்ப நெர்வர்ஸ்ஸா  ...யூ நோ ரொம்ப...என்னமோ எல்லாரும் என்னையே பாக்கிறமாதிரி ஒரு மனப் 'பிராந்தி', ஸோ எச்சைட்டிங்.. அதே நேரத்தில ஒரு த்ரில்லா, சாதிக்கணும்னு ஒரு வேகம்.

உங்க குடும்பத்தில யாராவது இந்த பீல்டுல?
இல்லைங்க நான்தான் முதல் தலைமுறை குடிகன்

வீட்ல எல்லாரும் எப்பிடி பீல் பண்ணாங்க?
எப்பவுமே எங்க வீட்ல என்னோட விருப்பத்துக்கு குறுக்க நிக்க மாட்டாங்க (தலை முழுகிட்டாங்க!)
அப்புறம் ரொம்ப என்கரேஜ் பண்ணினாங்க (வெளில போடா நாயே..!)

உங்களை மிகவும் கவர்ந்த பிரபலம்?
நெப்போலியன்...ஏன்னா அவன் 'களத்தில'  இறங்கும் மட்டும்தான் நாம பேசுவோம். அவன் இறங்கிட்டான்னா...அப்புறம் அவன்தான் எல்லாத்தையும் முடிவு பண்ணுவான்!

நீங்க எந்த நெப்போலியனப பற்றி?
நம்ம நெப்போலியன்தான்!
.....??

காதல் பற்றி என்ன நினைக்கிறீங்க?
அது ஒரு தனி போதை ஒவ்வொரு நிலைலயும் ஒவ்வொரு மாதிரி...

காதல சொல்லுமட்டும் அவஸ்தை..அது பாத்திங்கன்னா..
புல்லா சரக்கடிச்சிட்டு அப்புறம் ரெண்டு ஆம்லெட்ட முழுங்கினா வாந்தி, வர்ற மாதிரியும் இருக்கும் ஆனா வராது..ஒரு விதமான குழப்பமா..!

சொல்லிட்டம்னா, புல் மப்பில தலைவலியோட இருந்திட்டு... வாந்தி எடுத்த உடனே இருக்கும் பாருங்க அப்பிடி ஒரு ரிலீப்!

காதல் மட்டும் ஒக்கே ஆயிடுச்சுன்னு வைங்க....
அது ஒரு தனி சுகம்...ஜின் அடிச்சிட்டு பீச்சுல நடந்து போற மாதிரி...!

இனி உங்க நண்பர்கள் உங்களைப் பற்றி என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்...!

விநியோகஸ்தர் 'வோட்கா' வேணு - நானும் குமாரும் அந்தக் காலத்தில இருந்தே ஒரே கிளாஸ்ல சரக்கடிக்கிற அளவு நண்பர்கள், படிப்படியா முன்னேறி, இந்த நிலைக்கு வந்தோம். அவர் மேலும் சாதிக்கணும் ..!

ஆமாமா நாங்க ரெண்டுபேரும் எப்பிடின்னா..சுருக்கமா சொன்னா..வோட்காவும் ஒரேஞ் ஜூசும் மாதிரி!

தயாரிப்பாளர் 'கொக்டெய்ல்' மோகன்- குமார் தம்பிக்கு எப்பவுமே ஒரு அடங்காத, தணியாத 'தாகம்' இருக்கு, அதுதான் அவரை இவ்வளவு பிரபலப் படுத்தி இருக்கு. அவரோட தாகத்துக்கு 'தண்ணீர் ' ஊத்திறதில நான் பெருமைப்படறேன்!

'வோட்கா' வேணு -அதில பாருங்க அவர்கிட்ட எப்பவுமே பிடிச்சது முடியாதுங்கிற வார்த்தைய அவர் எப்பவுமே சொன்னதில்ல.

எவ்வளவுதான் சரக்கடிச்சு மட்டையானாலும், இன்னொரு கட்டிங்? ன்னு கேட்டா, குடிச்சிட்டு வாந்தி எடுப்பாரே தவிர, முடியாதுன்னு மறுத்ததில்ல,
அந்த தன்னம்பிக்கை ரொம்ப பெரிய விஷயம்!

'ஹி ஹி...'

'கொக்டெய்ல்' மோகன் - அவர் தனக்குன்னு எதையுமே வச்சுக் கொண்டதில்ல! சமயத்தில தன்னோட மொபைல், வோட்ச் கூட நம்ம பசங்களுக்கு அன்பளிப்பா குடுத்திட்டுப் போயிடுவார்

(அடப்பாவி அதெல்லாம் அங்கேயா தொலைச்சேன்?)

அவர் முதன்முறையா அறிமுகமாகும்போதே 'ஸ்பொட்'ல கவனிச்சேன் ஒரே டேக்லயே முதல் 'ஷாட்' ஒக்கே ஆகிடுச்சு அப்பவே தெரியும் பெரிய அளவில ஒரு 'ரவுண்டு' வருவாருன்னு.

சொல்லுங்க குமார் உங்க நெக்ஸ்ட் ப்ராஜெக்ட்?
தீபாவளி ப்ராஜெக்ட் சிறப்புப் பார்வை இன்னும் வீட்ல போயிட்டிருக்கிறதால இன்னும் முடிவு பண்......

(ஆகா இப்போ நம்ம ரமேஷோட பார்ட்டி இருக்கில்ல?...எப்பிடி மறந்தேன்?)

எனக்கு ஒரு முக்கியமான அப்பாய்ன்ட்மென்ட் இருப்பதால் நிகழ்ச்சியை இத்துடன் நிறை..

இருங்க அதெல்லாம் நான்தான்....
எங்க போறீங்க?

பாட்டில்ல கையெழுத்தாவது போட். ...
கமேராமேன் புடிங்க அந்தாளை...!



Monday, November 29, 2010

மிஷ்கினின் தமிழ்சினிமா


ஒரு வழியாக நந்தலாலா வெளிவந்து விட்டது!

மிஷ்கினின் முதல் படமான 'சித்திரம் பேசுதடி' யிலேயே என்னவோ மிஷ்கினைப் பிடித்துக் கொண்டது.

என்ன காரணமென்று தெரியாமலே, ஏதோ சில வித்தியாசங்கள் வழமையான படங்களிலிருந்து. கமெரா கையாளப்படும் விதம், காட்சியமைப்பு - குறிப்பாக நேராகக் காட்டாமல் பார்வையாளனை உணரவைக்கும் அந்த தூக்கில் தொங்கும் காட்சி, வசனங்கள். ஆச்சரியமாக அந்தப்படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களுமே நல்லவர்களாக இருந்தார்கள்.

ஒரு போலீஸ்காரனின் முதல் நாள் அனுபவம் - தமிழ் சினிமாவில் நாங்கள் பார்த்தேயிராத காட்சி. அஞ்சாதேயில்.

வழமையாக போலீஸ் யூனிபோர்மை மாட்டியதும், வீரம் வந்து, வெறிகொண்டு, கடத்தல்காரரையோ, உள்ளூர் தாதாவையோ தட்டிக் கேட்கப் புறப்பட்டு விடும் ஹீரோக்களுக்கு மத்தியில், அந்தச் சூழ்நிலையே ஒத்து வராமல் பின், படிப்படியாக வேலையில் ஒன்றும் அந்தக் காட்சிகள் தமிழ் சினிமாவுக்கே புதிது.

ஒளியமைப்பு, ஒளிப்பதிவில் ஏரியல்வியூ காட்சிகள், கமெரா நகர்ந்து செல்லும் விதம், கால்களின் நகர்வுகளின் மூலம் கதை சொல்லப்படுதல், லாங்ஷாட் காட்சிகள்.

பின்னணி இசை, தேவையான நேரங்களில் மௌனம் மட்டுமே. அதே போல் வசனங்கள் பல வசனங்களில் சொல்லவேண்டியதை சில காட்சிகளிலேயே உணர்த்தி விடுதல். இப்படி எல்லாமே!

இபோழுது நந்தலாலா.

பதிவுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. எல்லோரும் நல்ல படமென்று ஏற்றுக் கொண்டாலும் கலவையான விமர்சனங்கள். சிலர் கிகுஜிரோவின் Copy என்கிறார்கள்.
ஒரு படத்தை அப்படியே அப்பட்டமாக Copy அடிப்பதற்கும், அதன் பாதிப்பில் எமது சூழ்நிலைக்கேற்ப மாற்றி நல்ல படமாக கொடுப்பதற்கும் நிறைய வித்தியாசங்களுண்டு.

குறைந்த வசனங்களும், காட்சியமைப்பும் சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை மிஷ்கின் ஏற்கெனவே தனது படைப்புக்களில் நிரூபித்த ஒன்று.

குறிப்பாக இசை. இளையராஜா பற்றி எப்போதும் விமர்சிக்கும் 'சாரு', நந்தலாலா பின்னணிஇசை பற்றி உயர்வாகக் குறிப்பிட்டபோதே எதிர்பார்ப்பு எகிறியது எனக்கு.

குறிப்பாக இசை எங்கு மொனமாக இருக்கவேண்டுமென்று இந்தப் பின்னணி இசையின் மூலம் தெரிந்து கொள்ளலாமென்றும் பதிவர்கள் கூறியுள்ளார்கள்.
பொதுவாக மிஷ்கினின் படங்களில் இசை மட்டுமல்ல, வசனங்கள் எங்கு இருக்கக் கூடாதெனவும் தெரிந்து கொள்ளலாம். பேசும் வார்த்தைகளை விட, மெளனத்திற்கே அர்த்தம், ஆழம், வீச்சு அதிகம்.

இந்தப் படம் வெளிவராமல் நீண்டகாலம் இருக்கும்போது நினைத்தேன். உலக மகா மொக்கைப் படங்களாகவே தொடர்ந்து வெளியிட்டு வரும் சன்பிக்சர்ஸ் இது போன்ற நல்ல படங்களையும், வருடத்திற்கு இரண்டாவது வெளியிட்டால், கொஞ்சமாவது தாங்கள் சார்ந்துள்ள துறைக்கு ஒரு நியாயம் அல்லது நல்லது செய்ததாக அமையுமே என்று. இப்போது அந்த நல்ல காரியத்தை ஐங்கரன் செய்துள்ளது.

தனிப்பட்ட ரீதியில் மிஷ்கின் மேல் என்ன மாதிரியான (தலைக்கனம் பிடித்தவர் - ஒரு நல்ல படைப்பாளி அப்படி இருந்தாத்தான் என்ன?) விமர்சனங்கள் இருந்தாலும், அவர் தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு ஆளுமை.

தமிழ் சினிமா என்றாலே தொடர்ந்து,


- பெயரை மட்டும் மாற்றிக் கொண்டுவரும் பருத்திவீரன்கள்


- வெட்டுறாய்ங்க, கொல்றாய்ங்க...கூட்டமாக, பரட்டைத் தலையுடன் வந்து, காதலித்து கடைசியில் நண்பர்கள் அல்லது ஹீரோ உயிரை விடும் 'பாசக்காரப் பயலுக' படம்.

என்றுமட்டுமில்லாமல் (அவையும் நன்றாகவே இருந்தாலும்)  இன்னும் வேண்டும்.

இன்னுமொரு வகை தமிழ் சினிமா இருக்கிறது.

-அநியாயத்தைத் தட்டிக்கேட்கும், ஊருக்கு உழைக்கும், நல்லவர், வல்லவரான, வழமையான ஹீரோவின் கதை.


-டப்பிங்கில் மட்டுமே தமிழ் பேசும், காட்சிகளில் தமிழுக்கு எந்த சம்பந்தமுமில்லாத மணிரத்னத்தின் தமிழ்ப்படங்கள்.


-ஆஸ்கார் கனவுகள் கலைந்து போனபின் 'இந்தியன் ஸ்டான்டர்டில்' எடுக்கப்படும் படங்கள்.


-பல ஹாலிவுட் படங்களிலிருந்து காட்சிகளைக் Copy அடித்து, ஹாலிவுட்காரனைக் கொண்டே கிராபிக்ஸ்ம் செய்து, ஹாலிவுட் க்கே..(!?)சவால்விடும் படங்கள்!

-இதுல கதை உன்னோடதா, என்னோடதான்னு இன்னும் சண்டை வேற பிடிக்கிறாங்கப்பா!....ஆமா இந்த விஷயம் அவங்களுக்குத் தெரியுமா?

இந்த மாதிரியான சூழ்நிலையில், தொடர்ந்தும் இப்படியான நல்ல படங்கள் வரவேண்டும்.

நந்தலாலா ஒரு ஆரம்பமாக அமையட்டும்!

Sunday, November 28, 2010

இதப் பற்றி நீ என்ன நினைக்கிறே?


'இதப் பற்றி நீ என்ன நினைக்கிறே?' - சிங்கம் கேட்டான்.

அசோகச் சக்கரவர்த்தி இல்லாமல் எப்படி ஒரு சரித்திரப் பாடம் இல்லையோ, அதே போல 'இதப் பற்றி நீ என்ன நினைக்கிறே?' என்ற கேள்வியைக் கடந்து செல்லாமல் இளமைப்பருவம் பையன்களுக்கு இல்லை.

கேள்வி கேட்கப்படும் நேரம் மாறுபடலாம். அனால் காலம், கேட்கிறவனைப் பொறுத்த வரையில் அவனுக்கு வாழ்வின் வசந்த(?) காலமாகவும், எங்களைப் பொறுத்தவரை எங்களின் போதாத காலமாகவும் இருக்கும்.

கேள்வியின் வடிவம் மாறலாம். 'இதுக்கு என்ன அர்த்தம்?', 'அப்ப ஒக்கே தானே?' என்பதாக.
உட்பொருள் ஒன்றுதான். பதிலும் அவ்வாறே.
'அவளுக்கும் ஒரு ஐடியா இருக்கலாம்', 'உன்ன பிடிச்சிருக்கு ன்னு நினைக்கிறேன்', 'ஆமாமா' இவ்வாறாக.
மாற்றுக் கருத்துக்களைத் தெரிவித்தோமானால் அவ்வளவுதான். உடனே பார்வை மாறும்.

வெளியே ஒன்றும் சொல்லாட்டியும் உள்ளே என்ன நினைக்கிறான்னு ஊகிக்கலாம்.
பொறாமை, புகைச்சல்ல சொல்றான், இவன எவளுமே பார்த்திருக்க மாட்டாள் அதான் வயித்தெரிச்சல்.

நானெல்லாம் அப்போது ஒல்லிப்பிச்சானாக வேறு இருந்ததால் (இப்போ?), எங்கே வயிதெரிச்சல்ன்னு முடிவே பண்ணிடுவாங்களோன்னு உடனேயே 'அப்பிடியா?', 'இருக்கலாம்' ன்னு பொத்தாம் பொதுவாக எதையாவது உளறி, எஸ்கேப்.


இதே கேள்வியை சிங்கம் கேட்டபோது உடனடியாக நான் எதையும் கூறவில்லை.

சிங்கம் ஒரு சிந்தனாவாதி. பெரும்பகுதி சிந்தனை பெண்கள் பற்றித்தான். சமீபகாலமாக தான் அடிக்கடி சந்திக்க நேரும் பெண்ணைப் பற்றித்தான் அப்படிக் கேட்டான்.

அவள் செய்யும் எல்லாக் காரியங்களுக்கும் தனக்குச் சார்பான காரணங்களைக் கற்பித்துக் கொண்டு, இதுக்கு என்ன அர்த்தம்? அப்போ அதுக்கு என்ன அர்த்தம்?
உடனடியாக 'ஆமா'ன்னு சும்மா சொல்றான்னு தெரிஞ்சிடும் போய் சொல்றான்னு.
இல்லேன்னு சொன்னா கேட்கமாட்டான்...அடம்பிடிப்பான்.

தீவிர சிந்தனையில் நான். 

இங்கு தீவிர சிந்தனை என்பது, தலையைச் சிறிது சாய்த்து, தொலைதூரத்தில் பார்வையைச் செலுத்தி, வெறித்த பார்வையுடன், புருவத்தைச் சிறிது சுருக்கி, முகத்தில் உணர்ச்சிகளற்ற ஒரு வெறுமையைப் படர விட்டு.....! கைகளைக் கட்டிக்கொண்டு நிற்கும் பழக்கம் இருந்தால், ஒரு கையால் தாடையைத் தடவிக் கொள்ளலாம், என்னை மாதிரி.

ஆனா அதே நேரத்தில எதிர்ல வாற பொண்ணை 'சைட்' அடிக்கலாம். 

இது தான் முக்கியமான விஷயம். ஆனா ரொம்ப கஷ்டமானதும் கூட. ஏன்னா நம்ம பசங்க 'சைட்' அடிக்கிறாங்க ன்னா அப்பிடியே முகத்தில தெரியும். பார்வை திசை மாறும், பேச்சு 'கட்' ஆகும், மூஞ்சில 'பல்ப்' எரியும். எங்களுக்கு பின்னால யாரோ பொண்ணு போகுதுன்னு திரும்பாமலே கண்டுபிடிக்கலாம்.

இதில எனக்கொரு பிரச்சனை என்னன்னா சிங்கம் தான் காதலைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கும் நேரம் பாத்துதான் எனக்குக் கொட்டாவி வரும். அத நான் மறைச்சு விடுறதுக்கு படுறபாடு இருக்கே ஐயோ ஐயோ.... நானும் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே...!

நாளுக்கு நாள் சிங்கத்தில் காதல் தீவிரமாகி எங்களைக் கொலைவெறியுடன் துரத்தத் தொடங்கினான். கதை சொல்லத்தான்! பலமுறை காதல் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானதால் அவன் வருகிறான்னதுமே நம்ம நண்பர் கூட்டம் தெறிச்சு ஓடுற அளவுக்கு போயிட்டுது.

நிலைமை தீவிரமான ஆரம்பத்திலேயே நான் சொல்லிவிட்டேன். 'மச்சான் அங்க சொல்லி முடிவு தெரிஞ்சப்புறம், கற்பனை, கதை எல்லாத்தையும் 'டெவலப்' பண்ணு. இல்லாட்டி கஷ்டம். அது வரைக்கும் எனக்கு இந்தக் கதை ஒண்ணும் சொல்லவேணாம்'.

இதன்பிறகு என்னிடம் ஒன்றும் சொல்லல. எங்கள் நட்பில் கூட சிறு விரிசல். ஏத்தி விட்டு கூத்து பாக்கும் தீபாவிடம்தான் எல்லாம் சொல்ல, அவனும் தன்னால முடிஞ்ச அளவுக்கு, உசுப்பேத்தி, உருவேத்தி....

ஒரு சுபயோக, சுபதினத்தில் சிங்கம் அசிங்கப்பட்டு, மனசெல்லாம் ரணகளமாகி...

அன்றிரவு, எங்கள் அட்வைசர், காதல் 'கோச்' தலைமையில் நாங்களெல்லோரும் கூடி,

அந்த சோகத்திலும் சிங்கம் தளராமல் 'கோக்' தான் குடிச்சான். நாங்க தான் சோகம் தாங்க முடியாம 'பியர்'.

அப்ப சிங்கம் என்ன நினைத்தானோ, கேட்டான் ஒரு கேள்வி, 'டேய் உங்க எல்லாரையும் விட நான்தானேடா நல்லவன் ?'

'இதைப்பற்றி நீங்க என்ன நினைகிறீங்க?'

Tuesday, November 23, 2010

City of God


தமிழில் சினிமாவில் புதுப்பேட்டை, பட்டியல் போன்ற நல்ல Gangster படங்கள் வரும்போது தவறாமல் உச்சரிக்கப்படும் படம் City of God அவற்றில் இந்தப் படத்தின் பாதிப்பு நிச்சயம் இருக்கவே செய்கின்றன.

ஓரிருவர் தவிர ஏனையோர் பதின்மூன்று வயதிற்குட்பட்ட சிறுவர்கள் கும்பல். எல்லோர் கைகளிலும் துப்பாக்கிகள். சமைப்பதற்கு வைத்திருந்த கோழி ஒன்று தப்பிச் சென்றுவிட, அதைப்பிடிப்பதற்கு துப்பாகியால் சுட்டபடி துரத்திச் செல்கிறார்கள்.

கையில் கமெராவுடன் உற்சாகமாகப் பேசிக் கொண்டு வரும் ரொக்கட்டும், அவன் நண்பனும் எதிர்பாராமல் இந்தக் கும்பலை எதிரே கண்டதும் அதிர்ச்சியாகி நிற்கிறார்கள். ரொக்கட்டிடம், அந்தக் கோழியைப் பிடிக்குமாறு சொல்கிறார்கள். பிடிக்கத் தயாராகும் நிலையில், தங்களை நோக்கிக் கும்பலின் துப்பாக்கிகள் உயர்வதைக் கண்டு, அதிர்ச்சியாகிறார்கள். இருவரும் குழப்பத்துடன் பின்னால் திரும்பிப் பார்க்க, குறிவைத்தபடி போலீஸ்! - இப்படித்தான் ஆரம்பமாகிறது படம்.

பிரேசிலின் மிகப் பெரும் கேளிக்கை நகரான ரியோ டீ ஜெனிரோ வைச் சுற்றியுள்ள ஏராளமான சேரிப்புறங்களில் ஒன்றில் நடக்கும் நிகழ்வுகளைச் சொல்லும் படம். கொள்ளை, கொலை, சிறு வயதிலேயே போதைப் பொருள் பழக்கம் எல்லாமே அங்கு சாதாரணமானவை. போதைப் பொருள் கடத்துபவர்களாக பத்து வயதிற்குட்பட்ட சிறுவர்கள். வழிப்பறி, வன்முறை, உதைபந்தாட்டம் எல்லாம் அப்பகுதி மக்களின் வாழ்வின் அங்கமாக! சில பிரதான பாத்திரங்களின் ஊடாக சொல்லப்பட்டிருக்கும் ஒரு ஊரின் கதை.

இளைஞர்களான சாகி, கூஸ், கிளிப்பர் மூவரும் மோட்டல் ஒன்றைக் கொள்ளையடிக்கச் செல்கிறார்கள். அவர்களுடன் பத்துவயதிற்குட்பட்ட சிறுவனான லில் டைஸ்ஸும் செல்கிறான். நால்வரிடமும் கைத்துப்பாக்கிகள். சுடுவது மிரட்டுவதற்கு மட்டுமே தவிர, யாரையும் கொள்வதில்லை என்பது அவர்களுக்கிடையிலான தீர்மானம். மூவரும் கொள்ளையடித்து முடிந்ததும், காவலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த சிறுவன் லில் டைஸ் அவர்களுடன் செல்லாமல், தனியாக மோட்டல் உள்ளே நுழைகிறான். வெறித்தனமான சிரிப்புடன், எதிர்ப்பட்ட  எல்லோரையும் சரமாரியாகச் சுட்டுக் கொல்கிறான்.

போலீசுக்கு தகவல் தெரிந்து தேடி வருகிறது. கிளிப்பர் சேரியை விட்டுச் சென்று விடுகிறான். சாகி தன் காதலியுடன் தப்பிச் செல்ல முயற்சிக்கையில் போலீசால் சுட்டுக் கொல்லப்படுகிறான். கூஸ் தப்பிச் செல்லும் வழியில் சிறுவன் லில் டைஸிடம் பணம் எடுத்துச் செல்ல முயற்சித்து அவன் கையால் சாகிறான்.இப்போது ஏரியாவின் அடுத்த் தலைமுறை ரவுடி ஆகிறான் சிறுவன் லில் டைஸ்.வளர்ந்தபின் தனது பெயரை லில்சீ என மாற்றிக்கொள்கிறான். சிறுவயது முதலே அவனது உயிர் நண்பன் பென்னி.

பென்னியின் காதலி அன்ஜெலிகா. பென்னி இந்த வாழ்க்கையை விட்டு, ஒரு பண்ணையில் தனது காதலி அன்ஜெலிகாவோடு அமைதியாக வாழ ஆசைப்படுகிறான். பிரிந்து செல்ல விரும்புகிறான். லில்சீ தன் கூடவே இருந்த நண்பனைப் பிரியவும் மனமின்றி, அவனது விருப்பத்துக்கு மறுப்பும் சொல்லமுடியாமல் குழம்பிய நிலையில் இருக்கிறான். பென்னிக்கு ஒரு பெரியதோர் பிரிவுபசாரப் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்கிறான். இரவுக் களியாட்ட விடுதியொன்றில் அநேகமாக ஏரியாவிலுள்ள எல்லோரும் கலந்து கொள்கின்றனர்.


லில்சீ - சிறுவயது முதலே நண்பனான பின்னியுடன் சேர்ந்து, ஏரியாவிலுள்ள போதைப்பொருள் டீலர்களை சுட்டுத்தள்ளி, மிகப்பெரிய மார்க்கெட்டைத் தன்வசப்படுத்தியுள்ளவன். கொடூரமானவன். தற்போதைய கவலை - நண்பன் பென்னி பிரிந்து செல்வதாக முடிவெடுத்தது. 



பென்னி - இவனது சொல்லை மட்டுமே லில்சீ கேட்பான். லில்சீக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பவன்.எல்லோரோடும் சுமுகமாக அனுசரித்துப் போகின்றவன். எல்லோராலுமே விரும்பப்படுகிறவன்.

இப்போது - தன் காதலியுடனான் அழகிய வாழ்க்கை பற்றிய கனவுகளோடு,எல்லோரோடும் மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருக்கிறான்.

ரொக்கட் -லில்சீயினால் சுட்டுக் கொல்லப்பட்ட கூசின் தம்பி. ஒரு புகைப்படக் கலைஞனாக பத்திரிகையில் சேர்ந்து புகழ் பெறவேண்டுமென்பதே இவன் லட்சியம். கூடவே, ஒரு காமெரா சொந்தமாக வாங்குவது. அதற்காக நண்பனின் துணையோடு, அண்ணனின் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, கொள்ளையடிக்க திட்டமிட்டு, அவன் நல்ல மனதின் காரணமாக பாதியில் முயற்சியைக் கைவிட்டவன்.உற்சாகமாக பார்ட்டியில் டி ஜே வாக பணியாற்றிக் கொண்டிருக்கிறான்.


நொக்கவுட் நெட் - நல்லவன். கொலை, போதை, கொள்ளை என்பவற்றுடன் எந்த சம்பந்தமும் இல்லாதவன். அமைதியும், அன்பும் மட்டுமே முக்கியம் எனக்கூறுகிறான். பேரூந்து நடத்துனராக வேலை செய்கிறான். ஒருமுறை லில்சீயால் தாக்கப்பட்டிருக்கிறான். காதலியுடன் பார்ட்டியில் கலந்துகொண்டு நடனமாடிக் கொண்டிருக்கிறான்.



காரட் - மிகப்பெரிய போதைப்பொருள் டீலர். இவனுக்கும் லில்சீக்கும் ஒத்து வருவதில்லை. பென்னியின் தலையீட்டினால்,லில்சீயினால் கொல்லப்படாமல் இருக்கிறான். எப்போதும் இவனுக்கு லில்சீ எதிரி.பார்ட்டியில் கலந்துகொள்ளாமல் தனது முகாமில் இருக்கிறான்.



பிளாக்கி - இவனும் ஒரு போதைப் பொருள் டீலர். இவனது மார்க்கெட், தங்குமிடம் எல்லாவற்றையும் லில்சீ பறித்துக் கொள்கிறான். காரட்டுடன் தொடர்பில் இருக்கிறான்.

தற்போது - லில்சீ மீது அடங்காத கோபத்துடன், பார்ட்டியில் லில்சீயைக் கொல்ல ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து, காத்துக் கொண்டிருக்கிறான்.

நண்பன் விட்டுச் செல்கிறான் என்கிற வெறுமை, தன்னை எல்லோரும் உதாசீனப் படுத்துகிறார்களோ என எண்ணிக்குழம்பும்  பெண்கள் பக்கமே போகாத லில்சீ, ஒரு பெண்ணைத் தன்னுடன் ஆட அழைக்கிறான். அவள் மறுக்கிறாள். இதனால் கோபம் கொள்ளும் லில்சீ, அந்தப் பெண் நொக்கவுட் நெட்டின் காதலி என்று தெரிந்ததும் பலர் முன்னிலையில் அவனை அவமானப்படுத்துகிறான்.

பென்னி, தன் நினைவாக ரொக்கட்டுக்கு ஒரு காமெராவைப் பரிசளிக்கிறான். இனந்தெரியாத எரிச்சலில் இருக்கும் லில்சீ ரொக்கட்டிடமிருந்து காமெராவைப்பறிக்க, அவனுடன் வாக்குவாதப்படுகிறான் பென்னி. சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பிளாக்கி,மின்னிக் கொண்டிருக்கும் டிஸ்கோ லைட்டில், தவறுதலாக பென்னியைச் சுட்டுவிடுகிறான். பென்னி இறந்துவிட, கதறுகிறான் லில்சீ.

காரட் தான் இந்தக் கொலைக்குக் காரணமென்று நம்பும் லில்சீ அவனைக் கொல்ல முடிவு செய்கிறான். தவறுதலாக பென்னியைச் சுட்டுவிட்டதாகவும் தன்னைக் காப்பாற்றும்படியும் காரட்டிடம் ஓடிவந்து சொல்கிறான் பிளாக்கி.

"அநியாயமாக ஒரு Coolest Guy யைக் கொன்று விட்டாய்" எனக்கூறி, பிளாக்கியைச் சுட்டுக் கொல்கிறான் காரட். பழிவாங்கும் வெறியுடன் தன் கும்பலுடன் புறப்பட்டு வரும் லில்சீ வழியில் நொக்கவுட் நெட்டை காதலியுடன் பார்க்கிறான். அவனைத் தாக்கி அவன் முன்னிலையிலேயே காதலியைக் கொல்கிறான்.

திடீரென்று  லில்சீக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. நொக்கவுட் நெட்டை ஏன் கொல்லாமல் விட்டோம்? என்று. உடனேயே அதைச் செயற்படுத்த வீடுதேடி வருகிறான். நொக்கவுட் நெட்டைக் காப்பாற்றும் முயற்சியில் அவன் தம்பி கொல்லப்படுகிறான்.

இதனால் லில்சீயை பழிவாங்க முடிவு செய்கிறான், வன்முறையின் பக்கமே அதுவரை சென்றிராத நொக்கவுட் நெட். 'அப்பாவிகளைக் கொல்லக் கூடாது' என்ற கோரிக்கையுடன் ஏற்கனவே லில்சீயின் எதிரியான காரட்டுடன் இணைந்து கொள்கிறான் நொக்கவுட் நெட்! ஆரம்பமாகிறது ஒரு பெரும் Gang War!

சிறிய மோதல்கள் ஆரம்பிக்க, இருதரப்பிலும் பெரும் மோதலுக்கான ஆயுதக் கொள்வனவு, ஆட்சேர்ப்பு எனத்தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இளைஞர்கள், சிறுவர்கள், குழந்தைப்பருவத்திலிருந்து இன்னும் வெளிவராதவர்கள் என பலரும் தங்கள் எதிரிகளை ஒழிப்பதற்காக, இணைந்துகொள்கிறார்கள். எல்லோருக்கும் அடிப்படியான உணர்வு பழிவாங்கல் மட்டுமே. காரணம், சொல்கிறார்கள் - 'நொக்கவுட் நெட் தலையில் கொட்டி விட்டான்', 'லில்சீ பின்புறத்தில் உதைத்துவிட்டான்'.


இதற்கிடையில் ரொக்கட் ஒரு பத்திரிகையில் புகைப்படப் பிடிப்பாளனாக   வேலைக்குச் செல்கிறான். நொக்கவுட் நெட் மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறும்போது அவனது புகைப்படம், பேட்டி பத்திரிகையொன்றில் வெளிவருகிறது. அதைப்பார்க்கும் லில்சீ, ரொக்கட் அழைத்து முன்னர் பின்னி கொடுத்த அதே கமெராவைக் கொடுத்து,  தங்கள் குழுவை படம் பிடிக்கச் சொல்கிறான். 'கமெராவை உன்னிடம் கொடுக்கவே பின்னி விரும்பினான்' என்று கூறி, அவனுக்குப் பரிசளிக்கிறான்.

ரொக்கட் தனது அலுவலகத்தில், அந்தப்   புகைப்படங்களைப் பிரிண்ட் எடுத்துவைக்க, அதைப்பார்த்த ஆசிரியர் பத்திரிகையில் பிரசுரித்துவிடுகிறார். அவ்வளவுதான் லில்சீயிடம் தொலைந்தோம் என்று பயந்துகொண்டிருக்கும் நிலையில்தான் ஆரம்பத்தில் சொன்ன காட்சி!

முடிவில் என்னவாகிறது? இந்தப் பிரச்சினைகளின் முடிவு எப்படித் தீர்மானிக்கப்படும்? சட்டம் எப்படித் தன் கடமையைச் செய்கிறது? துப்பாக்கி கொடுக்கும் போதை, ஒரு போதைக்டத்தல் கும்பல் எப்படித்தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது, ஒரு தலைவன் எப்படி உருவாகிறான், உருவாக்கப்படுகிறான், தமக்குள்ள அடித்துக்கொண்டு எஞ்சிப் பிழைத்து நிற்கும் வலுவான குமபலே நாட்டுக்குத் தேவை என்கிற அரசியல் போன்ற விஷயங்கள் போகிற போக்கில் சொல்லப்படுகின்றன.

ஒரு கதாபாத்திரத்தையும் முதன்மைப் படுத்தாமல் அவர்களின் பார்வையிலும்,  FlashBack இலும் படம் நகர்கிறது. - பெரும்பாலான இறுதிக் காட்சிகள் அவற்றைப் படம்பிடிக்கும் ரொக்கட்டின் பார்வையில் பதிவாகிறது.

சில இடங்களில் Documentary Film போலவுள்ள அதே சமயம் விறுவிறுப்பாகவும் செல்கிறது.

கதை சொல்லும் style, camera நகரும் விதம் எல்லாம் வித்தியாசமான அனுபவம். BAFTA உள்ளிட்ட பல விருதுகளை வென்றது. நான்கு Academy உள்ளிட்ட பல விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

இயக்கம் - Fernando Meirelles
மொழி - Portuguese
நாடு - Brazil